முகிலை இராசபாண்டியனின் தேரி மணல் நாவலில் கடற்கரைப் புனைவு

-த. ஆதித்தன்

விலங்குகளோடு காடுகளில் வாழ்ந்த மனிதன் தனது நாகரிக வளர்ச்சியின் விளைவாகத் தனக்கென ஓர் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டான்.  அதுவே மக்கள் நிலம் சார்ந்து சேர்ந்து வாழ்வதற்கு முன்னோடி எனலாம்.

மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவைப் பெருக்கிக் கொண்டதன் மூலம் பல முன்னேற்றங்களை அடைந்தான்.  நாகரிக வளர்ச்சியும் பெற்றான்.  அவன் நிலம் சார்ந்து அமைத்துக் கொண்ட வாழ்க்கை முறையும், வாழ்க்கை சூழலும் அன்று முதல் இன்று வரை இலக்கியங்களில் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

மனிதன் நாகரிகம் அடைவதற்குப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே கூடிவாழும் இயல்புடையவனாய் இருந்துள்ளான்.  இக்கூடி வாழும் இயல்பினால் விளைந்த நன்மைகள் பல.  மக்களினம் பல கிளைகளாக வளர்ச்சி அடைவதற்கும் அது வழிவகுத்தது.  மனித இனம் பல்வேறு குழுக்களாகப் பிரிவதற்குப்  பேசும் மொழி, செய்யும் தொழில் போன்று  வாழும் இடமும் முக்கிய பங்காற்றுகிறது.  அதனை கருத்தில் கொண்டுதான் நம் முன்னோர் ஐவகை நிலப்பாகுப்பாட்டினை வகுத்துள்ளனர் போலும்.

நிலப்பாகுபாடு:

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலப்பாகுபாட்டினை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.  இவற்றில் பாலை என்பது குறிஞ்சியும், முல்லையும் முறைமையில் திரிந்ததே என்பதால் பாலைக்கென தனிநிலம் இல்லை எனலாம்.  இதனை,

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (சிலப்பதிகாரம், காடுகாண் காதை, அடி:64-66)

என்று சிலப்பதிகாரமும் எடுத்துரைக்கிறது.

தொல்காப்பியம்,

“மயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” (தொல், அகத்தினை இயல், நூற்பா:951) என்று இந்நிலப்பாகுபாடுகளைப் பற்றிக் கூறுகிறது.  இவற்றுள் ‘வருணன் மேய பெருமணல் உலகமும்’ என்னும் அடி நெய்தல் நிலத்திற்குரிய கடவுள் வருணன் என்பதையும், பெருமணல் மிகுந்த கடற்கரை நிலம் நெய்தல் என்பதையும் கூறுகிறது.

இலக்கியங்கள் வாழ்க்கையோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையதாகும்.  கடலும் கடல் சார்ந்த நிலமாகிய நெய்தல் நிலத்திற்கு ஏற்ற நிகழ்வுகளும் அவ்வகையில் இலக்கியங்களுள் இடம்பெற்றுள்ளன.  இந்தநெய்தல் நிலம் தொடர்பான பல வர்ணனைகளைச் சங்க இலக்கியப் பாடல்களிலும் காண முடியும். உதாரணமாக,

“பெருநீர் அழுவத்து எந்தை தந்த
கொழுமீன் உணங்கற் படுபுள் ஒப்பி,
எக்கர்ப் புன்னை இன்நிழல் அசைஇ,
செக்கர் ஞெண்டின் குண்டுஅளை கெண்டி,
ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித்
தாழை வீழகயிற்று ஊசல் தூங்கி,
கொண்டல் இடுமணல் குரவை முனையின்
வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி,
மணிப்பூம் பைந்தழை தைஇ, அணித்தகப்
பல் பூங்கானல் அல்கினம் வருதல்
கவ்வை நல்அணங்கு உற்ற, இவ்வூர்
கொடிது அறிபெண்டிர் சொற்கொண்டு, அன்னை
கடிகொண் டனளே தோழி பெருந்துறை
எல்லையும் இரவும் என்னாது கல்லென
வலவன் ஆய்ந்த வண்பரி
நிலவுமணல் கொட்கும்ஓர் தேர்உண்டு எனவே” (அகநானூறு, பாடல்: 20)

என்னும் அகநாநூற்றுப் பாடலைக் காணலாம்.

தோழி தலைவியிடம் கூறும் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.  தலைவியோடு களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவன் ஒருநாள் பகலில் சிறைப்புறமாக வந்து நிற்கிறான்.  அதனைக் கண்ட தோழி அவன் வந்துள்ளதை அறியாததுபோல் காட்டிக் கொள்கிறாள்.  அலர் தூற்றும் ஊர் பெண்களின் சொல்லினைக் கேட்டுத் தாய் தலைவலியை வீட்டினுள் காவல்படுத்தியதைத் தலைவனுக்கு உணர்த்த விரும்புகிறாள்.  எனவே தலைவனுக்குக் கேட்கும் வகையில் தலைவியிடம் கூறுவது போல இப்பாடலின் செய்திளைத் தோழி கூறுகிறாள்.

தந்தை கொண்டுவரும் கொழுப்பு நிறைந்த மீன்களை உலரவைத்து கருவாடாக்குவது உண்டு.  அவ்வாறு மாற்றுவதற்காக மீன்களை உலரவைத்துக் காயவைப்பர்.  அப்போது அதன்மீது வந்து விழுகின்ற பறவைகளை விரட்டுவதற்காகத் தோழியும் தலைவியும் கடற்கரை மணல் மேட்டில் உள்ள புன்னை மரங்களின் நிழல்களில் அமர்ந்திருப்பர்.  அதனைத் தலைவியிடம் நினைவு கூர்ந்த தோழி தொடர்ந்து அவளிடம் பின்வருமாறு கூறுகிறாள்.

கடற்கரையில் சிவந்த நண்டின் ஆழமான வளைகளை அகழ்ந்து எடுத்தோம்.  உப்பங் கழிகளில் உள்ள தாழையின் விழுதுகளைக் கயிறாகப் பயன்படுத்தி ஞாழல் மரங்களின் உயர்ந்த கிளைகளில் ஊசல் ஆடினோம்.  காற்றுக் கொண்டு வந்து குவித்த மணலில் குரவைக் கூத்தாடினோம்.  இவையெல்லாம் வெறுப்பை உண்டாக்கினால் வெண்மையான மேற்பகுதியைக் கொண்ட அலைகள் வீசும் கடலில் தோழியருடன் விளையாடினோம்.  அழகிய மலர்களாலான பசிய தழையாடையை அழகுடன் உடுத்திக் கொண்டோம்.   பூக்கள் பல நிறைந்த கடற்கரைச் சோலையில் தலைவனைச் சந்தித்து வந்தோம்.

இவ்வாறு தலைவனைச் சந்திப்பதைப் பற்றி, அவர் கூறுவதையும், பேய் பிடித்த பெண்கள் கூறுவனவற்றையும் நம்தாய் கேட்டு விட்டாள்.  அதனால் இரவு பகல் என்று இல்லாமல் குதிரைகள் பூட்டப்பட்ட கல் என்னும் ஓசையுடன் கடற்கரைக்கு வந்துச் செல்லும் தேரைப் பற்றி எண்ணியவளாய் நம்மை வீட்டு காவலில் வைத்துவிட்டாள்.   நாம் என்ன செய்ய முடியும் என்று தோழி கூறுவதாக பாடல் அமைந்துள்ளது.

இப்பாடலில் கடற்கரைப் பற்றிய புனைவு மிக அழகுடன் அமைந்துள்ளது.  கடற்கரையில் மீன்களைக் கருவாடாக்குவதற்காகக்  காய வைப்பது, உப்பங்கழியும் அதன் அருகில் உள்ள தாழை, ஞாழல் மரம் போன்றவற்றைப் பற்றிய குறிப்பு போன்றவை மிக எதார்த்தமானவை ஆகும்.  கடற்கரையில் காணப்படும் மணல் மேட்டையும் இப்பாடலின் ஆசிரியர் உலோச்சனார் காட்சிப்படுத்த தவறவில்லை.

“உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வருபதம் நோக்கி,
கானல் இட்ட காவற் குப்பை,
புலவுமீன் உணங்கல் படுபுள் ஓப்பி,
மடநோக்கு ஆயமொடு உடன்உப்பு ஏறி,
‘எந்தை திமில் எண்ணும் தண்கடற் சேர்ப்ப!
இனிதே தெய்யஎம் முனிபுஇல் நல்லூர்
இனிவரின் தவறும் இல்லை எனையதூஉம்
பிறர்பிறர் அறிதல் யாவது
தமர்தமர் அறியாச் சேரியும் உடைத்தே”. (நற்றிணை, பாடல்:331)

என்னும் நெய்தல் திணையில் அமைந்த நற்றிணைப் பாடலும் கடற்கரைப் பகுதி குறித்து எடுத்துரைக்கிறது.

கடற்கரையில் உப்பளங்கள் காணப்படும்.  அதனை உழாது விளைவிக்கும் நெய்தல் நில மக்களால் உவர் நிலத்தில் விளைவிக்கும் உப்பு என்று கூறியுள்ளது அருமை.  அந்த உப்பை உப்பு வணிகர் வருகின்ற காலம் வரை கடற்கரையில் குவித்து வைத்திருப்பார்.

அங்கு, புலால் மணம் பொருந்திய மீனை உப்பிட்டு கருவாடாக்குவதற்குக் காய வைத்திருப்பர்.  அவற்றைக் கொள்வதற்காக வந்துவிழும் பறவைகளை மடநோக்கு உடைய பெண்கள் தோழிகளோடு சேர்ந்து விரட்டுவர்.  அவர்கள் குவித்து வைத்துள்ள உப்புக் குவியல் மீதேறி எம் தந்தையின் படகு இது. உம் தந்தையின் படகு அது எனக் கடலுள் மீன்பிடிக்கச் சென்றிருக்கும் படகுகள் குறித்துக் கூறுவர் என்று கடற்கரை நிகழ்வுகளை மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளது  இப்பாடல்.

சங்க காலம்தொட்டு இன்று வரையிலும் இதேபோன்ற கடற்கரைப் புனைவுகள் பல இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.  ஆய்வுக்கு எடுத்துள்ள தேரிமணல் நாவலிலும் கடற்கரை சார்ந்த நிகழ்வுகள் காணப்படுகின்றன.  இந்நாவலின் ஆசிரியர் முகிலை இராசபாண்டியன் சிறுகதை, கவிதை, நாவல், நாடகம், திறனாய்வு, உரை என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் தடம் பதித்து வருபவர், அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள அவரின் தேரிமணல் என்னும் நாவலில் இடம் பெற்றுள்ள கடற்கரைப் புனைவுகளே இங்கு எடுத்தாளப்படுகிறது.

தேரிமணல் நாவலின் தொடக்கமே கடலில் ஆறு கலக்கும் கழி முகப்பகுதிதான்.  ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது அதனைக் கடலுள் பாயவிடாவிட்டால் அது பக்கத்தில் உள்ள ஊர்ப் பகுதிக்குள் புகுந்துவிடும்.  ஆற்றுத் தண்ணீரைக் கடலுக்குள் வெட்டி விடுவதைப் பொழி வெட்டுவது என்று கூறுவர்.  அந்தப் பொழிவெட்டும் பிரச்சினையில் இருந்துதான் செம்மீன் நாவல் தொடங்குகிறது.  இது குறித்து,

“பொழி முகத்துக்குப் போன சின்னத்துரையும் மற்றவர்களும் எந்த இடத்தில் மணலை வெட்டினால் கழி வெள்ளம் கடலுக்குள் போகும் என்று பார்த்தார்கள். நேரம் இன்னும் விடியாமல் இருட்டாகவே இருந்தது.  கன்னியாகுமரியில் இருக்கும் லைட்ஹவுசின் வெளிச்சத்தில் கடல் மணல் ஓரளவு தெரிந்தது. பொழி வெட்டுவதற்கான இடத்தைப் பார்த்த சின்னத்துரை, கடலை எட்டிப் பார்த்தார்.  கடல் அடி அதிகமாக இருந்தது.

“ஏண்ணே…! நாம பொழியை வெட்டி விட்டாலும் கடல் அடிச்சி ஏத்திடும் போல இருக்கே…” என்றான் பண்டாரக்குட்டி. “ஆமாடே…அடிச்சி ஏத்தும் போலத்தான் இருக்கு, ஆனா, கழி தெவங்கி நிக்கிறதால இழுத்துக்கிட்டு ஓடிவிடும்…நீ வெட்ட ஆரம்பி…” என்றார் சின்னத்துரை.

பண்டாரக் குட்டியும் மற்றவர்களும் மண்வெட்டியால் வெட்டத் தொடங்கினார்கள். மணக்குடி ஊரின் நடுவில் இருந்தது அந்தக் கழி. கழிக்குக் கிழக்கே இருப்பதைக் கீழ மணக்குடி என்றும் மேற்கே இருப்பதை மேல மணக்குடி என்றும் சொல்வார்கள். பழையாறு என்னும் ஆறு, கடலில் சேரும் இடம்தான் அந்தக் கழிமுகப் பகுதி. பொழி ஓடிவிட்டால் கீழ மணக்குடிக் காரர்கள் மேல மணக்குடிக்கு நடந்து போக முடியாது;  வள்ளத்தில்தான் போக முடியும்,”(பக்கம் எண்: 22-23 தேரிமணல்) என்று  ஆசிரியர் குறிப்பிட்டள்ளார்.  இது வர்ணனைகள் இல்லாத காட்சிப்படுத்துதலாகவே அமைந்துள்ளது. கடற்கரையில் உள்ள கழிமுகத்தை வாசகனுக்கு அறிமுகம் செய்யும் வகையில் மட்டுமே இப்பகுதியானது உள்ளது.

சீறிவரும் அலைகளுக்கு மத்தியில் கடலில் குளிப்பது சுகமானது.  அவ்வாறு கடலில் குளிப்பதைக் கண்முன்னே கொண்டுவரும் வகையில் நாவலில் காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

மண்டைக் காட்டுக் கோயில் திருவிழாவினை ஒட்டி விழாவிற்கு வரும் மக்கள் கடலில் குளிப்பது வழக்கம்.  அது தொடர்பான செய்திகளைக் குறிப்பிடும் போது மக்கள் கடலில் குளிப்பதுக் குறித்து,

“ஒன்பது மணிக்கெல்லாம் கடலில் சிலர் குளித்துக் கொண்டிருந்தார்கள்.  சீறிவரும் அலையை எதிர்கொண்டு அவர்கள் நின்றார்கள்.  அலை அடிக்கும் நேரத்தில் அதன்மேல் தாவி அந்தப் பக்கம் விழுந்தார்கள், இப்படி ஒவ்வோர் அலையாக எதிர்கொண்டு தாவிக் குதித்ததால் கடலை ஜெயித்த பெருமிதம் அவர்களின் முகத்தில் தெரிந்தது. எதிர்த்துவரும் அலையில் கட்டுமரத்தைத் தள்ளிக் கொண்டு நின்றார்கள் சில மீனவர்கள்.  அலை அடி அதிகமாக இருந்ததால் அவர்கள் கட்டுமரத்தை முன்னே தள்ளிக்கொண்டு போகும் போதெல்லாம் அது திரும்பிக் கொண்டு நின்றது.

பெரிய அலையின் வருகைக்காக அவர்கள் கொஞ்ச நேரம் பொறுமையாக நின்றார்கள்.  சின்னச் சின்ன அலைகள்தாம் தொடர்ந்து வந்தன.  அந்த அலைகளின் அடி வேகமாகத்தான் இருந்தது.  கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் அலைகள் அளவில் சிறியவையாய் இருந்தாலும் வேகத்தில் குறைவு இல்லை. சின்ன அலைகளில் தாவிக் குதித்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அதிகமாக இருந்தது.  திடீரென்று ஒரு பெரிய அளவில் அலை வந்தது.  அந்த அலையை எதிர்ப்பார்க்காததால் சின்ன அலையில் தாவியதைப் போலவே இந்த அலையிலும் தாவினார்கள்.

கடல் அலையில், அதுவும் அரபிக்கடல் அலையில் குளிப்பதற்கு ஒரு லாவகம் வேண்டும்.  சின்ன அலை என்றால் மேலே தாவி அலையின் பின்பக்கம் பாயவேண்டும். மிகவும் சின்ன அலை என்றால் குதிக்க வேண்டும்.  பெரிய அலை என்றால் தரையோடு தரையாக மூச்சைப் பிடித்துக்கொண்டு படுத்துக் கொள்ளவேண்டும். மிகப் பெரிய அலை என்றால் குத்தவைத்திருப்பது போல் நன்றாக குனிந்து கொள்ளவேண்டும். பெரிய அலையின் போது குனிந்தாலும் படுத்தாலும் அலை நம்மைக் கடந்து போய் தரையில் அடிக்கும், பெரிய அலையின் மேல் தாவிக்குதித்தால் அது நம்மையும் சுருட்டிக் கொண்டு தரையில் அடிக்கும்.  சில சமயங்களில் சின்ன அலைகளின் மேல் தாவும்போது கூட, காலைப் பிடித்து இழுக்கும்.  வேகமாகப் பாய்ந்தால் தப்பிக் கொள்ளலாம் “(பக்கம் எண்.71-72, தேரிமணல்) என்கிறார்.

இப்பகுதியைப் படிப்பவர்கள் கடலில் குளிப்பது எப்படி என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.  அந்த அளவிற்கு அனுபவித்து ரசனையோடு எழுதியுள்ளார் நாவலாசிரியர்.  இப்பகுதியில் கட்டுமரத்தைக்  கடற்கரையில் இருந்து கடலுள் இறக்குவதையும் காட்சிப்படுத்தியுள்ளார்.  இவை அனைத்தும் மிகவும் யதார்த்தமாக, நாம் நேரடியாக பார்ப்பது போன்று அமைந்துள்ளது.

கடற்கரையில் சுழன்று அடிக்கும் காற்றால் மணல் சிறிய குன்றுபோல் உயர்ந்திருக்கும் அதனை மணல் தேரிகள் என்பர்.  அந்த மணல் தேரிகளை, “காற்றாடி மரங்கள் நிறைந்த அந்தப் பகுதியைத் தாண்டி விட்டால் மணல் தேரிகள், அந்த மணல் தேரிகளைக் கடந்து விட்டால் கடல்தான்.  மரங்களின் இடையே வந்த தங்கக்கண்ணை யாரும் பார்க்கவில்லை.  தேரிமணல் காட்டுக்கு வந்தாலும் யரும் பார்க்க முடியாது.  ஒரு பனை உயரத்திற்கு இருக்கும் அந்தத் தேரி மணலுக்கு இடையே நடந்து சென்றால் கூட யாருக்கும் தெரியாது.” (பக்கம் எண்: 35, தேரிமணல்) என்று நாவலில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மணல் தேரிகளைக் குறிக்கும் தேரிமணல் என்னும் சொல்தான் நாவலின் பெயராகவும் அமைந்துள்ளது.

இத்தகைய கடற்கரைப் புனைவுகளைக் கொண்ட படைப்புகளில் காணப்படுகின்ற நெய்தல் சார்ந்த செய்திகளைத் தொகுத்து ஆராயும்போது அந்நிலம் சார்ந்த பதிவுகளையும் பண்பாட்டு வழக்காறுகளையும் குறித்தான புரிதல் மேலோங்கும் எனலாம்.

*****

கட்டுரையாளர் – இணைப் பேராசிரியர்
அரிய கையெழுத்துச் சுவடித் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 613 010.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “முகிலை இராசபாண்டியனின் தேரி மணல் நாவலில் கடற்கரைப் புனைவு

  1. சங்க இலக்கியக்கியங்களோடு முகிலையாரின் தற்கால நாவலையும் ஒப்பிட்டுக் கூறும் முறை சிறப்பிற்குரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *