கூவம் தந்த செழுச்சி அல்லிக்கேணி

சேசாத்திரி சிறீதரன்

 

மயிலைமா வல்லிக் கேணியான்

திவ்.இயற்.நான்மு.35

குரவமே கமழும் குளிர் பொழிலூடு

குயிலொடு மயில்கள் நின்று ஆல

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்

திருவல்லிக்கேணிக் கண்டேனே (1073)

தேன் அமர் சோலை மாட மா மயிலைத்

திருவல்லிக்கேணிக் கண்டேனே (1075)

– திருமங்கை ஆழ்வார்

http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3792

குரவம் – common bottle flower

குரவ மலர் மணம் வீசும் குளிர்ந்த பொழில்களும் கதிரவனின் ஒளிக்கதிர் படா இருண்ட சோலைகளில் குயிலும் மயிலும் திரிகின்ற மாட மாமயிலைத் திருவல்லிக்கேணி என அதன் இயல்பைப் புகழ்கிறார் திருமங்கை ஆழ்வார். மயிலையும் அல்லிக்கேணியும் அக்கால் ஒன்றுபட்ட பகுதியாகவே இருந்துள்ளன. மயிலை இன்னும் சிறப்புற்று இருந்ததாலேயே மயிலையின் திருவல்லிக்கேணி எனப்பட்டது போலும். இவ்விரு நிலத்தொகுதியும் செழுச்சியுற்றது (fertile) என்னவோ கூவம் ஆற்று ஓட்டத்தின் நீர்ப்பாய்ச்சனத்தினால் தான் என்பது யாவரும் உணரவேண்டிய உண்மை.

திருவல்லிக்கேணி, வேங்கட கிருஷ்ணன் எனப் பெயரிய பார்த்தசாரதி பெருமாளின் கோவில் கொண்ட ஊர். இது ஆழ்வார்கள் பாடல் பெற்ற,108 வைணவ தலங்களுள் ஒன்று. இங்கத்து கோவிலின் கருவறை முற்றத்தில் உள்ள தந்திவர்மப் பல்லவனின் 12 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி.808) கல்வெட்டு இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கு சான்று. மேலும் கருவறை முதல் முற்றம் வரை உள்ள பாறை கருங்கல் வகை சார்ந்தது . கருவறையின் புறச்சுவர் மஞ்சள் நிறப் பாறை வகையினது என்பது இக்கோவில் பின்னீடு சோழர்களால் கட்டப்பட்டது என்பதற்கு சான்றாகிறது. இக்கோவில் அக்காலத்தே அந்த அளவிற்கே சிறிதாக இருந்துள்ளது.


​​

1. வடக்கு கருவறைச் சுவர். ​(சோழர் காலம் வரை கோவில் இந்த அளவே இருந்துள்ளது)

2. மேற்கு கருவறைச் சுவர்.

3. தாயார் சன்னதியை ஒட்டிய தெற்கு கருவறைச் சுவர்.

​ஆனால் இக்கோவில் இன்று மிகக் கம்பீரமாக காட்சிப்படுவதற்கு காரணம் விசய நகர ஆட்சியின் போது அரங்கநாதர், இராமர், வரதர், நரசிம்மர், ஆண்டாள், ஆழ்வார்கள் என தனி சன்னதி அமைக்கப்பட்டு விரிவுற்றது. கோவிலின் பழைய அமைப்பு அக்கால் மறுசீரமைக்கப்பட்டது. அதற்கு சோழர் கால கல்வெட்டுகள் பல அடிக்கல்லாக தரையில் வைத்து பூசியிருப்பதே சான்று,

பின்னர் இக்கோவிலில் மேற்கு புறத்தில் கசேந்திர வரதர் சன்னதி முதல் ஆண்டாள் சன்னதி வரை தூண் மண்டபம் கட்டப்பட்டு அதற்கு பண உதவி செய்த தெலுங்கு ஆண், பெண் கொடையாளிகளின் சிலைகள் செதுக்கப்பட்டு ஒவ்வொரு தூணிலும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்தூண்களைப் பார்த்தாலே அவற்றின் செலவுக்கு கணக்கு என்னவாக இருக்கும் என்று புரிந்துகொள்ள முடியும். அதே போல ஆண்டாள் சன்னதி முதல் சுவர் கண்ணாடி வரை தூண் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு உதவிய தெலுங்குப் பெண்ணின் சிலை ஒரு தூணிலே வடிக்கப்பட்டு அதன் மேல் தெலுங்கு கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் தெலுங்கரின் முயற்சியால் இக்கோவில் கம்பீரத்தோடு பிரம்மாண்ட தோற்றத்தையும் எய்தியது எனலாம். பெருமாளின் தென்புறச்சுவரில் நெடிய தெலுங்கு கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது. இந்நெடியக் கல்வெட்டு 1585 இல் பெனுகொண்டாவை தலைமை இடமாகக் கொண்டு ஸ்ரீ ரங்கராயர் ஆண்டுவந்த போது இராமராஜ வேங்கடபதிராஜுவின் தளவாய் திருமலைராயர் மாட நெல்லூர் செஞ்சம் கிராமம் தலையாறி கண்காணிப்பிலுள்ள , நீடு கிராமம் நிடாரம்பரம் கிராமம் ஆகிய இரு கிராமங்களை திருஅல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு தானமாகக் கொடுத்து அதைக்கொண்டு பெருமாளுக்கு என்னென்ன கைங்கரியம் செய்யவேண்டும் என்று ஒரு நெடிய பட்டியலே கொடுத்து அதில் ஒரு குறையும் இல்லாமல் நடந்தேற வேண்டும். அதற்கு இடர் செய்வார் கங்கை கரையில் பசுவையும் பிராமணரையும் கொன்ற பாவத்தை அடைவார் என்று பொறித்துள்ளார்.

கோவிலுக்குள் சிறிதளவேனும் வெளிச்சமும் காற்றும் வரட்டும் என்று கருதித்தானோ என்னவோ தென்புறத்தில் மடைப்பள்ளிக்கும் தாயார் சன்னதி மண்டபத்திற்கு இடைப்பட்ட பகுதியில் பெரிதாக மண்டபம் ஏதும் கட்டாமல் விட்டுவிட்டதை உணர முடிகிறது.


4. மேற்கு திசை சிலை மண்டபம்.

5. ஆண்டாள் சன்னதிக்கு நேரே அமைந்த மண்டபம்.

6. ஆண்டாள் சன்னதி மண்டபம் எழும்ப உதவிய பெண். தலைமேல் அவர் பற்றி தெலுங்கு கல்வெட்டு.
​​

இப்படியாக விசயநகர – நாயக்கர் ஆட்சியின் போது இக்கோவில் 16 /17 ஆம் நூற்றாண்டுகளில் விரிந்து பெருமையுற்ற நிலையில் சத்திரபதி சிவாஜி தனது படை ஒளரங்கசிப்பின் தென்னக படையெடுப்பால் அழிந்து விடாமல் காக்கும் உத்தியாக தமிழகம் வந்தார். அப்போது வேலூர், செஞ்சி நாயக்கர் ஆட்சி ஒழிக்கப்பட்டு மராத்தியர் ஆட்சி நிறுவப்பட்டது. இவ்வாட்சி சிறு காலப் பொழுதே நிலைத்தாலும் பல சிவன் கோவில்களில் மராத்தியர் வெற்றி நினைவாக மண்டபங்கள் கட்டுவிக்கப்பட்டு அறப்பணிகள் நிறைவேறினர். மராத்தியரில் சிலர் மாத்துவ வைணவத்தை பின்பற்றுவோரும் உண்டல்லவா? ஆதலால் மராத்தியர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் தமது முத்திரையை பதித்தனர். கோவிலினுள் கட்டுவதற்கு இடமே இல்லாமல் தெலுங்கர் தமது அறப்பணியை ​முடிந்துவிட்டதால் மனம் கலங்காத மராத்தியர் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து திருக்குளம் நோக்கி புடைப்பு சிற்பங்கள் கொண்ட நெடிய வரவேற்பு மண்டபத்தை கட்டுவித்தனர். அதில் ஒரு தூணில் ஒரு மராத்திய அதிகாரி தனது மனைவியுடன் ஒருங்கே நின்று பெருமாளை நோக்கி கைக் கூப்பி நிற்கிறார். அவர் தலையை மராத்திய தலைச் சிதவல் அணி செய்கிறது. அவரது சிலைக்கு கீழே மண்ணீ வர் என்று அவரது பெயர் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.


​​

7. வெளியில் அமைந்த மராத்தியர் கட்டிய வரவேற்பு மண்டபம்.

8. மண்ணீவர் என பெயர் பொறித்த மராத்திய அதிகாரி மனைவியுடன் தொழுகிறார்.

9. திருக்குளமும் அதில் மண்டபமும்.

கல்வெட்டும் / விளக்கமும்:

– – – நம்பியும் அருளாளனும் உள்ளிட்டோம் – – – / – – – டும் ஆக உரு இருபத்தாறுக்கும் எரிக்க கடவ திருநு – – / – – – கக் கடவோம் இவ்வுரு இருபத்தாறுங் கைக்கொண் – – – / – – -ரான நான தண்டிப்பிடிக்கோன் மக்களில் திருவா – – – / – – – ர்க்கு இரண்டும் எரிய இட்ட குத்துவிளக்கு இரண் – – –

விளக்கம்: கோயிலில் காட்சி படுத்தியுள்ள, இரு ஓரங்களிலும் எழுத்தை இழந்த 12 – 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இது. நுந்தா விளக்கு எரிக்கிறோம் என ஆடு (உரு) 26 ஐ பெற்றுக்கொண்ட பிராமணர், நான்காம் அதிகார நிலை நாடு கிழார் தண்டிப்பிடிக்கோன் பிள்ளைகளில் திருவா- – என்பவரிடம் இருந்து விளக்கு எரிக்க இரண்டு குத்துவிளக்கும் பெறப்பட்டன என்பது செய்தி .ஸ்வஸ்தி ஸ்ரீ த்ரிபுவனச் சக் – – – / ஸிங்க நாயற்று பூர்வ ப[ க்ஷ ] – – – / ண்ட சோழ மண்டலத்து புலியு – – -/ ஆளுடையர் திருவாந் யூருடை – – – / ளைகளில் கழுமலவூரர் பக் – – – / கொண்ட நற்புதுக் கா[சு] – – – -/கச் செலுத்தக் கடவோமாக – – –

விளக்கம்: வலது ஓரம் எழுத்துகளை இழந்து தரையில் கிடந்து மிதிபட்டு தவிக்கும் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. கழுமலவூரரிடம் (சீர்காழி) இருந்து திருவான்மியூர் உலகாளுடைய பெருமானுக்கு அன்றாட பூசனைக்கு வேண்டியன செய்ய புதுக்காசுகளை பெற்றுக்கொண்டதைக் குறிக்கிறது.ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீபட்டர் திருவடிகளே சரண[ம்] ஸ்வஸ்தி ஸ்ரீ மன்மகாமண்டலேஸ்வர ஸ்ரீ வீர பிறுதாப சதாசிவ தேவமகாராயற்கு செல்லா நின்ற ஸம்வற்ஸரம் 1486 (1564) க்கு செ

ல்லா நின்ற ரத்தாக்ஷி வருஷ மகரநாயற்றில் பூற்வபக்ஷத்தில் உத்திராடமும் ஆதித்யவாரமும் பெற்ற நாள் தெள்ளிய சிங்கப்பெருமாளிட தாஸன் நரசிங்கதாஸன் தேசாந்திரி பண்ணி — க்க — –

யிங்கரியம் பள்ளிகொண்ட பெருமாள் மகாலக்ஷ்மியார் பூ[மி] தேவியார் நாரசிங்கப்பெருமாள் வராகனாராயணப் பெருமாள் சேஷன் திருப்பதிஷ்ட்டையும் கிஷ்ணன் யுஹ்மணிதேவி பல – – – [டா]ள் – – –

மதன் அனுருத்திரன் ஸாத்திகை ஆழ்வார் திருப்பதிஷ்டையும் வேதவல்லினாச்சியாற்கு உற்சவ விக்கிறகமும் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலும் கிஷ்ணன் கோ{யி}[லும்] முன் – – –

மண்டபமும் வேதவல்லி நாச்சியார் கோயிலும் முன் திருவாய்மொழி மண்டபமும் திருமடப்பள்ளியும் அடைய வளைஞ்சாந் திருமதிளும் திருவாபரணங்களும் யிந்த ஸறுவ

கயிங்கரியமும் தேஸாந்திரி நரசிங்கயங்கார் கையிலே தெள்ளிய ஸிங்கப் பெருமாள் கொண்டருளினார். கிறாமம் புதுப்பாக்கம் வேப்பேரி வேஷாறுபாடி யிந்த [கிறாம]

ங்களும் கொண்டருளினார் யிந்த ஸகளவித கயிங்க [ரியங்களும் சந்திராதித்தவரைய் தெள்ளியஸிங்கப் பெருமாள் கொண்டருளவும்.

விளக்கம்: 1564 ல் விசயநகர வேந்தர் சதாசிவ ராயர் ஆட்சியின் போது தெள்ளிய சிங்கப்பெருமாளின் தாசன் என்று கூறிக்கொண்டு நரசிங்கையிங்கார் என்பவர் அரங்கநாதர், இலக்குமி, பூதேவி, நரசிம்மர், வராகர், சேஷ நாகம், கிருஷ்ணன், ஆழ்வார் போன்றோருக்கு சன்னதிகள் ஏற்படுத்தி பதிவித்தார் (பிரதிஷ்டை செய்தார்). நகையணியும், வேதவல்லித் தாயாருக்கு செப்புத் திருமேனியும் செய்வித்துக் கொடுத்தார். அரங்கநாதர், கிருஷ்ணன் சன்னதிக்கு முன் மண்டபம் கட்டுவித்தார். வேதவல்லி தாயாருக்கு தனி சன்னதியும், மடைப்பள்ளியும், முன் திருவாய்மொழி மண்டபமும், வளைந்த மதிலும் கட்டி கொடுக்க இவை அனைத்தையும் தெள்ளிய சிங்க பெருமாள் ஏற்றுக்கொண்டார்.

அதோடு வேப்பேரி, வியாசர்பாடி அவற்றுக்கு இடைப்பட்ட புதுப்பாக்கம் (இக்கால் பட்டாளம் ஆக இருக்க வேண்டும்) ஆகிய கிராமங்களை தெள்ளிய சிங்க பெருமாள் நரசிங்கய்யங்காரிடம் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறார்.

வேப்பேரி தினத்தந்திக்கும் வியாசர்பாடி அம்பேதுக்கர் கல்லூரிக்கும் 5- 6 கிலோ மீட்டர் நீளத் தொலைவு இடைவெளி, தினத் தந்தி முதல் தென்னக இரயில்வே பொது மேலாளர் அலுவலகம் வரை 2.5 – 3 கிலோ மீட்டர் தொலைவு அகலம் உள்ளது. இத்தனைப் பெருங்கொடையை அளிக்க வேண்டுமெனில் நரசிங்கயங்கார் பெரிய ஆட்சி அதிகாரப் பொறுப்பில் இருந்தவராய் இருக்க வேண்டும்.என்று எண்ணத் தோன்றுகிறது. இதே போன்ற தெளிவான செய்தி உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் ஆழ்வார்கள், ஆண்டாள் போன்றோருக்கு எப்போது தனி சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் வணங்கி வரலாயினர் என்பதை உறுதிப்படுத்தலாம். அதோடு கோவில்களில் வாகனங்களில் தெய்வத்தை ஏற்றி ஊர் உலா வரும் திருவிழா எப்போது தொடங்கியது என்பதையும் அறிந்து கொள்ளலாம். அதே போல் சிவன் கோவில்களில் 63 நாயன்மார்கள் எப்போது சிலையாக பதிவிக்கப்பட்டனர் என்பதையும் உறுதிப்படுத்தலாம். இவை தாம் உண்மையான தொல்லியல் நோக்கிலான கோவில் கட்டட ஆராய்ச்சி.

ஆற்று மேடுகளில் கோவில் இயக்கம் உருப்பெறவும் கால்கொள்ளவும் பெரிதும் துணைநின்றவர் ஆட்சியில் முதல் அதிகார நிலையில் இருந்த பல்லவ வேந்தர்கள் ஆவர். மேலைச் சாளுக்கியர், இராட்டிரகூடர் எழுச்சியால் பின்னாளில் இவர்கள் இரண்டாம் அதிகார மன்னர் நிலைக்கும், மூன்றாம் அதிகார அதியரைசர் நிலைக்கும் தாழ்ந்து போனார்கள். இவர்கள் இக்கால் எந்த சாதியில் கலந்து கரைந்து போயிருப்பார்கள் என்ற ஆவல் அனைவர் உள்ளத்திலும் எழுவது இயல்பே. இதற்கு சான்றாக ஒரு 19 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு உள்ளது.

சென்னைபுரி / ஸ்ரீ அருணாச்சலேசுவர / ர் கோயில் – வீடு – / மயிலை நல்லப்பா / முதலியார் புத்திரராகிய / ஜஷ்டீ சு முத்துசாமி / முதலியார் தற்மம் தொ / ண்ட மண்டலத்தா/ ரில் – வைசிய குலம் / துளுவவேளாளம் / பு. பல்லவராய கோ / த்திரம் – போதாய[ன] / சூத்திரம் -சாலிவா / கன – வருஷம் / 1764

விளக்கம் : தொண்டை மண்டலம் மூன்றாம் வருணம் துளுவ வேளாள சாதியில் பல்லவ கோத்திரத்தில் பிறந்த மயிலைவாழ் நல்லப்ப முதலியார் மகன் ஜஸ்டிசு முத்துசாமி முதலியார் சென்னை அருணாசலேசுவரர் கோயிலுக்கு வீடு ஒன்றை தானமாகக் கொடுத்தார்.

மேற்சொன்ன நான்கு கல்வெட்டுகளும் “சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்” நூலில் உள்ளன. மேற்கோள் உதவி கோவை திரு. சுந்தரம்.

தொண்டை மண்டல கல்வெட்டில் குறிக்கப் பெறும் மூன்றாம் அதிகார நிலை அதியரைசர்கள் அரையன், ராயன் என்றும், நான்காம் அதிகார நிலை கிழார்கோன்கள் நாடுகிழான் என்றும் குறிக்கப்படுகின்றனர் . அரையன், கிழான் யாவரும் பெரு நிலக்கிழார்களே. ஆகவே தொண்டை மண்டலத்தில் 16 /17 ஆம் நூற்றாண்டில் சாதி உருவான காலத்தில் இவர்கள் துளுவ வேளாளர்களாக தம்மை அறிவித்துக் கொண்டுள்ளனர். மேலும் 17ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியிலும், 19 ஆம் நூற்றாண்டு வெள்ளையர் ஆட்சியிலும் இந்த துளுவ வேளாளர்கள் பல கோவில்களை கட்டுவித்ததும், மறுசீரமைத்ததும், பல கொடைகளை நல்கியதும் கல்வெட்டில் காணக் கிடைக்கின்றன என்பது இவர்கள் முன்னோரான அரையன், கிழவன் போன்றோர் செய்தது போலவே அறப்பணியை தொடர் ந்து இவர்கள் வெள்ளையர் ஆட்சி வரை செய்து வந்துள்ளனர் எனக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் பார்த்தால் கல்வெட்டுகளில் சிவாச்சாரி பிராமணர்களுக்கு இணையாக அல்லது அடுத்ததாக கல்வெட்டுகளில் அதிகம் இடம்பெறும் மக்கள் வேளாள மக்களாகவே உள்ளனர். தமிழ் மொழிக் காப்பு, பண்பாடு நாகரிகக் காப்பு, சமய அறங்காப்பு ஆகியவற்றில் தமக்கு நிகரில்லாத முதலிடம் பெற்ற இந்த வேளாள மக்கள் இக்கல்வெட்டுகள் உள்ள காலம் வரை அவரின் பங்களிப்பு நினைத்து போற்றலுக்கு உரியதாகிறது.

கோவில் ஆடு மாடுகளை வளர்த்து அன்றாடம் விளக்கு எரிக்க நெய் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மன்றாடி, கோணார் போன்ற இடையர் கல்வெட்டில் மூன்றாம் இடம் பிடிக்கின்ற சாதியார் ஆவார். .

கலிங்கத்தை வெற்றிகொண்ட பல்லவன் கருணாகரத் தொண்டைமானை அவன் மனைவி தான் வழங்கிய திருநந்தா விளக்கு கல்வெட்டில் அவனை வேளாண் என்று குறிப்பிடுகிறாள், “ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்துமூந்று ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து திருவத்தி / யூராழ்[வா]ர்க்கு சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டு திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி உடையான் வேளாண் கருணாகரநாந தொண்டைமானார் / தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு.

நூல்: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள், 2011, தொகுதி 2, எண் :5, பக் – 10, காஞ்சி வரதர் (அருளாள பெருமாள்) கோயில்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.