பழந்தமிழக வரலாறு – 13
பதிற்றுப்பத்தும், பதிகமும், சேர வேந்தர் ஆண்டுகளும்
பதிற்றுப்பத்துப் பதிகம் குறிப்பிடும் மொத்த ஆட்சி ஆண்டுகளை அரசனாக இருந்த ஆண்டுகள், வேந்தனாக இருந்த ஆண்டுகள் என இரு பகுதிகளாகக் கணிக்கப்பட்டன. இமயவரம்பனின் தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன், அவனது மகன்கள் களங்காய் கண்ணி நார்முடிச் சேரல், சேரன்செங்குட்டுவன் ஆகியோர் முறையே 25, 25, 55 ஆண்டுகள் ஆண்டதாகப் பதிகம் குறிப்பிடுகிறது. இவை அவர்கள் அரசனாகவும் வேந்தனாகவும் இருந்த மொத்த ஆட்சி ஆண்டுகள் ஆகும். இமயவரம்பன் கிட்டத்தட்ட கி.மு. 275வாக்கில் இறக்கிறான். இமயவரம்பனுக்குப் பின் கி.மு. 275இல் வேந்தனாக ஆன அவனது தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன் 10 ஆண்டுகள் வேந்தனாகவும், 15 ஆண்டுகள் அரசனாகவும்(கி.மு.290 முதல்) இருந்தான் எனக் கணிக்கப்பட்டது. இமயவரம்பன் இறந்த போது கி.மு. 275வாக்கில், அவனது மகன்கள் களங்காய்கண்ணி நார்முடிச்சேரல், சேரன் செங்குட்டுவன் ஆகிய இருவரும் அரசனாக்கப்படுகின்றனர். 10 ஆண்டுகள் கழித்து, அவனது தம்பி இறந்தபின் இமயவரம்பனின் மூத்த மகன் கி.மு. 250 வரை, 15 ஆண்டுகள் வேந்தனாக இருக்கிறான். அதன்பின் இமயவரம்பன் இறந்து 25 ஆண்டுகள் கழித்து கி.மு. 250இல் சேரன் செங்குட்டுவன் வேந்தனாக ஆகி 30 ஆண்டுகள் வேந்தனாக ஆண்டான். அதன்பின் அவனது கடைசிமகன் ஆடுகோட்பாட்டு சேரலாதன் 8 ஆண்டுகள் மட்டுமே வேந்தனாக இருந்தான். பதிகம் குறிப்பிடும் மொத்த ஆட்சி ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்ட, அரசர், வேந்தர் ஆட்சி ஆண்டுகள் குறித்த கீழ்க்கண்ட அட்டவணை, இக்கணிப்பு குறித்த ஒரு தெளிவைத்தரும்.
வேந்தன்பெயர் மொத்தஆண்டு அரசர்ஆண்டு வேந்தர்ஆண்டு
1.இமயவரம்பன் 333-275=58 333-327=6 327-275=52
2.அவனதுதம்பி 290-265=25 290-275=15 275-265=10
3.மூத்தமகன் 275-250=25 275-265=10 265-250=15
4.செங்குட்டுவன் 275-220=55 275-250=25 250-220=30
5.கடைசிமகன் 250-212=38 250-220=30 220-212=8
மொத்த ஆண்டுகள் 201 86 115
பொறையர் குலச்சேர வேந்தர்கள்:
1.செல்வக் வாழி. 230-205=25 230-212=18 212-205=7
2.பெருஞ் பொறை 210-195=15 210-205=5 205-195=10
3.இளஞ் பொறை 200-184=16 200-195=5 195-184=11
மொத்த ஆண்டுகள் 56 28 28
உதியனின் மகன்கள் இருவரும்(இமயவரம்பனும் அவனது தம்பியும்), அவனது பேரன்கள் மூவரும்(இமயவரம்பனின் மகன்கள்) சேர்ந்து பதிற்றுப்பத்துப்படி மொத்தம் 201 ஆட்சி ஆண்டுகள் ஆண்டுள்ளனர். இதில் ஒருவன் வேந்தனாக இருந்த போது மற்றவர்கள் அரசர்களாக இருந்துள்ளனர். இவர்களது வேந்தர் ஆட்சி ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட 115 ஆண்டுகள் ஆகும். இந்த வேந்தர் ஆட்சி ஆண்டுகளைத்தான் காலக் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளமுடியும். இமயவரம்பன் சோழன் மகள் மணக்கிள்ளியை இரண்டாவது மனைவியாக மணந்தபின், அவனது 50ஆவது வயதில் சேரன் செங்குட்டுவன் அவனுக்கு மகனாகப் பிறக்கிறான். அதன் பின் ஆடுகோட்பாட்டு சேரலாதன் பிறக்கிறான்.
கி.மு. 232 வாக்கில் அசோகர் இறந்தார் என்பதாலும், கி.மு. 230 வாக்கில் சாதவாகனர்கள் தனி ஆட்சியை நிறுவினர் என்பதாலும் சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பு என்பது கி.மு. 232-228 வாக்கில்தான் நடந்தது எனலாம். சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப்படையெடுப்பு, சாதவாகனர்கள் தனி ஆட்சியை நிறுவக் காரணமாக அமைந்தது. பரணரால் சேரன் செங்குட்டுவன் பாடப்பட்டவன்; அதியமான் காலத்தில் வாழ்ந்தவன்; வடநாட்டுப் படையெடுப்புக்குப் பின்னரே சோழன் கிள்ளிவளவனுக்கு உதவ நேரிவாயில் போர் இவனால் நடத்தப்பட்டது; அவன் இறந்த ஆண்டும், சம்பை கல்வெட்டின் ஆண்டும் கிட்டத்தட்ட கிமு. 220 ஆகும். கொல்லிமலை கைப்பற்றப் படுவதற்கும் திருக்கோவிலூர்போர் நடப்பதற்கும் சிறிது காலத்துக்குமுன் அவன் இறந்துவிடுகிறான்.
7ஆம் காலகட்டம் வரையான சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை நிர்ணயிப்பதில் பதிற்றுப்பத்தின் மொத்த ஆட்சி ஆண்டுகளும், சங்கப்பாடல்களும் போக, நந்தர்கள்-மௌரியர்கள் ஆட்சிமாற்றம் கி.மு. 323 வாக்கில் நடந்தது; இந்தியாவின் வடபகுதியில் கி.மு. 325-322 வரை கலவரங்கள் நடந்தன; கி.மு. 272 வாக்கில் பிந்துசாரன் இறந்தான்; அதன்பின் 4 ஆண்டுகள் கழித்து அசோகன் கி.மு. 268 வாக்கில் முடி சூடினான்; கி.மு. 256 வாக்கில் அசோகன் கல்வெட்டுகள் வெட்டப்பட்டன; கிமு. 232 வாக்கில் அசோகர் இறந்தார்; கி.மு. 230 வாக்கில் சாதவாகனர்கள் தனி அரசை அமைத்தனர்; கி.மு. 220 வாக்கில் சம்பைக்கல்வெட்டு வெட்டப்பட்டது; கி.மு. 165 வாக்கில் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு வெட்டப்பட்டது; கி.மு. 163 வாக்கில் இரண்டாவது தூமகேது தோன்றியபோது யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இறந்தான் என்பன போன்ற வரலாற்றுச் செய்திகள், கி.மு. 327 முதல் கி.மு. 163 வரையான 2ஆம் காலகட்டம் முதல் 7ஆம் காலகட்டம் வரையிலான சேரஆட்சியாளர்களின் ஆண்டுகளை வரையறை செய்து அவைகளை நிர்ணயிப்பதில் மிக முக்கியப் பங்கை வகித்தன.
சிலப்பதிகாரக் காப்பியம் மூலம் சாதவாகனர்களுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் தொடர்பு இருந்ததை, அதில் சேரன் செங்குட்டுவன் பெரு வேந்தனாகவும், சாதவாகனர்கள் அவனுக்குக் கட்டுப்பட்டு, அவன் சொல்படி செயல்படுபவர்களாகவும் காட்டப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. மேலும் சேரன் செங்குட்டுவன் தனது இறுதிக்காலத்தில்தான் வடநாடு படையெடுத்தான் என்பதையும் அறிய முடிந்தது. இமயவரம்பன் தனது வேந்தர் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே வடநாடு படையெடுத்தான் என்பதை 2ஆம் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. இந்த ஒவ்வொரு செய்தியும் காலக்கணிப்பிற்கு பயனுள்ளதாக இருந்தது எனலாம்.
தொடருவோம்