கலைஞர் அஞ்சலி
கலைஞர் என்றோர் ஓவியம்
கலைந்தது இன்று அறிவீரோ ?
கண்ணீர் சுரக்கும் வேளையிலே
கவிதை வழியுது உள்ளத்திலே
தமிழகம் தவிக்குது துயரிலே
தமிழன்னை மைந்தன் மண்ணிலே
குறளமுதம் தந்த தமிழ்த் தலைவன்
குரல் இன்னும் மனதிலே மறையாமல்
அரசியல் பார்வையில் பார்க்கவில்லை
அன்னைத் தமிழைத் தாலாட்டிய
தமிழுக்குச் சொந்தக்காரனாய் இந்தத்
தனயன் எத்தனை அழகுற மொழி செய்தான்
தமிழை நான் அறிந்த நாள் முதல்
தரணியில் நானின்று வாழும் வரை
செந்தமிழ் விளையாடும் விளைநிலமாய்
செம்மொழி தந்த கலைஞர் துயில்கிறார்
அறிவுக்களஞ்சியம் அறிஞர் அண்ணாவின்
அன்புத் தம்பியாய் , புரட்சித் தலைவரின்
அருமை நண்பராய் கவியரசர் கண்ணதாசனோடு
அடிப்படை நட்புக் கொண்டவராய்
பல இலட்சம் தமிழ் மக்களின் தலைவராய்
பன்னாடு வாழ் தமிழர்களின் காவலராய்
பல்வேறு கோலப் பதவி கொண்டு வாழ்ந்த
பராசக்தித் தமிழன் ஓய்வெடுத்தான்
சங்கத்தமிழ் தந்த எங்கள் கலைஞசரிடம்
சரித்திரம் படைக்கும் இனிய தமிழ் எமக்கு
இனிப்பாய்க் கிடைக்குமென்று காத்திருந்தோம்
இனியுமக்கில்லை என்றே ஈசன் அழைத்துக் கொண்டான்
கலைஞரே ! தமிழ்ப் புரவலனே ! போதுமய்யா!
கனவேகத்தில் உருளும் பொல்லாத உலகத்தில்
கனமான இதயத்தொடு வாடவேண்டாம்
இனமான உணர்வு காத்தேனென்று துயில் கொள்வீர்
மறைந்து விட்ட தமிழ்த் தனயன் எம்
மகத்தான கலைஞர் கருணாநிதிக்கு
மனத்துயரத்தோடு தமிழன் எந்தன்
மெளன அஞ்சலிகள்.
சக்தி சக்திதாசன்