Advertisements
கிரேசி மொழிகள்திருமால் திருப்புகழ்

குமார சம்பவம்(அல்லது பேரருள் நெற்றிக்கண் பிறப்பு)…. 2 !

 

சர்கம் -2
————-

அந்த சமயம், அசுரனாம் தாரகனால்
நொந்த சுரர்கள் நடுநடுங்க -வந்தனர்
முன்னிருத்தி இந்திரனை முப்பது முக்கோடியும்
கண்ணிருநான் கோன்முன் குவிந்து….(60)….8-10-2010

சீதளத் தாமரை சூழ்தடாகக் கண்ணுக்கு
போததி காலை புலப்படும் -ஆதவன்போல்
வாடிய வானவர்முன் கூடிய வாசலில்
பாடிடும் நூலோன் பிறப்பு….(61)….8-10-2010

நாற்புறமும் பார்க்கவல்ல பார்ப்பனனை, பல்லுயிரை
தோற்றுவிக்கும் நற்கல்வித் தூயவனை -ஆர்பரித்து
தேவர்கள் தோத்திரமாய் தேவன் திருமுகத்தில்
தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010
(OR)
வான்முதல் பார்வரை வேய்ந்துயிர் வைத்தவனை
நான்முகனை நற்கல்வி நாயகனை -தேனமிழ்த
தேவர்கள் சூழ்ந்து திருமுகத்தில் தோத்திரமாய்
தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010

தத்துவமே, தோன்றல்முன் தேகநாமம் அற்றவரே
சத்துவமே ராஜஸமே தாமஸமே -முத்தவமே (OR)முத்தொழிலே
மூர்த்திகள் மூன்றான மூலமேவுன் காலில்கைக்
கோர்த்தோம் சரணா கதிக்கு….(63)….8-10-2010

தண்ணீர் பயனளிக்கத் திண்ணமாய் சக்தியாய்
நண்ணிய நான்முகனே நின்னருளால் -மண்ணில்
அசையும் உயிர்கள், அசையா பொருட்கள்
விசையுறச் செய்யுமுன் வித்து….(64)….8-10-2010

கற்பித்த முக்குண காரணத்தால் கொண்டீர்கள்
உற்பத்தி, காத்தருளல், உய்யுமுயிர் -தப்பித்தல்
என்றமுச் சக்திகளாய் இன்றுநீர் நின்றாலும்
அன்றசை(வு) இல்லா அயன்….(OR)
அன்றிருந்தீர் ஏகம் அடைந்து….(65)….8-10-2010

பெண்ணையும் ஆணையும் பாரித்து பாலிக்க
உன்னையே ஈறுடலாய் உற்பவித்து -முன்னைநீ
தந்தை ஒருகூறாய் ,தாயார் மறுகூறாய்
விந்தை புரிந்தாய் வகுத்து….(66)….8-10-2010

ஞாலம் படைத்தனை,கோலம் கொடுத்தனை
காலம் பகலிரவாய்க் கொண்டனை -மூளுமவ்
ஊழி உமக்குறக்கம் உற்பத்தி உன்விழிப்பு
வாழி விரிஞ்சன் விறல்….(67)….8-10-2010

காரணனே பாருக்கு, காரணம் பாராத
பூரணனே, பாரைப் படைத்தழிப்போய் -ஓரணுவும்
தொல்லை கொடுக்காத தோற்றம் முடிவற்றோய்
இல்லை உமக்கிங்கே ஈடு….(68)….9-10-2010

தானாகத் தன்னிலே தோன்றித் தனக்குள்ளே
காணா(து) ஒடுங்கிடும் கற்பம்நீர் -வானாக
தீயாக, மண்ணாக, தண்ணீர் வளியாக
ஓயா(து) உழைத்திடும் ஓய்வு….(69)….9-10-2010

திரவப் பொருளாய், திடமாய், உருவாய்
அருவம் நிகர்த்த அணுவாய் -கருவத்து
பாரமாய் லேஸாய், புலனுணர்வாய், பூதமாய்
ஏராள மானஏ கா….(OR)
ஏராளம் உந்தன் எடுப்பு….(70)….9-10-2010

ஓங்கார மூன்றுசுர உச்சரிப்பால் தோன்றிடும்
ரீங்கார வேத ரகசியத்தால் -ஆங்காங்கு
செய்திடும் யாகமும் சொர்காதி பேறுகளும்
பெய்திடும் தேவரீர் பாங்கு….(71)….10-10-2010

காட்சிக்கு சாங்கியம் கூறும் பிரகிருதி
சாட்சிக்கு சுத்தபுரு ஷோத்தமன் -ஆட்சிக்(கு)
அகப்பட ஜீவனாய் ஆகிடும் நீரே
சுகப்படுவீர் ஆன்மனில் சேர்ந்து….(72)….10-10-2010

விண்ணத் தனையும் விழுந்து வணங்கிடும்
தென்னத் திசையோர் துதித்திடும் -அன்னத்(து)
அயனே (OR) அயன்நீர் மரீசி செயலாம் சிருஷ்டிக்
குயவன் களிமண் கரம்….(73)….10-10-2010

யாகம்நீர் யாகஅவிர் பாகம்நீர் பாகமுண்ணும்
தேகம்நீர் திவ்வியங்கள் தந்தருள்நீர் -மேகம்நீர்
தேர்ந்த பொருட்கள்நீர் தேர்ச்சிநீர் தேர்வும்நீர்
நேர்ந்ததுவாய் நின்றீர் நினைத்து….(74)….10-10-2010

வரஸ்துதியாய் வேண்டாது வாக்கில் பொருளில்
சுரஸ்துதியின் சீரால் சிலிர்த்து -சரஸ்வதி
ஆசை மணாளன் ஆர்வம் மிகவுற்று
பேசப் புகுந்தான் பதில்….(75)….10-10-2010

வேதம் வடித்ததால் ஆதிகவி ஆனவன்
போது கமலமெப் போதும்வாழ் -நாதனுரை
நான்கு முகத்தினால் நான்கு முகமாக
வான்குவிந்தோர் காதில் விருந்து….(76)….11-10-2010

வண்டி நுகத்தடியாய் வாய்த்தநீள் கைகளும்
அண்டர் பதவியும் ஆளுமையும் -கொண்டிருந்தும்
கூடியிருந்து இங்கு குறைவற்ற நீங்களென்
வீடடைந்தீர் வாழ்க வரவு….(77)….11-10-2010

காயும் முழுநிலவும் கண்சிமிட்டும் தாரகையும்
மேயும் பனித்திரையால் மங்குதலாய் -நீயுமுன்
கூட்டமும் கொண்டஇவ் வாட்டமேன் வஜ்ஜிரா
பாட்டன் எனக்குப் பகர்….(78)….11-10-2010

விருத்திரன் மாய வரைகள் சாய
நிறத்தினால் வானவில் நாண -கரத்திருந்த
வச்சிரம் வாடி வளைந்துமுனை தேய்ந்துவெறும்
குச்சியாய் ஆனதேன் கோன்….(79)….11-10-2010

மந்திரத்தால் கட்டுண்ட மாசுணமாய்க் கைப்பாசம்
தன்திறம் விட்டுத் தவழ்வதேன் -உன்தரப்பு காரணம் என்னவோ கார்முகில் காவலா
வாருணா கூறுவாய் விட்டு….(80)….11-10-2010

சுபாவமாய் கையிருக்கும், சத்ருவைக் கொல்லும்
அபார கதாயுதம் அற்ற -குபேரா
கிளையிழந்து கொம்பாய் கரதலம் கூனி
களையிழந்தீர் கூறும் கலி….(81)….11-10-2010

துள்ளிக் குதித்தவுணர் தொல்லை தகர்த்தவரைக்
கொல்லும் தண்டத்தை கேலிசெய்தல் -கொள்ளித்
தடியால் தரைதனில் கோடிடுதற்(கு) ஒத்த
படியாம் எமனேன் பயம்….(82)….11-10-2010

வீசுமொளி போனதால், தேசு குறைந்ததால்
கூசிடாது பார்க்க குளிர்ச்சியாய் -பூசிய
சீலையின் ஓவியமாய் சூரியர்காள் பன்னிருவர்
வேலையற்றுக் கொண்டதேன் வேர்ப்பு….(83)….11-10-2010

துள்ளும் நதிவெள்ளம் மெல்ல எதிர்திசையில்
செல்லத் தடையென்று சொல்லலாம் -கொல்லும்
வருத்தம்தான் என்ன? மருத்துக் களேழும்
சிறுத்ததேன் சீறாது சோர்ந்து….(84)….12-10-2010

ஹூங்காரம் செய்யும் உருத்திரர்காள், வார்சடை
தாங்காது தொய்வதேன் தண்மதியால் -ஏங்காணும்
விண்ணிருந்தும் வீரமற்று வையத்தைப் பார்க்கிறது
கண்ணிரெண்டும், ஏனிக் குனிவு….(85)….12-10-2010

பொதுவிதியை போக்கும் புதுவிதியைப் போலே
இதுவரை ஆண்ட இடத்தை -எதிரிகள்
உட்புகுந்து கொண்டனரோ, உங்களுயர் அம்பரம்
முட்புகுந்த(து) ஏனோ மொழி….(86)….12-10-2010

தோற்றுவிக்கும் என்னை துயருலகை சூழுங்கால்
தேற்றுவிக்கும் தாங்களேன் தேர்ந்தெடுத்தீர் -சாற்றிடுவீர்
உள்ளதை உள்ளபடி பிள்ளைகாள் போட்டுடைப்பீர்
தெள்ளத் தெளிவாகத் தான்….(87)….12-10-2010

அண்டிய தென்றலால் ஆடிடும் முண்டகம்போல்
கொண்டகண்கள் ஆயிரத்தால் அண்டர்கோன் -விண்டினன்
தேவ குருவிடம் தக்கபதில் தோலுரித்து
பூவன் பழமாய்ப் பெற….(88)….12-10-2010

இந்திரன்தன் ஆயிரம் கண்களைக் காட்டிலும்
தன்திறனாய் தர்மார்த்த தேசுற்ற -மந்திரன்
தேவ ப்ரஹஸ்பதி சேவித்துச் செப்பினார்

நாவன் அயன்முன் நடப்பு (OR) நிகழ்வு….(89)….12-10-2010

ஒவ்வோர் உயிரிடத்தும் ஊடுறுவும் வல்லோனே
எவ்வா(று) அறியா(து) அளப்பீர்நீர் ! -அவ்வாறே
தாங்களே சொன்னவண்ணம் நாங்கள் துயரடைந்தோம்
தீங்குளத் தோரால் தவித்து….(90)….12-10-2010

விண்ணுச்சி தோன்றும் விபரீத தூமகேது
தன்னிச்சைத் தீயவன் தாரகன் -முன்னுச்சி
உம்மைக் குளிரவைத்து உற்றவர கர்வத்தால்
பொம்மையாய் ஆனோம் பயந்து….(91)….12-10-2010

பாவியவன் ஊரில் பரிதா பமாய்க்கதிரோன்
வாவியுள்ள அல்லிமட்டும் வாழ்வதற்கு -தேவையான
வெய்யிலைத் தந்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க
கையினால் பொத்துகிறான் கண்….(92)….12-10-2019

பாராது பக்ஷங்கள் பாரபக் ஷத்தோடு
தாரா சுரனூரில் தொண்டாற்றும் -தாரகேசன்
தாரு வனமழித்த தாணு தலையெழுத்தால்
சேரும் கலைக்கில்லை ஊறு….(93)….13-10-2010

மாற்றானாம் தாரகன்தன் மாளிகைத் தோட்டத்தில்
நேற்றலர்ந்த பூவுக்கும் நோவின்றி -காற்றானான்
வேர்வைக்கு மட்டும் வளியாகி வீசுதலால்
பார்வைக்குக் கைவிசிறி பார்….(94)….13-10-2010

ஆறு ருதுக்களும் வேறு வழியின்றி
தாருகன் தோட்டத்தில் தொங்கிடும் -நூறுவகைப்
பூக்களைக் காத்துப் பராமரிப்பு செய்திடும்
ஆட்களாய் ஆயினர் அங்கு….(95)….13-10-2010

முத்தை பவழத்தைப் பொத்தி ஜலத்திற்குள்
நித்தம் அவைமுதிர நோன்பிருந்து -கத்தும்
கடலரசன் தாருகன் காலடியில் கெஞ்சி
அடபரிசாய் அந்தோ அளிப்பு….(96)….13-10-2010

வாசுகியும் தோழர்களும் வீசுமொளி ரத்தினத்தால்
நீசனவன் மாளிகையில் நள்ளிரவில் -தாசியென
தீபங்கள் தாங்கித் திரிகின்றார் தேவனே
பாபமென் செய்தோம் புகல்….(97)….13-10-2010

கற்பகத் தாருதரும் அற்புதங்கள் யாவையும்
அற்பனவன் ஆட்சி அருள்வேண்டி -நிற்பவனாம்
இந்திரனே தாரகன் இன்னல் தவிர்த்திட
தந்தருளி ஆனான் தொழும்பு….(98)….13-10-2010

காட்டிடும் அன்புக்குக் கட்டுப் படாதவன்
வாட்டு கிறான்மூ உலகத்தை -போட்டு
அடியாத மாடு படியாதாம் என்று
முடிவாகச் சொன்னான் முனி….(99)….14-10-2010

இந்திர லோகத்து சுந்தரிகள் வாஞ்சையாய்
வந்து தளிர்களுக்கு வேதனை -தந்திடாது
நேசமொடு கொய்திடும் நந்தவனம் தாரகனின்
நாசத்தால் நாணுது நைந்து….(100)….14-10-2010

மூச்சுவிடும் காற்றளவு வீச்சடக்கி, தம்கண்ணீர்
பூச்சொரிய தேவகுலப் பாவையர் -கூச்சமொடு
தாமரைக் கைகளால் தாரகன் தூங்கிட
சாமரம் வீசி சளைப்பு….(101)….14-10-2010

இரவிதன் தேரின் புரவிக் குளம்பு
உரசுமம் மேரு சிரசை -கருவியவன்
பேர்த்தெடுத்து மாளிகைப் பூங்காவில் குன்றுகளாய்ப்
பார்ப்பதவன் கேளிக்கைப் போக்கு….(102)….14-10-2010

அட்டதிக் கஜங்களின் கொட்டும் மதஜலம்
மட்டுமே கொண்டதால் மாகங்கை -குட்டையாம்
பொற்றா மரைப்பயிர் போகமவன் வாவியில்
குற்றப்பேர் மந்தா கினிக்கு….(103)….14-10-2010

அமானுஷ் யமாக அவன்வந்தால் போகும்
சமாச்சாரம் ஆகுமே சோகம் -விமானத்தில்
ஆதலால் தேவர்கள் பூதலம் சுற்றிடும்
காதலுக்கு வந்ததாம் கேடு….(104)….14-10-2010

தீயவன் மூலம் தருமவிர் பாகத்தை
தீயவன் தாரகன் தேவரெம்முன் -மாயமாய்
வேள்வியில் அக்கினிக்கு வாரிசாய் வந்துண்டு
தோல்விக்(கு) அளிப்பான் தபஸ்….(105)….14-10-2010

மிச்சைஸ்வர் யத்தோடு மந்தரம் சுற்றுங்கால்
இச்சையாய் இந்திரன் ஈட்டிய -உச்சைச்
ரவஸ்ஸை அபகரித்த ராட்ஷஸனால் காப்பு
கவஸம் இழந்தாற்போல் கோன்….(106)….14-10-2010

கபவாத பித்தம் கலந்திடத் தோன்றும்
அபவாத மாய்சன்னி பாதம் -உபவேதம்
தீராப் பிணியென்ற தொல்லை யிதற்கீடாம்
தாரா சுரன்செய்யும் தீங்கு….(107)….15-10-2010

வெகுவாக நம்பிய விஷ்ணுவின் ஆழி
புகவாகு இல்லாத பாறை -நிகர்மார்பில்
மோதியதால் உண்டான ஜோதியதால் ஆரமாய்
க்ராதகன் கொண்டான் கழுத்து….(OR)
பாதகன் கொண்டான் புனைந்து….(108)….15-10-2010

அயிரா வதமஞ்சும் அவ்வரக்கன் ஆனை
எயிறால், இமையாதோன் என்றும் -உயிராய்
வலம்வரும் புஷ்கரா வர்த்தக மஞ்சில்
ஜலம்தெறிக்க முட்டும் சிதைத்து….(109)….15-10-2010

கர்மத் தளையகற்றி கர்பப் பிணியறுக்க
தர்மம் தவதானம் தோன்றலாய் -மர்ம
பலமுடைய தாரகன் பாதகம் தீர
தளபதியை தேவர்க்குத் தா….(110)….15-10-2010

பற்றிச் சிறையில் பகைவனால் பூட்டிய
வெற்றித் திருமகளை விண்ணரசன் -பெற்றிடவோர்
ஆணைப் படைத்திடுவீர் சேனைத் தலைவராய்
வானை வலுப்படுத்து வீர்….(111)….15-10-2010

முனிவனது பேச்சு முடிந்தது கண்டு
கனிவுடன் மேலே கமலன் -தணிவுடன்
கூறியது மேகத்தின் கர்ஜனைக்குப் பின்வரும்
மாரியதை வெல்லும் மகிழ்வு….(112)….15-10-2010

நேருதல் நிச்சயம் நீங்கள் நினைப்பதென
ஆறுதல் சொன்னோன் அதுநிகழ -மாறுதலாய்
சேனைத் தலைவன் ஜனிக்கப் படைப்பது
தானல்ல என்றான் தாழ்ந்து….(OR)
நானல்ல என்றான் நகைத்து….(113)….15-10-2010

நட்ட மரமது நச்சுமர மாயினும்
வெட்டுதல் வைத்தோன் வழியன்று -கெட்டவன்
தாரகன் பெற்ற வரமளித்த நானவன்
தீரவழி செய்தல் தவறு….(114)….15-10-2010

மூவுலகைத் தீக்குள் முழுகவைக்கும் வேள்வியை
தீவிரமாய் செய்தனன் தாரகன் -தாவரம்
என்றதும் தந்தேன் தவத்தைத் தடுத்திட
அன்றியவன் நன்மைக்காய் அன்று….(115)….17-10-2010(விட்டுப் போன வெண்பா)

போராளி யாய்யுத்த பூமியில் பூரிக்கும்
தாரா சுரன்திகைக்கும் தோள்வலியன் -வேறாள்
தரணிமிசை உண்டோ, திருநீல கண்டன்
பரமசிவன் மூலம் பிறப்பு….(116)….16-10-2010

அறியாமைக்(கு) அப்பால் அறிவுக்(கு) அரணவ்
இறையொளியை ஆரறிவர் இங்கு -அரியோடு
அடநானும் அவ்வீசர் ஆழமுச்சி தேடித்
தொடயேகி அன்றடைந்தோம் தோற்பு….(117)….16-10-2010

காந்தம் இரும்பைக் கவருதலாய், கைலாச
சாந்தனை யோகத்தில் சார்ந்தனைஏ -காந்தனை
பார்வதியின் தோற்றப் பொலிவதால் ஈர்த்திருவர்
சேர்வதில்தான் தேவர்க்கு தீர்வு….(118)….16-10-2010

நாங்கள் வெளிப்படுத்தும் நல்லாக்க ஆற்றலை
தாங்கி வளர்க்கும் திறனுடையோர் -ஈங்கிருவர்
சம்புவதன் சக்தி சதியேற்க வல்லவள்
நம்புவது நான்படைப்பில் நீர்….(119)….16-10-2010

நெற்றி விழியோனின் நீலக் கழுத்தனின்
வெற்றிப் புதல்வனே வானமகளிர் -கற்றைக்
சிகைவிரித்துக் கொண்ட சிறையிருந்து மீட்டு
பகையழிக்கும் சேனை பொறுப்பு….(120)….17-10-2010

பகர்ந்த படைக்கும் பிரமன் மறைந்து
நகர்ந்தான் சுரர்களை நீங்கி -தகுந்த
உபாயம் கொடுத்த உறுதியில் சொர்க
அபாயம் அகன்றது அன்று….(121)….17-10-2010

சம்புவை ஈர்த்திடும் சாமர்த் தியமுற்ற
அம்புவில் மாறன் அதிசியத்தை -நம்பியகோன்
இந்திரன் நெஞ்சால் இருமடங்கு வேகத்தில்
வந்திடச் சொன்னான் விரைந்து….(122)….17-10-2010

ரதிவளையல் காயம் பதிவுசெய்த காயம்,
நதிவளைவாய் சேர்ந்திருக்கும் நங்கை -நுதல்வளைவாய்
மன்மதன் வில்லேந்தி மாம்பூ வசந்தனுடன்
விண்முதலோன் முன்பு வரவு….(123)….17-10-2010

சர்கம் இரண்டு சுபம்

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க