Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (280)

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் மீண்டும் மற்றொரு வாரத்தில் உங்கள் மத்தியில் இங்கிலாந்துச் செய்திகளுடன் உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். எமக்குக் கிடைத்த இந்த மனிதப்பிறவி இருக்கிறதே அது ஒரு விலைமதிப்பில்லாத பரிசு. ஆங்கிலத்தில் My body is my temple என்பார்கள். அதாவது எனது உடலே எனது கோவிலாகும் எனப்பொருள்படும். இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் எமது உடல்நலத்தைப் பேணுவதே ஒரு ஆன்மீகச் செயலாகும் என்பதுவே. இதிலிருந்து ஒவ்வொரு மனித வாழ்விற்கும் எத்தகையதோர் உன்னத மதிப்பு அளிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது இல்லையா ?

சரி எதற்காக இந்த ஆலாபனை என்கிறீர்களா ?

கடந்த யூன் மாதம் இங்கிலாந்து மேல் வழக்கு மன்றம் (High Court) ஒன்றில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் முக்கிய விளைவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கமே இதற்கான விளக்கமாகும். மேற்கண்ட வழக்கு என்னவென்றால் , வழக்கு மன்றத்தில் “எம்” என்றே குறிக்கப்பட்ட ஒரு 50 வயதுப் பெண்மணி கடந்த 25 வருடங்களாக “ஹண்டிங்டன்” என்றழைக்கப்படும் வியாதியால் பீடிக்கப்பட்டு அப்போது அவரது மூளை ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் குழாய்கள் மூலம் அவரது உயிர் தக்க வைத்துக் கொண்டிருந்த வேளை. அவரது உறவினர்களும், வைத்தியர்களும் கருணை கூர்ந்து அவரது மூச்சு நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியபோதும் சட்டம் அதற்கு இடமளிக்கவில்லை. இப்பிரச்சனையை மேல் நீதி வழக்காடு மன்றத்துக்கு எடுத்துச் சென்றபோது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி “பீட்டர் ஜாக்சன்” என்பவர் இத்தகைய நிலைமைகளில் சட்டத்தின் துணையை நாடவேண்டும் என்பது தேவையற்றது அதிக பட்சம் வைத்தியர்களின் அறிவுறுத்தலின் படி, உறவினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் இத்தகைய நோயாளிகளின் மூச்சுக்குழாய் நிறுத்தப்படலாம் என்று தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பின் விளைவு என்னவென்றால் இனிவரும் காலத்தில் மூளை இயங்கவில்லை எனும் நிலையிலிருக்கும் ஜடம் போன்ற நோயாளிகளை மூச்சுக்குழாய்களின் உதவியோடு தக்க வைத்திருப்பது தேவையற்றது என்று வைத்தியர்களும், உறவினர்களும் கருதுவார்களானால் அவர்களது மூச்சுக்குழாய்களும், வலுக்கட்டாயமாக உணவூட்டும் உணவுக்குழாய்களும் நிறுத்தப்பட்டு அவர்களது இயற்கை மரணம் நிகழும்வகை செய்யலாம்.

இதனை எதிர்ப்பவர்களின் வாதம் என்னவென்றால் இதனைச் சாக்காக வைத்து தமது அசையமுடியாமல், பேசும் திறனற்ற உறவினர்களைப் பராமரிப்பதின் சிக்கலைத் தவிர்க்குமுகமாக பலர் இம்முறையைத் தேர்ந்தெடுப்பது பேசமுடியாமல் , நினைவின்றிக் கிடக்கும் அந்நோயாளர்களின் உரிமைப் பாதிப்பாகும் என்பதுவே. இறைவன் அளித்த இவ்வாழ்வினைப் பறிக்கும் உரிமை ஒருவருக்கும் கிடையாது என்பதுவே அவர்களது வாதம். இனி அவர்களால் சுயநினைவுக்குத் திரும்பவே முடியாது என்று வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டவர்களை இத்தகைய நிலையில் இயற்கைக்கு மாறாக வைத்திருப்பது மட்டும் எவ்வகையில் நியாயமாகும் என்கிறார்கள் இதனை ஆதரிப்போர். “எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எப்படி முடியும்?” எனும் கவியரசரின் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது இல்லையா?

சரி இனி இவ்வாரத்தில் இங்கிலாந்தில் ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்ட எமது நாயகனைப் பார்ப்போமா? அவர் வேறு யாருமல்ல “கோமாளி” என்று சிலராலும், அதி உயர்ந்த திறைமையான அரசியல்வாதி என்று சிலராலும், இவர் எப்படியானவர் என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கும் பலராலும் விரும்பப்பட்டு, வெறுக்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டு வரும் முன்னாள் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி “பொரிஸ் ஜான்சன்” தான் அவர். இங்கிலாந்துப் பிரதமரின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியதால் தனது அமைச்சர் பதவியை இழந்து விட்ட இந்நாள் ஹீரோ விட்டார் பாருங்கள் கிளிகள் கூட்டத்திடை ஒரு பூனையை . . ஆமாம் டென்மார்க் நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் கண்களைத் தவிர அனைத்தையும் மறைக்கும் பெர்க்கா என அழைக்கப்ப்படும் அங்கி பொது இடங்களில் அணிய விதிக்கப்பட்ட தடையைப் பற்றித் தான் வாராவாரம் டெய்லி டெலிகிராப்ட் எனும் பத்திரிகையில் எழுதும் பத்தியில் குறிப்பிட்டதினால் பிடித்துக் கொண்டார் “காகத்தின் எஜமான் (சனி)” அவரை. ஆம் அத்தடைக்கு எதிராக விமர்சிக்கப் போய் தான் ஒரு வலையில் சிக்கிக்கொண்டார் இந்தக் கோமாளி . . . . இல்லையில்லை அதி புத்திசாலி பொரிஸ் ஜான்சன். இஸ்லாமியப் பெண்கள் அணியும் இந்த அங்கி ஒரு தபாற் பெட்டி போலவும், கொள்ளையரின் சீருடை போலவும் தென்படுகிறது என்றாரே பாருங்கள் .. . . . . போச்சுடா . . . .

அவரது இந்தக் கருத்துக்கும் எமக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்று ஏன் இன்னமும் அறிக்கை விடவில்லை என்று அவர் சார்ந்திருக்கும் , இன்றைய இங்கிலாந்து அரசுக்கட்டிலில் மிகச் சொற்பமான பெரும்பான்மையுடன் அமர்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியை நோக்கிப் பறக்கின்றன கேள்விக்கணைகள் பலமுனைகளிலிருந்தும். . . . . ப்ரெக்ஸிட் எனும் வலைக்குள் அகப்பட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் எமது பிரதமருக்கு இது தேவைதானா? என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

சரி இந்த வாரம் எமது நெருங்கிய நட்பு நாட்டின் பிரசித்தம் மிகுந்த ௶ட்ரம்ப் அண்ணாவின் அதிரடிகளைப் பார்ப்போம். . . இரண்டு தீவிரமான அதிரடிகளைக் கிளப்பி விட்டிருக்கிறார் ட்ரம்ப் அண்ணா.

அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட தேர்தலில் அமெரிக்க ஜனநாயக முறையைச் சீர்குலைக்கும் வகையில் ரஸ்ய நாட்டு உளவுத்துறை செயல்பட்டிருக்கிறதா என்பதை ஆராய நியமிக்கப்பட்ட குழு அத்தகைய செயல்களில் ட்ரம்ப் அண்ணாவின் மகனே நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறது. இதுவரை அச்சந்திப்பு வேறு தேவைக்காக நடந்தது என்று கூறிவந்த அண்ணா ட்ரம்ப் இப்போது அது சரி எனும் வகையில் சமூக வலைத்தளம் ஊடாகக் கூறியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. . . . என்ன அண்ணா? வார்த்தை புரள்கிறதே !

உலகின் முன்னணி நாடுகளும் (அமெரிக்கா உட்பட) , ஈரானும் சேர்ந்து செய்த உடன்படிக்கையில் இருந்து ட்ரம்ப் அண்ணா தன்னிச்சையாக அமெரிக்காவை வெளியெடுத்துக் கொண்டது அனைவரும் அறிந்ததே ! அடுத்த கட்டமாக அண்ணா ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக சில பாரதூரமான பொருளாதாரத் தடைகளை அமுல் படுத்தியுள்ளார். இத்தடைகளின் பிரகாரம் விதிக்கப்பட்ட தடைகளை மீறும் எந்தவொரு நிறுவனத்துக்கும் எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அண்ணா மூலம் தானே வெளியேறுவதற்கும் தமக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்று அவ்வுடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட மற்றைய நாடுகள் குறிப்பிட்டிருந்தன. தற்போது அமெரிக்கா கொடுத்திருக்கும் இப்புதிய சிக்கல் ஜரோப்பிய ஒன்றியத்திற்கும், அமெரிக்காவுக்குமான வர்த்தக உறவை எவ்வகையில் பாதிக்கப் போகிறது என்பதுவே பொருளாதார நிபுணர்களின் தீவிர கரிசனையாக இருக்கிறது.

இதுவும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயமே !

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க