குமார சம்பவம்(அல்லது பேரருள் நெற்றிக்கண் பிறப்பு)….!

0

 

மீண்டும் எழுத முயல்கின்றேன்(லிஃப்கோ பதிப்பித்த வடமொழி தமிழ் வாயிலாய்)….இது வரையில் எழுதியதைப் பகிர்கின்றேன் தங்களது மேலான பார்வைக்கு….!

குமார சம்பவம்(அல்லது பேரருள் நெற்றிக்கண் பிறப்பு)….!
——————————

காப்பு
———————-
சிவபார்வதி
—————-

சொல்லும் பொருளுமாய், அல்லும் பகலுமாய்
கல்லும் கடவுளாய் கோர்ந்திருந்து -புல்லும்
உமாமஹேச தம்பதியின் ஊக்கம் விழைகிறேன்
குமாரசம்ப வம்செய் குறித்து….(1)….2-10-2010

முருகன்
———-

உன்பிறப் புக்குமுன்னால் உண்டான சம்பவத்தை
தன்படைப்பில் காளிதாசன் தந்ததைமுக் -கண்பிறப்பே
முந்தைத் தமிழில் மொழிபெயர்த்திட மூலமே
வந்தெனக்கு கைகொடுத்து வாழ்த்து….(2)….2-10-2010

பிள்ளையார்
—————

உன்னை மறந்தால் உலகம் பழித்திடும்
என்னை, எருக்கம்பூ ஏகனே -முன்னை
கந்தன் மணமுடித்தாய், எந்தன் மொழிபெயர்ப்பில்
தந்தை மணமுடிக்கத் தாவு….(3)….2-10-2010

 

சரஸ்வதி
———–

செல்வம் செலவாகும், வீரம் வயதாகும்
கல்வி குறையாது குன்றாது -பல்கிப்
பெருகிட வைத்திடும் பாரதியின் நூலுக்(கு)
அருகிருந்து சேர்ப்பாய் அறிவு….(4)….2-10-2010

 

காளிதாசன்
—————

வாடாத பாக்களை வாணியின் பாதத்தில்
காடாய்க் குவித்தமகா காளிதாசா -சீடனாய்
ஏற்றென்னை நம்மன்னை சாற்றிய தாம்பூலச்
சாற்றையென் பாழ்வாயில் சிந்து….(5)….2-10-2010

 

சு.ரவி
——–

நண்பாநீ மந்திரியாய் நல்லா சிரியனாய்
வெண்பாநான் செய்ய வகைசெய்தாய் -பண்பால்
சிறந்தவனே இந்நூல் சுரந்திட என்னுள்
கரம்தந்(து) அளித்திடுவாய் காப்பு….(6)….14-10-2010
——————————————————————–

————————————————————-
சர்கம்-1
———-

கரையற்று நீண்டு குடதிசையில் மேற்கில்
வரையற்ற வாரிதி வெள்ளம் -வரையுற்றுப்
பாரின் அகலத்தைப் பார்க்கும் அளவுகோல்
பாரீர் இமயமதன் பேர்….(1)….30-9-2010

கன்றாய்யிக் குன்றினைக் காட்டியம் மேருமலை
நின்று கறக்க, நிலப்பசு -என்றும்
சுரந்திடும் ரத்தினம் சஞ்சீவிப் பாலை
வரம்தரும் வெற்பை வணங்கு….(2)….1-10-2010

சீதளம் சேர்த்திடும் சந்திரன் மேலுற்ற
பாதகம் பாராட்டா பண்புடைத்தோம் -மேதினிக்கு
எல்லா சுபிட்சமும் நல்கும் இமகிரிக்கு
பொல்லாப் பனியா பொருட்டு….(3)….1-10-2010

விண்சார்ந்த அப்ஸர வல்லிகள் பூசிடும்
செஞ்சாந்து வாசத்தூள் சூழ்ந்தவுச்சி -மஞ்சோடு
பட்டுச் சிதற பரிதி ஒளிசிவக்கப்
பட்டப் பகலிலந்திப் போது….(4)….1-10-2010

கோடையில் சித்தர்கள் வாடிடாது வெண்மேக
ஆடை நிழலடியில் ஆசிரமம் -ஜாடை
கருத்தவை பெய்கையில் குளிருக்(கு) இதமாய்
சிரத்தினில் வெய்யில் சுகம்….(5)….1-10-2010

மதக்களிறின் மீதேறி மத்தகத்தில் சிங்கம்
சதையுறிய முத்துக்கள் சிந்தும் -இதையறிந்த
வேடன் அரிமா வழியை அறிவானாம்
மூடும் பனியில் முனைந்து….(6)….1-10-2010

தேர்ச்சிமிகு வித்யா தரப்பெண்கள் நேசத்தை
ஊர்ஜிதமாய், செங்காவி ஊற்றுமையால் -பூர்ஜர
ஏட்டில் எழுத எதுகை இமயம்தான்
காட்டிடும் காதல் கொடி….(7)….1-10-2010

விண்ணுறும் வெற்புகுகை வாய்திறந்து மூங்கிலதன்
கண்ணூர்ந்து புல்லாங் குழல்காற்றை -கின்னரர்தம்
கானமேல் ஸ்தாயிக்கு தான சுரம்பிடிக்கும்
ஞானம் மிகுந்தமலை நாடு….(8)….2-10-2010

ஆவலோடு கன்னத்தை ஆனை தினவெடுத்து
தேவதாரு தேகத்தில் தேய்த்திட -சீவலாக
தோலுறிந்த பட்டையில் பால்சுரக்க வாசத்தை
மேலிருந்தும் வீசும் மலை….(9)….2-10-2010

கூடிக் குலவிடும் வேடர்க்(கு) உதவியாய்
வீடாம் குகையில் விளக்கதற்கு -ஈடாக
மூலிகைத் தாவரம் மூட்டிட தீபவொளி
மாளிகைபோ லாக்கும் மலை….(10)….2-10-2010

பாரமான பின்புற(ம்)அ பாரமான கொங்கைகள்
ஈரமான பாறைப் பனிநீரும் -சேரவொன்றாய்
கின்னரப் பெண்கள்தம் இன்னலையும் பாராது
அன்ன நடைபயில்வர் அங்கு….(11)….2-10-2010

அல்பனே ஆயினும் அய்யா சரணென்றால்
சொல்பமும் பாராட்டா சான்றோர்போல் -அல்பயலை
சூரியன்கை சிக்காது சேர்த்து குகைக்கரத்தால்
வாரி அணைக்கும் வெற்பு….(12)….2-10-2010

கோனிங்(கு) இமவான் குளிர்சா மரமிங்கு
வானின் வளர்மதி வெண்கவரி -மானின்வால்
ஆகமலை ஆளும் அரசனே இங்குமலை
ஆக இருத்தல் அழகு….(13)….2-10-2010

கூச்சமுறும் கின்னரப்பெண் கூறை களைகையில்
ஆச்சரியம் கொள்வால் அதைப்பார்த்து -மூச்சிறைக்க
மேகம் குகைவாசல் போகும் திரையாக
மோகத் துணைபோகும் மஞ்சு….(14)….2-10-2010

தேவகங்கை நீர்த்திவலை, தேவதாரு தூமணம்
மேவுமயிற் தோகை மிருதுவும் -தாவிவரும்
காற்றில் கலந்திருக்க காட்டில் களைத்தவேடர்
ஏற்றடைவர் ஏகாந்த மே….(15)….3-10-2010

ஏழுரிஷி கொய்தபின்பு எஞ்சும் உயிர்மொட்டை
வாழும் கமலங்கள், வெற்படியில் -சூழும்
கதிரோனின் மேல்நோக்கும் கைக்கிரணம் பட்டு
உதிரும்முன் பூக்கும் உவந்து….(16)….3-10-2010

வேள்விப் பொருட்கள் விளைவதால், பூபாரக்
கேள்விக் குறிக்குவிடை கண்டதால் -நூல்வைத்த
நான்முகன் யாகத்தில் கோன்பெறும் பாக(ம்)இம
வான்முகம் வைத்தான் விழைந்து….(17)….3-10-2010

பித்ருக்கள் மானசீகப் புத்ரி, முனிகணங்கள்
தத்தெடுத்த நெஞ்சின் தவப்புதல்வி -உத்தமி
மேனை மணம்புரிந்தாள் மேருவின் தோழ(ன்)இம
வானையவன் வம்சம் வளர்த்து….(18)….3-10-2010

நாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை
தேகநீர் ராஜனுக்குத் தோழனும், -போகரெக்கை
வானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன்
மேனாள் வயிற்று மகன்….(19)….3-10-2010

தக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய்
துக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) -அக்கினியில்
முன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள்
அன்பு இமவான் அகம்….(20)….3-10-2010

உற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும்
நற்சாதி செல்வ நிகழ்வேபோல் -அச்சாக
மங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி
சங்கரியாய் வந்தாள் சதி….(OR)
திங்களெனத் தோன்றினாள்ச தி….(21)….3-10-2010

தெளிந்த திசைகளாய், தூசற்ற காற்றாய்
ஒளிந்த அமரர் ஒலியாய் -மலர்ந்தபூ
பார்மீது மாரியாய் பல்லுயிர்க்கும் இன்பமாம்
பார்வதி தோன்றிய போது….(22)….3-10-2010

அதிருமிடிச் சத்தம் விதூரமலை மொத்தம்
எதிரொலிக்க பூமிவாய் ஏற்று -உதிரவிடும்
ரத்தின ஜோதியாய் பெத்தவளும் புத்திரியும்
புத்தொளிகொண்(டு) உற்றார் பொலிவு….(23)….3-10-2010

சுக்கில பட்ச சசிகலைகள் போல்தினமும்
இக்குலம் வந்த இமவான்பெண் -சொக்கவைக்கும்
அங்கங் களடைந்து அக்கலைக்(கு) ஈடாக
பொங்கும் அழகுற்றாள் பூத்து….(24)….4-10-2010

உற்றார் அவளை உவந்து அழைத்தனர்
பெற்றோர் குலப்பெயர் பார்வதியாய் -மற்றோர்
சமயத்தில் தாயார் சதியைத் தடுத்தாள்
உமையே தவமேன் உரைத்து….(25)….4-10-2010

உசந்தவகைப் பூக்கள் அசைந்தும்மாம் பூவை
வசந்தருது வண்டு விரும்பும் -அசங்காது
பார்வதியைய் பார்த்திமவான் பூரிப்பான், தம்மக்கள்
யார்வதை உற்றுமிமை யான்….(26)….4-10-2010

விளக்கழகு தீபவொளி, வானழகு கங்கா
இலக்கணப் பேச்சழகு இன்சொல் -மலைக்கரசன்
பெற்றமகள் பார்வதியால் பெற்றான் பரிசுத்தம்
வற்றா வளமையுடன் வாக்கு….(27)….4-10-2010

ஓயாது தோழியரோ(டு) ஓடி விளையாடி
காயாத கங்கைக் கரைமணலில் -சேயாக
மேடைகள் செய்தும் மலர்பந்து வீசியும்
நாடகம் ஆடினாள் நன்கு….(or)
வேடமிட்டாள் வையவாழ் வொத்து….(28)….4-10-2010

போதுசரத்தில் கங்கையைப் போயடையும் அன்னம்போல்
ஜோதிர் லதையொளிரும் ஜாமம்போல் -ஓதிய
முற்பிறவி கற்றதெலாம் பார்வதியைப் பற்றியதாம்
விற்பன்னன் காளிதாசன் வாக்கு….(29)….5-10-2010

மாதவள் தோற்றம் மனதை மயக்கிய
போதுமது அல்லவே புன்மது -காதலான்
வாளிக்கும் மேலாய் வலிந்திடாது பார்வதி
வாலிபத்தைக் கொண்டாள் வளர்ந்து….(30)….5-10-2010

தூரிகையால் சித்திரம் தேர்ச்சி யுறுதலாய்
சூரியனால் தாமரையின் சோபையாய் -காரிகையாய்
யவ்வனத்தைப் பார்வதி எட்டினள் மெல்லமெல்ல
அவ்வனப்பே ஆரா அழகு…(31)….5-10-2010.

பட்டழுந்த பூமியில் பார்வதி செல்கையில்
கட்டை விரல்நகம் கொப்பளித்த -இட்ட
பதச்செந் நிறத்தால் பதுமத்தை மண்ணில்
விதித்தெடுத்துச் சென்றாள் விரைந்து….(32)….5-10-2010

அழைக்கும் சிலம்பொலியை அன்னப் பறவைகள்
கழைத்தோள் பார்வதிபால் கற்க -குழைந்தவள்முன்
தக்ஷிணையாய் தம்மன்னத் தத்திநடை தந்துவிட்டு
சிக்ஷைக்காய் ஏந்தும் சிறகு….(33)….5-10-2010

ஒயிலாய் உருண்டு ஒழுங்காய்த் திரண்ட
கயிலாயப் பெண்முழங் காலை -அயனவன்
செய்ய முயன்றதில் சேகரித்த லாவண்யக்
கையிருப்பு போச்சாம் குறைந்து….(or)
அய்ய! முயன்றதில் மெய்யின்மற் றங்கங்கள்
செய்ய அழகின்றி சோர்வு….(34)….5-10-2010

வேழத் துதிக்கை வெகுகடினத் தோலாகும்
வாழையதன் தண்டோ வெகுகுளிர்ச்சி -ஏழுலகில்
பார்வதி உற்றயிரு சேர்ந்த துடைகளுக்கு
நேர்கதியாய் ஒப்புமைகா ணேன்….(35)….5-10-2010

விடையேறும் ஈசன் மடியேறும் பாக்யம்
அடைய அருகதையிங்(கு) ஆர்க்கு -தடையேதும்
இல்லா(து) அமர்ந்த இவளின் இடையழகை
சொல்லாமல் எண்ணல் சிறப்பு….(36)….5-10-2010

இடைவஸ்த் திரத்தின் இறுகு முடிச்சின்
தடைதகர்த்(து) உந்தித் திசையில் -படையெடுக்கும்
மெல்லிய ரோமா வளியினொளி, மேகலையின்
துல்லிய ரத்தினத் தேசு….(37)….5-10-2010

மத்தியில் யாகத்து மேடைக் குறுகலை
ஒத்தயிடை கீழே உதரத்தில் -பித்தனெரி
மாறன் படியேற மூன்று மடிப்புகளால்
சாரம் அமைத்திளமை சேர்வு….(38)….5-10-2010

நூலுக்(கு) இடம்கொடாது சாலப் பரிந்திணைந்த
நீலக் கமல நயனத்தாள் -கோலயிரு
வெண்ணிற பாரங்கள் வாய்த்தயெழில் பார்வதி
எண்ணுதற்(கு) ஏற்ற எழுத்து….(39)….5-10-2010

செத்தொழிந்த மன்மதனால் செய்தயிரு கைகளும்
பித்தனவன் கண்டப் பிணைக்கயிறாய் -நித்தமும்
வாகாய் வளைக்குமவை யூகிக்க மாகவிக்கு
”வாகையினும் மென்மையாம்” வாக்கு….(40)….6-10-2010

நெட்டுயர்ந்த கொங்கைகள் நேர்த்தியால் நிற்கின்ற
வட்டக் கழுத்துமதை வளையவந்து -கட்டிடும்
முத்துமணி மாலையும், ஒத்தொன்றுக்(கு) ஒன்றழகில்
சித்தம் ஒருமிக்கும் சேர்ந்து….(41)….6-10-2010

சந்திரனில் இல்லையே செந்தா மரைவாசம்
செந்தா மரைக்கில்லை சாந்தகுணம் -செந்திரு
ஒர்கதியாய் மென்மையும் ஓதமும் மேவிடும்
பார்வதி சீர்வதனம் புக்கு….(42)….6-10-201

சிவந்த தளிர்மீது சிந்தியவெண் பூவாய்
பவழம்தன் மேல்முத்துப் பொட்டாய் -குவிந்த
அதரத்தில் பரவி அவளாய் உதிர்க்க
சிதறும் ஒளிப்புன் சிரிப்பு….(43)….6-10-2010

குயில்கொடிய யாழ்கொடிய கர்ண கடூரம்
பயில்கின்ற பார்வதியின் பேச்சால் -ஒயில்கொண்டு
வானத்(து) அமிழ்தாய் நிதானத் துடனின்சொல்
ஞானத் துடன்நல்கும் நாவு….(44)….6-10-2010

மாருதம் வீச மருள்நீல முண்டகமாய்
வேரதைப்போல் நீண்ட விழிகளின் -பாருதலை
மானுரைக்கக் கற்றாளா? மான்கற்றுத் தந்ததா
நானறியேன் நாராய ணா….(45)….6-10-2010

கையெடுத்து துரிகையில் மையடைத்து தீட்டியதாய்
பையுடைத்த ராஜநாகம் போல்நீள -மையலான்தன்
காமா யுதவில்லின் கர்வத்தை விட்டுரைத்தான்
ஆமாம் அவள்புருவம் அம்….(46)….6-10-2010

விலங்குகள் உள்ளத்தில் வெட்கம் இருப்பின்
கலங்கும் கவரிமான் கண்டு -துலங்குமவள்
கேசத்தால் தங்கள்வால் பாசம் துறக்குமாம்
ரோஷத்தால் நீங்கும் ரசிப்பு….(47)….6-10-2010

உவமைகள் யாவையும் ஓரிடத்தில் காண
அவயவங்கள் தேடி அலைந்து -சிவமய
சக்தியைச் செய்தான் சிரம்நான்(கு) உடையவன்
முக்திக்(கு) அவளழகே மெய்….(48)….6-10-2010

சஞ்சாரி நாரதர், சக்களத்தி அற்றவளாய்
பஞ்சாப கேசனுடல் பாகியாய் -பெஞ்சாதி
பார்வதியென்(று) ஆக்கும் பனிமலை மன்னனே
பார்விதி என்றார் பலத்து….(49)….7-10-2010

தும்புருவின் வாக்கில் திளைத்ததில் தந்தையும்
தம்பருவப் பெண்மணம் தாமதித்தான் -தென்புறும்
வேறுவாய்த் தீயினுள் வேள்வியவிர் பாகத்தை
தாரைவார்ப் பாரோ தெரிந்து….(50)….7-10-2010

வரம்கொட்டும் சாமி வரன்கேட்டுச் சென்றால்
தரம்பார்த்(து) இகழ்ந்திடுமோ தன்னை -வரையுற்றோன்
கேட்டு மறுத்துவிட்டால் கேலிப் பொருளாகும்
பாட்டை நினைத்துவிட்டான் பற்று….(51)….7-10-2010

அப்பனிடம் கோபித்து அப்பார்வதி தன்னுடலை
எப்போது தீயில் எரித்தாளோ -அப்போதே
அத்தனை ஜீவனையும் ஆளும் சிவபிரான்
பத்தினி பற்றொழித்தார் பார்….(52)….7-10-2010

கின்னரர், கஸ்த்தூரி, கங்கைக் கரையுயர்ந்து
விண்ணுறும் தேவமர வெற்பில்முக் -கண்ணரன்
அஞ்சு புலனாண்டு ஆனைத்தோல் பூண்டுதவம்
விஞ்சுமெழில் குன்றில் வளர்ப்பு….(53)….7-10-2010

சரக்கொன்றை சூடி, மரப்பட்டை போர்த்தி
சிரங்கால் மனோசிலை சாற்றி -விரைப்பூ
சிலாஜது மேவும் சிறுபாறை குந்தி
கலாஜடை யோந்தொண்டர் கூட்டு….(54)….7-10-2010

ஆளை உறையவைக்கும் பாளப் பனியிலரன்
காளை குளம்புகளால் கீறித்தன் -தோளுயர்த்தி
கர்வமாய் காட்டெருது கண்கலங்க கத்துதலால்
சர்வாங்கம் சிங்கம் சிலிர்ப்பு….(55)….7-10-2010

தானே தவப்பலன் ஆனோன் தனதெட்டில்
வானோர் விரும்பிடும் வேள்வித்தீ -ஏனோ
ஸமித்தால் எரியூட்டி செய்த தவத்தின்
நிமித்தம் சிவன்போக்கு நெஞ்சு….(56)….7-10-2010

தானாய்ச் சிறந்தவன், வானே வணங்கிடும்
மூணாம் விழிகொள் முதலையிம -வானே
பணிந்து தொழுது பணிவிடையைப் பெண்ணை
அணிந்திடச் சொன்னான் அழைத்து….(57)….7-10-2010

சஞ்சலம் செய்தாலும் கொஞ்சமும் மாறாத
நெஞ்சுரம் கொண்டோனே ஞானவான் -பஞ்செனப்
பார்வதி வந்து பணிவிடை செய்திட
ஓர்விழித் தீக்கண்ணன் ஒப்பு….(58)….7-10-2010

கொய்தனள் பூக்களை, செய்தனள் சுத்தமாய்
மெய்தவன் வீற்றிருக்கும் மேடையை -பெய்தனள்
தீர்த்தமும் தர்பையும்: நீர்தலையோன் தண்மதி
தீர்த்ததவள் கொண்ட தவிப்பு….(59)….7-10-2010

சர்கம் ஒன்று சுபம்
————————–

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *