கடுஞ்சட்டம் வரவேண்டும் !

 

            ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

 

கர்ப்பிணிகள் என்றுமவர்

கண்களுக்குத் தெரிவதில்லை

கண்ணிழந்தோர் என்பதையும்

கருத்திலவர் கொள்வதில்லை

புலனிழந்து இருக்கின்றார்

என்றுமவர் பார்ப்பதில்லை

போகமதை மனமிருத்தி

பொறுக்கித்தனம் செய்கின்றார் !

 

ஏழை பணக்காரரென்று

எதுவுமவர் பார்ப்பதில்லை

வாழ்வைத்தொடும் குருத்துக்களை

வதைக்கவவர் தயங்கவில்லை

பட்டினியாய் கிடக்கின்ற

பரதேசி ஆனாலும்

கட்டவிழ்த்து விட்டிடுவார்

காமுகத்தின் கோரமதை !

 

வயதுகூடப் பார்ப்பதில்லை

வக்கிரங்கள் செய்திடுவார்

சபலமனம் கொண்டதனால்

சதிராடி நின்றிடுவார்

கற்பழிப்புச் செய்வதிலே

கருத்தாக இருக்குமவர்

கழுவேற்றி வதைப்பதற்கு

கடுஞ்சட்டம் வரவேண்டும் !

 

கற்பழிக்கும்   கயவருக்கு

காருண்யம் காட்டாதீர்

நட்டநடு வீதிவைத்து

சுட்டிடுங்கள்  தீயாலே

வெட்டவெளி தனில்விட்டு

விட்டெறிங்கள் கல்மாரி

கெட்டவர் அழிவதற்கு

இயற்றிடுவோம் கடுஞ்சட்டம் !

About ஜெயராமசர்மா

பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. "முதற்படி" என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர். தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார். பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க