திருந்திய வாழ்விற்குத் திருமூலர் காட்டும் நெறிமுறைகள்

1

-முனைவர் க. சிராஜுதீன்

இன்றையவாழ்க்கை ஆரவாரம் மிக்கதாகவும் ஆடம்பரம் மிக்கதாகவும் போலித்தனம் நிறைந்ததாகவும் மாறிவருகிறது. வாழ்க்கையை அனுபவிக்கவோ சரிவரப் புரிந்துகொள்ளவோ இயலவில்லை. இந்நிலையில் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும்? என்பதற்குப் பலர் தாம் கண்ட, அனுபவித்த உண்மைகளைச் சமுதாயத்திற்கு வழங்கிச் சென்றுள்ளனர். அவர்களுடைய கருத்துகளும், கூற்றுகளும் உலக மக்களின் வாழ்விற்கு உறுதுணை புரிகின்றன.

மக்களுக்கு வாழ்வியலை உணர்த்தும் பணி சங்ககாலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது என்பதற்கு,

“நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்”1
என்ற நரிவெரூஉத் தலையாரின் பாடலும்,
“தீதும் நன்றும் பிறர் தரவாரா”2 என்ற கணியன் பூங்குன்றனார் பாடலும் சான்று பகர்கின்றன.

ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்துடன் பல்வேறு இழைகளால் இணைக்கப்பட்டுள்ளான். அவனது சிந்தனைமுறை, ஒழுக்கக் கோட்பாடுகள் அனைத்தும் சமுதாயச் செல்வாக்கின் விளைவுகளாகும். இதனை உணர்ந்த வள்ளுவரும் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”3 என்றும் “இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்”4 என்றும் கூறுகிறார்.

தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நெருங்கிய உறவு இருப்பதால் தனிமனிதனின் ஒழுக்கக்கேடு சமுதாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தனிமனிதன் நல்லவனாக வாழ்கின்றபோது சமுதாயம் பண்பட்டதாக விளங்கும். உயரிய சமுதாயமாக அமையத் தனிமனித ஒழுக்கம் அடிப்படையானதாகும். “மனிதர் தொகுப்பாக இருப்பினும் அவரவர் அளவில் தனிமனிதரே. தனிமனித வாழ்வில் ஒழுங்கும் அறமும் இன்றியமையாதன. தனிமனிதன் நன்றாக வாழ்ந்தால்தான் நாடும் உலகமும் உயர்வடையும்”5 என்ற கருத்தின் மூலம் உணரமுடிகிறது.

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்”6 என்ற உலகநோக்குடன் பரந்த சிந்தையுடன் வாழ்ந்த தமிழர்கள் மனித சமுதாயம் ஒன்றெனக் கருதிக்கூடி வாழ்ந்தனர். ஒன்றுபட்டு உயர்ந்த வாழ்வை நடத்த விழைந்தனர். சமுதாயத் தேவைகளை உணர்ந்து பயனுடைய வாழ்வினை வாழும் மனிதர்கள் உழைப்பது தமது கடமை என்று கருதினர்.

அக்காலத்தில் மக்களுக்காகச் சிந்தித்த வள்ளுவனைப் போல, இளம்பெருவழுதியைப் போல திருமூலரும் சிந்தித்து, அனுபவித்துத் தாம் உணர்ந்த வாழ்வை, மக்களுக்குத் தேவையான பல வாழ்வியல் சிந்தனைகளைத் திருமந்திரத்தின் மூலம் வழங்கியுள்ளார். பத்தாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ள திருமந்திரத்தின் தொடக்கப் பகுதியில் மக்களுக்கான வாழ்வியல் நெறிமுறைகளையும், அடுத்த பகுதியில் தாம் உணர்ந்த இறைநிலையையும், இறுதிப் பகுதியில் இறைவனால் பெறப்படும் ஞான நிலையையும் உணர்த்துகிறார். இம்மூன்றில் முதல் பகுதியான வாழ்வியல் நெறிமுறைகளைத் திருமூலர் வழி எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

கொல்லாமை

கருணை வடிவான இறைவன் தான் படைத்த உயிரினங்களை வதைத்கும் செயலை ஒரு பொழுதும் அங்கீகரிப்பது இல்லை, பொறுப்பதும் இல்லை. “வதைக்கும் செயல் புரிந்தால் வதைபட வேண்டி வரும்” என்பது அனைத்துச் சமயத்தாரின் நம்பிக்கை. ஆன்மாக்கள் கர்மபலனைப் பொறுத்து வெவ்வேறு வடிவங்கள் எடுத்துக் கொள்கின்றன என்பது இந்து தர்மத்தின் முக்கியக் கோட்பாடு. ஒவ்வோர் உயிரினத்திலும் ஒரு ஜீவாத்மா உறைந்துள்ளது. இறைவன் ஒருவனே பரமாத்மா. ஒரு ஜீவாத்மா மனித உடலில் உறையும்பொழுது அது வதைப்பட்டால் அதற்குப் பெயர் கொலை – வன்முறை – தீவிரவாதம். இறைவனின் படைப்புகளில் சில, மனித குலத்திற்காக மட்டுமே என்று எண்ணுவது பெரும்பிழை. கொல்லுதல் என்பது பெரும்பாவம். எவன் ஒருவன் கொலைத் தொழிலில் ஈடுபடுகிறானோ அவன் விரைவில் கூற்றுவனால் கொல்லப்படுவான். கொலை செய்யாதவனுடைய உயிர் அவனின் உடலில் நீண்டநாள் நிலைபெற்று வாழுமென்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். இதனை,

“கொல்லாமை மேற்கொண்டொழுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று”7
என்ற குறட்பாவின் மூலம் வலியுறுத்துகிறார்.

உயிர்களைக் கொல்லாமை என்பது தமிழர்களிடையே தொன்றுதொட்டு வரும் மரபாகும். இக்கொள்கை மங்கும் காலத்தில் வள்ளலார் புலால் ஒழித்தல் கொள்கையைத் தீவிரமாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதே கருத்தைத் தாயுமானவரும்,

“கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே” என்ற வரிகள் மூலம் எடுத்துரைக்கிறார். அனைத்து உயிர்களும், நன்றாக வாழவேண்டும் என்று எண்ணினால், அதற்கு அடிப்படையாக அமையவேண்டியது அன்பும், கருணையும் ஆகும். “புலையும் கொலையும் களவும் தவிர்”8 என்று கருணையோடு இருக்க வேண்டுமென்று கொன்றை வேந்தனும் குறிப்பிடுகிறது.

எவ்வுயிரையும் தம் உயிர்போல் பாவித்து அன்பு செய்தல் வேண்டும். அவ்வாறு அன்பு செய்யாது தீங்கு செய்வோமேயானால் கொடிய கூற்றுவன் நாம் செய்த தீங்கினை நமக்கே செய்வான். எனவே எவ்வுயிர்க்கும் அன்பு செய்ய வேண்டும். இப்படிச் செய்வோர் உள்ளத்திலேதான் இறைவன் தங்கி உறைவான் என்பதைத் திருமூலர்,

“கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே”9 என்ற வரிகள் மூலம் விளக்குகிறார்.

அன்புடைமை

அன்புடைமை என்பது அன்பைக் கொண்டவராக இருத்தல். இது இல்லறத்தார்க்கு மட்டுமன்றி அனைவருக்கும் பொருந்துவது. அன்பு எனும் உள்ளுணர்வே அனைத்தையும் இணைக்கும் பாலம் ஆகும். அது கருணையாலும், கனிவாலும், ஆர்வத்தாலும், மனம் கொள்ளும் உணர்வும், அது கொடுக்கும் விரிந்து படர்ந்த இடமும், சலுகையும் இன்பமும், இன்னதென்று விளக்க முடியாத நல் எண்ணமுமாகும்.

அன்புகொண்டு அணுகினால் பிரச்சினைகள் பிரச்சினைகளாகவே தோன்றாது. அன்பு எனும் கருணைகொண்டு பார்க்கும்பொழுது குற்றங்களையும் பொறுத்துக்கொள்ளும், மனமும் அவற்றிற்குத் தீர்வைக் காணும், அறிவும் மேலோங்குமே தவிர கோபம் எனும் குணம் வாராது. உண்மையில் அன்பு செய்வது இன்பமாகும். அன்பு எதையும் குணப்படுத்தும் குணம் கொண்டது. அன்பு தான் சிவம் என்றும், சிவம் தான் அன்பு என்றும் உலக மக்கள் யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். ஒருவன் அன்புதான் சிவமாகவும் சிவம்தான் அன்பாகவும் இருப்பதாக உணர்ந்தபின், அவர் சிவத்தன்மையை அடைந்து விடுவார் என்கிறார் திருமூலர். இதனை,

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே”10 என்ற வரிகள் மூலம் விளக்குகிறார்.

உதவி

உற்றாருக்கும், உறவினருக்கும், கண்ணில் பட்டாருக்கும் உதவவேண்டிய பொறுப்பு மனிதப் பிறவிகளுக்குக் கடமையாகிறது. பிறருக்காக இரக்கப்படும் மனம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். பிறரின் கனவுகளை அடைய ஒருவர் உதவினால், அவர் தன்னுடைய இப்பிறவிக்கான இலக்கை மிக எளிதாக அடைந்துவிட முடியும் என்பது இறைக்கோட்பாடு மட்டுமன்று இயற்கை விதியும்கூட. ஒருவர்க்கு செய்யும் உதவி அதே வடிவத்தில் திரும்பக் கிடைக்காது. அது ஏதோ ஒரு வழியில், ஏதோ ஓர் உருவத்தில் கிடைத்தே தீரும். கைம்மாறு கருதாது உதவி செய்வது சிலரின் இயற்கைக் குணமாக அமைந்துவிடுகிறது. அத்தகைய குணம் கொண்ட மனிதர்கள் எப்போதும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

பிறருக்கு உதவி செய்யும்போது பயனை எதிர்பார்க்காமல் உதவிசெய்ய வேண்டும். அவ்வாறு செய்கின்ற உதவிதான் உதவியாகக் கருதப்படும். பயனை எதிர்பார்த்துச் செய்வது உதவியாகாது. இதைத் திருவள்ளுவர்,
“வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து”11
என்ற வரிகள் மூலம் விளக்குகிறார். உதவி செய்பவரைத் திருக்குரான் “(அவர் எத்தகையோரென்றால்) தம்மைத் தூய்மைப்படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார். மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம்மீது இல்லாதிருந்தும். மாறாக மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்). வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.”12 என்று குறிப்பிடுகிறது. வேறுபட்ட சமயமாக இருந்தாலும், உதவிசெய்தல் என்ற சிந்தனையில் எல்லாச் சமயங்களும் ஒரே கருத்தை விளம்புகின்றன.

உதவி செய்தல் பற்றித் திருமூலர் குறிப்பிடும்போது, தானம் செய்ய முடியவில்லையே என்று எவரும் கவலைப்பட தேவையில்லை. உண்ணும் உணவில் ஒரு கைப்பிடி உணவைக் கண்ணில் தெரியும் காக்கைக்கு இட்டு உதவலாம். அத்தகைய நிலையை எட்ட முடியவில்லை எனில், பசுவிற்கு ஒரு கைப்பிடி வைக்கோலை எடுத்து உண்ணக்கொடுக்கலாம். அத்தகைய சூழலும் கைவரப்பெறவில்லையெனில் அருகில் உள்ளவரின் மனம் புண்படும்படி பேசாமல் இனிமையான சொற்களைப் பேசினாலே போதுமானது. அதனை மிகப்பெரிய தானமாகக் கருதலாம் என உதவி செய்வது குறித்து மிக எளிமையான முறையில் விளக்குகிறார். இதனை,

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு விற்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதுஒரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே”13 என்ற திருமந்திரத்தின் வரிகள் விளக்குகின்றன. 

அறம்

‘அறு’ என்ற வினைச்சொல்லின் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம். மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே, முழுநிறை வடிவமே அறம் என்று கூறலாம். ‘பிறவிதோறும் மனிதனைப் பற்றிக்கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்’ என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு. உலகம் ‘சீரழிந்து’ கொண்டிருந்தாலும், யுக யுகமாக உலகைத் தாங்கிப் பிடித்து நிற்கும் மிக இன்றியமையா விழுமியம் அறமாகும்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று தவறு செய்யும் ஆட்சியாளர்களைக் கொன்று போடும் வல்லமை உடையது என்று சிலப்பதிகாரத்தில் அறம் போற்றப்படுகிறது. திருவள்ளுவர் முப்பாலில் முதல் பாலாக அறத்துப் பாலை வைத்தார். அறம் பாடுவது தமிழ்ப் புலவர்களின் வலிமையான ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அறிவை இழிவுபடுத்தும் எவரையும் அறம்பாடி ஒழிக்கும் வல்லமையைத் தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் கைகளில் வைத்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட அறத்தை ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கிய மேதைகள் அடையாளம் கண்டு சமூகத்துக்கு அறியத் தருகிறார்கள். அறத்தைப் பேணவில்லையெனில் பல்வேறு துன்பங்களை அடைய நேரிடும் என்று திருமூலர் குறிப்பிடுகிறார். அறம் செய்யாவிட்டால் மனதிலே மாசு உருவாகும். ஞானத்தை அடையமுடியாது. செல்வம் நிறைந்திருந்தாலும் தான தர்மம் செய்யமுடியாது. கண் இருந்தும் குருடர் என்ற நிலையையே அடைய நேரிடும். தன்னைக் காப்பாற்ற எண்ணிலடங்கா பொருட்கள் வைத்திருந்தாலும், காலன் வரும்போது அறம் செய்யாத ஒருவரால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்று குறிப்பிடுகிறார். இதனை,

“அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர் வெம்மை பரந்து
விழிக்கவன் றென்செய்வீர் ஏழைநெஞ் சீரே”14 என்ற பாடல் வரிகள் விளக்கி நிற்கின்றன.

பிறன்மனை நோக்காமை

“பிறன்மனை விழையாமை” ஆண்களுக்கென உரைக்கப்பட்ட ஒரு விழுமியமாகும். காம இன்பங்களைத் தன் மனைவியிடம் பெறுதல் ஒழுக்கம். பிறன் இல்லாளை விரும்பி அடைதல் மற்றவர் உரிமையில் தலையிடும் அறமற்ற தீயசெயல். உயிர்கள் அனைத்திற்கும் உள்ள இணைவிழைச்சு இயல்பூக்கமாயினும், புறத்தொழுக்கம் இருப்பின் இல்வாழ்க்கைச் சிறக்காது என்பதால், மாந்தரை ஒரு வரையறைக்குள் கொண்டுவரப் பெற்றுள்ளது. பெண்ணுக்குக் கற்புப் போன்று ஆண்களுக்குப் பிறன்மனை நயவாமை வேண்டும் என்கிறது அற இலக்கியமும், பக்திப் பனுவல்களும். அடுத்தவனுடைய பொருளான மனைவிமீது காமுறுவது பேதைமை, தீமை, பழி, பாவம் என்று குறிப்பிடுவதோடு நின்றுவிடாமல் பிறன்மனை நோக்கா ஆண்களைப் பேராண்மை என்று தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

வள்ளுவர் முதலான அறநூலோர் வாழ்ந்த காலத்தில்தான் தமிழ் இலக்கிய உலகில், ஆணுக்குப் பிறனில் விழையாமை என்ற பாலியல் அறம் கூறப்பட்டது என்பர். ஆண்களுக்குப் பாலியல் ஒழுக்கத்தை வலியுறுத்துவது “பிறனில் விழையாமை” அதிகாரம். மற்றவர் மனைவியை காம மயக்கத்தோடு நோக்குவதற்கு எதிரான வள்ளுவரின் போராட்ட உணர்வு இவ்வதிகாரத்தில் நன்கு புலப்படும். இத்தகைய விழுமியம் எல்லா இலக்கியங்களிலும் வலியுறுத்தப்படுகிறது. இத்தகையக் கருத்தைத் திருமூலரும், தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணையாளை விடுத்து அடுத்தவர் மனைவியைக் காமுறும் செயல் என்பது காய்த்த பலா இருக்க ஈச்சம் பழத்திற்கு அலையும் வாழ்க்கையாகிவிடும் என்கிறார். இதனை,

“ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே”15 என்ற வரிகள் மூலம் விளக்குகிறார். 

நிலையாமை

நிலையாமையாவது தான் என்று நினைத்திருக்கின்ற உடம்பும் தனது என்று நினைத்திருக்கின்ற செல்வமும் நிலை நில்லாமையைக் கூறுவது. ஒருவனது வாழ்நாள், அவ்வாழ்நாளில் அவனது இளமை, செல்வம், யாக்கை எல்லாம் நிலையற்றவை என்பது அறியப்படவேண்டும். செல்வம், யாக்கை, இளமை முதலானவற்றின் நிலையாமை பற்றிய உணர்வு ஒருவரது வாழ்வைப் பயனுடையதாக்கும். சிந்தித்துப் பார்த்தால், உலக வாழ்வே நாடகம்போல் தோன்றும். நாடகக்காட்சி போன்று நிகழ்ச்சிகள் சுழன்று சுழன்று செல்கின்றன. உடைமைகள், பதவிகள், அரசு, எல்லாம் உலகமேடையில் மாறுதல்களை தோற்றுவிக்கின்றன.

“பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே”16
என்ற தொல்காப்பிய அடிகள் நிலையாமைச் சான்று பகர்கின்றன. இதற்கு நச்சினார்க்கினியர் “உயிரும் உடம்பும் செல்வமும் இளமையும் முதலியவற்றாலும் நிலைபேறில்லாத உலகம்” என்று குறிப்பிடுகின்றார்.

நிலையில்லாத வாழ்க்கையின் தன்மையை அறிந்து அதன்வழி நடப்பதே சிறந்த வாழ்க்கையாகும். நிலையில்லாதவற்றை நிலையானவை என்று மயங்கி வாழ்பவர்கள் இழிநிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை வள்ளுவர்,

“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை”17
என்ற அடிகள் மூலம் உணர்த்துகின்றார்.

“இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா”18
என்ற மணிமேகலைப் பாடல் வரிகளும் இளமை நிலையில்லாதது, யாக்கை நிலையில்லாதது, செல்வம் நிலையில்லாதது என்று குறிப்பிடுகின்றது.

திருமணம் போன்ற நிகழ்வுகள் புத்தாடை உடுத்தி பலர் நடுவே நடைபெறும். அப்போது மகிழ்ச்சியோடு இருப்பர். இறுதி காலத்தில் இறந்த பிறகு அத்தா என்று அலறி அழைத்தாலும் புரண்டுபடுக்க முடியாது. அப்போது சுடுகாடு செல்வதற்கு பல்லக்கு ஏறி செல்ல நேரிடும். எனவே இவ்வுலகில் எதுவும் நிலையில்லாதது என்பதை,

“மன்றத்தே நம்பி மாடம் எடுத்து
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தடி நம்பி முக்கோடி அழங்கினான்
செற்றத்தா வென்னத் திரிந்திலன் தானே” 19 என்ற வரிகள் மூலம் திருமூலர் விளக்குகிறார்.

இளமை நிலையாமை

உலக உயிர்கள் நிலையற்றவை. உலகத்துத் தோன்றும் எவ்வுயிரும் நிலைபெற்றுத் தங்குவதில்லை. நிலையாமை என்பதற்கு “அநித்தியம், உறுதியின்மை”20 என்று பொருள் ‘Instability’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்லே நிலையாமை என்பதாகும். தமிழ் இலக்கியங்கள் அக, புற மற்றும் அறக்கருத்துகளோடு நிலையாமைச் சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கின்றன. நிலையாமையைத் தொல்காப்பியர் புறத்திணையியலில்,

“காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே ”21 என்று கூறுவர். இதனால் இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்ற தொல்காப்பியரின் கருத்தை உணர முடிகிறது. தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணரின் கருத்துப்படி நிலையாமை மூவகை என்பதனை, “காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாம். அது பாங்காதல் அரிய சிறப்பினாற் பல நெறியாயினும் நில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியையுடையது. நிலையாமை மூவகைப்படும். இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என இவற்றுள்”22 என்ற கூற்றினால் அறிய முடிகிறது.

வள்ளுவர் நிலையில்லாதவற்றை நிலையானதாகக் கருதுவதனைப் ‘புல்லறிவாண்மை’ என்று கூறுவதனை,

“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மைக் கடை
”23 என்ற குறள் விளக்குகிறது.

மனித வாழ்க்கையில் வசந்த காலமாகக் கருதப்படுவது இளமைப் பருவமாகும். எப்பருவமும் நிலைத்து நிற்பதில்லை. இளமை நிலையாமையைத் தொல்காப்பியர், “கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை”24 என்று கூறியுள்ளார். நாள்தோறும் கிழக்கே தோன்றுகின்ற பகலவன் மெல்ல மெல்ல உச்சிக்கு ஏறுகிறது. அதுபோலவே கொஞ்சம் கொஞ்சமாகக் கீழிறங்கி மேற்கே மறைகின்றது. இங்ஙனம் மறைவதை ஒவ்வொரு நாளும் பார்த்திருந்தும் அகக் கண்ணாகிய திருவடியுணர்விலார் தமக்கும் இந்நிலைமை வரும் என்று நினைப்பதில்லை. இளங்கன்றானது ஆண்டுகள் செல்லச் செல்ல முதிர்ந்து சில ஆண்டுகளில் எருதாய் ஆகின்றது. பின் இறந்துபடுகின்றது. அவ்வாறுதான் ஒவ்வொருவரின் இளமை வாழ்வும் நிலையில்லாமல் இருக்கிறது என்பதை,

“கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே”25
என்ற வரிகள் மூலம் திருமந்திரம் விளக்கி நிற்கிறது.

கள்ளுண்ணாமை
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.”26

என்ற குறட்பாவானது “மனிதன் வாழ வேண்டிய நெறியுடன் வாழ வேண்டும்” என்பதை வலியுறுத்துகின்றது. இதனைச் சான்றோர்கள் பொய், களவு, கொலை, மது, மாது என்பன விலக்கி, சிறப்புடன் வாழவேண்டும் என்கின்றனர். இல்வாழ்க்கையின் இலக்கணம் என்பதுவும் இதுவே. மனிதன் சிறந்த முறையில் தாமும் வாழ்ந்து, தம்மைச் சேர்ந்த அனைவரையும் வாழவைக்க வேண்டும் என்பதேயாகும். இதுவே சிறந்த மனிதத்துவமாகவும் கருதப்படுகின்றது. ஆனால், இன்று பலர் விலை கொடுத்து, மெய்யை மறந்து, மதுவை வாங்கி, அறிவை மயக்கி வாழும் முறை தெரியாது அல்லல்படுகின்றனர். இதனை வள்ளுவன்,

“கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து
மெய்யறியாமை கொளல்”27
என்று குறிப்பிடுகிறார். உலக மக்களின் ஆரோக்கியமான நல்வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாக மது இருந்து வருகின்றது. இதனால் மனித குலமே சீரழிந்து கொண்டிருக்கின்றது. புத்தாக்கங்கள் நிறைந்த புதுமையான உலகில் மேல்நாட்டுத் தயாரிப்புக்களும், உள்நாட்டுத் தயாரிப்புகளும் விதம் விதமான விளம்பர உத்திகளின் ஊடாக புதிய புதிய வடிவங்களில் அறிமுகமாகிய வண்ணமே உள்ளன. இதன் காரணமாக பல கோடிக்கணக்கான குடும்பங்கள் குடும்பத் தலைவரின்றி வாழவேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். தற்காலத்தில் ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் மதுவை நோக்கி படையெடுக்கின்றனர். எனவே அக்குடும்பம் துன்பம் நிறைந்த குடும்பமாக மாறிவிடுகிறது. மதுவிற்கு அடிமையானவரும், மதுவிற்கு அடிமையானவர்களால் பாதிக்கப்பட்டவர்களும் சில நேரங்களில் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனைத் திருமந்திரமும், தங்கள் உடலையும் உணர்வையும் ஒருங்கு சுருக்கும் முழுமூடத் தன்மை வாய்ந்த இயற்கையும் செயற்கையுமாகிய கள்ளினை உண்பர். அவர்கள் அறமுறையும் அருள் முறையும் அகன்று பாவநெறியிற் செல்வோராவர் என்று குறிப்பிடுகிறது. இதனை,

“கழுநீர்ப் பசுப்பெறில் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கம்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே”28

உயிர்கள் இன்புற்று வாழவேண்டுமாயின் நல்லதைச் செய்து தீயதை விலக்கி மனிதப் பிறவியின் நோக்கத்தை ஈடேற்ற வேண்டும் என்று மேற்கண்ட வரிகள் உணர்த்தி நிற்கிறது.

நிறைவுரை

வாழ்வியல் என்றால் என்ன என்பது பற்றியும், பழங்கால இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ள வாழ்வியல் சிந்தனைக் கருத்துகளும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

கொலைத் தொழிலில் ஈடுபடுகிறவன் விரைவில் கூற்றுவனால் கொல்லப்படுவான் என்றும் கொலை செய்யாதவனுடைய உயிர் அவனின் உடலில் நீண்ட நாள் நிலைபெற்று வாழுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அன்புதான் சிவமாகவும், சிவம்தான் அன்பாகவும் இருப்பதாக உணர்ந்தபின், ஒருவன் சிவத்தன்மையை அடைந்து விடுவான் என்று அன்புடைமைப் பற்றி வலியுறுத்தப்பட்டு;ள்ளது.

உதவி செய்வதற்குப் பொருட்செல்வம் தேவை. பொருட்செல்வம் இல்லையெனில், அடுத்தவரைக் காயப்படுத்தாத இனிய சொற்களைப் பேசினாலே உதவி செய்ததற்குச் சமமாகும் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அறம் செய்யாவிட்டால் மனத்திலே மாசு உருவாகும். ஞானத்தை அடையமுடியாது. செல்வம் நிறைந்திருந்தாலும் தான தர்மம் செய்யமுடியாது. கண் இருந்தும் குருடர் என்ற நிலையை அடைய நேரிடும். தன்னைக் காப்பாற்ற எண்ணிலடங்காப் பொருட்கள் வைத்திருந்தாலும், காலன் வரும்போது அறம் செய்யாத ஒருவரால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணையாளை விடுத்து அடுத்தவர் மனைவியைக் காமுறும் செயல் என்பது இன்பத்தை விடுத்துத் துன்பத்தைத் தேடும் வாழ்க்கையாகிவிடும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிலையில்லாத வாழ்க்கையின் தன்மையை அறிந்து எதன் மீதும் பற்றில்லாமல் வாழ்வதே சிறந்த வாழ்வின் அடையாளம் என்று உரைக்கப்பட்டுள்ளது.

இளமைக் காலம் என்பது சூரியன் தோன்றி மறைவது போன்றதாகும். எனவே இளமைப் பருவத்தில் ஈடுபாடில்லாது இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இறைத்தன்மை மறந்து, அறிவை மயக்கும் கள்ளுண்பவர் அறமுறையும் அருள் முறையும் இழந்து பாவநெறியில் செல்பவர்களாக இருப்பர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சான்றெண் விளக்கம்

  1. புறநானூறு, பா.எ., 195.
  2. மேலது, பா.எ., 192.
  3. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.596.
  4. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.987.
  5. சந்திரசேகரன். இரா (ப.ஆ), தமிழ் இலக்கியம் வாழ்வியல் நெறி, பக். 146- 147.
  6. புறநானூறு. பா.எ., 192.
  7. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ. 326
  8. ஒளவையார், கொன்றை வேந்தன் பா.எ. 63
  9. திருமூலர், திருமந்திரம், பா.எ.240
  10. திருமூலர், திருமந்திரம், பா.எ – 257
  11. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.221
  12. திருக்குர்ஆன் 92:18-21
  13. திருமூலர், திருமந்திரம், பா.எ. 252
  14. திருமூலர், திருமந்திரம், பா.எ.254
  15. திருமூலர், திருமந்திரம், பா.எ.244
  16. தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருள். நூற். 78
  17. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.331
  18. சீத்தலைச் சாத்தானார், மணிமேகலை, சிறைசெய்காதை, 135.36
  19. திருமூலர், திருமந்திரம், பா.எ. 193
  20. பி.இராமனாதன், கழகத்தமிழ் அகராதி, ப.610
  21. தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருள்.புறத்.76
  22. இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், பக்.125-126)
  23. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.331
  24. தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருள்.புறத்.77
  25. திருமூலர், திருமந்திரம், பா.எ. 171
  26. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.,50
  27. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.925
  28. திருமூலர், திருமந்திரம், பா.எ. 824

முதன்மை ஆதாரம்: திருமூலநாயனார் – திருமந்திரம், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 79, பிரகாசம் சாலை, சென்னை – 01, மறுபதிப்பு – 1979
துணைமை ஆதாரம்: ஒளவையார் -கொன்றைவேந்தன்,திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,  79,பிரகாசம் சாலை, சென்னை – 01, மறுபதிப்பு – 1985

துரைசாமிப் பிள்ளை. சு (உ.ஆ) – புறநானூறு,திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,  154, டி.டி.கே. சாலை, சென்னை – 18, மறுபதிப்பு – 1990

தொல்காப்பியர் – தொல்காப்பியம், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 79, பிரகாசம் சாலை, சென்னை – 01, மறுபதிப்பு – 1985

*****

கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
முதுகலை & தமிழாய்வுத்துறை
ஜமால் முகம்மது கல்லூரி (தன்னாட்சி)
திருச்சிராப்பள்ளி – 620 020
தமிழ்நாடு, இந்தியா.
கைபேசி எண் 9865721142
மின்னஞ்சல் sirajudeensvmtamil@gmail.com

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருந்திய வாழ்விற்குத் திருமூலர் காட்டும் நெறிமுறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *