180821 -Kamsa (fear) and Krishna -A4 lr 100 dpi

பயமாசை கோபம் பசிதாகம் தூக்கம்
மயமான மூட மனமே -அயலாம்
இவைதவிர்த்து ஆழ இதயத்தில் இருக்கும்
சுவைசுகித்து வாழ சுகம்….!

பயமில்லா வாழ்வே பெருவாழ்வு மற்று
ஜயமென்ப(து) எல்லாம்வீண் ஜம்பம் -முயலாமை
காதை உரைத்தது கீதை உரைத்தது
ஏதும் உறைக்கலை யே….!

ஜடமென்(று) அறிந்தும் மடையா உயிரே
உடம்பை சுமந்தேன் உனக்காய் -அடங்கும்
மூச்சை மணந்து துரோகம் புரிந்தாய்
சீச்சீ பழம்நீ புளிப்பு….!

அத்தனையும் ஆண்டிடும் ஆசை அதிகாரப்
பித்தனாய் வாழ்ந்து பேதலித்தேன் -அத்தனே
இத்தரை உண்டியால் ஏக அஜீரணம்
சத்துணவு போடுசர்வே சா….!

நானென்(று) இருக்கின்றேன் நானாய் உணர்கின்றேன்
நானின்றி வேறே நிகழ்வேது -நானொன்றி
நானோடு நானே நெகிழ்ந்து மயங்கிட
நானா விதமானேன் நான்…!

கண்டேன் திருடனை கையும் களவுமாய்
கொண்டேன் மனச்சிறையில் கைதியாய் -அண்டேன்
இனிஅவன் பக்கம் தனிமையே சொர்கம்
கனிநான் அவன்கள்ளக் காய்….!

ஆபாசம் அச்சம் அழுக்கா(று) அகங்காரம்
நாபேசும் இன்னா நயவஞ்சக -ஏபாவா!
என்பக்கம் வாராதே உன்னுருவைப் புண்ணியமாய்
கண்ணப்பன் மாற்றிடுவான் காண்….!

அச்சம், அழுக்காறு, ஆசை, வெகுளியை
துச்சம் எனத்துணிந்து தூக்கியெறி -மிச்சம்
இருந்திடும் வெற்று இதயக் கதவை
திறந்திடு சீசே துறந்து….!

ராமனாய் வாழ்தால் ரகசிய திண்டாட்டம்
காமனாய்க் காய்ந்து கருகாதே -மாமனைக்
கொல்லவந்தும், காதலித்து, கீதையும் சொன்னவன்போல்
மெள்ளமெள்ளக் கண்ணனாய் மாறு….!

‘’காலன்(DEATH) ஒருபக்கம், கல்வி(WISDOM) ஒருபக்கம்
காலடி சங்கரன் கற்றது, -ஸ்தூல
உடலிது ஓர்நாள் உண்மையில் சேரும்:
கடலதில் வான்நீர்(RAIN) கலப்பு’’….!

’’தூங்கும் முன் தோன்றியது’’….
————————————————————-
”பாட்டுக்கு நாச்சியார், பரவசம் மீராவால்,
கூட்டுக்கு ராதை, குவலயப் -பாட்டுக்கு(பாடு),
பாரதம், வீட்டுக்கு(வீடு) பாகவதம், மாட்டுக்கு
பேரிதம்நான் சேர்க்கப் பிறப்பு’’….கிரேசி மோகன்….!

”பாம்பில் படுத்தவனைப், பத்த வதாரனை,
சாம்பலான் பத்தினி சோதரனை, -நோம்பன்று,
கண்ணனை நெஞ்சில் கருதி மணிக்கட்டில்
கண்ணிநுண் தாம்பாகக் கட்டு’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *