குறளின் கதிர்களாய்…(223)
முகத்தி னினிய நகாஅ வகத்தின்னா
வஞ்சரை யஞ்சப் படும்.
-திருக்குறள் -824(கூடா நட்பு)
புதுக் கவிதையில்…
முகத்தின் முன்
இனியவராய் சிரித்து,
அகத்தில்
வஞ்சனை வைத்துப்
பழகுவோரின் நட்புக்கு
அஞ்சவேண்டும்…!
குறும்பாவில்…
கண்முன்னே இன்முகம்காட்டிச் சிரித்து
உள்ளத்தில் கள்ளம்வைத்துப் பழகுவோரின்
நட்பு யென்றும் அஞ்சத்தக்கதே…!
மரபுக் கவிதையில்…
காணு மிடத்தில் கண்முன்னே
கண்ணிய மிக்க வகையினிலே
நாண மேது மில்லாதே
நல்லவர் போல நகைத்திருந்து,
காண முடியா இதயத்திலே
கள்ளம் வைத்துப் பழகுவோரிடம்
வீணாய்க் கொள்ளும் நட்பதுவை
வேண்டா மெனவே அஞ்சுவாயே…!
லிமரைக்கூ..
நெஞ்சிலே கொண்டிடுவார் நஞ்சு,
நேரிலே சிரித்திடுவார் நன்முகம் காட்டி,
அவர்நட்பு வேண்டாமென அஞ்சு…!
கிராமிய பாணியில்…
வேண்டாம் வேண்டாம் நட்பு வேண்டாம்
நல்லவராயில்லாத
பொல்லாதவங்கக்கிட்ட நட்பு வேண்டாம்..
கண்ணுமுன்னால நல்லவன்போலச்
சிரிச்சிப் பேசி நடிச்சிக்கிட்டே
மனசுக்குள்ள வஞ்சனய
மறச்சிவச்சிப் பழகுறவன்
நட்பு நமக்கு வேண்டாமே,
அத
நஞ்சா யெண்ணி
பயந்து ஒதுங்கிக்கோ..
அதால
வேண்டாம் வேண்டாம் நட்பு வேண்டாம்
நல்லவராயில்லாத
பொல்லாதவங்கக்கிட்ட நட்பு வேண்டாம்…!
செண்பக ஜெகதீசன்…