-மேகலா இராமமூர்த்தி

அறிவுடைய நல்லோரை நாடி அவர்தம் நன்மொழிகளைக் கேட்டு வாழ்வின் தன்மையுணர்ந்து உயர்வோர் உளரெனினும், பேதைமையின் பாற்பட்டு வாழ்வின் இயல்புணராது, தேவையற்ற செருக்காலும் தருக்காலும் நிலைதடுமாறி, வாழ்வைப் பொருளற்றதாக்கிக் கொள்ளும் மருள் நெஞ்சினோர்க்கும் வையத்தில் பஞ்சமில்லை.

எவ்வளவுதான் பொருள்வசதி படைத்திருந்தாலும் அறச்செயல்களில் ஈடுபடாது அவற்றைப் பின்னாளில் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வருவர் சிலர். அவர்களின் நிலைக்கிரங்கி அவர்கட்கு வாழ்வின் நிலையுணர்த்தும் நாலடியார்ப் பாடலிது.

பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு
.    (நாலடி – 332)

குடும்பத்துக்குச் செய்யவேண்டிய கடன்களைச் செய்து தீர்த்து, அறச்செயல்களைப் பின்பு கருதுவோம் என்று காலத்தை எதிர் நோக்கியிருப்பாரது இழிதகைமையானது, பெரிய கடலில் நீராடுதற்குச் சென்றவர், முழுதும் ஒருசேர அலையொலி அடங்கியபின் நீராடுவோம் என்று கருதினாற் போன்றது.

அலை அடங்கிக் கடலில் குளிப்பது எப்போது? எப்போதுமில்லை!
ஆதலால் நடவாத தொன்றை நினைவதும் நம்புவதும் பேதைமையே.

ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்தபின்னும் பொருள் படைத்தவனைப் பேதையார் சுற்றிவருவதை நிறுத்தமாட்டார். ஏன்? அவனிடமிருக்கும் வைப்புநிதியில் சிறிதளவேனும் பெற்றுவிட மாட்டோமா எனும் நைப்பாசையால். இவ்வாறு உடையாரின்பின் பயனின்றிச் சுற்றுவோரின் அறிவற்ற செயலை ஓர் இனிய உவமைகொண்டு விளக்குகின்றது நாலடி.

தமக்குக் கிடைக்காதெனினும் குடத்துள் நெய்யிருக்குமாயின் எறும்புகள் போகாமல் குடத்தையே சூழச் சுற்றுவது போல, யாதும் கொடாரெனினும் உடையாரைச் சூழ்ந்துகொண்டு பேதை மாக்கள் விடமாட்டார்.

ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும் – யாதுங்
கொடாஅ ரெனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர். 
(நாலடி – 337)

பேதைமை என்பது தெளிவிலா அறியாமையும் வீண்முயற்சியும் உடையது என்பதை மேற்கண்ட பாடல் விளக்குகின்றது.

ஒருவர் தம்மை விரும்பி மதித்து அளவளாவ, அவரை விரும்பிலேம் என்று புறக்கணித்திருக்கும் நுண்ணுணர்வில்லாப் பேதையரிடத்து உண்டாகுந் தொடர்பு, ஒலிக்குங் குரலோடு பாயும் அலைகளையுடைய கடல்சூழ்ந்த உலகத்தைப் பயப்பதாயினும் இனியதாகாது என்கிறது நாலடி. 

விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்குங் கேண்மை – தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு. 
(நாலடி – 339)
 

பொருட்படுத்த வேண்டியவற்றையும் புறக்கணித்துக் கிடப்பது பேதையரின் பண்பு என்பது இதன்வழிப் புலப்படுகின்றது.

அடுத்து, கீழ்மையின் நீர்மையை விளக்கும் நாலடியார்ப் பாடல்கள் சிலவற்றை நோக்குவோம்!

பொன்னாற் செய்த கலத்தில் உணவூட்டிப் பாதுகாத்தாலும் நாயானது பிறர் எறியும் எச்சிற்சோற்றுக்குக் கண்ணிமையாமல் விழித்துக்கொண்டு காத்துக் கிடக்கும்.  அத்தன்மையாக, பெருமைக்குரியவனாகப் போற்றினாலும்  கீழ்மக்கள் செய்யும் செயல்கள் அந்நிலைமைக்கு மாறாகவும் வேறாகவுமே இருக்கும். 

பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற் கிமையாது பார்த்திருக்கும் – அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யுங்
கருமங்கள் வேறு படும்.  
(நாலடி – 345)
 

இதைத்தான் நம் மக்கள் ”நாய் வாலை நிமிர்த்த முடியாது” என்று எளிமையாய்க் கூறியிருக்கின்றனர். 

கீழ்மையின் இயல்பு, எவ்வளவு திருத்தினாலுந் திருந்தாதது என்பதை நாம் உணர்ந்து அவர்களைத் திருத்தும் வீண்முயற்சியில் நம்மை வருத்திக்கொள்ளா திருத்தலே நன்று!

உயர்ந்தோரின் இயல்பையும் கீழோரின் குணத்தையும் மிகத் துல்லியமாக விளக்கும் ஓர் நாலடியார்ப் பாடல்!

சக்கரச் செல்வம்பெறினும் விழுமியோர்
எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல் – எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும். 
(நாலடி – 346)

ஆட்சிச் செல்வம் பெற்றாலும் மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்த சொற்களைச் சொல்லமாட்டார்கள்; ஆனால் முந்திரியளவுக்குமேல் காணியளவாகச் செல்வம் மிகுவதானாலுங்கூடக் கீழ்மகன் தன்னைத் தேவர்கோன் இந்திரனாக எண்ணி இறுமாந்து உரையாடுவான். (முந்திரி, காணி போன்றவை அன்று புழக்கத்திலிருந்த நில அளவைகள். முந்திரி என்பதை 1/320 என்றும் காணி என்பதை 1/80 என்றும் கணிதத்தில் குறிப்பர்.)

அரசாட்சியே கிடைத்தாலும் மேன்மக்கள் அடக்கமாயிருப்பர் எனும் நாலடியின் கருத்தைக் காணும்போது,

”நாட்டாட்சி நினது” என்று தந்தை தயரதன் சொன்னபோதும், ”இல்லை! காட்டாட்சியே நினது” என்று சிற்றன்னை கைகேயி மாற்றிச் சொன்னபோதும் ஓவியத்தில் அலர்ந்த செந்தாமரையைப் போலவே வாட்டமின்றிப் பொலிந்தது இராமனின் முகம் என்று அசோகவனத்துச் சீதை அந்நிகழ்வை எண்ணி வியக்கும் காட்சியை ஒப்பிட்டுப் பாராதிருக்க இயலவில்லை.

மெய்த்தி ருப்பதம் மேவுஎன்ற போதினும்
இத்தி ருத்துறந்து ஏகுஎன்ற போதினும்
சித்தி ரத்தின் அலர்ந்த செந்தா மரை
ஒத்தி ருக்கும் முகத்தினை உன்னுவாள்.
(கம்ப – காட்சிப்படலம்)

நாடோ காடோ எல்லாம் ஒன்றே; ஓடோ செம்பொன்னோ எல்லாம் ஒரு தரத்தனவே எனும் சமநோக்கு விவேகிகளுக்கு மட்டுமே வாய்க்கக்கூடியது; சாமானியர்க்குச் சாத்தியப்படாதது. அப்படியிருக்க, திடீரென்று வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடைபிடித்து அலையும் அற்பரைப் பற்றிக் கேட்பானேன்!

கீழ்மகனின் குணங்களை வரிசையாய்ப் பட்டியலிடும் நாலடியார்ப் பாடலிது!

கடுக்கெனச் சொல்வற்றாம் கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட் டுவக்கும் – அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம் விறன்மலை நன்னாட
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்
.  (நாலடி – 348)

ஆற்றல் வாய்ந்த மலைகளையுடைய சிறந்த நாடனே! கீழ்மகன், கடுமையாகப் பேச வல்லவன்; கண்ணோட்டம் என்று சொல்லப்படும் கருணை இல்லாதவன்; பிறருக்கு நேரும் இன்னல் கண்டு மகிழ்பவன்; அடிக்கடிச் சீற்றங் கொள்பவன்; கண்ட விடங்கட்கும் செல்லக் கூடியவன்; பிறரை இகழும் இயல்புடையவன்.

மொத்தத்தில், தன் சொல்லாலும் செயலாலும் பிறருக்கு இன்னல் விளைவிப்பதில் இன்பம் காண்பவன் கீழ்மகன் என்பது தெளிவு.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால் பூன்றிய தூண்.
(983) என்று சான்றோரின் குணங்களை வி(வ)ரிப்பார் வள்ளுவர். கீழோரின் குணமோ அதற்கு நேர்மாறாய் இருக்கின்றது.

என்ன செய்வது? இருவேறாய் இருப்பதுதானே உலகத்து இயற்கை!

[தொடரும்]

*****
துணைநூல்:

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *