பெயர் சூட்டல்

வை.கோபாலகிருஷ்ணன்

தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதில் தன் தாயும் தந்தையும் இவ்வளவு தூரம் அக்கறை காட்டுவதும், விவாதிப்பதும் அவர்களின் ஒரே பிள்ளையான ரகுவுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்து வியப்படையச் செய்தது.

எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல் படுத்துவதில் தன் பெற்றோருக்கு நிகர் யாருமே கிடையாது என்பதில் ரகுவுக்கு ஒரு தனிப் பெருமை தான்.

நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு, அவர்களே ஒரு முடிவுக்கு வந்து, அவர்களாகவே தன்னிடம் தெரிவிக்கட்டும் என்று,  ஒருவித வெட்கத்துடன் ஹாலில் டீ.வி. பார்க்க அமர்ந்தான்.

இறுதியில் பேரனாக இருப்பின் “சந்தான கோபாலகிருஷ்ண மூர்த்தி” என்று வைப்பது என்றும் பேத்தியாக இருப்பின் “பூர்ண சந்திர புஷ்கலாம்பாள் தேவி” என்றும் பெயர் வைப்பதென முடிவு செய்து, ஒரு வெள்ளைத் தாளில் அதை அப்படியே அழகாக எழுதி, நாலா பக்கமும் மஞ்சள் பொடியை சற்றே நீரில் கலந்து அழகாகப் பட்டையடித்து, வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி, அங்கிருந்த உண்டியலுக்குள் அந்தப் பேப்பரை மடித்துப் போட்டு ஞாபகமாக பத்திரப்படுத்தி விட்டனர்.

அவர்கள் வாயால் தன்னிடம் எதுவுமே சொல்லாததால் பொறுமை இழந்த ரகு, தன் தாயாரிடம், “என்னம்மா முடிவு செய்தீர்கள்?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

”நேற்று வந்த பெண் ஜாதகமும், உனக்குப் பொருத்தமாய் இல்லைன்னு, நம்ம ஜோஸ்யர் சொல்லி விட்டாருடா; வேறு ஏதாவது ஜாதகம் பொருந்தி வருதான்னு பார்ப்போம். எல்லாத்துக்கும் ஒரு நல்ல நேரம் காலம் வரணுமோல்யோ” என்றாள்.

ரகு வழக்கம் போல் நொந்து நூலாகிப்போனான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.