வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

0

தி. சுபாஷிணி

அன்று பௌர்ணமி. செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி என அனைத்து ஊடகங்களும், அன்றைய நிலவு வழக்கத்திற்கு மாறாகப் பெரிய அளவில் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருந்தன. சின்னஞ்சிறு குழந்தைகளும், சிறுவர்களும், பெரியோர்களும் மெரினாக் கடற்கரையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடினர். நிலவு வருவதைக் காண வானத்தையே நோக்கிக் கொண்டிருந்தனர். அதற்குள் கடற்கரைக்கு வராத நண்பர்கள், சுற்றத்தார்கள் அனைவரையும் அலைபேசியில் அழைத்தனர்.

அன்று கடற்கரையே மக்கள் கூட்டம். ஒரு பெரிய திருவிழாவே நடைபெற்றாற் போல் இருந்தது. நிலவின் அழகு அதன் அளவு அனைத்தையும் பற்றிப் பேசிப்பேசி மாய்ந்தே போயினர். பின் நேரம் ஆக ஆக இங்கு கூட்டம் குறைந்தது. நிலவொளியில் “நிலாச்சாப்பாடு” சாப்பிட வந்தவர்கள், அமர்வதற்கு இடம் பார்த்து, பெட்ஷீட்டை விரித்து, கூட்டமாய் அமர்ந்தனர். அப்படிச் சில கூட்டங்களாக அமர்ந்தது அந்நிலவொளியில் மிகவும் அழகாய் இருந்தது. அனைவரும் மிகவும் அற்புதமாய்த் தெரிந்தார்கள். ஏனெனில் அவர்களது ஆனந்த வெளிப்பாட்டின் பண்பும் பயனும் அது.

இப்படி என்றோ ஒருநாள் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வுக்கு இப்படியொரு கொண்டாட்டம். அதுவும் கடற்கரை நகரத்தில். பிறிதொரு நிகழ்வையும் இப்போது நாம் அனுபவிக்கலாம்.

நண்பர்களே! இதுபோல்தான் மக்கள் எல்லோருக்கும் உண்மை ஒன்றைத் தெரிந்து கொள்வதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. இன்று ‘பூரண சூரியகிரகணம்.’ அதுவும் நம்மிடத்திலிருந்து பார்க்கலாம், நன்கு தெரியும் என்று தகவல் தெரிந்தவுடன் அனைவரும் அதைப் பார்க்க ஆவலாய் இருப்போம். சிறியவர், பெரியவர், அனைவர்க்கும் இந்த ஆவல் பெருகும். இன்னும் பத்து நிமிடத்தில் கிரகணம் தொடங்கி விடும் என்று நேரத்தே அனைவரும் மொட்டை மாடிக்குப் போவோம். வீட்டு முற்றத்தில் வந்து நிற்போம். அன்று கடற்கரைக்கோ, மைதானங்களுக்கோ, வந்து காத்துக் கிடப்போம். “கிரகணம் தீண்டி விட்டதா, தீண்டி விட்டதா” என்னும் ஒலி எங்கும் ஒலிக்கும்.

கிராமங்களில் கேட்கவே வேண்டாம். ஐந்து வயதுப் பேரன் தன் தாத்தாவைக் கூப்பிடுவான். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுத் தாத்தா. தன் வீட்டில் இருக்கும் பேரன், பேத்திகளைக் கூப்பிடுவார். வீட்டுக்குள்ளிருக்கும் பெண்களும் தங்கள் கைவேலைகளை அப்படி அப்படியே போட்டு விட்டு முற்றத்திற்கு வருவார்கள். மேலே அண்ணாந்து பார்ப்பார்கள். உடனே பக்கத்து வீட்டு அக்காளைக் கூப்பிடுவார்கள். அவர்களும் வானத்தில் நடக்கும் அதிசயங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அப்படியே நிற்பார்கள். இவையெல்லாம் உண்மையென்றி காணுவதில் உண்புகம் உவகையில் நிகழ்பவை.

இதை அப்படியே நம்மக்கள் ஒரு விழாவாக்கி, அதனையொட்டி அன்றைய வாழ்க்கையை நடத்திக் கொண்டாடி வருகின்றார்கள். சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் போகும் இயல்பைக் கண்டு கொண்டு ‘சங்கராந்தி. தைத்திருநாள்’ என்று கொண்டாடுகிறோம். அதேபோல் ஆடி மாதம் காவேரிக் கரையெல்லாம் பதினெட்டாம் பெருக்கின் விழாக் கொண்டாட்டம். நாம் இயற்கை தன் நிகழ்வில் இயல்பில் பொத்தி வைத்திருக்கும் உண்மையை அறிந்து கொள்வதில் நமக்கு இன்பம் கிட்டுகின்றதை அறிந்து கொண்டு விடுகிறோம். சிறு குழந்தைகளுக்கும் இவற்றை அப்படியே ஊட்டி வருகிறோம். இது மக்களின் இயல்பில் அமைந்துவிட ஒரு தத்துவமாகிப் போய் விட்டோம்…

நண்பர்களே! சற்று நம் சிந்தனையைத் தூண்டி விடுவோம். உடலமைப்பு, கை, கால் முதலான உறுப்புகளின் அமைப்பு, கண், காது, மூக்கு முதலான உணர் உறுப்புகளின் நுட்ப உணர்வு ஆகியவற்றை நோக்குமிடத்து விலங்குகள் மனிதனை விட எத்தனையோ மடங்குகள் சிறந்தவையாய்த்தான் இருக்கின்றன. புலியின் அழகு, குரங்கினுடைய கால்களின் பற்றிக் கொள்ளும் நிறம், கழுகின் கண், நாயின் மோப்பம், முயலின் செவித்திறன் ஆகியவை நமக்கில்லை, இதை எண்ணும்போது படைப்பின் தத்துவத்தில் மனிதன் மகுடமாகத் திகழ்கிறான் என்பது ஆட்டம் கொள்கின்றது.

ஆனால், நண்பர்களே! கவலை வேண்டாம்! சிந்தனையை இன்னும் தீட்டுவோம்! சூரியகிரகணத்தின் உண்மையைப் பார்க்கச் செய்கிறதும், நம்மோடு ஒத்து அனுபவிக்கச் செய்கிறதும், மக்கள் தாண்டி விலங்குகளால் முடியுமா? அவைகளால் அண்ணாந்துப் பார்க்கத்தான் செய்ய முடியுமா? நம்மைக் கண்டதும் வாலையாட்டிக் கும்மாளம் போடுகிற, நம்முடைய உயிர்த் தோழன் என்று கொண்டாடப்படும் நாய்க்குக்கூட நம்மோடு ஒத்துச் சூரியகிரகணத்தைப் பார்க்கவும் பார்த்துக் களிக்கவும் இயலாது. சங்கராந்தியையும், பதினெட்டாம் பெருக்கைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.

எனவே, இயற்கையின் ரகசியச் சுரங்கத்தைத் தோண்டி அதிசயத்தைக் காண முயல்வதிலும், கண்டு பிடிக்கிற திறத்தினாலும், கண்டு பிடித்தவர்களுக்கு உண்டாகும் ஆனந்தத்திலும் மனிதன் தனித்தே நிற்கின்றான். அந்த ஆனந்தத்தை அள்ளிப் பருகி, பருகியதை மக்களுடன் பகிர்ந்து, தலைமுறை தலைமுறையாக மக்கள் அனுபவிக்கும்படி சமுதாயமே அனுபவிக்கும்படி விழாக்களாக ஏற்படுத்தி, நூல்கள் எழுதி வைத்துப் பதிவு செய்து, அப்படியே தனித்து நிற்கின்றான். மற்றவையெல்லாம் அவனை விட்டு எவ்வளவோ விலகி நிற்கின்றன. நான் கோவிலுக்குச் சிறந்த மணி மகுடம் நாமே என்று பெருமிதப்படலாம் என்று ரசிகமணி டி.கே.சி அவர்கள் கூறுகிறார்கள். இதனை வலியுறுத்தும் வண்ணம் கீழ்க்கண்ட மேல்நாட்டு நிபுணர்களின் வாக்கைப் பதிவு செய்கிறார் அவர்.

பேரண்டத்திலுள்ள பொருள்களிலெல்லாம் சிறந்த பொருள் மனிதன். மனிதனிடத்தில் உள்ள பொருள்களிலெல்லாம் சிறந்தது மனசு.” இப்படிப்பட்ட மனசு பற்றி மேலும் சிந்திக்கின்றார். ரசிகமணி.

இத்தகைய மனசு அதி அற்புதமாக இருக்கின்றதே! அது எப்படி உருவாகியிருக்கும் ஏன் மற்ற ஜீவராசிகளிடத்துக் காணப்படுவதில்லை என்று மக்களில் சிலர் எண்ணத் தொடங்கினர். அவர்களுக்குக் கூறுவதாவது,(ரசிகமணிக் கட்டுரைக் களஞ்சியம், சரஸ்வதி அல்லது மனோதத்துவம் என்னும் கட்டுரை & பக்கம் 204, தொகுப்பாசிரியர். தீப. நடராஜன், காவ்யா சண்முகசுந்தரம், முதற்பதிப்பு & 2006) “ஜடப்பொருளான நம் உடலுக்குள் மனசின் தத்துவங்கள் ஒன்றொன்றாக வளர்ந்து தெளிவடைந்து பிரகாசிப்பதை நோக்கும்போது, இருள் மயம் என்று சொல்லக்கூடிய தண்ணீர்த் தடாகத்திலிருந்து முளைத்து எழுந்து மலர்ந்த வெண்தாமரை மலர் ஞாபகத்துக்கு வருதல் இயல்பு. பல்லாயிரக் கணக்கான வருஷங்களுக்கு முன்பே ரசிகர் ஒருவருக்கு இத்தகைய ஞாபகம் வந்தது. வெண்தாமரை ஒன்று பூப்பதில் எவ்வளவோ அற்புதம், எவ்வளவோ தெய்வீகத் தத்துவமும் நிறைந்து கிடக்கின்றன. இத்தகைய கருத்துக்களிலிருந்து சரஸ்வதியென்ற தெய்வத்தை உள்ளத்தில் பாவனை செய்யவும், அத்தெய்வத்தைச் சமரசப்படுத்தி அந்த வெண்தாமரை மலரின் மீதே ஏற்றி வைக்கவும் ஏற்பட்டது. நாளாவட்டத்தில் வெள்ளைக் கலையும் வெள்ளைப் பணியும் அவளுக்குக் கிடைத்தன.

இப்படிப் பிறந்த தெய்வ மகள் கலைமகள் என்றும், சரஸ்வதி என்றும், வாணி என்றும், பல பெயர் பூண்டு நம் நாட்டில் உலவுகிறாள். மேல்நாட்டிலும் ‘ம்யூஸ்’ என்ற பெயரோடு உலாவி வருகிறாள். இப்படிச் சரஸ்வதியாக உருவகப்படுத்தின ரசிகனுடைய பாவனா சக்தியை உள்ளுணர்ந்து எண்ண எண்ண நமக்கு அதிசயம் எப்படிப் பொங்குகிறது.”

ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்றாலும், அறுபத்து நாலாயிரம் என்றாலும் பொருந்தும். சங்கீதம், சிற்பம், நடனம், சமயம், எனப் பிரிந்து விளையாட்டும் கலையாகி பரந்து விரிந்து விட்டன. இமை கொட்டாது நாம் கவனித்துக் களிக்கும் “கிரிக்கெட்டும்“ ஒரு கலை என்ற நிலைக்கு வந்துவிடுகிறது. இப்படித்தான் வகுத்த கலை ஒவ்வொன்றும் எத்தனையோ பிரிவாகக் கிளைத்தோடி மக்கள் வாழ்க்கையை வளம்படச் செய்கிறது. அந்தக் கலையறிவை எந்தத் துறையில் இறங்கி இன்பத்தை அனுபவிக்காதோர் யார்? தென்துருவத்தின் கோடியைப் பார்க்கப் போவதில் ஹாக்கில்டன் இருந்த ஆர்வம், சக்திகளையும், சாதனங்களையும் கண்டுபிடிக்க எடிஸன் இராப் பகலாய் ஆராய்ந்ததில் அனுபவித்த ஆனந்தம், …..  இவர்களது உள்ளம்தான் கலைமகள் நின்று களிநடம் புரிகின்ற இடம்.

நமக்குச் சாதாரணமாய்த் தோன்றுகிற பொருள் வடிவங்களும் அவைகளின் இயக்கங்களும் ஒரு தோற்றம். மற்றொரு தோற்றம், அவைகளின் இயல்பான உண்மையான தத்துவம். உதாரணமாக: நாம் செய்கிற செயலுக்கும் உணருகிற உணர்ச்சிக்கும் நாமே காரணமாய் இருப்பதாகக் காண்பது ஒரு பார்வை; நம்முடைய உணர்ச்சிக்கெல்லாம் பின்னாக இருக்கும் தனிப்பொருள் வேறு ஒன்று என்று உணர்ந்து கொள்வதுதான் மற்றொரு பார்வை. இந்த உணர்ச்சியை “மெய்யுணர்வு” என்றும், “பதிஞானம்” என்றும் சொல்லுவார்கள். இந்த உண்மையைக் கண்டு கொள்வதையே தனி நோக்கமாக உடையன சமயங்கள். இதுவே அறிவிலெல்லாம் அறிவு; உணர்விலெல்லாம் உணர்வு; இன்பத்திலெல்லாம் இன்பமான பேரின்பம்.

சாமான்யமாகக் கிட்டாத இத்தகைய பேரின்பத்தையும் மக்கள் அடையலாம். அதற்குச் சாதனம் அறிவைப் பின்பற்றிக் கலைகளை ஆராய்தலே. மிகவும் அற்பமான பூ ஒன்றின் தத்துவத்தை ஆராய்ந்தால் போதும் என்பார் மேல்நாட்டுக் கவி டெனிஸன். நம்முடைய கவி திருவள்ளுவரோ ‘எப்பொருள் எத்தன்மையாயினும், அப்பொருளின் உண்மைத் தத்துவத்தைக் காணப் புகுதல் போதும்’ என்பார்.” (ரசிகமணிக் கட்டுரைக் களஞ்சியம், சரஸ்வதி அல்லது மனோதத்துவம் என்னும் கட்டுரை & பக்கம் 205, 206 தொகுப்பாசிரியர். தீப. நடராஜன், காவ்யா சண்முகசுந்தரம், முதற்பதிப்பு & 2006)

ஆகவே கடவுள் தத்துவத்தை, அல்லது வீட்டை அடைவதற்கு உடலை வருத்தியெல்லாம் செய்யும் ஹடயோக சாதனம், சாதனம் அல்ல. அறிவியற்க் கலைகளைக் கருவியாகக் கொண்டு நமது உள்ளத்தையே துருவி ஆராய்தல்தான் தக்க சாதனம், எளிய சாதனம் என்று வற்புறுத்திக் கூறுவார்கள் பெரியோர். அதாவது, சமய உணர்ச்சிக்கும் கலைமகளின் அருள் நோக்கம் வேண்டும் என்பார்கள்.

இதுவரை கூறி வந்ததில் காணப்படும் பரந்து பட்ட உண்மைகளை நம்மவர், கட்டளைக் கலைத்துறைப் பாடல் வாயிலாக விளக்குகிறார். (சரஸ்வதியந்தாதி 15-கம்பர்)

“சேயகம் ஆம்வீடு

புக்கிடுதற்குத்

திறந்துவத்த

வாயகம் ஆவதும்.

மோட்சப் பதவி, வீடுபேறு, பேரின்ப உலகம் என நாம் கூறும் அவ்வுலகம் நமக்கு எவ்வளவோ தூரத்திலே உட்புக முடியாதபடி இருப்பதாகத் தோற்றமளிக்கின்றது. ஆனால் அது உண்மை அல்ல. அதற்குச் செல்லும் வழி. மிகவும் எளிதான ஒன்று உள்ளது. அதற்குரிய வழியில் ஒன்று திறந்து கிடக்கின்றது. “வாருங்கள் வாருங்கள்” என்று அழைக்கிறது நண்பர்களே! அது பிறிதொன்றுமில்லை மேலே கூறிய அறிவியற் பயிற்சிக்காகத்தான். கலைகளில் துய்க்கும் இன்பம்தான். அது கொடுக்கும் உண்மையொளிதான் நண்பர்களே! அதுதான் பேரின்பத்தின் மோட்ச உலகத்தின் வாயிலாகும். அறிவன்றி வேறு எந்த வித யோகமும் தேவையில்லை என்கிறார் ரசிகமணி.

“துன்பக் கடற்பட்ட

மன்பதைக் குத்

தாயகம் ஆவதும்.”

பின், அதுமட்டுமன்று, துன்பத்திலே உட்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு, அத்துன்பத்திலே அவர் பின் அமிழ்ந்து, நலிந்து, நைந்து போய் விடாதபடிக் காப்பாற்றும் ஆதாரமாய் இருக்கிறது. எப்படியெனில் எப்படி ஒரு மனிதனுக்குத் தன் தாய் வீடு ‘பாதுகாப்பு’ மிகுந்ததாக இருக்குமோ அப்படி அது தாய்வீடாய்த் திகழ்கின்றது. பாதுகாப்பைத் தருகின்றது. அந்தச் சாதனம், அறிவு, அறிவுப் பயிற்சி கலையின்பம் பாதுகாப்பு ஓங்கும் தாயகம் ஆகிறது.

இவ்விரண்டு உண்மைகளையும் கண்டு அனுபவித்து அந்தக் கலையறிவிற்கு ஒரு உருவம் கொடுக்கின்றனர். அவளது இரு கரங்கள் வீணையை வாசிக்கின்றன. ஒரு கரம் அக்கமாலையை வைத்துக் கொண்டிருக்கின்றது. எஞ்சிய ஒரு கையில் சுவடிகளை ஏந்தியிருக்கின்றாள். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அவளது பெயர் ‘கலைமகள்’ எனப் பெயர் கூறுகின்றனர். அவள் ‘பேரின்பம்’ எனில் அவளை உயர்ந்த இடத்தில் அல்லவா அமர்த்த வேண்டும். எங்கு அமர்த்தலாம் நண்பர்களே!

“ பூதலம் பூத்த

தகைமலர்க்குள்

நாயகம் ஆவதும்

கோதில் தவள

நளினமதே.”

இந்த பரந்து விரிந்து கிடக்கும் பூமியில் பல்வேறு நிறங்களுடனும், உருவங்களுடனும் உள்ளத்தை அப்படியே அள்ளிக் கிறுகிறுக்கச் செய்யும் மணங்களுடனும் நோக்க நோக்கத் தவிர்க்க இயலாததும் முகர முகரத் தெவிட்டாத பற்பல பூக்கள் பூத்துக் குலுங்கிக் கிடக்கின்றன. நிலப்பூ, கொடிப் பூ, நீர்ப் பூ என எத்தனை எத்தனையோ வகைகள் உள்ளன. ஆயினும் மலர்களின் நாயகமாக விளங்கும் மணமும் தன்மையும் உடைய தூய ஒளியுடன் கூடிய வெண்தாமரைக்கு ஈடு இணை எங்கேனும் இருக்கிறதா நண்பர்களே!

அங்கே கலைஞர்களுக்கெல்லாம் உறைவிடமாய் உருவாக்கிய கலைமகளை அமர்த்திப் பார்க்கிறார். அப்படிப்பட்ட கலைமகளின் கடைக்கண் கொழிக்கும் கருணையைப் பெற்றவர், உள்ளம் ஆழ்ந்த உண்மையாய் இன்பம் தங்கும் கலைமகளைக் கற்பர். அதுவே இன்பம். அதுவே செல்வம் எனக் கூத்தாடுவார். அடுத்திருக்கும் மக்களுக்கெல்லாம் அதை எடுத்துரைப்பர். ஏனைய பொருளெல்லாம் பொய்க்கும் பொருளெல்லாம் பொருளென்று கருதுவர். அத்தகையர் எங்ஙனம் கலைமகளைத் தொழுவார்கள் என்று கீழ்வரும் பாடல் உரைக்கின்றது.

தொழுவார், வலம்வரு

வார்துதிப் பார்தம்

தொழில்மறந்து

விழுவார், அருமறை

மெய்தெரி வார். இன்ப

மெய்புள கித்(து)

அழுவார், இருகண்ணின்

நீர்மல்கு வார். என்னை

ஆளும் அன் னை

வழுவாத செஞ்சொல்க்

கலைமங்கை பால் அன்பு

வைத்தவரே.

என்னும் பொய்யில் புகழுக்கு இலக்கியமும் ஆவர் அன்றோ!

இத்தகையக் கலைமகள் யார் மனதில் உறைவாள்? என்று ஒரு பழம்பெரும் பாடல் ஒன்று கூறுகிறது. அதைப் பார்க்கலாம் வாருங்கள். நண்பர்களே!

“என்னை உடையாள்

கலைமடந்தை எவ் உயிர்க்கும்

அன்னை அனையாள்

அடித்தளிர்கள் & இன் அருள் சேர்

மென் மனத்தே தங்கும்

என உரைப்பர் & மெய் இலா

வன் மனத்தே தங்குமோ

வந்து!”

பருவத்திலேயே எனைப் பேணி, என்னை அருளால் ஆண்டு பூந்தமிழ்க் கவி சொல்லவே என்னுடன் தங்கி விட்டாள். அவள் எப்படிப்பட்டவள் என்று பாரதி பாடுகிறார் என்று பார்ப்போம் நண்பர்களே.

“வேதத் திருவிழியாள் – அதில்
மிக்கபல் லுரையெனும் அருமையிட்டாள்.
சீதர் கதிர் மதியே நுதல்
சிந்தனையே சூழ வென்றுடை யாள்;
வாதத் தருக்க மெனுள் – செவி
வாய்ந்ததற் நுனிவெளுந்த தோடணிந்தாள்;
போதமென் நாசியா னாள் – நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடையாள்;

இது மட்டுமல்ல தோழரே! மகாகவியின் எண்ணத்தின் உச்சத்தைப் பாருங்கள்! அவள் கற்பனைத் தேனிதழ் உடையவளாம். சுவைமிகுக் காவியமெனும் மணிக்கொள்கைகள் கொண்டவளாம். அவளது கரங்களில் பிற்படுதலாக அனைத்துக் கலைகளும் அடக்கமாம்.

“சொற்படு நயமறிவார் & இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்
விற்பனைத் தமிழ்ப்புல வோர் & அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத்தாள்”

என்னைப் பெற்ற கலைமகள், எல்லா உயிர்க்கும் அன்னையைப் போன்று காப்பவள். அவளது திருவடிகளைப் பற்றிக் கொண்டால், அவளது இன்னருளை நம்மிடம் பொழிந்து இன்பத்தை நல்குவாள். அப்படிப்பட்ட கலைமகள் யாருடைய உள்ளத்தில் தங்குவாள் என்று கூறுகிறது? நண்பர்களே! உண்மையைப் போற்றும், மெய்யைக் காணும், நேர்மையின் வழி நிற்கும், உண்மையில் உருவம் வளரும் மென்மையான மனத்தினில்தான் தங்குவாள். என்று பாஞ்சாலி சபதத்தில், சரஸ்வதி வணக்கத்தில் பாரதி சரஸ்வதியின் தோற்ற உருவத்தைக் கூறுகிறார். இத்தகைய வாணியைத் தன் பாஞ்சாலி சபதத்தைச் சிறந்த முறையில் செய்திட உதவுமாறு வேண்டுகிறார்.

“தெளிவுறவே அறிந்திருதல் தெளிவுதர

மொழிந்திடுதல் சிந்திப் பார்க்கே

களிவளர உள்ளத்தில் ஆனந்தக்

கனவு பல காட்டல் கண்ணீர்த்

துளிவர உள் ளுருக்குதல் இங்கிவையெல்லாம்

நீ அருளும் தொழில்க ளன்றோ?

ஒளிவளருந் தமிழ்வாணீ அடியனேற்

கிவையனைத்தும் உதவு வாயே”

சில பல காரணங்களால், எங்கள் வீட்டு நவராத்திரிக் கொலுவை சில வருடங்களாக மறந்து இருந்தோம். நண்பர்களே! திடீரென்று என் இரண்டாவது மகளின் நினைவூட்டல் படி சென்ற ஆண்டு நவராத்திரி விழாவை வீட்டில் சிறப்பாகக் கொண்டாடினோம். எங்களது சுற்றத்தார் நண்பர்கள் அனைவரும் சிறப்பித்துக் கொடுத்தார்கள். சென்ற ஆண்டுக் கதை இப்பொழுது எதற்கு என்று கேட்கிறீர்களா?  நண்பரே! அதில் தான் விஷயமே இருக்கிறது.

மூத்த பத்திரிக்கையாளரும், பரீக்ஷா நாடக அமைப்பாளரும், என் நண்பருமான திரு. ஞானி அவர்கள், தன் பரீக்ஷா நண்பர்களுடன் எங்கள் நவராத்திரி கொலுவைக் என் அழைப்பின் பேரில் காண வந்திருந்தார். அப்பொழுது வந்ததும் சற்று நேரம் கழித்து “பாரதியார் கவிதைகள்” இருக்கிறதா என்று கேட்டார். நான் இருக்கின்றது (பாரதியில்லாமல் நாம் இருக்க முடியுமா என்ன?) என்று எடுத்துக்கொடுத்தேன்.

இன்று சரஸ்வதி பூஜை அல்லவா? சரஸ்வதியை எப்படிப் பூஜை செய்ய வேண்டும் என்று பாரதியார் கூறுகிறார்.

என் தோழியில் ஒருவள். “வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள்” என்ற பாட்டைப் பாடினாள். “அந்தப் பாட்டுத்தான் ஆனால் நாம் இரண்டு பத்திகளுக்கு மேல் பாட மாட்டோம். அதைத் தாண்டி என்ன எழுதியிருக்கிறார் என்றே தெரியாது. படித்ததும் இல்லை” என்றார். ஆமாம் அப்படித்தான் என்று உண்மையை அறிந்தோம், அக்கவிதைகளை முழுவதும் படித்தார். நாமும் அக்கவிதைகளை முழுமையாகப் பார்க்கலாம் நண்பர்களே!

வீணையின் ஒலியிலும் கவிதையின் பத்தியிலும், கள்ளமற்ற முனிவர்களின் கருணை மொழிகளிலும் உறைபவளான வாணி யார் யாருக்குத் தெய்வமாய் விளங்குகிறாள் என எடுத்துரைக்கிறார். மகாகவி.

“வஞ்சமற்ற தொழில்புரிந் துண்டு

வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;

வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்

வித்தை யோகந்திரு சிற்பியர், தச்சர்

மிஞ்ச நற்பொருள் வாணிகர் செய்வோர்,

வீரமன்னர் பின் வேதியர் யாரும்

தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்,

தரணி மீதறி வாகிய தெய்வம்.”

“தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்

தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;

உய்வ மென்ற கருத்துடை யோர்கள்

உயிரினுக்குயி ராகிய தெய்வம்,

செய்வ மென்றோரு செய்கை யெடுப்போர்

செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்

கைவருந்தி உழைப்பவர் தெய்வம்

கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம்

நண்பர்களே! தெய்வங்களே உணர்த்திடும் தெய்வமாகிய வாணியை, கலைமகளை எங்ஙனம் வந்தனம் செய்வது என்று கூறுகிறார்.

“மந்திரத்தை முணுமுணுத் தேட்டை

வரிசை யாக அடுக்கி அதன்மேல்

சந்தனத்தை மலரை இடுவோர்

சாத்திரம் இவள் பூசனை யன்றாம்;

என்று மறுக்கிறார். அவளது பூசனை, நாடு முற்றிலும் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்பதை நாம் பார்க்கலாம். ஒவ்வொரு வீடும் கலைமகளின் ஒளியாய், கலைமகளின் உறைவிடமாய், வளர்விடமாய் இருக்கவேண்டும். நாம் இருக்குமிடத்தில் ஒவ்வொரு வீதிக்கும் குறைந்தது இரண்டு பள்ளிகளாவது நிறுவ வேண்டும். நாடு முழுவதிலும் உள்ள ஊர்களில், நகர்களில் பற்பல பள்ளிகள் அமைக்க வேண்டும்.

“தேடு கல்வியி லாதாதாரூரைத்

தீயினுக்கிரை யாக மடுத்தல்

கேடு தீர்க்கும், அமுதமென் அன்னை

கேண்மை கொள்ள வழியாவை கண்டீர்”

“இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்

இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

பின்னருள்ள தருமங்கள் யாவும்

பெயர்வி ளங்கி யொன்றை நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்”

இத்துணைப் பூசனைக்குரிய பணிகளுக்கு, நிதி மிகுந்தவர்கள் தங்கள் செல்வத்தைத் தந்து உதவலாம். செல்வம் குறைந்தவரும் அவரவர் வசதிக் கேற்றவாரு நிதியுதவி செய்யலாம். அதுவும் இல்லாதவர், வலிமையுடையவர்கள் தங்கள் இப்பணிகளுக்கு தங்கள் உடல் உழைப்பைத் தரலாம்.

“மதுரத் தேரமொழி மாதர்களெல்லாம்

வாணி பூசைக் குரியன பேசீர்!

எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்

இப்பெருந் தொழில் நாட்டுவோம் வாரீர்”

என்ன நண்பர்களே! சரஸ்வதியை மகாகவி செய்பூசை மிகவும் வித்தியாசமாக இருக்கிறதா? நானும் அன்றுதான் ஞாநி கூறிய பின்தான் இதனை அறிந்தேன். அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இது ஒரு பகிர்தல் தான் நண்பர்களே! அறிவாகிய தெய்வத்தின் ஆளுமையை, அருளைக் கூற விழைந்தேன். மேலும், ‘அறிவு’ இல்லையேல் மனிதனிடம் உயர்வு இல்லை. அதன் உறைவிடமாகிய கலைவாணியைப் போற்றிப் பூசை செய்யும் விதத்தையும், அவருடைய கடைக்கண் பார்வையாய் நம் வாழ்வு புத்துயிர் பெறவும் தான் இப்பகிர்தல்.

“வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்

பொய்க்கும் பொருளின்றி நீடும் பொருளல்ல பூதஉலகத்தின்

மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்

உய்க்கும் பொருளும் கலைமான் உணர்த்தும் உரைப்பொருளே!

(கம்பர் சரஸ்வதி அந்தாதி 26)

“சரஸ்வதி நமஸ் துப்யம் வரதே காமரூபிணி!

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா!!

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.