வல்லமை தரும் வெற்றித் திருநாள்

5

இராஜராஜேஸ்வரி

“தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா

மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே.” – அபிராமி அந்தாதி.

அம்பிகையைச் சரணடைந்தால் அதிகவரம் பெறலாம். லோக மாதாவாகிய ஆதிபராசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி, ஞானாசக்தி என மூன்று வித தேவிகளாக, துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி எனும் நாமங்கள் பூண்டு பிரபஞ்சம் முழுவதற்கும் அருள் பாலிக்கிறாள்.

மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய கொடிய அரக்கர்களை அன்னை பராசக்தி அழித்து வெற்றி கொண்ட திருநாள். தீமையின் உருவான ராவணனை ஸ்ரீராமன் போரில் வென்ற திருநாள். பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்கள் ஆயுதங்களையும், அன்னை துர்க்கையும் வழிபட்ட நன்னாள்.

விஜயதசமி தினத்தில் ஆரம்பிக்கப்படும் எந்தச் செயலும்,தெய்வ சக்திகளின் அருளால் இனிது விருத்தி அடையும்  வெற்றி நடை போடும் என்பது நம் பாரம்பரியம். சங்கீதம், நடனம், வாத்தியக் கலைகள் முதலிய கலைகள் பயில ஆரம்பிக்கப்படும். சிறார்களுக்கு ஏடு தொடக்குதல் அல்லது வித்தியாரம்பம் எனப்படும் அரிச்சுவடி எழுதத் தொடக்கி வைக்கப்படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் “ஹரி ஓம்” எனக் குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.

அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால், அந்த நேரம் சுப முஹூர்த்த நேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது.

மைசூர் தசராப் பண்டிகையைப் போன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன் பட்டினத்தில் நடைபெறும் தசராப் பண்டிகையும் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் இந்தப் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு கடவுளின் வேடங்களை அணிந்தபடி வீதி உலாவாகச் செல்வர்.

நவராத்திரியின் போது வடநாட்டில் ராமரின் லீலைகளை நாடகமாக நடத்துகின்றனர். ராமர் பட்டாபிஷேகத்தன்று ராவணனின் உருவத்தை நூறடி உயரத்தில் காகிதம், மூங்கில் முதலியவற்றால் உருவாக்கி அதில் வெடிகள் வைத்து எரித்து விடுகின்றனர். அதை வாண வேடிக்கையாகப் பார்த்து மகிழ்கின்றனர்

மகிஷன் என்ற அசுரன் தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். இது குறித்து மும்மூர்த்திகளிடம் தேவர்கள் முறையிட்டனர். மகிஷனின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டுவர சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் முடிவு செய்தனர்.

மும்மூர்த்திகளின் முகங்களில் இருந்து வெளிப்பட்ட ஒளி, நெருப்பைப் போல் வெளி வந்தது. அது ஒரு பெண் வடிவம் கொண்டது. அந்தப் பெண் துர்க்கா தேவி என அழைக்கப்பட்டார். ஒன்பது நாள் விரதம் இருந்து ஆயுதபூஜை செய்து பத்தாம் நாள் வளையலணிந்த கைகளில் வாள் பிடித்துப் போய் மகிஷனைக் கொன்று மகிஷாசுரமர்த்தினியாகத் திரும்பி வந்தாள்.

தேவி விரதம் இருந்த தினங்களை நவராத்திரி என்கிறார்கள். அசுரனை ஜெயித்த தினம் விஜயதசமி. வடநாட்டில் துர்க்கா பூஜை, ஒன்பது நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

வித்யாரம்பம் படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “வல்லமை தரும் வெற்றித் திருநாள்

 1. எனக்கு மிகவும் பிடித்தமான, என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, மிகுந்த எழுத்து வல்லமை வாய்ந்த, திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களை ”வல்லமை” மின் இதழில் இன்று நான் முதன் முதலாகக் காண்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

  வெற்றித்திருநாளாம் விஜயதஸமியில் தொடங்கியுள்ள தங்கள் பதிவுகள் யாவும் வெற்றிபெற்று ஜொலித்திடும் என்பதில் ஐயமில்லை. எங்கு நோக்கினும் சக்தியடா என்பது உண்மையாயிற்று.

  அன்புடன் vgk

 2. //விஜயதசமி தினத்தில் ஆரம்பிக்கப்படும் எந்தச் செயலும்,தெய்வ சக்திகளின் அருளால் இனிது விருத்தி அடையும் வெற்றி நடை போடும் //

  நமது நட்பும் தானே! மிக்க மகிழ்ச்சி.

  //நம் பாரம்பரியம். சங்கீதம், நடனம், வாத்தியக் கலைகள் முதலிய கலைகள் பயில ஆரம்பிக்கப்படும். சிறார்களுக்கு ஏடு தொடக்குதல் அல்லது வித்தியாரம்பம் எனப்படும் அரிச்சுவடி எழுதத் தொடக்கி வைக்கப்படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் “ஹரி ஓம்” எனக் குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.//

  ஆமாம். மிகவும் நல்லதொரு அழகான ஆரம்பம். 

  //“தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியாமனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
  இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
  கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே.” //

  அருமையான அபிராமி அந்தாதியை நினைவூட்டியதற்கு, நன்றி..

 3. வெற்றித்திருநாளாம் விஜயதஸமியில் தொடங்கியுள்ள தங்கள் பதிவுகள் யாவும் வெற்றிபெற்று ஜொலித்திடும் என்பதில் ஐயமில்லை. எங்கு நோக்கினும் சக்தியடா என்பது உண்மையாயிற்று.

  அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *