பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

 

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

வாசகன் பாலசூரியன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.10.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 183

 1. வாழ்த்துங்கள்…

  வறுமையின் ஆட்சி வீட்டினிலே
  வரவினை மிஞ்சிடும் செலவினமே,
  பொறுமையின் வடிவிலே பெண்ணவள்தான்
  போதையின் பிடியில் ஆண்மகன்தான்,
  சிறுவராய்ப் பிள்ளைகள் சிரமத்திலே
  சீர்பெறக் கவனம் படிப்பினிலே,
  குறுகிய குடிசையில் விளக்கொளியில்
  கற்றிடும் குலமகள் வாழ்த்துவீரே…!

  செண்பக ஜெகதீசன்…

 2. பொதும்பைப் பெண்ணே!

  ஊடுருவிப் பார்க்கின்றாய் ஒளிரும் சுவாலைதனை
  தேடுவது எதையென்று தெரியவில்லையோ உனக்கு?
  புத்தகத்தின் முன்னிருந்து சித்தத்தைச் சிற்றொளியில்
  வைத்துள்ளாய் நீ அங்குன் வாழ்வினொளி காண்பாயோ?
  கற்பதனாலுன்றனுக்குக் கடுகளவும் தோல்விவரப்
  போவதில்லை ஆதலினால் பொழுதினை நீ வீணாக்கி
  உற்றுப்பார்க்காது உருகும் மெழுகுதனை
  சற்றேயுன் புத்தகத்தில் தலைகுனிந்து கவனம் வை.

  வாழ்வினொளி காண வை கவனம் கற்பதிலே
  தாழ்வில்லையென்றும் தலை குனிந்து கற்பவர்க்கு
  வீட்டில் விளக்கின்றி வீதிக்குச் சென்றங்கே
  தெருவிளக்கிற் கற்றுத் தேறிப் பரீட்சையிலே
  மேதாவிகளானோர் மிகுபலபேர் உள்ளார்கள்
  ஆதலினால் நங்காய் ஆழ்ந்து படி புத்தகத்தை
  மீதி விளைவதெல்லாம் வெற்றியன்றி வேறில்லை.

 3. அழுதிடும் மெழுகுவர்த்தி !

  சி. ஜெயபாரதன்.

  எங்கள் வாழ்வே இருளானது !
  மங்கிப் போன விளக்கு !
  ஒருத்தி
  ஊதியமும் இல்லை !
  மரணப் படுக்கையில்
  தாய் ! கையில்
  மருந்து வாங்கப் போன
  காசை
  பறித்துக் கொண்டு
  கள்ளுக் கடைக்குப் போனது
  அப்பன் !
  நாளைக்குத் தேர்வு !
  மங்கிய தெரு விளக்கும்
  மின்னலில் அணைந்தது !
  கடன் வாங்கிய
  மெழுகு வர்த்தி யானது
  அழுது, அழுது
  மெலிந்தது !
  நான் படித்து பட்டம் வாங்கி
  யாரைக் காப்பாற்ற ?
  தாயையா ?
  குடித்து விட்டு வாசலில்
  வசை புராணம் பாடும்
  அப்பனையா ?

  +++++++++++++++++++

 4. வாழ்க வளமுடன்…
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
  -ஆ. செந்தில் குமார்.

  கன்னித் தமிழனைத்தும் கலைமகளும் உனக்கருள்க!
  எண்ணிய செல்வங்களை அலைமகளும் உனக்களிக்க!
  இன்னலில்லாப் பெருவாழ்வை மலைமகளும் மனமுவக்க!
  இன்னபிற நன்மைகளைப் பெறுவதற்குநீ முயல்க!

  அணையாத விளக்காக அன்பெங்கும் ஊற்றெடுக்க!
  துணையாக சொந்தங்கள் எப்போதும் உடனிருக்க!
  அணிகலனாய் நற்பண்பை இறுதிவரைநீ சுமக்க!
  இணைந்திருக்கும் நட்புகள் எப்போதுமுனை சூழ்க!

  மடைதிறந்த வெள்ளமென வாழ்விலின்பம் பொங்க!
  இடைத்தோன்றும் துன்பமெலாம் தவிடு பொடியாக!
  அடையத் துடிக்கும் இலக்கனைத்தும்நீ தொடுக!
  தடையேதும் இல்லாத தனிப்பாதைநீ பெறுக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *