இலக்கியம்கவிதைகள்பொது

காதலுடன் கைதொழுவோம்!

image1.JPG

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

அன்னையும் தந்தையும் ஆற்றிய பெருந்தவத்தால்
அகிலத்தில் நம்பிறப்பு அற்புதமாய் ஆகியது
அரவணைத்துப் பாலூட்டி அன்புதனை காட்டியவர்
அறிவுடனே வாழ்வதற்கு ஆசானைக் காட்டினரே
ஆசானின் அரவணைப்பால் அசடெம்மை விட்டகன்று
ஆண்டவனின் நினைப்புடனே அருங்கல்வி அமைந்ததுவே
ஆண்டவனை நினைக்கும்படி அக்கல்வி அளித்துநின்ற
ஆசானை வாழ்நாளில் அகமதிலே இருத்திவைப்போம்

எல்லோர்க்கும் ஆசானே ஏணியாய் இருந்திடுவார்
வல்லவராய் நல்லவராய் வளர்ப்பதும் ஆசானே
பொல்லாத குணமதனை போக்குவதும் ஆசானே
நல்லபல சேதிகளை நல்குவதும் ஆசானே
நல்லாசன் வாய்த்துவிடல் நாம்செய்யும் பாக்கியமே
நம்வாழ்வின் பெருங்கொடையே நல்லாசன் கிடைப்பதுவே
ஆதலினால் ஆசானை அடிபரவி நின்றிடுவோம்
அவராசி கிடைப்பதுவே அனைவருக்கும் பெருங்கொடையே

அர்த்தமுடன் வாழ்வதற்கு ஆசானின் துணைவேண்டும்
ஆணவத்தை அகற்றுதற்கு ஆசானின் துணைவேண்டும்
அறம்பற்றி அறிவதற்கும் ஆசானின் துணைவேண்டும்
அகம்பற்றி அறிவதற்கும் அவரின்துணை அவசியமே
நிலமீது நாமிருந்து நிமிர்ந்தென்றும் வாழ்வதற்கும்
நிலையான நீதியினை நெஞ்சமதில் நிறுத்துதற்கும்
அறிவான ஆசானே அருந்துணையாய் அமைந்திடுவார்
ஆதலால் ஆசானை காதலுடன் கைதொழுவோம் !

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க