-இரமேஷ் அர்ஜுன்

1
விடியல்அறியா இரவொன்றில்
தொடங்குகிறது வாழ்க்கை

உறக்கத்தின் ஊடே
இடைப்பிறவரல் என்பதாய்
கனவொன்றில்
ஆழ்மனத் தேடலின் அசைவுகள்

காட்சித் தெளிவில்லாது
கரைந்து போகும் கனவில்
காமத்தின் நிறைவேறா
புணர்தலின் அவஸ்தைகளாக
கடந்து போகிறது வாழ்க்கை
விடிவதற்குள்ளாகவே.

2
ஏழுநாட்கள் என்றார்கள்
இறந்துபோனது
இரண்டுநாட்கள்.

பிறகு
ஐந்துநாட்கள் என்றார்கள்
அதுவும்அந்நியப்பட்டுப் போக
மூன்று என்கிறார்கள்.

மூன்றும் இல்லாது
முதல் நாளுக்கே
எட்டிப்பார்க்காது வற்றிப் போகிறது
அவளுக்கான ஜீவநதி.

3
கரைபுரண்டுஓடும்நீரில்
நிலம்தேடும்கால்கள்
நிலையைஉணரத் துடிக்கும் கைகள்
ஏனோ
கண்கள் மட்டும்
விண்ணைநோக்கி
நிலையறியா பொழுதொன்றில்

4
யோனிக்குள்
உமிழப்படும் எச்சிலின்
ஒற்றைப்புள்ளியில்
உருக்கொள்ளும் உலகம்
உணர்வதே இல்லை

ஊற்றுக்காலில் வழிந்தோடும்
புனித தீர்த்தத்தில்
தள்ளிவிடப்பட்ட
தாழம்பூ அணியாத்தலைவன்
வந்தேறிகளின் வாசல்
திறவுகோல் என்று…

5
என் எழுத்துக்களில்
சிதறிக் கிடக்கும் கவித்துவத்தை
அழகு படுத்தும்
ஆன்மாவின் நாதமென
இசைத்துக் கொண்டிருக்கிறது
எனக்கான உள்வெளியின்
நிழல் முற்றத்தில்
அவளின் நினைவுகள்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *