இலக்கியம்கவிதைகள்பொது

குறளின் கதிர்களாய்….(240)

செண்பக ஜெகதீசன்…

உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க

பண்பொத்த லொப்பதா மொப்பு.

-திருக்குறள் -993(பண்புடைமை)

 

புதுக் கவிதையில்…

 

உடலுறுப்பால் ஒத்திருத்தல்

உலகத்து

மக்களோடு ஒத்திருத்தலன்று..

பொருந்தத் தக்கது,

பண்பால் ஒத்திருத்தலே…!

குறும்பாவில்…

உறுப்பால் ஒத்திருப்பதன்று

மக்களோடு ஒத்திருத்தல் என்பது,

உண்மையிலது பண்பால் ஒத்திருத்தலே…!

 

மரபுக் கவிதையில்…

 

உடலி லுள்ள உறுப்புகளால்

ஒன்றோ டொன்றுபோல் ஒத்திருத்தல்,

கடல்சூழ் உலக மக்களோடு

கருதப் படாதே ஒத்திருத்தலாய்,

நடைமுறை தன்னில் பொருந்துவதாய்

நல்ல பண்பால் ஒத்திருத்தலே

தொடரும் உலக வாழ்வினிலே

தெரிந்த உண்மை ஒத்திருத்தலே…!

 

லிமரைக்கூ..

உண்மையில் ஒத்திருத்தலே இல்லை

உறுப்புகளால் மக்களோடு ஒத்திருத்தலென்பது,

பண்பால் ஒத்திருத்தலே உண்மையின் எல்லை…!

கிராமிய பாணியில்…

பெருசுபெருசு உண்மயில பெருசு

ஒலகத்திலயே ரெம்பப் பெருசு,

ஒசந்த பண்புதான்..

ஒடம்பிலவுள்ள உறுப்புகளால

மக்களோட ஒத்திருக்கிறது

உண்மயான ஒத்திருத்தலில்ல,

ஒசந்த பண்பால

ஒத்திருக்கதுதான் ஒசத்தி

அதுதான்

உண்மயான ஒத்திருத்தலே..

அதால

பெருசுபெருசு உண்மயில பெருசு

ஒலகத்திலயே ரெம்பப் பெருசு,

ஒசந்த பண்புதான்…!

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க