-மேகலா இராமமூர்த்தி

களப்பிரர் காலத்திலும் அதைத் தொடர்ந்த பக்தி இயக்க காலத்திலும் (இதைப் பல்லவர் காலம் என்றும் குறிக்கலாம்) அறிவுத் துறையில் பெண்களின் பங்களிப்பு அரிதினும் அரிதாகவே காணக் கிடைக்கின்றது. நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இக்காலகட்டத்தில் (கி.பி. 5/6ஆம் நூற்றாண்டு) காரைக்கால் அம்மையாரின் தீந்தமிழ்ப் பனுவல்கள் சற்றே நமக்கு ஆறுதலளிக்கின்றன. எனினும் அவரும் அன்றைய பெண்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்தோ, அவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தோ எதனையும் தம் பாடல்களில் பதிவு செய்யவில்லை. மாறாக, அவை அனைத்துமே பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய இறைப் பாடல்களாகவே இருக்கின்றன.

பெண் கவிஞர் என்ற வகையில் அவரை நினைந்து நாம் மகிழும் அதே வேளையில், அவருடைய தனிப்பட்ட வாழ்வைக் குறித்து வருந்தவேண்டியவர்களாய் இருக்கின்றோம். இவரைக் கைப்பிடித்த கணவன் இவரின் இறையாற்றல் கண்டு அஞ்சி அகல்வதும், வேறொரு பெண்ணை மணப்பதும், இவரோ அவனையே நினைந்து உருகுவதும், பின் உறவினர்கள் துணையோடு கணவனைச் சந்திக்கும்போது அவன் தன் இரண்டாம் மனைவியோடும் மகளோடும் இவர் காலில் விழுவதும், கணவனுக்கு உதவாத உடல் எனக்கெதற்கு என்று இவர் பேய்க்கோலம் கொள்வதும் என இவர் குறித்து நாமறியும் செய்திகள் அனைத்துமே ’கணவனன்றிப் பெண்டிர்க்குப் புகலில்லை’ என்ற அன்றைய ஆணாதிக்க மனோநிலையையும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் அவலநிலையையும் வெளிக்காட்டுவனவாகவே  உள்ளன.

இவரைத் தொடர்ந்து நமக்குக் காணக் கிடைக்கும் மற்றொரு பெண் படைப்பாளி பட்டர்பிரான் கோதையாக அடையாளப்படுத்தப்படும் ஆண்டாள். இவருடைய பாடல்களிலும் அரங்கன் மீதான இவரின் ஒருதலைக்காதலும், அவனோடு சேரமுடியாத விரகமுமே மேலோங்கி நிற்கின்றன. இவரைப் பற்றி இருவேறு விதமான கருத்துக்களும் நிலவுகின்றன.

சிலர், இவர் பெரியாழ்வாரின் அருமை மகளார்; சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார் என்று சுட்ட, வேறு சிலரோ பட்டர்பிரான் கோதை என்பது பெரியாழ்வாரே தம்மைப் பெண்பாலராகக் காட்டிக்கொள்வதற்காகப் புனைந்துகொண்ட பெயர் என்ற கருத்துடையோராகவும் இருக்கின்றனர். சக்கரவர்த்தி. இராஜாகோபாலாசாரியார் (இராஜாஜி) போன்ற பழுத்த வைணவர்கள்கூடக் கோதை என்பது பெரியாழ்வாரின் புனைபெயரே என்ற கருத்தையே வெளிப்படுத்தியிருக்கின்றனர். பெரியாழ்வாரின் பாடல்களிலும் ஆண்டாளின் பாடல்களிலும் காணக்கிடைக்கின்ற சிந்தனை ஒருமையும், எடுத்தாளப்பட்டிருக்கும் சொல்லாட்சிகளின் ஒற்றுமையும் இக்கருத்து உண்மைதானோ என்ற ஐயுறவை நமக்கும் ஏற்படுத்தவே செய்கின்றன. எனினும் இக்கருத்தை உறுதிப்படுத்துதற்கோ, புறந்தள்ளுதற்கோ நம்மிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை.

பெண்களின் படைப்புலகம் இவ்வாறிருக்க, பக்தி இயக்க காலம் தமிழக மக்களைத் தமிழ்மண்ணின் தொன்மைச் சமயங்களான சைவ விண்ணவ சமயங்களின்பால் திருப்புவதில் வெற்றி கண்டது என்றே கூறவேண்டும். இறைத்தொண்டு செய்வதையே தம் வாழ்வின் முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்த இறையடியார்கள் பலர் இக்காலகட்டத்தில் ஆண்களிலும் பெண்களிலும் இருந்திருக்கின்றனர்; இவர்கள் ’தேவரடியார்’ என்ற பெயரால் குறிக்கப்பட்டிருக்கின்றனர்.

திருவாசகத்திலுள்ள திருவெம்பாவையில் மணிவாசக அடிகள், ”குற்றமற்ற குடியில் தோன்றிய, சிவன் கோயிலில் பணிசெய்யும் பெண்களே” என்று விளிப்பது தேவரடியாராய்த் தொண்டாற்றிய பெண்டிரையே என்று கொள்ளலாம்.

கோதில் குலத்தரன்றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்!” (திருவெம் – 10)

கோயில்களில் இறைவர்க்கு மட்டுமே தொண்டுசெய்துவந்த நற்குடிப் பெண்களாகவே இவர்களை அடையாளப்படுத்தியுள்ளார் அடிகள் என்பது ஈண்டு நோக்கத்தக்கது.

பிற்காலச் சோழர்களில் தலைசிறந்தவனான முதலாம் இராசராசன் காலத்தில் கோயிற்பணிகளைக் குறைவறச் செய்வதற்காகப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நானூறு தேவரடியார்கள் குடியேற்றப்பட்டனர். அவர்களுக்குக் கோயிலை அடுத்து வடக்கிலும் தெற்கிலும் மனைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலி நிலம் நிவந்தம் கொடுக்கப்பட்டது என்று அறிகின்றோம்.

இப்பெண்களின் பெயர்களின்முன் ’நக்கன்’ என்ற முன்னொட்டு (prefix) சேர்க்கப்பட்டிருக்கின்றது. நக்கன் எடுத்தபாதம், நக்கன் சோழகுல சுந்தரி போன்றோர் தேவரடியார்களில் சிலர். நக்கன் என்ற ’அடை’யோடு இராசராச சோழனின் மனைவியரில் ஒருவரான நக்கன் தில்லை அழகியார், முதலாம் இராசேந்திரனின் மனைவியான ‘நக்கன் கருக்கமர்ந்தாள் பஞ்சவன் மாதேவி’ ஆகியோரும் இருந்திருப்பதைச் சோழர்காலக் கல்வெட்டுகள் அறியத் தருகின்றன.

அதுபோலவே பழுவூர்க் கல்வெட்டுகளில் காணப்படும்,
”இத்தளி தேவனார் மகளார் நக்கன் அக்கார நங்கையார்
இத்தளி தேவனார் மகளார் நக்கன் மானதிரி மகள் நக்கன் கண்ட பிராட்டி”

போன்ற தொடர்கள் தளி தேவரான (தளி-கோயில்) இறைவனின் ம(க்)களாகவே நக்கன் எனும் முன்னொட்டோடு விளங்கிய பெண்கள் கருதப்பட்டிருக்கின்றார்கள் என்பதைப் புலப்படுத்துகின்றது. அப்படியாயின் இத்தேவரடியார்கள் எப்போதுமுதல் ஒழுக்கம் தவறிய பொதுமகளிராக மாறிப்போனார்கள் அல்லது மாற்றப்பட்டார்கள் என்னும் வினா எழுகின்றது. 

மீண்டும் நம் பார்வையைப் படைப்பாளிகள் பக்கம் திருப்புவோம்.

பத்தாம் நூற்றாண்டு, அதற்கடுத்துவரும் காலங்களில் காணலாகும் படைப்பாளிகளை நோக்கின், கல்வியில் பெரிய கம்பர், கவி ராட்சதர் ஒட்டக்கூத்தர், பெரியபுராணம் யாத்த சேக்கிழார், கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டார் என்று ஆண்பாற் படைப்பாளிகள் பலர் வரிசைகட்டி நிற்க, அவர்களுக்கு மத்தியில் ’அத்திபூத்தாற் போல்’ ஔவையார் எனும் புலவர் பெருமாட்டி ஒருவர் காட்சி தருகின்றார்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படும் இந்த ஔவையாரும், சங்க கால ஔவையாரும் வேறு வேறானவர்கள் என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இவர் இயற்றியவையாக ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை போன்ற நீதிநூல்கள் கிடைக்கின்றன. இவையேயன்றித் தனிப்பாடல்கள் சிலவும் இவர் பெயரில் காணப்படுகின்றன. அதில் ஒரு தனிப்பாடல் சுவையான பின்னணியைக் கொண்டதாகயிருக்கின்றது.

சோழமன்னன் ஒருவன் ஓரிரவுக்குள் நாலு கோடி பாடல்கள் பாடவேண்டும் என்று புலவர்களிடம் கட்டளை இட்டானாம். ஓரிரவுக்குள் நாலு கோடி பாடல்கள் பாடமுடியுமா? என்று அவர்கள் நிலைகலங்கி நின்றிருக்க, அப்போது அங்கு வந்த ஔவை இதனையறிந்து, ”இதற்காகவா கலங்கி நிற்கிறீர்கள்? நான் பாடுகிறேன் நாலுகோடிப் பாடல்; இதனை உங்கள் மன்னனிடம் கொண்டுபோய்க் கொடுங்கள்!” என்று கூறிவிட்டுப் பின்வரும் பாடலைப் பாடினாராம்.

”மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும்;
 
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
 
உண்ணாமை கோடி பெறும்;
 
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
 
கூடுதல் கோடி பெறும்;
 
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
 
கோடாமை கோடி பெறும்.”
  (ஔவையார் தனிப்பாடல் – 42)

ஒவ்வோர் அடியிலும் ‘கோடி’ என்று வருமாறு அமைத்து நாலுகோடி மதிப்புள்ள செய்திகளை நாலடியில் பாடிமுடித்துவிட்ட ஔவையின் புலமையையும் சாமர்த்தியத்தையும் மற்ற புலவர்கள் வியந்து பாராட்டினராம்.

 [தொடரும்]

 துணைநின்றவை:

  1. http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012222.htm
  2. http://www.tamilsurangam.in/tamil_world/chola_history/first_rajaraja_8.html
  3. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=358

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.