Featuredஇலக்கியம்கட்டுரைகள்தொடர்கள்நெல்லைத் தமிழில் திருக்குறள்

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 13

-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 13 – அடக்கம் உடைமை

குறள் 121:

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

அடக்கம் ஒருத்தன அவங்காலத்துக்குப் பொறவு தேவர் உலகத்துல கொண்டு சேக்கும். அடங்காம வாழுதது அவனோட வாழ்க்கைய பொல்லாத இருட்டு போல ஆக்கிவிட்டுரும்.

குறள் 122:

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

அடக்கத்த செல்வமா எண்ணி காக்கணும். அதக் காட்டிலும் பெரிய செல்வம்னு வேறெதுவும் இல்ல.

குறள் 123:

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்

அறிஞ்சுக்கிடவேண்டியத அறிஞ்சுகிட்டு நல்ல வழில அடங்கி இருக்குதவங்களோட அடக்க கொணத்த நல்லவங்க உணந்து பாராட்டுவாங்க. ..

குறள் 124:

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

 

தன்னோட நேர்மையான வழிய விட்டுபோட்டு அங்ஙன இங்ஙன  விலகிப் போவாம அடக்கஒடுக்கமா வாழுதவனோட உருவம் பொறத்தியாரு மனசுக்குள்ள மலைய விட ஒசந்ததா இருக்கும்.

குறள் 125:

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

 

பணிவா இருக்குதது எல்லாருக்கும் நல்லது. அதிலயும் செல்வம் இருக்குதவங்களுக்கு அது மேப்படி சேந்த ஒரு செல்வம்.

குறள் 126:

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

ஆமை எப்டி நாலுகாலையும் ஒருதலையையும் ஓட்டுக்குள்ளார மறச்சிக்கிடுதோ அப்டி ஒருத்தன் தன்னோட அஞ்சு பொறிகளையும் நியாயத்துக்கு கேடு வரும்போது அடக்கிக்கிடுவாம்னாஅந்த கொணம் அவனுக்கு ஏழேழு பொறப்பிலயும் காவலா நிக்கும்.  

குறள் 127:

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

ஒருத்தன் எத காக்க முடியலனாலும் நாக்க மட்டுமாச்சும் காக்கணும். இல்லைன்னா அவன் சொன்ன சொல்லே அவனோட துன்பத்துக்கு காரணமாப் போயிடும்.

குறள் 128:

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

ஒருத்தன் பேசுத தீய சொல்லால வருத துன்பம் சிறிசா இருந்தாலும் அந்த கொற இருக்கவனுக்கு அவன் பேசுத மத்த நல்ல சொல்லால வருத நல்லதும் கெட்டதாவே மாறிக்கிடும்.

குறள் 129:

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

நெருப்பு சுடும்போது ஏற்படுத புண்ணால  ஒடம்புல தடம் இருக்குமே தவித்து உள்ள இருக்க புண் ஆறிக்கிடும். மனசு நோவ கடும் வார்த்தயால வையும்போது நெஞ்சுல ஏற்படுத புண் ஆறவே ஆறாது.

குறள் 130:

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

நல்லா படிச்சிபோட்டுமனசுக்குள்ள கொவமில்லாம அடக்க ஒடுக்கமா வாழுத கொணம் கொண்டவன எப்பம் அடையுததுனு அறம் நேரத்த எதிர்பாத்து அவன் வழியில காத்துக் கெடக்கும்.

______________________________________

கட்டுரையாளரைப் பற்றி

இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க