தேடல்
புலவர் இரா.முரளி கிருட்டினன்
காட்டருவி நான்
கட்டுப்பாடில்லாமல் செல்ல
அனுமதியில்லை…
வேலையில்லாதவன்
பகலைப் போல
நோயாளியின்
இரவைப்போல
நீண்டு கொண்டே இருக்கிறது
என் தேடல்…
எங்கே அறிவு
எங்கே ஆனந்தம்
எங்கே பேரானந்தம்
எங்கே மகிழ்ச்சி
எங்கே துன்பம்
அலைகடலில்ஆர்ப்பரிக்கும்
அலையைப் போல்
அயராமல் தேடுகிறேன்…
எங்கெங்கு காணினும் சக்திடா
சுப்புரத்தினம்
எங்கிருக்கிறது என் சக்தி…
கரைகளைத் தொடும் நுரைகளில்
கானம் பாடும் மூங்கிலில்
பசித்து அழும் குழந்தையில்
பகுத்தறிவு தராத கல்வியில்
எங்கிருக்கிறது என் சக்தி…
அம்மாவின் அன்பில்
காதலின் அரவணைப்பில்
தோழனின் தோள்களில்
எங்கிருக்கிறது என் சக்தி
ஆணவத்தின் அடி நாதத்தில்
அன்பின் இறுதியில்
நீரின் தாகத்தில்
நிழலின் அருமையில்
வாடைக்கு அஞ்சிய
நள்ளிரவில்
எங்கிருக்கிறது…
இரவின் தனிமையில்
பகலின் பேரிரைச்சலில்
எங்கிருக்கிறது
புலிக்கு பயந்த புள்ளிமானாய்
நிழலுக்குப் பயந்த-அந்த
நீள் இரவில்
எங்கிருக்கிறது…
என் சக்தி…..
பகலவன் அல்ல நான்
பால் நிலா தந்த
பனித்துளியை
விழுங்கிச் செல்ல…..
தேடிக்கொண்டே இருக்கிறேன்
தேடலின் எல்லைவரை
எங்கிருக்கிறது
என் சக்தி………..?
புலவர் இரா.முரளி கிருட்டினன்
உதவிப்பேராசிரியர்
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி
திருச்சிராப்பள்ளி-2