கடற்கரை காந்தி
இல்லாத பணமும்
இயலாத பரிந்துரையும்
அவமானங்களை பரிசளிக்க
தேடல் எனும் முடிவிலியில்
சோர்ந்தேனோ..? தோற்றேனோ..?
இனி தேடலாகாது எனும் முடிவில்,
தேடத் துணிந்தேன் என் முடிவை….
எப்பொழுதுதான் வருவாய்..?
என வந்து வந்து என்னை அழைத்துப்போகும்
கடலலையை கொஞ்சம் காத்திருக்கச் சொன்னேன்.
பிறந்ததை தவிர
என் தவறொன்றுமில்லை
என்ற பல தத்துவங்களோடு
என் சடலத்தில் சாய்ந்துருகும் தாய்…
என் மரணச் செய்தியில் இடிந்துரையும் தந்தை…
இவற்றை பெருங்கடல் வானத்தில்
திரையிட்டு காண்கிறேன்….
காட்சியின் நடுவே,
கனங்குறைந்த சுண்டல் பெட்டியுடன்
களைத்தோய்ந்த சிறுவனின் பிம்பம்…
என் குடலை
பிணையும் மரணபீதியை
பசி என பாவித்து
சுண்டல் சுவைக்க எண்ணினேன்…
அவனிடமிருந்து சுண்டல் பெற்று
சட்டைப்பையில் ஒட்டியிருந்த
கடைசி 10 ரூ நோட்டை நீட்ட
கல்நெஞ்சக் காற்றதைக் களவாடிச் சென்றது.
சுளித்த முகத்தோடு
சுண்டல் திருப்ப முயன்றேன்…
சிரித்த சிறுவனோ
‘ நீங்கள் கொடுத்ததைச்
சரியாக வாங்காதது என் தவறு ‘
என்று சொல்லி நகர்ந்தான்.
அவிந்த சுண்டல்
என் கண்ணீரில் மீண்டும் ஊறியது.
நான் கடந்த என் வாழ்வின் ஒவ்வொரு நொடிக்கும்
எனையே பொறுப்பேற்கச் செய்தான்.
‘வா’ என்ற கடலலையோ
என்னை வாழ வழியனுப்பி வைக்கிறது.
எழுந்து நின்று எட்டிப் பார்த்தேன்
சற்றுத் தொலைவில் அவன் –
விற்கும் சுண்டலுக்கு காற்றை எதிர்த்தே
காசு பெற்றான் கனகச்சிதமாக…
இவ்வாறு
ஒவ்வொரு விற்பனைக்கும்
காற்றுடன் அகிம்சை கொண்டாடும் அவன்
ஒரு கடற்கரை காந்திதான்