குறளின் கதிர்களாய்…(250)
-செண்பக ஜெகதீசன்
பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை யின்மைப் பழி.
-திருக்குறள் -618(ஆள்வினையுடைமை)
புதுக் கவிதையில்…
உடலுறுப்புகளில்
ஒன்றிரண்டு குறைந்தாலும்,
அதனால்
யார்க்கும் பழியில்லை..
அறியவேண்டியவற்றை
அறிந்து
முயற்சி செய்யாமலிருப்பதே
பெரும்பழியாகும்…!
குறும்பாவில்…
பழியன்று உடலுறுப்புகளின் குறை,
உற்றதறிந்து உடன்முயற்சி செய்யாமலிருத்தல்
பெரும்பழி ஆகிவிடும்…!
மரபுக் கவிதையில்…
மண்ணில் மனித வாழ்வினிலே
முற்றிலும் தேவையாம் மெய்யுறுப்புகள்
எண்ணில் ஒருசில குறைந்தாலும்
எவர்க்கு மில்லை பழியதுவே,
திண்ணமாய் அறிய வேண்டியதைத்
தெளிவா யறிந்தே செயலாற்றும்
எண்ணமே யின்றி முயலாமல்
இருப்போர்க் கதுதான் பெரும்பழியே…!
லிமரைக்கூ..
பழியில்லை உடலிலிருப்பினும் குறை,
அறியவேண்டியதறிந்து செயல்பட முயலாதவர்க்கு
அதுவேயாகிவிடும் பெரும்பழியாம் கறை…!
கிராமிய பாணியில்…
மொயற்சிவேணும் மொயற்சிவேணும்
வாழ்க்கயில சோம்பலில்லா
நல்ல மொயற்சிவேணும்..
ஒடம்புலவுள்ள உறுப்புகளுல
ஒண்ணுரெண்டு கொறஞ்சாலும்
ஒருத்தருக்கும் பழியில்ல..
அறியவேண்டியத அறிஞ்சி
அதுபடியே வேலசெய்ய
மொயற்சியேதும் செய்யாதவனுக்கு
அதுவே பெரும்பழியாவிடுமே..
அதால,
மொயற்சிவேணும் மொயற்சிவேணும்
வாழ்க்கயில சோம்பலில்லா
நல்ல மொயற்சிவேணும்…!