Featuredகவிதைகள்நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி – 206

அன்பிற்கினிய நண்பர்களே!

கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ஷாமினி எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.03.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

Print Friendly, PDF & Email
Share

Comments (3)

 1. Avatar

  தொடர்கதையாய்…

  வேலைக்காக
  வெளிநாடு சென்றவர்களின் கதைகள்,
  அடுத்தடுத்து வரும்
  அலைகளைவிட அதிகம்தான்..

  ஆனாலும்
  அவளும் சொல்கிறாள் தன்கதையை,
  தூதாகிட வேண்டுமாம்
  கடலலைகள்..

  கேட்டுக்கொண்ட கடலும்
  தலையசைத்தவிட்டு அவளுக்கு,
  திரும்பிச் செல்கிறது
  துயரத்துடன்..

  தொடர்கதையான
  தொடரும் கதைகள்,
  துடைத்துக்கொண்டது கண்ணீரை
  அலைகளில்..

  அதனால்தன்
  ஆனதோ கடல்நீர்-
  உப்பாக…!

  செண்பக ஜெகதீசன்…

 2. Avatar

  இவள் யாரோ?
   
  விரிந்து கிடைக்கும் கடல் முன்னே
  வந்து நின்ற வஞ்சி இவள் யாரோ?
   
  துள்ளி எழுந்தாடும் அலை கடல் கண்டும்
  அமைதியாய் நிற்கும் நங்கை இவள் யாரோ?
   
  வாழ்வில் தோற்றவர்கள் பலர் இங்கிருக்க
  தேர்வில் தோற்றதற்காக உன் வாழ்வை
  முடித்துக்குள்ள இங்கு வந்தாயோ?
   
  அன்னையின் அன்பின்றி அனாதைகளாய் பலர் இங்கிருக்க
  காதல் தோல்வியால் உன் உயிரை
  துறக்க இங்கு வந்தாயோ?
   
  உடன் வந்த உறவுகள் எல்லாம் விட்டுப்பிரிந்திட
  துயர் வந்து கடலாய் உனை இன்று சூழ்ந்திட
  தனித்தீவாய் ஆனாயோ?
  உன் துயரம் நீங்கிட உயிர்தனை துறந்திட
  கடல்தனை தேடி வந்தாயோ?
   
  நிலையில்லா வாழ்வில்
  வரும் துயரம் யாவும் நிலைகொள்வதில்லை
  இதுவும் கடந்து போகும்
  தொலைவில் தோன்றும் தொடுவானம் கூட
  பொய்யாய் போகும் முன்னேறி சென்றால்
  இவள் கதை அறியும் முன்னே
  அலை வந்து அழித்து சென்றதே
  இவள் பதித்த காலடித்தளங்களை
  திரும்பியவள் புதிதாய் தடங்களை பதித்திடவோ?
   
  புதிய பாதை அமைத்து புதிய சரித்திரம் படைத்திடு
  யார் நீ என்று இவ்வுலகுக்கு உணர்த்திடு
  அதுவரை
  விடை தெரியா வினாக்களால்  
  காண்பவர் மனதில் கேள்விக்குறியாய்  
  என்றும் நீ இருப்பாய்
  இவள் யாரோ?

 3. Avatar

  அலைகடலே எம் புகழ் பரப்பு
  ___________________________

  ஆழி உன்னுடன் பேச
  ஆயிரம் உண்டு எனக்கு
  அசையாமல் நின்று உன்
  அலை விளையாட்டு காண
  ஆயிரம் கண்கள் போதுமோ
  அன்றைய கவிகளின் புகழுரையால்
  ஆணவம் கொண்டு நீ
  ஆடிக்களித்ததில் சுனாமி
  அலைகளாய்ப் பெருக்கெடுத்து
  ஆருயிர் மக்களின் வாழ்வழித்தாய்
  ஆதிக்கவிகளின் காலத்திலோ
  அமுதுசெய்ய கண்டங்களை விழுங்கி
  ஆறுகளைக் குடித்து நீ
  ஆற்றிக்கொண்டாய் உன் தாகத்தை
  அலைகடலே இனி என் முடிவைக் கேள்
  அணுவளவும் புகழேன் உன்னை
  அற்புதமான எம்இந்தியப் பெண்களின்
  அளப்பில்லாச் சாதனைப் பட்டியலை
  அமைதியாய்க் கேட்டு அலைகளினால்
  அகிலமெல்லாம் பரவிடச் செய்
  அருமைச் சகோதரிகள்
  அறுவர் தாரிணியெனும் கலம் ஏறி
  ஆறு மாதம் உன்னுடன் உறவாடி
  அவனியை வலம் வந்து புரிந்தார்
  அசைக்கமுடியா உலகசாதனை
  ஆறாறு மாதங்களுக்குப்பின் மற்றொருவள்
  அழகான விண்கலம் ககன்யான்மூலம்
  அண்டவெளியை வலம்வருவாள்
  அருமையான வீரவீராங்கனைகளுள் ஒருவராய்
  அன்னையவள் கொடிதாங்கி
  அடுப்பூதிய எம் மகளிர் இன்று
  அனைத்துத் துறைகளிலும்
  அளப்பறிய சாதனைகள் படைத்து
  ஆசிரியராய் விஞ்ஞானியாய்
  ஆகாயவிமானம் ஓட்டுபவராய்
  அணு ஆராய்ச்சி முதல்
  அண்டவெளிப்பயணம் வரை
  அடுத்தடுத்து படைத்துவரும் சாதனையை
  அலுக்காமல் பரப்புவதே உன்தொழிலாய்
  அயராது செய்து நீ உள்ளளவும்
  அவளின் புகழை நிலைபெறச்செய்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க