இரமேஷ் அர்ஜூன் கவிதைகள்

1

என் வார்த்தைகளில் இருக்கும்
வன்மங்களுக்கு
ஆயுள் தண்டனை கொடுக்கிறேன்.
ஆனால்
அவை
சுதந்திர தினம்
தியாகிகள் தினம்
அந்த தினம்
இந்த தினம் என்று
சிறப்பு விடுதலைப் பிரிவில்
விடுதலை ஆகும்
கைதிகளைப் போல்
மீண்டு வந்துவிடுகின்றன
திருந்திவிட்டேன் என்னும்
போர்வையில்…

2

சாயங்கள் அற்ற
மாய வாழ்வொன்றை நோக்கி
நகர முற்படுகிறது
ஆன்மா,

சாயம் வெளுத்துப் போகாமல்
காத்துக் கொள்ள
போராடுகின்றது
மனம்,

இவற்றில்
வெற்றி தோல்வி
யாருக்கு?

யாருக்காயினும்
பெறுவது என்னவோ
நாம் தான்.

3

வறண்ட பாலையின் நீட்சி
நீளும் கானல் நீர்க்காடு
கண்கள் காணாத ஒளி
மெய் தீண்டாத தனிமை
நிலவின் தகிப்பு
இவற்றைக் கடக்க முயன்ற
இறக்கைகள் அற்ற கதிர் ஒன்று
என் இரவுகளைத் தீண்டாத
பனித்துளிக்குள்
மெல்ல தன்னைக் கரைத்துக்கொள்ள
காத்துக் கிடக்கிறது

4

உச்சிப் பொழுதின்
உக்கிரத்தை
எளிதில் கடந்துபோன மனம்
மனவெளியில் தேகம் குடித்து
சிலிர்ப்பைக் கடக்க முடியா
உக்கிரம்
நெருப்பைக் கடந்து
உறைபனியில்
உயிர் வேகும் சுகம் தேடி
தோற்றுப் போகிறது சவம்.

5

பனி மழையின் திரை கடந்து
நிலவின்
ஒளி கொள்ளும் இரவு

இருண்மையின் வெறுமை கண்டு
காரிருள் கிழித்து
ஒலி கொண்டது கூகை

நிசப்த அலைவரிசையில் நீந்தி
இரவைக் கடக்கும்
சில்வண்டினங்கள்

இரவின் இருண்மை
பேரழகு என்பதாய்க்
காட்டிக் கொண்டிருக்கின்றது
கனவுகளைக் கடன் கொடுக்கும்
ஒளியற்ற கலைமண்டபம்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க