கனம் கோர்ட்டார் அவர்களே! – 4
இன்னம்பூரான்
ஏதாவது ஏடாகூடமாக நடந்து விட்டால், மழுப்ப நினைக்கும் அரசியலர், ‘சட்டம் தன் வேலையைச் செய்யும்.’ என்பர். அப்படி நடக்காததைக் கண்டு மனம் வெதும்புவோர் ‘சட்டம் ஒரு கழுதை’ என்பர். வழக்கறிஞர்கள் இரு தரப்பிலும் இருப்பதால், அவர்களின் கூற்றை முழுதும் நம்புவதற்கில்லை. நீதி சட்டதிட்ட வட்டாரங்களைத் தாண்டி, நேர்மை, நியதி, வாய்மை, நியாயம், தர்மம் என்ற அலை வரிசைகளில் இயங்க வேண்டும். அது ஏன் சட்டத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறது? நீதித்துறை அப்பழுக்கு இல்லாமல் இயங்க முடியுமா?
அண்மையில் வச்சேத்தி என்ற பழங்குடி குக்கிராமத்தில் அதிகாரவர்க்கம் 19 வருடங்களுக்கு முன் நடத்திய மயான பேயாட்டத்தை விசாரித்து நீதித்துறையின் முதல் நிலை தீர்வு சில நாட்களுக்கு முன் வந்தது. அதை மையமாக வைத்து, நீதித்துறை அப்பழுக்கு இல்லாமல் இயங்க முடியுமா என்ற வினாவுக்கு விடை காண நினைத்தபோது, மாண்புமிகு (முதலில் அதையெல்லாம் உதறணும்.) சட்ட அமைச்சர் சால்மன் குர்ஷீத் தடாலடியாக ஒரு கரணம் அடித்ததாக ஒரு ஊடகச் செய்தி. 2ஜி புகழ் கோயங்காவின் வக்கீலையாவும் அதை ஊர்ஜிதம் செய்கிறார். ‘என்னது அது? பெரும் தொழிலதிபர்கள்/வணிக பிரபு ஜனம் போன்ற உயர்குடியை சிறைப்படுத்தினால், தொழிலும், வணிகமும் பாதிக்கப்படாதா என்று அங்கலாய்த்தாராம். மக்களின் பிரதிநிதியாக, அரசாங்கத்தின் சட்டத்தின் காப்பாளராக விளங்கும் மனிதரொருவர்! அவர் துல்லியமாக எந்தச் சொல்லை எந்தப் பொருளில் பயன்படுத்தினார் என்பது பொருட்டல்ல, இங்கு. அவரின் கூற்றாக ஊடகங்கள் சொன்னது மறுக்கப்படவில்லை, கோர்ட்டின் முன்னிலையில் கூட.
ஏதோ இந்த பாரதவர்ஷம் செய்த புண்ணியத்தில், அரசு வக்கீல், எஜமானருக்கு வக்காலத்து வாங்கவில்லை; ‘பெரும் தொழிலதிபர்கள்/வணிக பிரபு ஜனம் போன்ற உயர்குடியை சிறைபடுத்தினால், தொழிலும், வணிகமும் பாதிக்கப்படாதா? ‘ என்றெல்லாம் கவலைப்படாமல், அந்தக் குறிப்பிட்ட வழக்கில் ஜாமீன்’ மனு எதிர்க்கப்படும் என்றார். நீதிபதிகள், மேற்படி சட்ட அமைச்சர் கூற்றை ஆக்ஷேபித்து, ‘சட்டத்தின் முன் யாராயிருந்தாலும், விதி விலக்கு, பாரபக்ஷம் கிடையாது என்று உறுதிப்படுத்தி, ஒரு ஆணிவேர் சாத்திரமும் -’நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நாங்கள் நீதி பரிபாலனம் செய்வோம்.’ என்றனர்.
சட்ட அமைச்சர் விடுவதாக இல்லை. அக்டோபர் 12 அன்று வியப்புக்குரிய வகையில் பல பொருத்தமில்லாத விஷயங்களை ஒன்று கூட்டி, அதிசயமான வினா ஒன்றை எழுப்பினார், ‘நம்மைப்போல் பொருளியல் விவகாரங்களின் மேல், உச்ச நீதி மன்றம் ஈடுபாடு காட்டுகிறதா?’ என்று. எழுப்பியதை மழுப்ப நேரிடுமோ என்னவோ?
இத்தருணம் விளக்கப்படும் சில சந்தேகங்கள்:
நாடாளுமன்றம் இயற்றும் சட்டம் (சான்றாக: Prevention of Corruption Act) அடைத்தளம்; அது முழுமையான சட்டம் இல்லை. அரசு நிர்வாகம் சட்டங்களை நடத்த/பராமரிக்க விதிகள் (ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ்) இயற்றும். அதற்கு சபார்டினேட் லெஜிஸ்லேஷன் என்று பெயர். அடித்தள சட்டத்திற்கு உள்ள மதிப்பு இவற்றிற்குக் கிடையாது.கனம் கோர்ட்டாரால் வழங்கப்படும் தீர்வுகள் அடித்தளசட்டத்திற்கு முழுமை அளிக்கின்றன. தீர்வுகள் அளிக்கும்போது, இரு தரப்பு வக்கீல்களும், இதற்கு முன் வந்த தீர்வுகளின் கருவை எடுத்துக் கூறுவர். அவற்றில் பொருத்தமானவற்றை அலசி, தற்போதைய தீர்வின் பின்னணி, நியாயங்கள், சட்டம், அதன் நிறை,குறை எல்லாவற்றையும் விலாவரியாக விளக்கி, நீதிபதிகள் தீர்வு அளிப்பர். அதனால் தான் அவை நீண்டதாக அமைந்து விடுகின்றன.
இதையெல்லாம் கண்டும் கண்டுகொள்ளாதவரா, சட்ட அமைச்சர்?இந்தத் தொடர் அவ்வப்பொழுது பஞ்சு மிட்டாய் ஆனாலும், விழிப்புணர்ச்சி ஏற்படுத்த விழைகிறது. எனவே, உங்கள் சந்தேகங்களை தாராளமாகக் கேட்கலாம். மதுரை உயர்நீதி மன்றக்கிளை தொடங்கியபோது மக்களின் முன் வைக்கப்பட்ட சில விஷயங்கள் சந்தேக நிவாரணத்துக்கு உதவலாம். அது சரி. முதலில் கேள்விகள் வருகிறதா என்று பார்க்கலாம். அழுத பிள்ளை தானே பால் குடிக்கும்?
(தொடரும்)
ஒரு கோர்ட் ஜோக்: இதுவும் நிஜம். வெள்ளைக்காரன் வந்த புதிசிலே, சில ஜட்ஜ்கள் கொஞ்சம் தடாலடி. ஒருவர் தன்னுடைய நாயை வைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டு இருப்பார். நம்மூர் வக்கீல்களில் சிலர் அதற்கு மேல் தடாலடி. யாரையும் தூக்கி எறிந்து பேசி விடுவார்கள். திரு. ஸ்ரீனிவாச ஐயங்கார் என்று ஞாபகம். வாதாடிக் கொண்டே இருந்தவர் ‘சட்’ என்று நின்று விட்டார்.
ஜ: ஏன்? தொடருக.
ஸ்ரீ: இல்லை. மன்னிக்கணும். ‘மாண்பு மிகு’ இருவரும் கலந்தாலோசிக்கறமாதிரி இருந்தது. அதான்…..(அட! நாயே!)
********************