வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்
பவள சங்கரி
அவதானமின்மையால் ஏற்பட்ட அவதி! கொஞ்சும் மழலையின் அகால மரணம்!
இன்றைய அவசர உலகில் கவனமின்மையால் ஏற்படும் அழிவுகள் ஏராளம். எத்தனையோ இது போன்று அழிவுகளை நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருந்தாலும், ஒரு தாயின் கவனமின்மையால் தன் செல்லக் குழந்தையை தன் கையாலேயே கொல்ல வேண்டிய நெஞ்சம் பதைக்கச் செய்யும் துர்பாக்கிய நிலை நேற்று அரங்கேறியுள்ளது. பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையின் உயிர் தன் கவனமின்மையால், தன் கையாலேயே போவது போன்ற ஒரு கொடுமை கனவிலும் நினைக்க முடியாத ஒன்று.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே இந்தக் கொடுமை நடந்துள்ளது. சேகர், நந்தினி தம்பதியினரின் செல்ல மகள் ஜெயவர்ஷனி. ஒரு வயது பச்சிளம் மழலை. குழந்தைக்கு இரத்தக்கடுப்பு நோய் கண்டதனால்திருச்செங்கோடு அருகே ஒரு தனியார் மருத்துவ மனையில் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். சேகரின் தாய், குழந்தையின் பாட்டி பழனியம்மாள், குழந்தைக்கு ஓமத்தண்ணீர் [ இது மளிகைக் கடைகளிலேயே விற்பார்கள்] கொடுத்தால் குழந்தைக்கு வயிறு சரியாகிவிடும் என்று கூற அங்கு ஆரம்பித்திருக்கிறது கெட்ட நேரம் குழந்தைக்கு!
சடையம்புதூர் என்னும் ஊரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சென்று சேகர் ஓமத்தண்ணீர் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். கடைக்காரரோ,ஒரு மஞ்சள் நிற திரவ புட்டியை எடுத்துக் கொடுத்திருக்கிறார். கொடுத்தவரும் அது ஓமத்தண்ணீர்தானா என்று கவனத்துடன் பார்த்துக் கொடுக்கவில்லை, வாங்கியவரும் அது என்ன புட்டி என்று சோதித்து வாங்கவில்லை. மனைவி நந்தினியிடம் கொண்டுவந்து கொடுக்க அவரும் அது என்ன திரவம் என்று எந்த கவனமும் கொள்ளாமல், அந்த பச்சிளங்குழவிக்கு வாயில் ஊற்றியிருக்கிறார். ஊற்றிய சற்று நேரத்திற்கெல்லாம், குழந்தை வாய் ஓயாமல் அலற சந்தேகம் வந்த குழந்தையின் தாத்தா, அந்தப் புட்டியைத் திறந்து ஒரு சொட்டு எடுத்து நாக்கில் வைத்துப் பார்த்தப் பின்புதான் தெரிந்திருக்கிறது, அது கழிவறை சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும், அமிலம்தான் அந்த புட்டியில் இருந்தது என்ற அதிர்ச்சி தரும் செய்திதான் புரிந்தது.ஆயினும்காலம் கடந்த ஞானத்தால் பயன் ஒன்றும் இல்லாமல் போனது! ஆம் துள்ளத் துள்ள அந்த துள்ளும் மழலை உயிரைப்பறி கொடுத்தது. கடைக்காரர் கைது செய்யப்பட்டாலும், இது யாருடைய கவனக் குறைவு? யாருக்கு இருக்க வேண்டும் அதிக பொறுப்பு? தாய்மையின் வேதனையைப் போக்குவது எப்படி?
அடுத்து மற்றுமொரு அவதானமின்மை, தங்கத்தின் விலை கிடுகிடுவென மலையளவு உயர்ந்து கொண்டே போக , பெண்கள் அணியும் தாலிக் கொடி கூட பெரும் பாரமாகி கழுத்தறுபட்டுப் போகிறது. ஆம், கரூரின் அருகே ஆலமரத்துப்பட்டி என்னும் ஊரில், கவிதா என்ற பெண்மணி தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுத்த பாவத்திற்கு உயிரை விட்டிருக்கிறார். வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் வந்து வாலிபர் ஒருவர் தண்ணீர் மிகவும் தாகமாக இருப்பதாகக் கேட்கவும், பரிதாபப்பட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சென்றவரின் பின்னாலேயேச் சென்று கத்தியை எடுத்து அவர் கழுத்தை வெட்டி ஆறு பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்றிருக்கிறான் அந்த கயவன். ஆக அவதானம் இல்லையென்றால் உயிரை பறி கொடுக்க வேண்டிய நிலைதான் இன்று இருக்கிறது!
முதலாவதாக, பொது மக்களுக்கு மருத்துவம் மற்றும் மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு தேவை. இதைப் பற்றி நமது சமூக சேவைச் சங்கங்கள் மற்றும் காவல் துறையினரும், அரசாங்கமும் இணைந்து இதற்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இனி ஒரு சம்பவம் இது போன்று நிகழாமல் காக்க முடியும்!