“மதிப்பான தாலி மணமான பெண்களுக்கு பெருமைதான் “

0

சித்திரை சிங்கர்

நாம் தினமும் பார்க்கும் தொலைக்காட்சிகளில் செய்தி அறிவிப்பவராக இருக்கட்டும். இல்லை நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குபவராக இருக்கட்டும். மணமானவர்கள் என்றால், அவர்கள் தங்களது தாலியினை மறைப்பதில் காட்டும் அக்கறை எதற்காக என்று புரியவில்லை. இந்தியாவின் திருமண வாழ்க்கை வெளிநாடுகளில் இன்னமும் பிரமாதமாக பேசப்படுகிறது, அவர்களினால் விரும்பப்படுகிறது என்றால் அதற்கு நமது நாட்டின் திருமணச் சடங்குகள் அதனை ஒட்டிய இந்த தாலி கட்டி வாழும் குடும்ப வாழ்க்கைதான். உன் குழந்தையும் என் குழந்தையும் நம் குழந்தையுடன் விளையாடுகிறது என்ற வசனங்களை அதிகமாக கேட்கும் மேலை நாடுகளில், நமது இந்தியாவின் பெருமை இன்னமும் மறையாமல் இருக்கிறது என்றால் அது நமது நாட்டு திருமணக் கலாச்சாரம் வெளி நாடுகளிலும் இன்று வரை போற்றப்படுகிறது என்பதால்தான்.

இப்போது வர வர வெளிநாடுகளில் இந்தியரைக் காதலிக்கும் ஜோடிகள் கூட, இங்கே இந்தியாவுக்கே வந்து நமது இந்திய கலாச்சாரப்படி அதிலும், நமது தமிழகத்தில் வந்து தமிழ் நாட்டு முறைப்படி சாஸ்திரீய சம்பிரதாயங்கள் ஒன்றையும் விடாமல். முறைப்படி காஞ்சி பட்டுப்புடவையுடன்,  பட்டு வேட்டியுடன் – தாலியும் கட்டி திருமணம் செய்துகொள்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெருகிக் கொண்டிருக்கிரர்கள் என்பதை நாம் பத்திரிக்கைகளின் வாயிலாக உணர்கிறோம். நமது நாடு திருமண சம்பிரதாயத்தில் “தாலி”யின் மகிமை வெளிநாடுகளில் உள்ளவர்களுக்குத் தெரிந்த அளவிற்கு உள்நாட்டில் உள்ளவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. திருமண பந்தத்தில் ஒரு அங்கம் தாலி என்று உணரலாமே. தாலி கட்டி பெண்களை அடிமையாகவா நடத்துகிறார்கள்..?

பெரும்பாலான கணவர்கள் திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சை மீறி நடப்பதே இல்லை என்பதுதான் நடைமுறையில் உள்ள உண்மை. தாலி என்பது பெண்களுக்குக் கண்டிப்பாக வேலி இல்லை. ஒரு பாதுகாப்புக் கவசம்தான். மணமான பெண் என்றால் ஒரு மரியாதை தானாகவே கிடைக்கும் என்பது நிஜமான உண்மை. (ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம்). சில பெண்கள் ஆண்களுக்கு பெண்கள் அடிமை என்பதற்கான சின்னம்தான் தாலி என்று வாதிடுவது அவர்களின் அறியாமையையும் சுயலாபத்தையும் முன்னிறுத்தத்தான் என்பதுதான் உண்மை.  மணமானவர்கள் என்றால் ஒரு மரியாதையும் மதிப்பும் அவர்களைக் காண்பவர்களுக்குத் தோன்றும். அத்தகு மதிப்பையும் மரியாதையையும் தருகின்ற “தாலி”க்கு உரிய மரியாதையினை மணமான பெண்கள் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்.

தாலியை மறைத்து சில பெண்கள் போடும் வேஷம் அவர்களுக்கு பல நேரங்களில் தேவையில்லாத சிக்கல்களைக் கொண்டு வருகிறது என்பதுதான் நடைமுறையில் உள்ள உண்மை. எனவே என்னினிய சகோதரிகளே, மணமான பெண்களுக்கு தாலி ஒரு சுகமான சுமைதானே தவிர கடுமையான பாரம் அல்ல…! வெளியிடங்களில் வேலைக்கு வரும்போதும் சரி…. கடைத்தெருவுக்கு ஷாப்பிங் வந்தாலும் சரி…. படம் பார்க்க திரையரங்குகளுக்கு வந்தாலும் சரி……தாலியை மறைத்து வரும் நிலையினை மாற்றுங்கள். மன நிறைவோடு மகிழுங்கள்.

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *