ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 8

1

அண்ணாமலை சுகுமாரன்

வீட்டு நெறிப் பால்

அதிகாரம் 2 – உடம்பின் பயன்

சிறிய இடைவெளி இந்தத் தொடரில் விழுந்து விட்டதால், சிறியதொரு முகவுரையுடனேயே மீண்டும் ஆரம்பிப்பதே உசிதம் என நினைக்கிறேன்.

சற்று ஆழச் சிந்தித்துப் பார்க்கும் போதே, நாம் வாழும் இந்தப் பிரம்மாண்டப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான மனித உடலைக் கொண்டு நாம் வாழும் வாழ்க்கை என்பதன் பொருள்தான் என்ன ? என்ற எண்ணம் மேலிடுகிறது.

வாழும் வாழ்வின் உண்மையான, முழுமையான நோக்கம்தான் என்ன? தேடிச் சோறு நிதம் தின்று, வேடிக்கைக் கதைகள் பேசி வாழ்ந்து மடிவது மட்டும் தானா?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனித குலம் மேற் கொண்டு வந்த உழைப்பு, தவம், ஈடுபாடு, அனுபவம்,  அவற்றால் பெற்றுத் தொகுத்து வந்த பாரம்பரிய அறிவு, இவற்றால் உருவான மனிதப் பாரம்பரியத்தின் தத்துவம், சமயம் சமுதாயம், நீதி, கலை, பொருளாதாரம், அரசியல், பொருளாதாரம் இவை அத்தனையுமே இன்று பழமையாகப் பலருக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது.அத்தனையும் சந்தேகத்திற்க்குரியவையாக,கேள்விக்குகந்ததாக மாறி விட்டது. அத்வைத, துவைத்த தத்துவ விசாரங்கள் என்பவை பொழுது போகாத சோம்பேறிகளின் வேலையற்றவர்களின் பொழுது போக்கு என்று பலராலும் இப்போதெல்லாம் எண்ணப்படுகிறது. ஆன்மீகத்திலும் நடைமுறை வாழ்க்கையிலும் இருந்த இணைப்பு விடுபட்டுப் போய் விட்டது .

ஆன்மிகம் என்பதும் நடைமுறை வாழ்வு என்பதும் வேறுவேறு என்ற எண்ணம் ஆழப் பதிந்து விட்டது. சமயம் பக்தி என்பவை குழந்தைத் தனமான மூட நம்பிக்கை, நீதி சத்தியம் என்பவை சக்தியற்றவர்களின் சொந்தம், அமைதி ,பொறுமை அடக்கம் இவைகள் பலஹீனங்களின் அடையாளம், விசுவாசம் ,கவுரவம் இவைகள் அடிமைத் தனத்தின் மீதங்கள், இவை போன்ற கருத்துக்களே இன்று பெரும்பாலோரின் நம்பிக்கையாக அமைந்து விட்டது

விஞ்ஞானம் சுகம், போகம், சாதனை, சௌகரியம் இவை அத்தனையையும் இப்போதைய வாழ்வில் எளிதாகப் பெற்றுத் தருகிறது. விஞ்ஞானத்தில் செல்வாக்கு தனி மனித வாழ்க்கையில், சமுதாயத்தில், குடும்ப அமைப்பில் ஊடுருவி அங்கே கற்பனைக்கு மிஞ்சிய புரட்சியை ஏற்படுத்தி விட்டது .

பாரம்பரியமாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வந்த சம்பிரதாய எல்லைகளை மீறும் தைரியத்தை விஞ்ஞானம் இப்போது வழங்குகிறது. தெய்வம், நீதி, தர்மம் ஆகிய விலங்குகளில் இருந்து விடுதலை பெற்று, தந்தை, தாய், சமூகம், உறவு, சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளை மேம்போக்கு உணர்வாக மாற்றி விட்டது.

இன்று அன்பினால் உண்டாகும் பிணைப்பு அற்றுப் போய் விட்டது. பொருளாதாரமே உறவுகளின் மேம்பாட்டை நிர்ணயிக்கின்றது. முதியோர் இல்லங்கள் ஒரு அத்தியாவசிய அங்கமாக சமுதாயத்தில் இடம் பெற்று விட்டது.

இன்றைய விஞ்ஞானம் மனித குலத்திற்கு மிகுதியாக சௌகரியத்தை தந்திருக்கிறது. சுகங்களை போகங்களை வீட்டு வாசலிலேயே குவிக்கிறது.  உண்ணவும், புலன்வழி இன்பத்தை அனுபவிக்கவும் வழிகளை அள்ளி இறைக்கிறது.  உடல் உழைப்பைக் குறைக்கிறது, உடல் கெட்டால் மருந்து, மனம் கெட்டால் அதற்கொரு மருத்துவமனை என அத்தனையும் எளிதில் வழங்குகிறது.

இத்தனையும் பெற்றாலும், இத்தகைய நாகரீகத்தின் உச்சத்தை அடைந்த பின்னும் மனிதன் நித்தமும் சுகமாக நிரந்தரமாக இருக்கிறானா? தேடும் அத்தனையும் கிடைத்த பின்னும் சாந்தமும் சந்தோஷமும் அவனுள் நிரந்தரமாக இருக்கிறதா ?

எதையும் நுணுக்கி ஆயும் அறிவு வளர்ந்து விட்டாலும், அனைத்தையும் அறிந்து விட்டதாக அவனால் கூற முடிகிறதா? செய்யும் சாதனைகள் நிரந்தரத் திருப்தியை அளிக்கிறதா?. ஏன் அடுத்தடுத்து மாறி மாறி வேறு வேறு சுகங்கள் தேடிஅலைகிறான்? பின், தன் மணத்தையேத் தேடி காடெங்கும் அலையும் கஸ்தூரி மான் போல் சுற்றி அலைந்து, பின் இறுதியில் தன்னுள்ளேயே தான் தேடும் மணம் இருப்பது உணரும் மான் போல், தானும் தன்னுள்ளே நோக்கத் தொடங்குகின்றான்.

அத்தனையும் முயன்று தீர்த்த பின் மீண்டும் முன்னமே சேர்த்து வைத்த முன்னோரின் அறிவின் தொகுப்பில், தான் தேடும் விடை இராதா என மீண்டும் நோக்குகிறான். வளர்ந்து வீங்கிப்போன மனதின் இம்சை தாளாமல், வேறு வழியின்றி மனதின் மூலமே மார்க்கம் கிட்டாதா? என ஆராயத் தொடங்குகிறான் .

உத்தமமான யோக சாஸ்திரங்கள் தரும் உறுதியான வழிகள் அறிவின் உச்சம் அடையும் போது தெளிவாகப் புரியத் தொடங்குகிறது . அத்தகைய ஞான அறிவை எளிய வழிகளை சுருக்கமாகச் சுருக்கிக், குறளின் குறுக்கத்திலே, கூறிடும் ஞான நூலில் சிறந்த பல நூல்களில் ஒன்று ஔவையின் குறள் .

மனத்தை அறியும் கருவியாகக் கொண்டு, அதன் தன்மைகளையும், மேன்மைகளையும் அறிந்துகொண்டு, வாழ்வின் குறிக்கோளை எய்துவது எப்படி, உடலின் பயன் என்ன, குறிக்கோள் என்ன,  வாசியோகநிலை,  போன்றவற்றை தத்துவ விசாரம் எனும் முறையில், மிக எளிய முறையில் ஔவையின் ஞானக்குறள் படிப்படியாக விளக்குகிறது .

கூடவே பயணித்துத் துய்க்க வருமாறு வேண்டுகிறேன். உங்களுடனேயே சேர்ந்து யானும் பயிலக் கிட்டிய ஒரு வாய்ப்பாகவே இதை எண்ணுகிறேன் .

இனி அடுத்த அதிகாரத்தின் முதல் குறள், எடுத்த எடுப்பிலேயே சட்டென ‘உடலின் பயன் என்ன?’  என எளிதில் கூறுகிறது. தெரிந்த ஒன்றுதானே என எண்ண வேண்டாம். இந்த உண்மை உடலில் ஊறித் திளைக்க வேண்டும்.

உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம்

உடம்பினில் உத்தமனைக் காண.

(சொற்கள் அத்தனையும் இன்றும் உபயோகத்தில் உள்ள எளிய சொற்களே ,எனவே பதவுரை தேவை இல்லை என நினைக்கிறேன்)

உலகத்தில் இருக்கும் அனைத்துப் படைப்புகளிலும் மிகச் சிறந்த வடிவமைப்புக் கொண்ட, ஒன்றைப் போல் ஒன்றில்லாத, ஒவ்வொன்றும் தனித்திறன் வாய்ந்த, மாறுதல் என்பது தேவைப்படாத ஒரு முழுமையான உயர்தரப் படைப்பு என்றால் அது நமது மனித உடலைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் .?

தனக்குவமை இல்லாதானின் உயரியப் படைப்பு, ஒப்பற்றதாக மட்டும்தானே இருக்க முடியும் ? ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய முழுத்தகவல்களும் இன்னமும் ஆராயப்பட்டு தான் வருகின்றது. இன்னமும் அதைப்பற்றிய முழுத் தகவல்களும், பயன்பாடும் அறிந்ததாகக் கூற முடியாது.

மனித முகத்தில் மட்டும் 14 எலும்புகள் உள்ளனவாம், ஆனாலும் ஒருமுகம்போல் மறுமுகம் இருப்பதில்லையாம். எலும்புகளிலும், பற்களிலும் இரத்தத்திலும் கால்சியம் இருக்கிறது. நரம்புகளிலும், எலும்புகளிலும் பாஸ்பரஸ் உள்ளது. சிவப்பு இரத்த அணுக்களில் இரும்பும், சதைகளில் கந்தகமும், கல்லீரலிலும் இருதயத்திலும் தாமிரமும் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். ஆயினும் சுவை அறிந்து சாப்பிடத்தான் மனிதனிடம் நேரமில்லை. அத்தனை அவசரம். ஆனால் செய்யப் போகும் காரியம் தான் என்னவென்று தெரிவதில்லை. எதை நோக்கிப் போகிறோம் என்றும் புரிவதில்லை .

‘உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு சில வாட்டுகள் இருக்கலாம்’ எனப்படுகிறது. அங்கே மின்வெட்டு வந்தால்தான்,  நோய்என்பது வருகிறதாம்.

மனித உடலில் நைட்ரஜன் 10 சதவீதமும், ஹைட்ரஜன் 3 சதவிகிதமும், பிராண வாயு 65 சதவிகிதமும், சுண்ணாம்பு 1.5 சதவிகிதமும், கரி 18 சதவிகிதமும், பாஸ்பரம் 1 சதவிகிதமும், பொட்டாசியம் 0.25 சதவிகிதம், குளோரின் 0.15 சதவிகிதமும், சோடியம் 0.9 சதவிகிதமும், மக்னீஷியம் 0.25 சதவிகிதமும், இரும்பு 0.0004 சதவிகிதமும், அயோடின் 0.00004 சதவிகிதமும் அடங்கியுள்ளது என ஏராளத் தகவல் இணையத்தில் பட்டியலிடப் படுகிறது.

உடலில் தசைகள் 42 சதவிகிதமும், எலும்புக்கூடு 16 சதவிகிதமும், தோல் 7 சதவிகிதமும், கொழுப்பு 19 சதவிகிதமும், மூளை 2 சதவிகிதமும், எடையளவு கொண்டதாம் .இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம். அத்துணை சீர்மை பெருமை கொண்ட அரிய படைப்பு நமது உடல் .

உடம்பினுள் 96  தத்துவங்கள் இயங்குவதாக சித்தர்கள் அறிவியல் கூறுகிறது. இத்தனை மேன்மை பொருந்திய படைப்பின் பயன்தான் என்ன? ‘புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய் எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?’ என்று புலம்புவதுதான் வாழ்வா ?

இத்தகைய உயர் வடிவம் பெற்றதின் பயன் உடம்பினுள்ளே இருக்கும் உத்தமனைக் காண்பதுதான். அந்த உத்தமனின் இருப்பை உணர்வதுதான். திருமூலர் சொன்னது போல்,

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்

றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

எனவே இவ்வுடம்பினை அடைந்ததின் பயனே, உடம்பினுள் இருக்கும் உத்தமனை காண்பதுவே, நம் அனைவர் உடம்பிலும் இறைவன் இருக்கிறார், ஆனால் நாம் அனைவரும் இறைவன் அல்ல. மனிதனில் இருந்து தேவனாகும் முயற்சியே இவ்வாழ்க்கை.

இனி அடுத்த குறளை, அடுத்த பகுதியில் பார்ப்போம்.

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 8

  1. காலம் தாழ்ந்து வந்தாலும், சிந்தனைகள், அணி வகுத்து, வருகின்றன, கட்டுரையில். வரவேற்கிறேன். ஆன்மிகமும் வாழ்வியலும் ( அன்றாட நடை முறை அதில் உள்ளடக்கம்.) ஒரு ரசவாத கலவை. மனமும், உடலும் ஒன்றையொன்று அண்டி பிழைக்கின்றன. தனித்து விடப்பட்டால் அவை மரிச்சுப்போகும். திருமூலர் என்றோ அதை உணர்த்தும் போது, யான் கூறத் துணிந்த ரசவாத கலவையை, போற்றுகிறார் என்று நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *