(Peer Reviewed) மக்கட் பெயர்

முனைவர் ஜெ. அரங்கராஜ்,
ஆகோள் ஆய்வு மையம்,
யாழ்ப்பாணம்.
மக்கட் பெயர்
I
மக்கள் தங்களை அழைப்பதற்கும் ஒருவரிடமிருந்து ஒருவரை வேறுபடுத்தி அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் பெயர்களை இடுவராயினர். இவ்வாறு தங்களை அழைக்கப்படுதலுக்கான சொல்லைப் பெயர் எனச் சுட்டினர். ஒருவரிடம் பெயர் கேட்டலையும் பெயர் கூறலையும்,
“தன்பெயர் கிளக்குங் காலை யென்பெயர்
பேதைச் சோழ னென்னுஞ் சிறந்த கருமை” (புறம். 216:8-9)
என்னும் புறநானூற்று அடிகளின் வழியறியலாம்.
பெயர், பேர் என்னும் சொற்களில் எச்சொல் முதன்மையானது, மூலமானது என்னும் ஐயப்பாடுகளும் உண்டு. பெயர் எனும் சொல் பெயரியல், பெயர்ச் சொல் என்று தொல்காப்பியத்திலேயே வழங்குவதால் பெயர் என்பதுவே மூலச் சொல் என்றும் பேர் என்பது அதன் மரூஉ என்றும், சிலர் கருதுவர். பேர் எனும் சொல் மக்கள் வழக்கு. அச்சொல்லே பிறகு பெயர் எனச் செம்மை பெற்றது என்பதுவும் ஒரு கருத்து. பெயர், பேர் எனும் இரு சொற்களும் ஒரே பாடலில் பயின்றுள்ளமையைப் பின்வரும் புறப்பாடல் அடிகளால் அறியலாம்.
“எந்நாடோ வென நாடுஞ் சொல்லான்
யாரீ ரோவெனப் பேருஞ் சொல்லான்
பிறர்பிறர் கூற வாழிக்கேட் டிசினே
இரும்பு புனைந் தியற்றாப் பெருபெயர்த் தோட்டி” (புறம்.150:22-25)
பெயர், பேர் ஆகியவற்றின் மூலத்தினை ஆராயும் பொழுது தொல்காப்பிய விதிகளை ஒப்புநோக்க வேண்டியதாகின்றது.
“குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின்
தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல”
(தொல். எழுத்து. மொழிமரபு – 50)
ஒரு சொல்லில் இரண்டு குறில்கள் இணைந்து வரும்போது ஒரு குறில் மறைந்து மொழிமுதற் குறில் நெடிலாக மாறும் எனும் மேற்கண்ட சூத்திர விதியினை ஒட்டி, ‘பெயர்’ எனும் சொல்லில் உள்ள யகரம் கெட்டு ‘பெ’கரம் ‘பே’கார மாயிற்று. இதற்குச் சான்றாகத் தொகுப்பு – தோப்பு எனவும், முகடு – மோடு எனவும் வழங்குதலைக் கொள்ளலாம். இதன்வழிப் பெயர் எனும் சொல், பேர் என அமைந்தமையை அறியலாம்.
இவ்விரு சொற்களும் பெயர் ஒப்புடனே பல்வேறு பொருள்களில் சங்க இலக்கியத்திலும் இக்கால வழக்கிலும் வழங்குதலினைக் காணலாம். பெயர்தல் என்பது ஓர் இடத்திலிருந்து பிறிதோரிடத்திற்கு மாறுதலைக் குறிக்கும் பொருளில் வழங்குதலை
“புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு” (அகம்.113:25)
எனும் அகப்பாட்டு அடியால் அறியலாம். பேர் எனும் சொல் பேர் தருதல் என ஓர் இடத்தினை விட்டுப் பிறிதோர் இடத்திற்குச் செல்லுதலைச் சுட்டும்.
“கருங்கட் பன்றியின் நடுங்காது துறந்து
நாம அருந்துறைப் பேர்தந் தியாமத்
தீங்கும் வருபவோ ஒக்கல் வெற்பா” (அகம்.18:16-8)
பேர்தந்து எனும் சொல் பேர்ந்து (பெயர்ந்து) எனும் பொருளுடையது. பேர்ந்து – பேந்து என யாழ்ப்பாண வழக்கில் வடிவுற்று அடுத்து எனும் இடமாற்றப் பொருளில் வழங்குகின்றது.
“தீர்த்தத் துறைபடிவே னென்றவனைப் பேர்த்திங்கன்
மீட்டுத் தருவா யென வொன்றன் மேலிட்டும்” (சிலம்பு. 9:38-39)
எனும் அடிகளில் பேர்ந்து வழங்குதலினை அறியலாம்.
ஒரு பெயர் என்பது அப்பெயரையுடைய மனிதனை மட்டும் சுட்டுவதன்று; அவனது புகழ், பண்பு, ஆளுமை, ஒழுக்கம், செயல், சிந்தனை, மரபு முதலான அவனைச் சார்ந்த அனைத்தினையும் சுட்டுவது. ‘வள்ளலார்’ ‘ஆறுமுக நாவலர்’ எனும் பெயர்களின்வழி இதனை நாம் உணரலாம். அவர்களது சிறப்பால் அவர்களது பெயர் நிலைபெற்ற புகழினை அடைந்ததனை அறிந்தே, பெயர் எனும் சொல் புகழ் எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. தம்முடைய புகழை நிறுவாதவர்கள் தம்மொடு தமது பெயரையும் மாய்த்துக்கொள்வார்கள் என்பதினை,
”தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்” (மலைபடு-553)
எனும் அடியின் வழியறியலாம்.
புகழினைத் தாங்கி நிற்பது பெயரே. அதனாலேயே பெயரினைப் பெரிதும் போற்றினர். இதனை,
“நல்வழிக் கொடுத்த நானுடை மறவர்
செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட
கல்லேசு கவலை யெண்ணுமிகப் பலவே” (மலைபடு:387-389)
புகழோடு சேர்ந்த பெயர் எனச் சுட்டப்பட்டது போலப் பெயரே புகழ் எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளமையினையும் சங்க இலக்கியங்களில் காணலாம்.
“விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப்பூட்
கரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்
ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச் சென்றுணீஇயர்
உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தன னாகலின்” (புறம்.174:17-20)
இன்றும் வழக்கில் ஒருவரை நோக்கி ‘உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கு நல்ல பேர் உள்ளது’ என்பதன்வழிப் பேர் என்னும் சொல் புகழ் எனும் பொருண்மையில் அமைவதனைக் காணலாம்.
மக்கள் மாத்திரமல்லாமல் நகரங்களும் தங்கள் சிறப்பால் பெரும்பெயர் பெற்றன.
“பொலம்பூண்கிள்ளி
பூவிரி நெருங்கழி நாப்பண் பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன” (அகம்.205:10-12)
பெயர் சூட்டுதலின் முதன்மையான பயன்பாடு, விளித்தல், அழைத்தல் பயனை நோக்கியதாகவே அமைகின்றது. பெயர்சொல்லி அழைத்தலினை ‘பெயருதல்’ எனும் சொல்லால் வழங்குதலினைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.
“கோவெனப் பெயரிய காலை யாங்கது
தன்பெய ராகலி னாணி மற்றியாம்” (புறம்.152:21-22)
தோட்டங்கள் சூழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்தைப் போலவே இன்றும் மாம்பழத்திற்குச் சேலமும், பலாப்பழத்திற்குப் பண்ருட்டியும் பெயர் பெற்றன போலும்.
பெயர் எனும் சொல், மாற்றம் எனும் பொருளில் சங்க இலக்கியத்தில் வழங்கியமையை,
“வேனி லோதி நிறம்பெயர் முதுபோத்து” (நற்.186:5)
“புதல்வ னீன்றெனப் பெயர்பெயர்த் தவ்வரி” (நற்.370:5)
எனும் நற்றிணை அடிகளால் அறியலாம்.
பெயர் எனும் சொல் ஆட்பொருளில் எண்ணிக்கையைச் சுட்டுமிடத்திலும் வழங்கும். இதனை,
“உருகெழு பெருஞ்சிறப்பி
னிருபெயர்ப் பேராயமொ
டிலங்கு மருப்பிற் களிறு கொடுத்தும்” (மதுரைக்.100-102)
எனும் அடிகளால் அறியலாம். ‘விருந்திற்கு எத்தனைப் பேருக்கு அழைப்புக் கொடுத்தீர்கள் எத்தனை பேர் வருவார்கள்?’ என்று இன்றும் வழக்கில் பயில்வதனைக் காணலாம்.
பெயர் எனும் சொல் செல்வம், வீடுபேறு முதலிய பொருள்களிலும் ஆளப்பட்டுள்ளது. இதனை,
“வளங்கெழு தாரமொடு
புத்தே ழுலகங் கவினிக் காண்வர
மிக்குப்புக ழெய்திய பெரும்பெயர் மதுரை” (மதுரைக்.697-699)
“பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய” (பதிற்.90:23)
எனும் அடிகளாலும் அறியலாம்.
மேற்கண்டவாறு பெயர், பேர் எனும் சொற்கள் பல்வேறு பொருள்களில் ஆளப்பட்டுள்ளமையைக் காணலாம்.
பெயர் அமையும் சூழல் வகைமை குறித்துத் தொல்காப்பியச் சொல்லதிகாரப் பெயரியல் சூத்திரம் அமைந்துள்ளது.
“நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே
பல்லோர் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியல் பெயரே
இன்றிவர் என்னும் எண்ணியல் பெயரொடு
அன்றி அனைத்தும் அவற்றியல் பினவே” (தொல்.சொல்.பெயரியல்.11)
உயர்திணைப் பெயர்கள் எவ்வகையில் அமைதல் வேண்டும் என்பது குறித்துத் தொல்காப்பியர் பல சூத்திரங்களில் கூறிப் போந்தார். சான்றாக உயர்திணைப் பெயர்ச்சொற்கள் பால்காட்ட வேண்டும் எனும் பின்வரும் விதியைக் கொள்ளலாம்.

“உயர்திணை மருங்கிற்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
வென்ன பெயரு மத்துனை யவ்வே” (தொல்.சொல்.பெயரியல்.12)
தில்லை எனும் ஓர் இடப்பெயரை மக்களுக்குச் சூட்டும் போது தில்லை எனச் சூட்டாமல் தில்லையரசன், தில்லையரசி எனப் பால்காட்டும் வண்ணம் சூட்டுதல் மரபு. விகுதிகளின் வேறுபாட்டால் பெயர்கள் அடையும் மாறுபாடுகள் குறித்துக் கூறும் தொல்காப்பியர்
“ஆவோ வாகும் பெயருமா ருளவே
யாயிட னறிதல் செய்யு ளுள்ளே”
இதனை வில்லான், தொடியான் எனும் ஆகார விகுதிகள் ஓகாரமாய்த் திரிதலின்வழி அறியலாம்.
“வில்லோன் காலனகழலே தொடியோன்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்” (குறுந்-7)
இலக்கண யாப்பிற்குட்பட்டே பண்டைத் தமிழர்கள் பெயர்களைச் சூட்டினர் தங்களது குடிமரபிற்குரிய பெயர்களையே சூட்டிக் கொண்டனர். இதனைச் சங்க இலக்கியங்களெங்கும் காணலாம். இதனையே நிகண்டுகளும் வகைமை செய்யும். இம்மரபு தமிழ் ஒழிந்த ஏனைய இனத்தாரிடம் காணல் அரிது.
சோழர்க்கு உரிய பெயர்களாகப் பின்வருவனவற்றை நிகண்டுகள் சுட்டும்.
“நேரியன் சென்னி பொன்னித் துறைவனே நேரிவெற்பன்
ஆரின்மா லையனே கிள்ளி அபயனே கோழிவேந்தன்
சீரியவளவன் மிக்க செம்பியன் புலியு யர்த்தோன்
சூரியன் புனல்நா டன்கோச் சோழன்மால் என்றும் சொல்லும்”
பாண்டியர்களுக்குரிய பெயர்களாக,
“செழியனே கூடற்கோமான் தென்னவன் வேம்பின் தாரோன்
வழுதியே குமரிச் சேர்ப்பன் வைகையந் துறைவன் மாறன்
விழைவிறு பொதிய வெற்பன் மீனவன் கைத வன்சொற்
பழையபஞ் சவனே வெய்ய கௌரியன் பாண்டி யன்பேர்”
சோழர்களுக்குரிய ‘கிள்ளி’ எனும் பெயரைப் பாண்டிக்குடியினரோ பாண்டியருக் குரிய ‘செழியன்’ எனும் பெயரைச் சோழ, சேரக் குடியினரோ சூட்டிக்கொள்ள மாட்டார்கள். தங்களது குடிக்குரிய மரபுப் பெயர்களை உயர்வாகக் கருதிச் சூட்டுவர் பிற குடிகளின் பெயர்கள் தங்களது தலைமேல் சூட்டப்படுதலை முள் முடியாகக் கருதுவர். அதனையொப்பவே திணைசார்ந்த குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை எனும் நிலவியலையொட்டிய பெயர்களை அந்தந்தத் திணைக்குரிய குடிகள் சூட்டுவர். திணைமாறிய பெயர்களைச் சூட்டுவதில்லை.
தந்தையிடமிருந்து உரிமையும் தந்தையின் பெயரினைப் பெறும் சிறப்பும் முறையாக வந்த பிள்ளைகளையே சென்றடையும் தந்தையின் பெயர்ப் பெருமை முறையான பிள்ளைகளினைச் சென்றடையும் என்பதனைப் பின்வரும் பாடலடிகளால் அறியலாம்.
“பகலான் டல்கினை பரத்த வென்றியா
னிகலி யிருப்பே னாயிற் றான்றன்
முதல்வன் பெரும்பெயர் முறையுளிப் பெற்ற
புதல்வற் புல்லிப் பொய்த்துயி றுஞ்சும்” ( கலி.75:22-25)
ஒருவர்க்குத் தமது உடலில் ஏற்படும் அடையாளங்களால் பெயர்கள் ஏற்படுவதுண்டு. ஒரு குருக்கள் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவரது முகத்தின் வலது பாகம் முழுவதும் மச்சம் இருக்கும். அதனையொட்டி அவரை அக்கால மாணவர்கள் அனைவரும் மச்சகுருக்கள் ஆசிரியர் என்றே அழைப்பர். அவரது இயற்பெயர் என்னதென்று ஒருவரும் அறிந்திலர். சங்க காலத்திலும் முகத்தில் ஏற்பட்ட கத்தரிக்காய் போன்ற தழும்பினால் பெரும்புகழ் உடைய ஒருவரின் இயற்பெயர் மறைந்து தழும்பன் என அழைக்கப்பட்டமையை,
“தூங்கல் பாடிய ஓங்குபெரு நல்லிசைப்
பிடிமிதி வழுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன்” (அகம்.227:11-12)
ஒரு மனிதனின் செல்வாக்கு, ஆட்சிமை, திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களைப் பல பெயர்களால் பலர் புகழ்தலுண்டு. இதனையே பிற்காலத்தில் மன்னர்கள் வரும்போது கட்டியங் கூறுவோர் ஒரு கலையாகவே கையாண்டனர். இவ்வாறு பல பெயர்கள் வழங்கியதை,
“அகலிடங் குயின்ற பல்பெயர் மண்ணி” (அகம்.269:8)
எனும் அடிகளால் அறியலாம்.
குடிச்சிறப்பும் மரபுச் சிறப்பும் உடைய பெயர்களைத் தம் மக்களுக்குச் சூட்டும் நாளினைத் தமிழர்கள் விழாவாகக் கொண்டாடியதற்கான சான்றினை நாம் சிலப்பதிகாரத்தில் காணலாம். கோவலனுக்கும் மாதவிக்கும் பெண்மகவு பிறந்த வேளை அம்மகவிற்குப் பெயர் சூட்டுதற் பொருட்டு ஆயிரக்கணக்கான கணிகையர்கள் கோவலனை அழைத்து அம்மகவிற்குப் பெயர்சூட்ட வேண்டினர். கோவலன் தமது குடித்தெய்வமான மணிமேகலையின் பெயரினைச் சூட்டி, அக்குழந்தையை வாழ்த்திய கணிகையருக்குப் பொன்னைப் பரிசில்களாக வாரி இறைத்தமையைப் பின்வரும் சிலப்பதிகார அடிகளால் அறியலாம்.
“மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து
வாலா மைந்நா ணீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுது மென்று
தாமின் புறூஉந் தகைமொழி கேட்டாங்
கிடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்
உடைகலப் பட்ட வெங்கோன் முன்னாள்
புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்
நண்ணுவழி யின்றி நாள்சில நீந்த
இந்திர னேவலி னீங்கு வாழ்வேன்
வந்தே னஞ்சன் மணிமே கலையான்
உன்பெருந் தானக் துறுதி யொழியாது
துன்ப நீங்கித் துயர்க்கட லொழிகென
விஞ்சையிற் பெயர்ந்து விழுமந் தீர்த்த
எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென
அணிமே கலையா ராயிரங் கணிகையர்
மணிமே கலையென வாழ்த்திய ஞான்று
மங்கல மடந்தை மாதவி தன்னொடு
செம்பொன் மாரி செய்கையிற் பொழிய” (சிலம்பு.15:22-41)
பெயர்சூட்டுதலை ‘நாமநல்லுரை’ எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. ஆனால் பெருங்கதை ‘பெயர்நிலை பெறீஇய’ எனக் குறிப்பிடுகின்றது. ‘நாம’ எனும் வடசொல்லினைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. ஆனால் வடமொழித் தழுவல் எனக் குறிப்பிடப்படும் பெருங்கதை பெயர்சூட்டலைத் தமிழிலேயே குறிப்பிடுகின்றது. சிலம்பில் மேற்கண்ட அடிகள் மாடல மறையோன் எனும் வடபுலத்தான் கூற்றானபடியால் வடசொல்லான நாமம் பயன்படுத்தப்பட்டதோ! என எண்ணலாம். ஆனால், கொங்குவேளிர் தமிழிலேயே குறிப்பிட்டுள்ளமை சிறப்பு. மன்னர்கள் எவ்வாறு பிறந்தநாள் விழாவினைக் கொண்டாடினார்கள் என்பதைப் பெருங்கதையின் வழி அறியலாம். உதயணன் மனைவி வாசவதத்தைக்கு ஆண் மகவு பிறந்தவேளை அரண்மனைப் பெருங்கணியர்கள் சாதகப்பட்டியலைப் பார்த்துப் பெயர்சூட்டு விழாவிற்கான நாளைக் குறித்தனர். தமிழ் இலக்கியப் பரப்பில் சாதகப் பட்டியல் எனும் சொல் பெருங்கதையிலேயே முதலில் இடம் பெறுகின்றது.
சாதகப் பட்டிகை சாலவை நாப்பண்
அரும்பொறி நெயிய னாற்ற வமைத்த
பெருங்கணிக் குழுவுக்குப் பெறுதற் கொத்த”
(பெருங்.5-6/81-84)
சாதகப் பட்டியலை நோக்கி, நன்னாள் கணித்துச் சுற்றத்தார்க்கும் நட்புசால் மன்னர்களுக்கும் ஓலை அனுப்பி அழைக்கப்பட்டு, பெயர்சூட்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. உதயணனின் மகனோடு அவனது தளபதியின் மகன்கள் மூவருக்கும் அவ்விழாவிலேயே பெயர் சூட்டப்பட்டது. இதனைப் பின்வரும் பெருங்கதையடிகளால் அறியலாம்.
உதயனன் – வாசவதத்தையின் மகனுக்கு நரவாண தத்தனென்று பெயர் சூட்டப்பட்டமையை,
“பெயர்நிலை பெறீஇய பெற்றிநாடி
உயர்நிலை யுலகி னுலோக பாலன்
நயமிகு சிறப்பொடு நகர்மிசைப் பொலிந்த
பலர்புகழ் செல்வன் றந்தன னாதலின்
உருவாண மாகிய வோங்கு புகழ்ச் செல்வன்
நரவாண தத்த னென்று பெயர் போக்கி” (பெருங்கதை.105-110)
எனும் அடிகளால் அறியலாம்.
உருமண்ணுவா முதலானவரின் புதல்வர்களுக்கு பூதி அரிசிகன், தவந்தகன், கோமுகன் என்பனவான பெயர்கள் இவ்விழாவிலேயே சூட்டப்பட்டமையை,
“உறுவிறற் றானை யுருமண் னூவாவும்
அறிநரை வழிபட் டன்றே பெயர்தலின்
………………………….
பொருவின் மாக்கள் பூதியென் றுரைஇ
ஒழிந்த மூவ ருருவார் குமரருட்
கழிந்தோ ரீமத்துக் கட்டழல் சேர்ந்த
கரியக லேந்திக் காவயிற் பெற்றோன்
அரிசிக னாகப் பெயர்முதல் கொளீஇப்
பயந்தலை நிற்கும் பல்கதிர்ச் செல்வன்
நயந்துதரப் பட்டோன் றவந்தக னாமெனத்
தாயர் போலத் தக்கது நாடிய
ஆவழிப் படுதலி னாகிய விவனே
கோமுக னென்று குணங்குறி யாக
மற்றவர் மகிழ்ந்து” (பெருங்-5:111-123)
எனும் மேற்கண்ட பாடலடிகளின் வழி அறியலாம்.
சிலம்பில் மணிமேகலையின் பெயர்சூட்டுவிழா தமிழ் மரபுப்படி குல தெய்வத்தின் முழுமையான பெயரைச்சூட்டிக் கொடை வழங்களோடு நடைபெற்றது. மணிமேகலை தெய்வத்தால் தரப்பட்ட குழந்தை எனவோ மணிமேகலைத் தெய்வத்திற்கு உரிய குழந்தை என்பனவாகவோ பொருள்படும் பெயர்களைச் சூட்டாமல் அத்தெய்வத்தின் பெயரையே சூட்டியது தமிழ்மரபு.
உதயணன் கதையில் உதயணன் தன் மகனுக்குக் குபேரனால் தரப்பட்டவன் எனும் பொருள்படும் ‘நரவாண தத்தன்’ (நரவாணன் – குபேரன், தத்தன் – கொடுக்கப்பட்டவன்) எனும் பெயரைச் சூட்டினான். இது வடவர் வழமை. தமிழ்மக்கள் வழமையில் தந்தை தம் பிள்ளைகளுக்குப் பெயர்சூட்டல் பெருவழக்காக இல்லை. தாய்மாமன் மூலமே பெயர் சூட்டல் நிகழும் இன்றளவும் காதுகுத்தலும், பெயர்சூட்டலும் அம்மான் வழியதாகவே கொங்குநாட்டில் நிகழ்கின்றது. பொதுவாகவே பிள்ளைப்பேறு பெண்ணின் தாய் வீட்டிலேயே நிகழும். பிள்ளை பிறப்பின் பிறகு தாயும் சேயும் கணவன் இல்லம் செல்லக் கிட்டத்தட்ட ஓர் ஆண்டு வரைகூட ஆகலாம். அதுவரை பிள்ளைக்குப் பெயர் சூட்டாமலிருக்க இயலாது. ஆதலால் இந்நிகழ்வு பெண்ணின் தாய் வீட்டில் தாய்மாமனால் நிகழ்த்தப்பட்டிருக்கலாம். கோவலன், மாதவியின் வீட்டிலேயே வாழ்ந்தான் மாதவிக்கும் உடன்பிறந்தோர் இருந்ததாக அறியவில்லை. ஆதலால் கோவலனையே மணிமேகலைக்குப் பெயர்சூட்ட அழைத்திருக்கலாம்.
துணைக்கண்டம் முழுவதும் காரணம் பற்றிய பெயர்களே பெரும்பாலும் சூட்டப்பட்டன. வெற்று ஒலிகளுக்காகப் பெயர் வைக்கும் மரபு இருந்ததாக அறிவதற்கில்லை. மன்னர்களைப்போல் செல்வமுடைய வாணிகக் குடியில் பிறந்தமையால் மாசாத்துவன் தன் மகனுக்குக் கோவலன் எனப் பெயரிட்டான் என்பர். கதிரவன் உதயமாகும் காலத்தில் பிறந்தமையால் பெருங்கதையின் தலைவன் உதயணன் எனப் பெயர்சூட்டப் பெற்றான். இதனை,
“புதையிரு ளகற்றும் பொங்கொளி மண்டிலம்
உதய மிவர்தர வுதித்தோன் மற்றிவன்
உதயண னாகெனப் பெயர்முதற் கொளீஇ” (பெருங்.2:81-83)
எனும் பாடலின் வழியாக அறியலாம்.
இலங்கையைப் பொறுத்தவரை, தமிழ் மன்னர்கள் பலரின் பெயர்கள் சிங்களப் பெயர்போல் மாற்றப்பட்டு வரலாற்றில் அவர்களைச் சிங்கள மன்னர்கள் ஆக்கிய போக்குகளும் உண்டு. சான்றாக, மூத்தசிவம், கயபாகு, விக்ரமசிங்கன் முதலியோரைக் குறிப்பிடலாம். சிங்கள மொழியில் மக்கட்பெயர்கள் பால் காட்டும் விகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை விளியேற்கும் அமைப்பிலேயே அவை இருக்கும். “சேகரன்’ என்பது தமிழ்மரபு சேகரா என விளி அமைவில் இருத்தல் சிங்கள மரபு. அதனைப் பின்பற்றி அவர்கள் தமிழ்ப் பெயர்களைச் சிங்கள அமைப்பில் மாற்றிக்கொள்வர். மூத்தசிவம் எனும் பெயர் முட்டசிவா என அமையும். இதற்கான இணைப்பெயர்களைச் சிங்களத்தில் காணல் அரிது. நல்லசிவம், பரமசிவம், மூத்தசிவம், இளையசிவம் முதலான இணைப் பெயர்களின் மரபை இன்னும் தமிழில் காணவியலும். கந்தசாமி என்ற இயற்பெயர் கொண்ட விக்ரமசிங்கன் மதுரை நாயக்க மரபைச் சேர்ந்தவன். இவனது மனைவி பெயர் வெங்கட்ரமா. இம்மன்னனின் பெயரை விக்ரமசிங்கா எனத் திருத்தம் செய்து கண்டி நாயக்க அரசமரபைச் சிங்கள அரச மரபாகப் புனைந்துகொண்டனர்.
கயம் எனும் சொல் ஆழமான குளத்தினைக் குறிக்கக்கூடியது. இதனை,
“கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்” (மதுரைக்.484)
“இனமீ னிருங்கழி யோத மல்கு தொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்” (குறுந்.9:5-6)
எனும் அடிகளால் அறியலாம்.
வளவன், பெருவளத்தான் என்பது போல ஈழத்தில் காடுகளை அழித்து பெருங்குளங்களை உருவாக்கிய மன்னன் கயவாகு என அழைக்கப்பட்டான். வாகு வலயம் என்பது கைகளில் அணியும் அணிகலன்களைக் குறிக்கக்கூடியது. இதனை,
“கைவளை யாழி தொய்யகம் புனைதுகில்
மேகலை காஞ்சி வாகு வலயம்” (பரிபாடல்.7:46-47)
பெருங்குளங்களை உண்டாக்கி நாட்டை வளப்படுத்திய ஈழ மன்னனைக் கயவாகு (குளம் வழங்கியவன்) என அழைத்தனர். பிற்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ஒரு பெயருக்குப் பல பொருள் கூறும் மரபால் கயவாகு எனும் பெயருக்கு வேறு பொருள்களையும் கூறுவராயினர். கயம், கயன் எனும் சொற்கள் யானையினையும் மீனினையும் குறிப்பதாகவும் அமையும். கயத்தில் உடையது கயன், கயம், கயத்தில் மலரும் பூக்கள் கயமலர் எனப்படும். கயமலர் நெய்தல் பூவுமாம். இதனை
“கயமல ருண் கண்ணாய் காணாய்நின் னையர்” (சிலம்பு.12:17)
“காயாநெய்தல் கனத்தல் பத்தி” (சிலம்பு.14:19)
எனும் அடிகளுக்கு அடியார்க்கு நல்லார் கூறும் உரையாலும் அறியலாம்.
நெய்தல் மலர் போன்ற கரிய நிறத்தையுடையதால் யானை கயமுனி என அழைக்கப்படும். இதனை
“பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்ப” (மலைபடு.107)
எனும் அடிகளால் அறியலாம்.
யானைப்படை உடையவன் எனக் கயவாகுவைக் குறிப்பிட்டுப் பிற்காலத்தில் பாலிமொழியில் மொழிமாற்றம் செய்யும்போது கஜபாகு என மாற்றிக் கொண்டனரெனலாம். உலகில் பழமையான தொல்குடிகள் மட்டுமே தங்களது பெயரோடு தங்களின் மொழியையும் இணைத்துக்கொள்ளும் மரபைக் கொண்டிருப்பர் அவ்வகையில் துணைக்கண்டத்தில் தமிழர்களும் நாகாப் பழங்குடிகளும் தங்களது பெயரோடு மொழியையும் இணைத்துக்கொள்ளும் மரபுடையவர். நாகலாந்தின் ‘கோம்’ மொழியையும் ‘மொய்த’ மொழியையும் பேசக்கூடிய பழங்குடிகள் ‘மேரிகோம்’, ‘இராஜேஷ்மொய்த’ என்பனவாக தங்கள் பெயரோடு மொழியையும் இணைத்து வழங்குவர். தமிழர்களும் தமிழ்ச் செல்வி, தமிழ்மாறன், தமிழரசு, தமிழ்த்தாமரை, தமிழரையன் என்பனவாக வழங்கும் மரபுடையோர் மூலமொழி மரபில்லாதோர் இவ்வாறு வழங்கார். கண்ணகி வழிபாட்டு மரபைக் கடைப்பிடித்த தமிழ்க் கயபாகுவை மெல்லச் சிங்கள வம்சாவளிக்குத் தள்ளிவிட்டனர். தங்களது வரலாற்றைக் காப்பதில் ஆர்வம் செலுத்தாத தமிழர்களும் இதற்கு உடன்பட்டனர்.
II
பெயர்கள் பல்வேறு வடிவங்களில் அமையும். இவை அம்மக்களின் எண்ணங்கள் மொழியமைவு விளித்தல் தன்மை போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டதாக விளங்கும்.
ஓரெழுத்துப் பெயர்கள் – கோ, பா; ஈரெழுத்துப் பெயர்கள் – ஓரி, பாரி, ஆய், பாவை; மூவெழுத்துப் பெயர்கள் – மிஞிலி, நங்கை, நம்பி, எழினி, அஞ்சி, ஆதன்; நான்கெழுத்துப் பெயர்கள் – சாத்தன், அமுதன், சேந்தன், திதியன், தித்தன், கொற்றவை, குந்தவை; ஐந்தெழுத்துப் பெயர்கள் – கரிகாலன், ஏறைக்கோன், கல்லாடன், பொய்கையார்; ஆறெழுத்துப் பெயர்கள் – முடிநாகனார், நெட்டிமையார், ஆதனுங்கன்; ஏழெழுத்துப் பெயர்கள் – இளவெயினியார், இடைக்காடனார்; எட்டெழுத்துப் பெயர்கள் – மாந்தரஞ்சேரல், கோக்கோதை மார்பன், இளஞ்சோட்சென்னி. ஒன்பதெழுத்துப் பெயர்கள் – கணைக்காலிரும்பொறை, பெருஞ்சித்திரனார்; பத்தெழுத்துப் பெயர்கள் – கள்ளில் ஆத்திரையன், வெண்ணிக்குயத்தியார்; பத்திற்கும் மேற்பட்ட எழுத்துகளை உடைய பெயர்கள் – பக்குடுக்கை நன்கணியார், வண்ணக்கண்ணுவன் அரையன் பாசுரன் அம்பலவன் எனபனவாக எழுத்துகளின் எண்ணிக்கையில் அமையும். அத்தோடு ஒருசொல் பெயர்கள் அதியன், திதியன் இருசொற்பெயர்கள் திதியன் ஆதன், நெடுமான் அஞ்சி என்பனவாகப் பலசொற் பெயர்கள் வரை நீளும்.
இக்காலம் வரை தமிழர்கள் வைக்கும் பெயர் முறைகளைப் பின்வருவனவாகப் பகுத்துக்கொள்ளலாம். இவற்றில் பல விடுபட்டிருக்கவும் கூடும்.
கூட்டப்பெயர்கள், குடிப்பெயர்கள், சாதிப்பெயர்கள், இனப்பெயர்கள், தேயப் பெயர்கள், இறைப்பெயர்கள், முன்னோர்ப்பெயர்கள், தலைவரின் பெயர்கள், இலக்கியப்பெயர்கள், வட ஓசைப்பெயர்கள் (ஷ, ஸ, ஜ, ஹ), செல்லப்பெயர்கள், புனைபெயர்கள், பட்டப்பெயர்கள், நிலப்பெயர்கள், தொழில் பெயர்கள், விளிப்பெயர்கள், குடும்பப்பெயர்கள், கொஞ்சுப்பெயர்கள், ஏசல் பெயர்கள், இயற்கையைப் பற்றிய பெயர்கள், நம்பிக்கைப் பெயர்கள், விருப்பப்பெயர்கள், வேறுபாட்டுப்பெயர்கள், நினைவுப்பெயர்கள், நடிகர்களின் பெயர்கள், நட்புப் பெயர்கள், அடையாளப்பெயர்கள், வரலாற்றுப்பெயர்கள், நயப்பெயர்கள், பொருள்விளங்காப் பிறமொழிப்பெயர்கள் என்பன போன்று அமையும். இவற்றை விரிப்பின் இக்கட்டுரை பெருகும். ஆதலால் வேறொரு பகுதியில் விரிப்பினன்.
பெயர்களுக்கு முன்பும் பின்பும் பட்டமும் அடையும் சேர்க்கப்படுவது பண்டைக்காலம் தொட்டே பெருவழக்காக இருந்து வருகின்றது. இக்காலத்திலும் அவ்வழமை தொடர்கின்றது. பட்டத்திற்கும் அடைக்கும் வேறுபாடுகள் உண்டு. எல்லாப் பட்டங்களும் அடைகளாகும்; ஆனால் அனைத்து அடைகளும் பட்டங்களாகா. பெயரிற்கு முன், பின் வழங்கும் அனைத்தும் அடைகளாகும். அதன்படி பட்டங்கள், அடைகளின் ஒரு பிரிவாகும். பெயரடை என்பது அனைத்து வகைச் சிறப்பு, தாழ்வுகளைப் பெயரினை அணையச் சூட்டிக்கொள்ளப்படுவது. ஆனால் பட்டம் என்பது ஏற்புடையோரால் ஒருவரைச் சிறப்பித்து வழங்கப்படுவது. ஒருவருக்குரிய அடைமொழிப்பெயர்களைப் மற்றொருவர் சூட்டிக்கொள்ளலாம். ஆனால் பட்டங்களை அப்படிச் சூட்டிக்கொள்ளவியலாது.
பல்வகைப்பட்ட அடைமொழிகளைத் தமிழர்கள் சூட்டிக்கொண்டார்கள். அவை மக்கட் பெயரடைகள் எனப்பட்டன. அடைமொழிகள் ஊர், பண்பு, கொடை, குடி, குலம், செல்வம், பணி, புலமை போன்ற பல்வேறு கூறுபாடுகளை வெளிப்படுத்துவதாக அமையும். அடைகள் ஒரே பெயர் கொண்ட இருவரைப் பிரித்து அறிதலுக்கும் பயன்படும்.
நெடுந்தேர்ச் செழியன், சேர்ப்பன், பொருநன், பெரும என்பனவான அடைகள் அகப்பாடல்களில் பயிலும். ஒருவரது இயற்பெயர் மறைந்து அடைகளே இயற்பெயர்போல் வழங்குதலும் உண்டு. இடைக்குன்றூர்க்கிழார், சேக்கிழார், ஐயூர்முடவனார் என்பன போல் அமையும். உடற்குறைகள் அடைகளாக வருதலும் உண்டு. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எனவும், செய்தொழில் அடையாக வருதலுக்குக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் என்றும், ஒல்காப்பெரும்புகழ்த் தொல்காப்பியன், உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் முதலானவை கல்விப்புலமையால் கிடைத்த அடைமொழிகள்.
போர்வெற்றியால் கிடைத்த அடைகளும் உண்டு. செருப்பாழி எரிந்த இளஞ்சேட் சென்னி, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பனவாக அவை அமையும். பிற்காலச் சோழர்களும் இவ்வடை மரபை யொட்டியே கேரளாந்தகன், மதுராந்தகன், கங்கைகொண்டான், கடாரம் கொண்டான் போன்ற வெற்றியடைகளைத் தங்கள் பெயர்களோடு மெய்க்கீர்த்திகளில் இணைத்துக்கொண்டனர். மன்னர்கள் இறந்த இடத்தின் பெயர்களையும் அவர்களின் பெயர்களுக்கு அடைகளாக வழங்கினர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பதுவாக அமையும். வில்வலியாலும் வாள்வலியாலும் பெற்ற அடைகள் வல்வில்லோரி பாண்டியன் கருங்கையொள்வாட்பெரும்பெயர்வழுதி என்பனவாக அமையும். கொடையால் சிறப்புற்றோர் சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன், கடையேழு வள்ளல்கள் என்பனவாக அடைகளைப் பெற்றனர்.
பட்டங்கள் பல்லவர்களின் ஆட்சிக்காலத்திலும் பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்திலும் பெருகின. மன்னனாக முடிசூட்டப்படுபவர் தமது இயற் பெயரை விட்டுப் புதிய பட்டப்பெயரை ஏற்கும் மரபும் உருவானது. இதன்வழியே இயற்பெயரான அருண்மொழியைத் துறந்து இராசராச சோழன் எனும் பட்டப் பெயரை ஏற்க வேண்டியதாயிறு. இராசசேகரி, பரகேசரி, கோப்பரகேசரி முதலான பட்டங்களைச் சோழர்கள் சூடலாயினர் சடைய வர்மன், மாறவர்மன் முதலான பட்டங்களைப் பாண்டியர்களும் செகராச சேகரன், பரராசசேகரன் எனும் பட்டங்களை யாழ்ப்பாணராச்சிய மன்னர்களும் சூட்டிக்கொண்டனர். இதன்வழித் தமிழுக்கு அயல்பட்டு நின்றனர்.
வீரராசேந்திர சோழனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த சோழ சாளுக்கியத் திருமண உறவில் முதலாம் இராசேந்திர சோழன் மகள் அம்மங்காதேவிக்கும் சாளுக்கிய நரேந்திரனுக்கும் மகனான இரண்டாம் இராசேந்திரன் சோழ அரியணையைக் கைப்பற்றியவுடன் தன்னைச் சாளுக்கியக்குடிக்கும் சோழக்குடிக்கும் பொதுவானவன் எனக்காட்டி உபயகுலோத்துங்கன் (உபய-இரு, குலோத்துங்கன் – குடிகளைத் தாங்குபவன், இரு குடிகளையும் தாங்குபவன்) எனும் பட்டப்பெயரோடு ஆட்சிக்கு வந்தான். மன்னர்கள் மட்டுமல்லாது மக்களுக்கும் ஆட்சியாளர்களால் பட்டங்கள் வழங்கப்பட்டன.
மன்னர்களின் பெயராலும் பேரரசரின் பெயராலும் வழங்கப்படும் பட்டங்களே மிகவும் உயரிய பட்டங்களாகக் கருதப்பட்டன. இதனை
“பொன்னகருள் வேந்தன் பெயராற் பொறியும் பெற்றான்
வின்மரிய தோள் விசய தத்தனுயிர்க் கவசம்” (சிந்தாமணி.1792)
எனச் சிந்தாமணியில் காணலாம். பொறி எனும் சொல் பட்டம் எனப் பொருள்படும். இது அரசன் பெயரால் பெற்ற பட்டம் என நச்சினார்க்கினியர் கூறுவர்.
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ‘குஞ்சரமல்லப் பெருந்தச்சன்’ ‘இராசராச குஞ்சரமல்லப் பெருந்தச்சன்’ எனும் பட்டத்தை இராசராசசோழனிடம் பெற்றான். சேந்தன் பிள்ளை என்பவனது பணிக்காக ‘இராசராச பல்லவராயன்’ எனும் பட்டம் வழங்கப்பட்டது. சிவத்தொண்டு செய்த அடியார்க்கு ‘நக்கன்’ எனும் பட்டமும் ஆடல், பாடல் கலைகளில் சிறந்த தேவரடியாருக்குத் தலைக்கோலி பட்டங்களும் வழங்கப்பட்டன.
பெண்கள் தங்களது பெயரோடு ஊர்ப்பெயர்களைச் சேர்த்தலும் உண்டு. வெண்ணிக்குயத்தியார், மாறோகத்து நப்பசலையார் என்பனவாகவும், தந்தையின் பெயரைச் சேர்த்துப் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் என்பதாகவும் அமையும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியை முதன்முதலில் அறிமுகம் செய்யும் அடிகளார் அவளது தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு அவரின் மகள் கண்ணகி என்றே அறிமுகம் செய்கின்றார்.
“போகநீள் புகழ்மன்னும் புகார்நக ரதுதன்னில்
மாகவா னிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னா ளீராறான் டகவையாள்
அவளுந்தான்
…………………………………
மாதரர் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலால் பெயர்மன்னுங் கண்ணகியென் பாண்மன்னே” (சிலம்பு.22-29)
சிலம்பின் வழக்குரை காதையில் பாண்டியனிடம் தன்னைக் குறித்துக் கூறும் கண்ணகி கோவலன் மனைவி கண்ணகி எனக் கனவனின் பெயரோடு தன்பெயரைக் கூறுதலை,
…….. ”நின்பாற்
கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரே ” (சிலம்பு.20:61-63)
கோப்பெருந்தேவி, கோப்பெரும்பெண்டு, செம்பியன் மாதேவி முதலாய பேரரசிரியரின் பெயர்கள் அவர்களின் இயற்பெயர்களாக இருக்க வய்ப்பில்லை. கோப்பெருந்தேவி, கோப்பெரும்பெண்டு என்பன பாண்டிய மன்னரின் பட்டத்தரசியரைக் குறிக்கும் சொற்களாகின்றன (கோ – மன்னன், பெரும் பெண்டு – மனைவி) செம்பியன் எனும் சொல் சோழர்களைக் குறிப்பது மழவரையர் மகளுக்கு இயற்பெயராக இப்பெயர் அமையாது. செம்பியன் மாதேவியார் எனும் பெயர், அவர் கண்டராதித்தச் சோழரை மணந்த ஞான்று வழங்கப்பட்ட பட்டப்பெயராகலாம். பேரரசியர்களின் இயற்பெயர்களைக் கூறி அழைத்தால் மதிப்புக் குறைவு எனக் கருதியோர் அவர்களின் பட்டப் பெயர்களாலேயே அழைத்திருப்பர். காலவோட்டத்தில் இயற்பெயர் மறைந்து பட்டப்பெயர்களே கல்வெட்டுகளிலும் ஏறி நிலைத்திருக்கின்றன. பொது மக்களிடமும் இவை போன்ற வழக்கங்கள் காணப்பட்டமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உண்டு. இராமனின் மனைவி ராமணி என்றே குறிப்பிடப்படு கின்றமையைக் காணலாம். தந்தையின் பெயரால் பெண்களைக் குறிப்பிடும் வழமையும் தமிழில் உண்டு என்பதற்குப் பாரிமகளிர் எனும் பெயரைக் குறிப்பிடலாம். வடபுல மரபில் தந்தையின் பெயரைப் பெண்கள் ஏற்றும் தத்தித மரபு உண்டு. தட்சன் மகள் தாட்சாயினி, சனகன் மகள் சானகி, திருபதன் மகள் திரௌபதி என்பனவாக அமையும்.
“நல்லிஊர் ஆபிடந்தை மகள் கீரன்கொற்றி” எனத் தந்தையின் பெயர் சூட்டிக் கூறப்பட்டமையைப் புகளூர்க் கல்வெட்டால் அறியலாம். குலப்பெயரோடு பெண்கள் சுட்டப்பட்டமையைச் “சொல் பாரூர் வேளிர் குலப்பெண்டு பூதி ஆதித்த பிடாரி” எனவும் வரும் கல்வெட்டுகளில் கணவர், தந்தை, மாமனார், மகன் தம்பி முதலானவர்களின் பெயர்கள் பெண்களின் பெயர்களுக்கு முன்னடையாக அமைந்துள்ளன. குந்தவையைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் ‘இராசராசசோழத் தேவர் திருத்தமக்கையார், வல்லவராயர் வந்தியத்தேவரின் திருத்தேவியார், ஸ்ரீஆழ்வார் பராந்தகன் குந்தவையார்’ எனக் கூறப்படுகின்றன. ‘பராந்தகன்’ என்பது அவரது தந்தையார் சுந்தர சோழனின் இயற்பெயராகும். செம்பியன் மாதேவியார் குறித்த உய்யக்கொண்டான் திருமலைக் கல்வெட்டு ‘பிராந்தகன் மாதேவடிகளார்’ எனக் குறிப்பிடுகின்றது. இதில் பராந்தகன் அவரது மாமனாரின் பெயராகும் மாதேவடிகள் அவரது இறைப்பணியால் கிடைத்த பெயராகும். மேலும் பல கல்வெட்டுகளில் பின்வருமாறு அவர் குறிப்பிடப்படுகின்றார்.
“மழவரையர் மகளார் ஸ்ரீகண்டராதித்த பெருமாள் தேவியார் செம்பியன்
மாதேவியார்
ஸ்ரீஉத்தம சோழதேவரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார்”
என்பனவாக அமையும். இவற்றில் தந்தை, கனவன், மகன், மாமனார் பெயர்கள் சூட்டப்படுதலினைக் காணலாம்.
மன்னர்களின் பெயர் பொறித்த மோதிரம் முதலான அணிகலன்களும் சங்க காலம் முதற்கொண்டே வழக்கத்தில் இருந்தன. இவை பல நேரங்களில் அரசின் முத்திரைகளாகப் பயன்படுத்தப்பட்டன. மன்னர்களின் கையெழுத்திட்ட அறிவிப்புகள் திருமுகம், ஸ்ரீமுகம் எனப் பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் வழங்கப்பட்டன. இவ்வோலைகளை எழுத்தோலை என இலக்கியங்கள் வழங்கின.
“தாம்பான் மணிநாம மோதிரந் தொட்டை யென்னத்
தேன்பாவெழுத் தோலை செவ்வனே நோக்கினாள்” (சிந்தாமணி.1040)
எனச் சீவகன் என்னும் பெயர் பொறித்த மோதிரம் குறித்தும் எழுத்தோலை குறித்தும் கூறப்பட்டுள்ளமையைக் காணலாம்.
“ஏடுகோ ளாள ரெனையரென் றெண்ணிப்
பேரெழுத் தோலை பெறுமுறை நொக்கி” (பெருங்கதை.1/37/153-154)
எனப் பெயர் எழுதப்பட்ட ஓலைகள் குறித்து மேற்கண்ட பெருங்கதை அடிகளால் அறியலாம்.
போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களின் கல்லறையின் மேலே அவனது பீடும் பெயரும் பொறித்தும் பீலிசூட்டியும் செங்காந்தள் மாலை சூட்டியும் வழிபடுதல் பண்டைத் தமிழர் மரபு. இதனை,
“பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொ
டணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்
தினிநட் டனரே கல்லுங்” (புறம்.264/1-4)
எனும் புறப்பாட்டு அடிகளின் வழியறியலாம். பல்வேறு வெற்றிகளைப் பெற்ற மாவீரனுக்குச் செய்யும் முழுமையான சிறப்பு அவனது பெயரையும் பெருமையையும் கல்லில் எழுதி அவனை இட்ட இடத்தில் அக்கல்லினை எழுப்பி அவனை வழிபடுதலேயாகும். அவனது மறைவிற்குப் பின்பும் அவனது பெருமையைத் தாங்கி நிற்பது அவனது பெயரே. துணைக்கண்டத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் மிகப் பழமையான கல்வெட்டு திண்டுக்கல் மாவட்டம் புலிமான்கோம்பை எனுமிடத்தில் கிடைத்த நடுகல் கல்வெட்டேயாகும். இக்கல்வெட்டில் ஆதன் எனும் வெட்சிப்போர் மறவனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டைக் கண்டுபிடிப்பதற்கு முன்புவரை க.கைலாசபதி போன்ற பேராசிரியர்கள் பெயர் பொறித்த நடுகல் நடும் வழக்கம் தமிழர்களிடம் இல்லையெனக் கூறிப்போந்தனர். அவர்களது கருத்துகள்தாம் இன்று பொய்த்துவிட்டன. இவ்வாறான பெயர் பொறித்த நடுகல் கல்வெட்டுகள் அகவிலக்கியங்களிலும் உண்டு. இதனை,
“நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலிசூட்டிய பிறங்குநிலை நடுகல்” (அகம்.67:8-10)
எனும் அகநானூற்று அடிகளால் அறியலாம்.
இக்காலத்திலும் வீட்டிற்குத் தேவையான சமையல் கலன்களையும், ஏனங்களையும் வாங்கும் பெண்கள் அவற்றில் தங்களது பெயர்களையே வெட்டும் வழமை காணப்படுகின்றது. சங்க காலத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பானையோட்டுப் பொறிப்புகள் கிடைக்கின்றன ஆனால் அவற்றில் 80 விழுக்காட்டிற்கு மேல் ஆண்களின் பெயர்களே பொறிக்கப்பட்டுள்ளன. மிகச்சில ஓடுகளில் மட்டும் பெண்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணங்கள் விளங்கக்கூடவில்லை. ஒருவேளை இப்பானையோடுகள் கிடைக்கும் இடங்கள் வணிக மையங்களான படியால் அப்பானைகள் ஆண்கள் கள் விற்கும் பானைகளாக இருக்கலாம். அதனால் ஆண்கள் பெயரே பெரிதும் குறிப்பிடப்பட்டிருக்கலாம். அல்லது குடித் தொழிலாகப் பானை செய்யும் குயவர்களால் செய்யப்பட்ட மட்பாண்ட வகைகளை வண்டிகளில் ஏற்றிக் குடிகளின் வீடுகளுக்குச் சென்று வழங்கும் போது சிக்கல்கள் ஏதும் வராமல் இருத்தற்பொருட்டுக் குடும்பத் தலைவனின் பெயரையே பானைகள் செய்யும் போது கீறியிருக்கலாம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான மட்பாண்டங்களைச் சரியான முறையில் வழங்குதலுக்கு ஏற்புடையதாக இது அமைந்திருக்கலாம்.
ஐயை, அம்மாள், அம்மை, ஔவை, தாய், ஆயி, பாவை, நங்கை, மங்கை, பெண்டு, தேவி, நாச்சியார், ஆச்சி, பிள்ளை, பேச்சி என்பனவாகவும் அவற்றில் இகர அல்லது அள் இறுதி பெற்றும் பெண்களின் பெயர்கள் அமையும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான பல பெயர்களும் உண்டு. அன்னி, மணி, செல்லமணி, செல்வமணி, அடிகள், என்பன ஆர் விகுதி இருபால் பெயர்களாக அமையும். ஆண்களின் பெயர்கள் ஐயன், அப்பன், அத்தன், அரையன், ஆசான், தேவன், உடையார், பிள்ளை என்பனவற்றோடு அன் விகுதி பெற்றும் குடி, சாதியப் பெயர்களோடும் அமையும். தொழில் முறையால் அழைக்கப்பட்ட பெயர்கள் பிற்காலத்தில் சாதியப்பெயராகி இருபாலரையும் அழைக்கப் பயன்படுவனவாயிற்று. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரே பெயரை வைத்து அழைக்கும் முறை பண்டைக்காலத்திலிருந்தே வழங்கியதெனலாம். கொல்லிமலையை ஆண்ட மாவீரனான வல்வில் ஓரியிடம் ஓரி என்ற பெயரில் திறன் வாய்ந்த ஒரு குதிரையும் இருந்ததன் வழி இதனை அறியலாம்.
முள்ளூரை ஆண்ட காரி மன்னனிடம் காரி எனும் பெயருடைய குதிரை இருந்ததாகவும் இருவரும் அவரவர் பெயர்கொண்ட குதிரைகளின் மீதமர்ந்து போர் செய்தனர் என்பதினை,
“காரிக்குதிரை காரியொடு மலைந்த
வேரிக் குதிரை யோரியு மெனவாங்” (சிறுபாணாற்றுப்படை.110-111)
எனும் பத்துப்பாட்டு அடிகளால் அறியலாம். அத்தோடு பறவையின் பெயர்கொண்ட நெற்பெயர்கள் இருந்தமையை,
“சுடர்க் கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தஞ்”
(பெரும்பாணாற்றுப்படை.105)
எனும் பத்துப்பாட்டு அடிகளால் அறியலாம். இவ்வடிகளுக்கு உரை கூறிய நச்சர் “இராசாண்ணமென்னும் பெயர் பெறுகின்ற நெல்லென்றவாறு” என்றும் “இனிமின்மினி நெல்லென்பாருமுளர்” என்றும் கூறுவர். இதன்வழி ஒரே பெயர் உயர்திணைப் பெயராகவும் அஃறிணைப் பெயராகவும் வழங்கியமையை அறியலாம்.
III
சங்ககால மன்னர்களின் பெயர்களும், மக்களின் பெயர்களும் தமிழாகவே அமைந்தன. வடபுலத்தோடும் வடமொழியோடும் தொடர்புடைய வைதீகர்களின் பெயர்கள், சமண, பௌத்தத் துறவிகள் முதலானோர்களின் பெயர்கள் தமிழகத்தில் குடிபோந்த வேற்றுப்புலத்தார் பெயர்கள் முதலானவைகளே வடமொழிப்பெயர்களாக இருந்தன. ஆனால் பல்லவர் காலத்தில் வாணிக மக்களின் சமண, பௌத்த சமய மேலாதிக்கம் ஆட்சியாளர்களைப் பற்றியவுடன் வடமொழிப் பெயர்களின் செல்வாக்கும் பெருகிற்று. சாளுக்கியர்களிடமிருந்து இவ்வடமொழிப் பெயர்மரபைப் பல்லவர்கள் கைக்கொண்டனரா? என ஆய வேண்டியுள்ளது. பல்லவர்களுக்குப் பின்வந்த சோழர்களும் பாண்டியர்களும் தங்களது தமிழ் இயற்பெயர்களைத் தவிர்த்து வடமொழிப் பட்டப்பெயர்களைச் சூட்டலாயினர். ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் பாடப்பட்ட திருத்தலங்களும் அத்தலத்தின் இறைவன், இறைவி பெயர்களும் தமிழிலேயே இருந்தன. பிற்காலச் சோழர், பாண்டியர் காலங்களிலும் இந்நிலையே நீடித்தது. அவர்கள் புதிதாகக் கட்டிய கோயில்களிலும் இறைவன், இறைவி பெயர்களைத் தமிழிலேயே வைத்தனர். இதற்குச் சான்றாகத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் குறிப்பிடலாம்.
ஆனால் விசயநகர நாயக்கர் காலங்களில் தலப்பெயர்களும், இறைவன், இறைவி பெயர்களும் முற்றிலும் வடமொழி வயப்படுத்தப்பட்டன. இதன் தொடக்கமாகப் பிற்காலச் சோழர்காலத்தில் சாளுக்கியச் சோழர் குடிக் கலப்பில் பிறந்து சோழ அரியணையைக் கைப்பற்றிய முதலாம் குலோத்துங்கன் காலத்தினையே குறிப்பிடலாம். அவன் காலத்தில் இறைவன், இறைவி பெயர்கள் வடமொழிக்கு மாறியமைக்குச் சான்றாக கோனேரிராசபுரத்து உமா மகேஸ்வரன் கோயிலினைக் குறிப்பிடலாம். இக்கோயில் திருநல்லம் மாதேவர் கோயில் என்றே முதலாம் குலோத்துங்கன் காலத்திற்கு முன்புவரை கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது அதன்பின் குலோத்துங்கன் காலம் முதல் உமாமகேஸ்வரர் கோயில் என்று வடமொழியில் குறிப்பிடப்படுவதாயிற்று. விசயநகர நாயக்கர் காலத்தில் தமிழ்ப்பெயர்கள் மாற்றப்பட்டு வடமொழிப்பெயர்கள் சூட்டப்பட்டன. தெலுங்கு மன்னர்கள் தமிழ்மொழியை அறிந்திலர். அவர்கள் கோயிலுக்கு வரும்வேளையில் தாயுமானவர் எனச் சொன்னால் அவர்களுக்கு விளங்காது; கோயிலுக்குக் கொடையும் வழங்கார். ஆதலால் தாயுமானவர் மாத்ரு பூதேஸ்வரரானார். நிலத்து அமரான் கைலாசநாதரானார், ஏழவார்குழலி சுகுந்தகுந்தலாம்பிகையானாள். அங்கோல் வளைமங்கை முழுமையாக மொழிமாற்ற முடியாமல் தேக சுந்தரியாக ஆக்கி, மங்களநாயகியாக்கினர். விசயநகர ஆட்சிக் காலத்தில் தெலுங்குப் பார்ப்பார்கள் தமிழகக் கோயில்களில் பூசனைக்கு இருத்தப்பட்டு, தமிழ்ப் பட்டர்களும் சிவாச்சாரியர்களும் கோயில் மடப்பள்ளிக்குக் கலைக்கப்பட்டனர். இதுவும் தமிழ்ப் பெயர்களை விருப்பப்படி மாற்றிக்கொள்ள வழியமைத்தது. இறைவன், இறைவியர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டிப் பழக்கப்பட்ட தமிழர்கள் அவ்வடமொழிப் பெயர்களையே சூட்டத்தொடங்கினர்.
தமிழ் நிலங்களான சோழநாடு, சேரநாடு, பாண்டியநாடு, தொண்டைநாடு, கொங்குநாடு, ஈழநாடு ஆகிய பகுதிகள் அனைத்திலும் வாழும் மக்களுக்குத் தனித்துவமான பெயர் அமைவுகள் உண்டு. அவை அச்சமூக நிலவியல் அமைவை ஒட்டியதாக அமைந்தவை எனலாம். தமிழகத்தில் செந்தில் எனும் பெயர் போல் ஈழத்திலும் செந்தூரன் எனும் பெயர் வழக்கு மிகுதி. தமிழகத்தில் கந்தசாமி ஈழத்தில் கந்தையா. யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் காலத்தில் வைதீகமயப்படுத்தப்பட்டபோது கண்ணகி கோயில்கள் இராசராசேஸ்வரி கோயில்களாகவும் மனோன்மணியம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டன. மக்களுடைய பெயர்களும் வைதீகமாக்கப்பட்டு வடமொழி வயமானது.
பண்டைய நாளிலே பிள்ளைப்பேறு அளவிற்கு அதிகமாக இருக்கும் சிலர் தமது எட்டாவது பிள்ளைக்கு ‘சம்பூரணம்’ எனவும் ‘போதும் பரிபூரணம்’ என்று இனிப் பிள்ளைகள் வேண்டாம் எனும் பொருளில் பெயர் வைப்பர். ஆனால் ஆண் பிள்ளைகளை வேண்டாம் எனப் பெயர் வைத்ததாக அறிய இயலவில்லை. மேலே குறிப்பிட்ட இருபெயர்களும் பெண்பிள்ளைகளுக்கே உரியவை என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டைக்குழந்தைகளோ, இரட்டை மாடுகளோ பிறந்து விட்டால் அவற்றுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இராமன், இலட்சுமணன், இராமாயி, இலட்சுமி என்பனவாகப் பெயர் சூட்டுவர். பெண்ணும் ஆணுமாகப் பிறந்தால் நீலாம்பாள், நீலகண்டன் என்பனவாகப் பெயர் சூட்டுவர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ், சுரேஷ் என்பனவாகப் பெயர் சூட்டுவர். ராம், சாம் என்பனவாகவெல்லாம் வடமொழிப் பெயர்களைச் சூட்டுவதனைக் காணலாம். ஆனால் சீவக சிந்தாமணியில் ஒரு வண்டியினை இழுக்கும் கரிய, வெள்ளை நிறங்களையுடைய இணைக்காளைகளை காமனும் சாமனும் போல் எனத் திருத்தக்கதேவர் குறிப்பிடுவார். இதனை,
“மாமனு மருகனும் போலு மன்பின
காமனுஞ் சாமனுங் கலந்த காட்சிய
பூமனு மரி சிப்புல் லார்ந்த மோட்டின
தாமின மமைந்து தந்தொழிலின் மிக்கவே” (சிந்தாமணி.1/43)
எனும் அடிகளால் அறியலாம். சங்க இலக்கியத்திலும் உடன்பிறந்தோருக்கு நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்றும் அங்கவை, சங்கவை என்றும் பெயர் சூட்டிய மரபு உண்டு.
தமிழ்க்காப்பியப் பெயர்கள் இசைநயத்திற்கு ஏற்றனவாயும் இயற்பெயராயும் அமைந்தவை. கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை என்பனவான பெயர்களால் இவற்றை அறியலாம். ஆனால் வடமொழிப் பெயர்கள் நயத்திலும், பொருளிலும் சற்றே குறைந்தவை எனலாம். திருதராட்டிரன், துச்சாதனன், காந்தாரி, சத்ருக்கனன் என்பனவாகக் கொள்ளலாம். திருதராட்டிரன் எனும் பெயரின் இசைநயச் சிறப்பை வில்லிபாரதத்தினைப் படிக்கும் போது படிப்பவர் வாயுணரும். கம்பருக்குச் சத்ருக்கனன் பெயரின் இசைநயம் தெரிந்ததனால் அப்பெயர் வழங்கவேண்டிய இடங்களில் எல்லாம் ‘தம்பி’, ‘இளவல்’ என்றே கூறிப்போந்தார்.
தமிழ்க்காப்பியப் பெண்களின் பெயர்கள் எல்லாம் இயல்பாக தங்களுக்கே உரிய பெயர்களாய் இருக்க வடமொழியில் இது வேறுபட்டே இருக்கும். பெரும்பாலான வடமொழிக் காப்பியப் பெண்களின் இயற்பெயர்கள் இன்னதென்றே இன்றளவும் அறியத்தகுந்ததாக இல்லை. சான்றாகக் குந்தி-குந்திராசனின் மகள், திரோபதி–திரோபதராசனின் மகள் என்றும் பாஞ்சாலநாட்டு இளவரசி என்பதால் பாஞ்சாலி எனவும் பெயர்பெற்றாள் இவளது இயற்பெயர் கிருஷ்ணா (கரிய நிறமுடையாள்) எனக் குறிப்பிடுவர். கோசலை – கோசல நாட்டு இளவரசி, கைகேயி–கேகயநாட்டு இளவரசி என்பனவாக அமையும் இவையாவும் இயற்பெயர்களல்ல. அவற்றைத் தத்திதப் பெயர்கள் என வடமொழி இலக்கணங்கள் கூறும். காப்பியங்களில் எதிர்மறைப் பெயர்களைக் கையாளும் மரபு தமிழில் மிகக்குறைவு. ஆனால் வடமொழியில் இம்மரபு மிகுதியுமுண்டு. துச்சாதனன் என்றால் கெட்ட செய்கையையுடையவன் என்று பொருள். பெற்றோர் யாரும் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கெட்டவன் எனப் பெயர் வைப்பரோ? எதிர்மறைப் பெயர்களும் வடமொழியில் மிகுதி. விமலன், அமலன், நிரோஷன் என்பன போன்றவையும் அதனுள் அடங்கும். தமிழ்ப்பெயர்கள் குறித்த இக்கட்டுரையில் வடமொழிப் பெயர்கள் குறித்துச் சுட்டுதல் யாதனில் தமிழர்கள் வடமொழிப் பெயர்பால் கவர்ச்சி கொண்டு சார்தல் பற்றியதாலேயாம்.
தமிழில் தமிழர்கள் பெயர்வைத்தலைத் தடுத்தற் பொருட்டுத் திட்டமிட்டவர்கள் கைக்கொண்ட வகைமையில் ஒன்றுதான் பஞ்சாங்க அடிப்படையில் பெயர் வைக்கும் முறையை உருவாக்கியதாகும். தமிழெழுத்துகள் அனைத்தும் மொழிக்கு முதலாக வரா எனும் இலக்கண விதியை நன்குணர்ந்த அயலர் பஞ்சாங்கத்தில் மொழிமுதலாகா எழுத்துகளையும் வடமொழிக் கிரந்த எழுத்துகளையும் மிகுதியாகச் சேர்த்துப் பன்னிரண்டு இராசிகளைச் சேர்ந்தவர்களும் இவ்வெழுத்துகளிலேயே பெயர்கள் தொடங்கும் வண்ணம் வைத்தல் வேண்டும். குறிப்பிட்ட இராசிக்குக் குறிப்பிட்ட எழுத்துகளில் தொடங்கும் பெயர்களைச் சூட்டினால்தான் சிறப்பு என வகுத்துவிட்டார்கள். மேஷம் முதலாக மீனம் ஈறாக உள்ள இராசிக்கூட்டத்தில் பிறந்தவர்கள் பெயர் சூட்டும் முதல் எழுத்துக்களாகத் தொண்ணூற்றாறு எழுத்துகளைக் குறிப்பிட்டுள்ளனர். இவற்றில் முப்பத்தொன்பது எழுத்துகள் தமிழில் மொழி முதலாகா எழுத்துகளும், வடமொழிக் கிரந்த எழுத்துகளுமாகும். நாற்பத்து மூன்று தமிழ் எழுத்துகளே மொழி முதல் எழுத்துகளாகும். இவற்றிலும் மிகுதியான எழுத்துகள் அதிகப் பெயர்களைக் கொண்டிராதவை. பின்வரும் தமிழ் எழுத்துகளே பெயர் சூட்டலுக்குரியதாகப் பஞ்சாங்கங்கள் குறிப்பிடுகின்றன. அ, இ, உ, எ, ஒ ஐந்து உயிர் எழுத்துகளும், க, கா, கி, கு, கூ, கே, கோ, ச, சி, சு, ந, த, தி, தீ, து, தே, தோ, ந, நி, நெ, நோ, ப, பா, பி, பு, பூ, பெ, போ, ம, மி, மெ, மோ, யா எனும் முப்பத்துநான்கு உயிர்மெய் எழுத்துகளிலேயே பெயர்கள் தொடங்கும் வண்ணம் அமைத்துள்ளனர். இந்தக் கணக்கின்படி பார்த்தால் உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துக்களில் பெயர் தொடங்கக் கூடாது. ஆதன், ஆய் அண்டிரன், ஔவையார் போன்ற பெயர்களெல்லாம் இவர்கள் கணக்குப்படி பிழையானவை. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் ‘ஜெ, ஷோ,ஷி,ஹி,ஹே, ஹோ,ஜ, ஜீ, ஜு, ஜோ, ஸி, ஸீ, ஸெ, ஸொ, ஸ்ரீ எனும் கிரந்த எழுத்துகளும் ட, டி, டோ, டு, டே, ல, லி, லு, லே, லோ, ர, ரீ, ரு, ரே, யீ, யு, யே, யோ, ன்’ எனும் எழுத்துகளிலேயே பெயர்கள் தொடங்க வேண்டுமென்றால் தமிழர்கள் தமிழ்ச்சொல்லில் பெயர்வைத்தலே அரிதாகிப் போகும். ‘ஸ்ரீ’ எனும் வடசொல்லை எங்கு வடமொழி எழுத்துப்பட்டியலில் சேர்த்தார்களோ அறியவில்லை. இதன்படி பார்த்தால் கற்கடக இராசியில் பிறந்த யாரும் தமிழ்ப்பெயர்களைச் சூட்டிக்கொள்ள இயலாது ஏனெனில் அவ்வகைப்பாட்டில் கடகத்திற் பிறந்தவரின் பெயர்ப்பட்டியலில் ஓர் எழுத்துக் கூட தமிழ் எழுத்தாக இல்லை. இந்த எழுத்துப் பட்டியலைப் பார்த்தால் இது அனைத்து இனத்தவருக்கானதாகவும் கொள்வதற்கில்லை. ஏனெனில் வடவெழுத்துகளில் உள்ள வருக்க எழுத்து முறையை இப்பட்டியலில் பின்பற்றவில்லை. ஆதலால் இவை தமிழரின் தலைமேல் திணித்தலுக்காகவே உருவாக்கப்பட்டது எனலாம். இப்பட்டியல் இலக்கணமென்றால் இதற்கான இலக்கியங்களாக லலிதாசகஸ்ரநாமம், விஷ்ணுசகஸ்ரநாமம் முதலான நூல்களையும் வைத்துக்கொண்டனர் இதில் மலைமகளின் தமிழ்ப்பெயர்களோ, மாலவனின் தமிழ்ப்பெயர்களோ இடம்பெறவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
பஞ்சாங்க உருவாக்கம் போன்ற பணிகளைத் தமிழ்க் கணியர்களிடமிருந்து சமணர்களே முதன்முதலாகத் தட்டிப் பறித்தனர். சங்க இலக்கியத்தில் வழங்கும் உலோச்சனார் முதலான பல வடசொற் பெயர்கள் சமணருடையவையே. பௌத்தமும் அதே பணியையே செய்தது. இதற்குச் சான்றாக மணிமேகலையில் வரும் மாந்தரின் பெயர்களைக் குறிப்பிடலாம். தமிழ்ப்பெயர்களை அழித்தலின் வழித் தமிழரின் பண்பாட்டின் மீதும் நாகரீகத்தின் மீதும் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கித் தமிழர்களின் ஒழுக்க நெறிகளின் மீது ஓர் இழிவான கருத்தை விதைத்து அவர்களைப் பிற சமயங்கள் உயர்வானது எனும் கருத்தோட்டத்திற்குக் கொண்டுவந்து தங்களது சமயப் பரவலாக்கத்தினை மேம்படச் செய்தலுக்குத் தமிழ்ப்பெயர் அழிப்பு முதன்மையான முறையாகக் கையளப்பட்டுள்ளது. சமணம், பௌத்தம், வைதீகம், இஸ்லாம், கிறித்துவம் முதலான அனைத்து மதங்களும் தமிழ்ப்பெயர் சூட்டலில் ஒரு நன்மையும் செய்ததாக அறியக் கூடவில்லை. ஆனால் அம்மதங்களின் தூய நூல்கள் யாவும் தமிழில் பெயர் வைக்கக்கூடாது என எங்கும் குறிப்பிடவில்லை. இது இவர்களாகவே வைதீகர்களைப் பார்த்து வைத்துக்கொண்ட சூடாகும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை கத்தோலிக்கக் கிறித்துவத்தில் நல்ல தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டினர். பிறகு அவை வடமொழிப் பெயர்களாகவும் பாரசீகப் பெயர்களாகவும் மிகுந்து போயின.
இன்றைய சூழ்நிலையில் ஈழத்திலும் தமிழகத்திலும் வழங்கும் மக்கட் பெயர்களில் பல என்ன மொழிப் பெயர்கள் என்று அறியவியலாதவை. ஷ, ஷா, ஸி, ஸீ போன்ற ஓசைகளுக்கு முதன்மை கொடுப்பவை. பிற வடமொழிப் பெயர்களும் பாரசீகப் பெயர்களும் அரபிப் பெயர்களுமாகவே அமையும். தமிழ்மொழி தன்னுடைய மக்களுக்குப் பெயர்களை வழங்கும் தகுதியினை இழந்துவிட்டதா? என எண்ணத் தோன்றுமளவிற்குக் குப்பைப் பெயர்கள் மிகுந்துவிட்டன. இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து இன்றைய பெயர்களை ஆராய்வோர் தமிழ்நாட்டில் இக்காலக்கட்டத்தில் தமிழர்கள்தான் வாழ்ந்தனரா அல்லது வேறு ஏதோ கலப்பினத்தவர் வாழ்ந்தனரா? என்ற ஐயமே மேலோங்கும். ஈழத்தில் தமிழ்ப் பெயர்களை அழித்தமையில் மேற்கத்திய எண்ணியல் மூடநம்பிக்கைகளுக்குப் பேரிடமுண்டு. தமிழிலும் எண்ணியல் பெயர்கள் உண்டு. ஆனால் அவற்றை ஆய்ந்து பெயரிடுதலைத் தமிழர்கள் ஏனோ கைவிட்டுவிட்டனர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கமும் தமிழ் அறிஞர்களும் தமிழில் பெயரிடுவதன் இன்றியமையாமை குறித்து மக்களிடம் பெரிதும் பரப்புரை செய்தனர். இதன் பயனாய்த் தமிழில் பெயரிடுதல் தொடர்பான விழிப்புணர்வு தமிழகத்தில் சற்றுத் தோன்றியது. ஈழத்தைப் பொறுத்தவரை கிழக்கில் மட்டக்களப்புப் பகுதியில் நாட்டார் வழிபாடுகளும் கண்ணகி வழிபாடும் அம்மண்ணின் அறிஞர் பெருமக்களின் தமிழ்ப்பற்றும் அம்மக்களின் பெயர்களைப் பெரும்பாலும் தமிழ்ப் பெயர்களாகவே தக்க வைத்திருக்கின்றன. ஆனால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆறுமுக நாவலரின் வைதீகக் கோட்பாடு இருந்த தமிழ்க் கண்ணகி கோயில்களை எல்லாம் இராஜராஜேஸ்வரி கோயில்களாக மாற்றியதோடு தமிழ்ப்பெயர் சூட்டலிலும் ஆர்வம் காட்டியதாக அறியவியலவில்லை. ஈழப் போராட்டக் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ்ப் பெயரிடுதலின் இன்றியமையாமையைத் தமிழர்களிடம் விளக்கியது. பல போரளிகள் தங்களது இயற்பெயர்களைத் தவிர்த்து நல்ல தமிழ்ப்பெயர்களை இயக்கப் பெயர்களாகச் சூட்டினர். இவ்வியக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களும் கரிகாலன் எனும் இயக்கப் பெயருடையோரேயாவார். பிற போராட்ட இயக்கங்களிலும் இந்நிகழ்வுகள் காணப்பட்டன. புலிகளின் இயக்கத்தின் நூல் வெளியீட்டுத் துறையினர் நாற்பத்தேழாயிரம் தமிழ்ப்பெயர்களைக் கொண்ட பெருநூல் ஒன்றினைப் பதிப்பித்து வெளியீடு செய்துள்ளனர். இப்பணி, போற்றுதலுக்கு உரியதாக அமைகின்றது. தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டித் தமிழ் நாகரிகத்தினைப் பேணுவார்களாக.
இக்கட்டுரையின் விரிவஞ்சிப் பல விடயங்கள் எழுதவியலாது போயிற்று. பெயர்கள் விளியேற்கும்போது அடையும் வேறுபாடுகள், பெயர்களின் விகுதியமைதி, தெய்வப்பெயர் வரலாற்று அமைவுகள், பட்டப்பெயர் அமைவுகள், இக்காலத்தில் தமிழ்நாடு எங்கும் பெயர்வழங்கு முறைகள் போன்ற பலவற்றையும் தனித்தனிக் கட்டுரைகளாகக் கட்டுதலின்வழி இதன் மேலாய்வாக அவற்றைத் தொடர்ந்து காணலாம்.
உசாத்துணை நூல்கள்
- அருணாசல தேசிகர், சோ. குறுந்தொகை மூலம். 1 ஆம் பதி. சென்னை,
- அனந்தராமையர், இ.வை. கலித்தொகை: நச்சினார்க்கினியருரை. சென்னை: நோபில் அச்சுக்கூடம், 1125
- இராகவையங்கார்,ரா. தொல்காப்பியம்: செய்யுளியல். நச்சினார்க்கினியருரை. 1 ஆம் பதி. மதுரை: மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலப் பதிப்பு,
- இளம்பூரணர், உ. ஆ. தொல்காப்பியம் பொருளதிகாரம். 1 ஆம் பதி. சென்னை: கழக வெளியீடு,
- கணேசையர், சி. தொல்காப்பியம்: சொல்லதிகார மூலமும் சேனாவரையருரையும். 2 ஆம் பதி. சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்,
- சாமிநாதையர், உ.வே. சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லாருரையும். 2 ஆம் பதி. சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம்,
- சாமிநாதையர், உ.வே. ஐங்குறுநூறு மூலமும்: பழையவுரையும். 2 ஆம் பதி. சென்னை: கணேச அச்சுக்கூடம்,
- சாமிநாதையர், உ.வே. சீவக சிந்தாமணி மூலமும்: நச்சினார்க்கினியருரையும். 6 ஆம் பதி. சென்னை: கபீர் அச்சுக்கூடம்,
- சாமிநாதையர், உ.வே. பதிற்றுப்பத்து மூலமும்: பழையவுரையும். 1 ஆம் பதி. சென்னை: கணேச அச்சுக்கூடம்,
- சாமிநாதையர், உ.வே. பரிபாடல் மூலமும்: ஆசிரியர் பரிமேலழகரியற்றிய உரையும். 1 ஆம் பதி. சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம்,
- சாமிநாதையர், உ.வே. புறநானூறு மூலமும்: பழையவுரையும். 2 ஆம் பதி. சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம்,
- சாமிநாதையர், உ.வே. மணிமேகலை மூலம். 3 ஆம் பதி. சென்னை: கேசரி அச்சுக்கூடம்,
- சாமிநாதையர், உ.வே. பத்துப்பாட்டு மூலமும்: நச்சினார்க்கினியருரையும். 1 ஆம் பதி. சென்னை: கமெர்சியல் அச்சுக்கூடம், 1889
- நாராயணசாமி ஐயர், எ. நற்றிணை நானூறு. சென்னைப்பட்டினம்: சைவவித்யானுபாலனேந்திர சாலை. 1915
- ராகவையங்கார், ரா. அகநானூறு: மூலமும் பழைய உரையும், 3 ஆம் பதி. மயிலாப்பூர்: கம்பர் புத்தகாலயம்,
- சாமிநாதையர், உ. வே. பெருங்கதை. சென்னை: 6 ஆம் பதி. டாக்டர் உ. வே.சாமிநாதையர் நூல் நிலையம், 2000.
=======================================================================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
தமிழில் பெயர் என்னும் சொல்லின் உருவாக்கம், பெயர் என்னும் சொல் இலக்கிய, இலக்கண வழக்குகளில் இடம்பெற்றுள்ளமை, பெயர் என்னும் சொல் பல்வேறு பொருள்களில் கையாளப்பெற்றுள்ளமை ஆகியன குறித்துக் கட்டுரையின் முதற்பகுதி விரிவாக விளக்குகின்றது. கட்டுரையின் இடைப்பகுதி, பெயர்சூட்டுதல் குறித்த இலக்கியச் சான்றுகள், பெயர் சூட்டுதலுக்கு வழக்கப்பட்ட பொதுவான சொற்கள், மன்னர்கள் தங்களுடைய பட்டங்கள், குடிகள், முன்னோர் வழிப் பெயர்கள் எனப் பெயர் சூட்டிக்கொண்ட முறை ஆகியவற்றை விரிவாக விளக்குகின்றது. இறுதிப் பகுதி, தற்கால நடைமுறையில் சாதக கணிப்பின் அடிப்படையில் பெயர் சூட்டுதல் எவ்வாறு உள்ளது என்பதை விளக்கித் தனித்தமிழ் அடிப்படையில் அனைவரும் தமிழ் உணர்வோடு பெயர்களைச் சூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. பெயர் சூட்டல் குறித்த தமிழ்நாடு, யாழ்ப்பாணம் ஆகிய இரு நாட்டு மரபையும் இணைத்துக் கட்டுரையாளர் விளக்கியுள்ளமை பாராட்டத்தக்கது. கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.
=======================================================================================