-மேகலா இராமமூர்த்தி

கே. மோகன்தாஸ் எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்து, படக்கவிதைப் போட்டி 214க்கு அளித்திருப்பவர் சாந்தி மாரியப்பன். புகைப்படக்கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி!

பல்வண்ணங்களில் கண்கவர் வளையல்களும், இதழ்விரிந்த மலரும் நிறைந்த தாம்பாளத்தை இம் மங்கை ஏந்தியிருப்பது மங்கல வளையணி விழாவினை அணிசெய்வதற்கோ?

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு என்பதுதானே வாழ்வியல் அறிஞர் வள்ளுவரின் வாய்மொழியும்!

மங்கல நிகழ்வினைத் தன் கவிதையால் மெருகூட்ட வருகிறார் திரு. சுந்தர்! 

வளையணிப் பெருவிழா!

அழகே,
பிறைநிலவே,
பைந்தமிழை
கருவாக உருவாக்கிய
செம்மொழியே…..!
மழலைப் பருவத்தில்
மதிலேறி,
தாவணிப் பருவத்தில்
தடம் பதித்து,
சிறிய கனவுகளைச் சுமந்து
உலா வந்த சிட்டுக்குருவியே….!
உன்னைச் சிறைபிடிக்க
மணக்கோலம் கொண்டு
நானும் வந்ததன் பேராசை?
என் வீட்டின் அரியணையில்
மகாராணியாக உன்னை ஒருமனதாகப்
பிரகடனம் செய்தோம்.
என் கனவுகளை உன்
நினைவில் புகுத்தி
நான் இளைப்பாற
உன் மடி தந்தாய்!
ஒருநாளும் ஓய்வின்றி
உன் நிழலை அலையவிட்டாய்!
நம் குலம் தழைக்க
நீ சிந்திய வெட்கத்தால்
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கவைத்தாய்,
அள்ள அள்ளக் குறையாத
மகிழ்ச்சியை அள்ளித் தரும்
தங்கசுரபியைத் தாரமாக்கிய
கைம்மாறு கனியும் நேரம் இதுதானோ?
உன் ஆசைகளை அரங்கேற்றி,
என் சேவையை உனதாக்கி,
ஊர்கூடி உற்றார் உறவினர்
உன்னை வாழ்த்தி
அரிதாரம் பூசிய நிறைமாதக் கனியே,
இத்தருணம் நான்இடும் சந்தனமும்
உனக்கான சத்தியமே,
உன் கைகளில் நான் சூடும்
வளையணிபோல் மேன்மேலும்
உன்னை மெருகேற்றிப் பாதுகாவலனாய்
அனுதினமும் நான் சுமப்பேன்!

தன் வீட்டில் மகாராணியாய் அரியணை ஏறிய மனைவிக்கு நிகழும் வளையணி விழாவினைப் பூரிப்போடு கொண்டாடும் கணவனின் மனவுணர்வுகளைத் தன் கவிதையில் படம்பிடித்துக் காட்டியிருக்கும் திரு. சுந்தரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.