சிரிப்புக்கு இவர்தானே சிரபுஞ்சி!

(நகைச்சுவை எழுத்தாளர், கவிஞர், நடிகர் கிரேஸி மோகன் அவர்களின் மறைவுக்கு வல்லமையின் ஆழ்ந்த இரங்கல். வல்லமையில் அவர் எழுதிய பல்லாயிரம் வெண்பாக்களும் சந்தப் பாக்களும் அவர் புகழையும் ஆற்றலையும் உலகிற்கு முழங்கிக்கொண்டே இருக்கும். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார். வாசகர்கள், சக எழுத்தாளர்கள், நண்பர்கள், கிரேஸி மோகன் குறித்த நினைவுகளை வல்லமையுடன் பகிருமாறு அழைக்கிறோம் ([email protected])  – அண்ணாகண்ணன்)

காவிரிமைந்தன்

வாழ்கின்ற வாழ்க்கையில் வருகின்ற கவலைகள்
வாய்விட்டுச் சிரித்தால்தான் போகும்!!
ஆறறிவு மானுடர்க்கும் ஐந்தறிவு ஜீவன்களுக்கும்
அடிப்படையில் வேற்றுமை அதுதானே சிரிப்பு!!

பரபரப்பாய் இயங்கிடும் பம்பர கதியிலுமே
பல்லைக் காட்டிச் சிரிக்கும்போதே நோயகலும்!
யாரிதற்கு வழிவகுப்பார்? யாரை இங்கே அணுகிடலாம்?
கிரேஸி இருக்க ஏது பயம் என்றதுவே உண்மைதானே!!

இயல்பான நகைச்சுவையை இனிதாக வழங்கவல்ல
இரட்டையரில் இவர் ஒருவர்! ஹாஸ்ய கர்த்தா!!

நாடக மேடைகளை நாடுதோறும் சென்று நடத்தி
நகைச்சுவைக்கு நாங்கள் என்றே பேரெடுத்தவர்!!

திரையுலக ஜாம்பவான்கள் சிலரும்கூட கூட்டணிவைத்து
வெளிப்படையாய் வெற்றிக்குக் காரணம் இவரென்றாரே!!

எவ்வயது கொண்டவரையும் சிரிக்க வைத்து
இடைவெளி இல்லாமல் வயிறு குலுங்க வைத்து

திறம்படவே பலகாலம் பவனி வந்தார்!
இறையருளால் வெண்பாக்கள் இயற்றி வந்தார்!

இவருக்கு இணைசொல்ல யாருமில்லை
இறக்கும்வரை சிரிப்பதற்கே மறக்கவில்லை!

சிரிப்புக்கு இவர்தானே சிரபுஞ்சி!
கிரெஸி என்றால் கொண்டாட்டம்!
மோகன் என்றால் குதூகலம்!
கூட்டுக் குடும்பத்திற்கு எடுத்துக்காட்டு!
வார்த்தைக்கு வார்த்தை விஞ்சிநிற்கும்
வளமான நகைச்சுவை இன்பம்! இன்பம்!
மேடை நாடகங்கள் காண்பதற்கு
கூடும் மக்களின் கூட்டம் சாட்சி!
சிரிப்பலைகள் ஒன்றையொன்று அடங்குமுன்னே
அடுத்ததாக எடுத்துவிடும் சாதுர்யமென்ன?
மண்ணுலகில் வந்ததவர் காரணம் முடிந்ததோ?
விண்ணுலகில் சிரிக்கவைக்கப் புறப்பட்டாயோ?
புன்னகையை ஒருசிறிதும் மறக்காமல் பிறருக்கும்
எந்நாளும் வழங்கிட்ட வள்ளல் கிரேஸி புகழ்வாழ்க!!

அன்புடன்
காவிரிமைந்தன்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
சென்னை 600 075.

==============================================================

“காலம்”

மீ.விசுவநாதன்

வித்தையுண்டு நல்ல விநயமுடன் ஆழ்ந்ததோர்
பக்தியுடன் நற்பேறு பாட்டெழுதும் சக்தியுண்டாம்
இத்தனையும் எங்கள் கிரேசிமோக னுக்குண்டாம்
சித்தத்தில் வைத்தான் சிவன்.

(660) 10.06.2019

==============================================================

1 thought on “சிரிப்புக்கு இவர்தானே சிரபுஞ்சி!

 1. நகைச்சுவை..
  நமை இத்தருணம்..

  திகைப்புக்குள்ளாக்கி
  துன்பத்திலாழ்த்தி..
  மீளாத்துயில் கொண்டது..!

  நம் மனங்களில்..
  என்றென்றும்..
  மாளாத நிலை பெற்றது..!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க