நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-51
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-51
51. தெரிந்து தெளிதல்
குறள் 501:
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
நியாயமாவும், நாணயமாவும், மொற இல்லாத சந்தோசத்த தேடாதவனாவும், தன் உசிரக் கூட கொடுக்க பயந்துக் கிடாதவனாவும் ஒருத்தன் இருக்கானானு அறிஞ்ச பொறவு தான் அவன வேலைக்கு வைக்கணும்.
குறள் 502:
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு
குத்தமில்லாதவனாவும் , பழி பாவத்துக்கு அஞ்சுதவனாவும் இருக்கவனத் தான் ஒசந்த குடில பொறந்தவனா நம்பித் தெளியணும்.
குறள் 503:
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு
அரிதான நூல்கள படிச்சவரு குத்தமேதும்இல்லாதவரு னு புகழப்படுதவங்க கிட்ட கூட கவனிச்சி பாத்தோம்னா அறியாம இல்லாம இருக்காது.
குறள் 504:
குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
ஒருத்தரோட கொணத்தயும் , குத்தங்களையும் ஆராஞ்சு ரெண்டுல எது அதிகம்னு தெரிஞ்சிக்கிட்ட பொறவு அவரப் பத்தின தெளிவான முடிவுக்கு வரணும்.
குறள் 505:
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்
ஒருத்தர் செய்யுத காரியங்கள வச்சி அவரோட கொணம் ஒசந்ததா அல்லது தாழ்த்தியா னு தெரிஞ்சிக்கிடலாம்.
குறள் 506:
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி
சொந்தபந்தத்துல ஒட்டுதல் இல்லாதவங்கள எந்த வேலைக்கும் நம்பக்கூடாது ஏம்னா அவுகளுக்கு ஒலகத்தப் பத்தி எந்தக் கவலயும் இல்லாததால பொல்லாப்புக்கு அஞ்சமாட்டானுவ. .
குறள் 507:
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்
அறிஞ்சிக்கிட வேண்டியத அறிஞ்சிக்கிடாம இருக்கவங்கள அவுக மேல இருக்க பாசத்தால தேர்ந்தெடுக்கது அறியாம மட்டுமில்ல. அதனால ஒண்ணுக்கும் பிரயோசனமில்லாம போவும்..
குறள் 508:
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்
ஒருத்தன் ஆராஞ்சு பாக்காம தனக்கு தொணையா ஒருத்தர தேர்ந்தெடுத்து வச்சிக்கிட்டாம்னா அவனுக்கு மட்டுமில்லாம அவன் வாரிசுகளுக்கும் அது செரையா முடியும்.
குறள் 509:
தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்
நல்லா ஆராஞ்சு அறிஞ்சுக்கிட்ட பொறவு ஒருத்தர் மேல நம்பிக்க வைக்கணும். ஆராஞ்சு பாராம யாரயும் நம்புதது கூடாது.
குறள் 510:
தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
ஆராயாம ஒருத்தர தேர்ந்தெடுக்குததும் , சோதிச்சு தேர்ந்தெடுத்த ஒருத்தர சந்தேகப்படுததும் நீங்காத தொயரத்த கொடுக்கும்
(அடுத்தாப்லயும் வரும்…)