விண்ணுலகத்தில் கிரேஸி நாடகம்

0

-விஜய்பிரகாஷ்

“கிரேஸி மோகன்” என்கிற பெயர் தெரியாதவர்கள் கூட, அவரின் நகைச்சுவைகளை ரசித்திருப்பார்கள். கிரேஸி மோகன் இல்லாமல் கமல்ஹாசனின் நகைச்சுவை படங்கள் கிடையாது என்றே சொல்லலாம். அபூர்வ சகோதர்களில் ஆரம்பித்து மைக்கல் மதன் காம ராஜன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் என்று பட்டியல் நீளும். ஒவ்வொரு படமும் நகைச்சுவையில் தனித்து விளங்கும். அதிலும் பஞ்சதந்திரம் படம் இன்று பார்த்தாலும், எதோ கவலையில் இருப்பவர் கூட சிரித்துவிடுவர். அவரின் வசனத்திற்காக திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்ததுமுண்டு.

மைக்கல் மதன காம ராஜனில்,

குஷ்பு – யூ ஆர் நாட்டி

கமல் – நான் நாட்டின்னா நீ கம்முனாட்டி

காதலா காதலா படத்தில்,

“நாமளும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நிறைய  அனாதை குழந்தை பெத்துக்கலாம்”

பஞ்சதந்திரம் படத்தில்,

“பர்தார்ஜி சாடி”

“சாபூ த்ரீ இல்ல.. சா பூ ஃபோர்”

மேகியும் மைத்திலியும் சந்திக்காமல் சாமாளிக்கும் காட்சி என்று படத்திற்குப் படம் நிறைய எடுத்துக்காட்டு சொல்லி சிரிக்கலாம். தேடினேன் வந்தது படத்தில் பிரபுவிடம் கனவைப் பற்றி பேசும் காட்சி பார்க்கும் போது, அப்பொழுதே ஹாலிவுட் இன்செப்ஷன் படத்தைப் போன்ற கதையை நகைச்சுவையாய் சொல்லியுள்ளாரே என்ற ஆச்சரியமாக இருக்கும். மகளிர் மட்டும் படத்தில் பிணமான நகேஷுடன் தலைவாசல் விஜய் சண்டை போடும் காட்சியெல்லாம் அவருக்கே தனித்துவமான நகைச்சுவை. வியட்னாம் காலனி, அருணாச்சலம், ரட்சகன், பூவெல்லம் கேட்டுபார் போன்ற அரசியல் காதல் படங்களுக்கும் திரைக்கதைகளும் வசனங்களும் எழுதியிருக்கிறார். வசனகர்த்தாவாய் ஒரு பக்கம் இருக்க, கிரேஸி மோகன் ஒரு நடிகரும் கூட. திரையில் குணச்சித்திர பாத்திரங்களிலும் அவருடைய நாடகங்களிலும் நடித்திருக்கிறார். அவரது மேரேஜ் மேட் இன் சலூன், கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், மீசை ஆனாலும் மனைவி போன்ற  நாடகங்கள் எல்லாம் நினைத்து நினைத்து சிரிக்க வைப்பன.

நாடகத்தில் அவருக்குப் பக்கபலமாய் அவரது தம்பி மாது இருந்தார். இருவரையும் ஒரு சேர பார்த்தாலே காரணமின்றி சிரிப்பு வந்துவிடும். தொலைக்காட்சியிலும் அவரது நாடகங்கள் பார்த்து வளர்ந்த காலமுண்டு. மாது சீனு, நில் கவனி கிரேஸி, கிரேஸி டைம்ஸ் எல்லாம் பார்த்து வயிறு குலுங்க சிரித்ததெல்லாம் நீங்கா நினைவுகள். கிரேஸி மோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி கேட்ட போது, விரைவில் குணமாய் வந்துவிடுவார் என்ற நம்பிகையில்தான் அடுத்த வேலையை கவனிக்க ஆரம்பித்தேன்.ஆனால், கொஞ்ச நேரத்திலேயே கிரேஸி மோகன் இறந்துவிட்டார் வதந்தி வரத் தொடங்கியது. மனதும், அது உண்மையாக இருக்கக் கூடாது என எண்ணுகையில் அவர் அதை மெய்ப்பித்து என்னைப்போன்ற லட்சோப லட்சம் ரசிகர்களைப் பிரிந்து சென்றுவிட்டார். அதைக் கேட்டபின் என்னால் எந்த செயலையும் செய்ய முடியவில்லை. உடனே ஏதாவதொரு அவரது நகைச்சுவையைத்தான் பார்க்கச் சொன்னது மனம். இனி அவரது நகைச்சுவைகளைப் பார்த்து சிரிக்கும்போது, அந்தச் சிரிப்பில் மென்சோகம் கலந்திருக்கும். கிரேஸி மோகனின் மறைவு திரையுலகத்திற்கும் நாடக உலகத்திற்கும் பெரிய இழப்பு. அவரைப் போன்று ஒருசேர சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வசனகர்த்தாக்கள் எழுத்தாளர்கள் இனி வருவார்களா என்பது சந்தேகமே.

இனி மேலோகத்திலும் அவரது ஏதாவதொரு நாடகம் அரங்கேறி, கடவுள்களையும் தேவர்களையும் சிரிக்க வைக்கட்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *