விடையறியா வினாக்கள்

-சக்தி சக்திதாசன்
நான் இங்கிலாந்துக்குள் நுழைந்து நாற்பத்தைந்தாவது ஆண்டில் கால் பதித்திருக்கிறேன். இந்த 45 வருட காலத்தினுள் நான் கண்ட மாற்றங்கள் பல. இம்மாற்றங்களின் ஊடாக நான் பயணிக்கும்போது என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் பல. நாட்டினில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கத்தினால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறம், இம்மாற்றங்களைச் சரியான வகையில் உள்வாங்கிக் கொள்ளாமல் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டதினால் என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மறுபுறம். 18 வயது முடிவுற்று பத்தொன்பதாவது ஆண்டில் காலடி வைத்த நிலையில் மாணவனாக உள்நுழைந்த எனக்கும் இன்று 63வது வயதை நோக்கி நடைபோடும் எனக்கும் இடைப்பட்ட இக்காலத்தின் வாழ்க்கை மாற்றங்கள் தந்த அனுபவச் செழிப்புகள் கணக்கிலடங்காதவை.
மாணவனாக நுழைந்தபோது அன்றைய என் முன்னால் இருந்த இலட்சியம் வேறோர் பார்வையைக் கொண்டிருந்தது. கல்வித் தகமைகளை வெற்றிகரமாகப் பெற்றுக் கொண்டு தாய்நாட்டிற்குத் திரும்பவேண்டும் எனும் முனைப்பு அன்ரைய என் பல சக மாணவர்களுக்கு இருந்தது போல் எனக்கும் ஒரு முக்கிய இலட்சியமாகவே இருந்தது. பின் எப்படி 45 வருடங்கள் ஓடிய பின்பு இன்னமும் இந்த இங்கிலாந்து நாட்டில் ஒரு மாணவனாக அல்லாமல் ஓய்வூதியம் பெறும் ஒரு ஜக்கிய இராச்சியப் பிரஜையாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்? இம்மாற்றத்துக்கு உரிய காரணத்தைத் தேடி பல சமயங்களில் என் உள்ளத்தில் விரிவான சுய அலசல்கள் எழுவதுண்டு.
அன்றைய மாணவ வாழ்க்கையில் ஜக்கிய இராச்சியத்தின் அரசியல் போக்குகள், அரசியல் மாற்றங்கள், நாட்டின் தலைவர்களின் கொள்கைகள் இவற்றைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருந்ததற்குக் காரணம் அதைப்பற்றிய ஆர்வம் இருக்கவில்லை என்பதோடு அது எனக்கு தேவையற்ற ஒன்று எனும் மனப்பான்மையும் இணைந்திருந்தது என்பதுதான் உண்மை. அன்றைய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்களின் வகையில் ஏற்படுத்தும் மாற்றங்களின் தாக்கங்களைப் பற்றி காலத்தின் கட்டாயத் தேவையினால் அறிந்து கொள்ள வேண்டிய தேவையிருந்தது.
எனது வாழ்வின் வாழ்வாதரத்திற்காக படித்துப் பட்டம் பெற வேண்டும் எனும் முனைப்பில் மிகவும் சிரமத்துக்குள்ளான நிலையில் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது அவ்வாழ்க்கையில் தனிப்பட்ட எனக்கு ஏற்படும் சிக்கல்களைப் பற்றிய மனத்தாங்கல் இருந்ததேயொழிய ஒரு வெளிநாட்டு மாணவனாக கல்வி கற்றுக் கொண்டு வாழவும் வழி வகுத்துக் கொடுத்த ஜக்கிய இராச்சியத்தின் ஆதரவைப் பற்றிய அனுமானத்தை சரியான வகையில் உள்வாங்கியிருக்கவில்லை எனபதுவே உண்மை. பெரிய பிரித்தானிய எனும் பெயரில் எமது தாய்நிலங்களை ஆக்கிரமித்திருந்தவர்கள் இந்நாட்டவர் எனும் அபிப்பிராய பேதத்தோடு இந்நாட்டிற்குள் நுழைந்த எனக்கு அக்கால மனநிலை மாறிய வித்தியாசமான கால கட்டத்தில் விசாலமான பார்வையோடு வாழும் மக்கள் மத்தியில் வாழ்கிறோம் என்பது புரியாமல் இருந்ததில் வியப்பொன்றுமில்லை.
45 வருடங்கள் என்பது நாலு தசாப்தங்களை உள்ளடக்கியிருக்கிறது இக்காலத்தினுள் மாணவனாக இருந்த நான் கணவனாக , தந்தையாக, இன்று ஒரு தாத்தாவாக மார்றம் பெற்றிருக்கிறேன் என்பதுவே கண்முன்னால் கணப்படும் உண்மைகள். இப்பாத்திர மார்றங்கள் எனக்குக் கொடுத்த அனுபவப் பாடங்களோடு எனது நீண்டகால வாழ்க்கையும் பிணைந்திருப்பதினால் அரசியல் மார்ரங்களை கூர்ந்து நோக்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது. நான் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த ஒரு புலம்பெயர் மாணவன் எனும் போது எமை ஒரு தனிக்குழுவாக எம்மோடு ஒத்தவர்களோடு இயங்குவது வழக்கமாகவிருந்தது. அந்த நிலையிலிருந்து ஒரு ஜக்கிய இராச்சியப் பிரஜையாக இங்கிலாந்து சமுதாய மாற்றங்களின் தாக்கத்துக்கு முகம் கொடுக்க வேண்டியவனாக மாறிய போது அக்குழுநிலை மனப்பான்மையை மார்றி சமுதாயத்தோடு , மற்றைய சமூகங்களோடு இணைந்து செயலாற்ற வேண்டிய தேவையிருந்தது.
இக்காலகட்டத்தினுள் எனது கல்விக் காலத்தை முடித்துக் கொண்டு பணியாற்ற வேண்டிய நிலையில் நிலையான ஒரு பணியைப் பெற முன்பு பல இடங்களில் மாறி, மாறி பணிபுரிய வேண்டிய தேவையேற்பட்டது. அப்போது பல சமூகத்தினரோடும் இணைந்து பணியாற்றத் தேவையிருந்தது. அத்8உவரை பிரிந்து வாழ்ந்த சூழல் மாறி அனைவரும் மனிதர்களே அவர்களின் உணர்வுகளும் எமைப் போன்றதே அவர்களும் என்னைப் போல பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துத்தான் வாழ்கிறார்கள் எனும் உண்மை புலப்பட்டது. எமது மொழி, எமது கலாச்சாரம் என்பன எமக்கு அத்தியாவசியமானவை எனும் உண்மை ஒருபுறம் இருக்க, அவற்றின் முக்கியத்துவத்துக்கு முன்னிலை கொடுத்து அடுத்தவரின் கலை , கலாச்சாரத்தை முற்று முழுதாகப் புறக்கணிக்கும் மன்ப்பன்மையைத் தவிர்த்துக் கொள்ளும் மனப்பக்குவம் தேவைப்பட்டது.
நாம் வாழ்ந்த காலம் வேறு எமது குழந்தைகள் இன்றைய சமுதாயத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் வேறு. நிற வேற்றுமை, இனத்துவேஷம் என்பன ஆங்காங்கே சில, சில இடங்களில் என்னை எதிர் கொன்டாலும் நான் நிலையான பணிபுரிந்த நேரத்தில் அத்தகைய வேறுபாடுகள் என்றுமே எனது முன்னேற்றத்தை தடுக்கவில்லை. மாறாக இந்நாட்டவர்கள் எனக் கருதப்படும் பெரும்பான்மை இனத்தவர் ஒன்றாகப் பணிபுரியும்போது நேர்மையான, கடுமையான உழைப்பை இனங்கண்டு அதற்குரிய வேளைகளில் அதற்குரிய உயர்வைப் பெற்றுத்தந்தார்கள் என்பதுவே உண்மை. ஆனால் பல சமயங்களில் எம்முள் நாம் கொண்ட தாழ்வு மனப்பான்மையால் எம்மை நாமே ஒதுக்கிக் கொள்ளும்போது அடுத்தவர்கள் எம்மை விலக்குவது போலவே தென்படும் ஒரு சூழலில் பலர் எதிர்மறையான அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளேன்.
இந்த 45 வருட காலத்தில் இந்நாட்டில் வந்து குடியேறிய பல வெளிநாட்டவர் பல சூழ்நிலைகளின் நிமித்தம் இங்கு வந்திருக்கிறார்கள். வந்த னைவரும் ஏதோ ஒரு வகையில் தமது வாழ்வினை நன்கு தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுவே உண்மை. ஆனால் அதிலே எத்தனை பேர் உலசுத்தியுடன் இந்நாட்டினைத் தமது சொந்த நாடாகக் கருதி அதன் முன்னேற்றத்தை மனதில் கொண்டு உழைக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே ! இந்நாடு வாழ்வில் தடுக்கி விழுந்தோருக்கு கைகொடுக்கும் வகையில் கொடுக்கும் உதவிகளை பல முறையர்ற வகையில் பெற்றுக் கொள்ளும் தந்திரோபாயங்களை பலர் மேற்கொள்ளுகிறார்கள் என்பது துயரத்துக்குரிய உண்மையாகும். அத்தோடு பொருளாதாரச் சிக்கல்களினால் எழும் வீட்டு வசதியின்மை, பாடசாலைகளில் குழந்தைகளுக்கு போதிய இடமின்மை, வைத்தியசாலைகளில் வைத்தியத்துக்காக காத்திருக்கும் கால அவகாசத்தின் நீடிப்பு என்பன இந்நாட்டு மக்கள் என்று கருதப்படுவோரின் (இதில் இங்கு குடியுரிமை பெர்று இந்நாட்டு பிரஜைகளாகிய பல வெளிநாட்டவரும் அடங்குவர்) மனதில் வெளிநாட்டவரின் குடியேற்றக் கொள்கை மீதான கண்ணோட்டத்தை மிகவும் எதிர்மறையாக மாற்றியுள்ள நிலையில் இன்றைய அரசியல் சூழல் இந்த 45 வருட காலத்தில் நான் என்றுமே கண்டிராத வகையில் ஒரு முக்கியமான் சந்தியில் நிற்கிறது.
இனத்துவேஷம் கொண்டவர்கள் குளிர்காய்வதற்காக இச்சூழலைப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கிறேன். அமேரிக்காவில் ஆரம்பித்த மாற்றம் இன்று ஜரோப்பிய நாடுகளில் முக்கியமானவைகளையும் தொற்றிக் கொண்டதோ எனும் ஜயம் எழும் வகையில் பலநாடுகளின் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.
இவையனைத்துக்கும் இருக்கும் ஒரேயொரு ஒற்றுமை வெளிநாட்டவரின் வருகைக்கான எதிர்ப்பு ஒன்றே. கட்டுப்பாடின்றி வெளிநாட்டிலிருப்பவர்கள் மற்றைய நாடுகளில் குடியேறுவது என்பது ஆதங்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பது மறுக்கப்பட முடியாதது. ஆனால் இவ்வுணர்வு ஒரு இனத்துவேஷ வெறியாக மாறி இனக்கலவரங்களைத் தூண்டும் அளவிர்குச் செல்ல விடாமல் இன்றைய அரசியல் தலைவர்கள் கட்டுப்படுத்துவார்களா? என்பதுவே கவலைக்குரிய கேள்வியாகும்.
இங்கிலாந்து நாட்டிலே 45 வருடங்களாகப் புலம்பெயர் வாழ்வினை மேற்கொள்ளும் என் முன்னால் இன்று நிகழும் அரசியல் மாற்றங்கள் மனதில் சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது எனக்குள் இத்தகைய உணர்வை முதர் தடவையாக ஏற்படுத்தியதான்ல் கொஞ்சம் சத்தமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இன்றைய அரசியல் விளையாட்டுத் திடலில் நான் ஒரு சாதாரண பார்வையாளனே ! வினாக்களுக்கு விடை காலத்தின் கைகளிலோ?