மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா 

உறவுகள் வாழ்வில் என்றும்
உணர்வுடன் கலக்க வேண்டும்
அளவிலா அன்பை நாளும்
அள்ளியே வழங்க வேண்டும்
தெளிவுடன் என்றும் வாழ
வழியினை காட்ட வேண்டும்
நலமுடன் இருக்க வேண்டில்
நாடுவோம் நல்லுறவை என்றும்!

பற்பல உறவை எங்கள்
பண்பாட்டில் காணு கின்றோம்
பாட்டியாய் தாத்தா என்று
பரம்பரை வளர்ந்தே போகும்
பெரியம்மா சித்தி அத்தை
பெரியப்பா மாமா மச்சான்
அன்புடை அக்கா அண்ணா
அருகினில் வந்தே நிற்பார்!

ஆசையாய்க் கொஞ்சும் அம்மா
ஆவலாய் அணைக்கும் அப்பா
கோபமாய்க் கிள்ளும் மாமி
கொஞ்சியே பேசும் மச்சாள்
பாசமாய்ப் பார்க்கும் தங்கை
பரிவுடன் அணைக்கும் பாட்டி
நேசமாய் நிறையும் உறவால்
நெஞ்சமே நிறையும் வாழ்க்கை!

இத்தனை உறவைக் காட்டும்
எங்களின் பண்பாட்டைப் பார்க்க
எத்தனை பெருமை என்று
எண்ணி நாம் பார்ப்பதில்லை
தமிழிலே நிறைந்து நிற்கும்
அமிழ்தான உறவை நாங்கள்
அகமதில் எண்ணி எண்ணி
ஆனந்தம் அடைவோம் நாளும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *