-செண்பக ஜெகதீசன் 

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉ மையந் தரும்.
-திருக்குறள் -845(புல்லறிவாண்மை)

புதுக் கவிதையில்…

கற்றிராத நூற்களையும்
கற்றனவாய்க் காட்டி,
அதன்படி
புல்லறிவாளர் வாழ்வது,
அவர்
குற்றமறக் கற்ற நூலிருப்பின்
அதிலும்
மற்றவர்க்கு
சந்தேகம்தான் எழும்…!

குறும்பாவில்…

கல்லா நூற்களைக் கற்றதாய்க் காரணங்காட்டிப்
புல்லறிவாளர் அவ்வாறு ஒழுகுதல், பிறர்க்கு
அவர் கற்றநூலிலும் சந்தேகமே…!

மரபுக் கவிதையில்…

நல்ல நூற்களைக் கற்றறிந்ததாய்
நடித்து நூற்கள் அவற்றினிலே
சொல்லிய வழியில் ஒழுகுவதாய்ச்
சொல்லி யொருவன் நடந்தாலே,
எல்லோ ருக்கும் ஐயம்எழும்
எடுத்துப் படித்த நூல்களிலே
புல்லறி வாளன் குறைவறவே
படித்த நூலும் பயனிலையே…!

லிமரைக்கூ..

நந்நூற்கள் கற்றதாய் நடிப்பு,
அதன்படி ஒழுகும் புல்லறிவாளனை ஐயுறுவர்
உண்மையிலவன் நூல் படிப்பு…!

கிராமிய பாணியில்…

செயல்படு செயல்படு
நல்ல அறிவோட செயல்படு,
வேண்டவே வேண்டாம்
கேடுகெட்ட அறிவே..

படிக்காத நூலெல்லாம்
படிச்சதாக் காட்டி,
அதுபடியே நடக்கிறதா
நடிக்கும்
கொற புத்திக்காரன்
உண்மயிலயே
கொறயில்லாமப் படிச்ச
நூலுலயும் எல்லாருக்கும்
சந்தேகம் வந்துடுமே..

அதால
செயல்படு செயல்படு
நல்ல அறிவோட செயல்படு,
வேண்டவே வேண்டாம்
கேடுகெட்ட அறிவே…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *