குறளின் கதிர்களாய்…(268)

-செண்பக ஜெகதீசன்…
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாருங் கள்வரும் நேர்.
-திருக்குறள் -813(தீ நட்பு)
புதுக் கவிதையில்…
நட்பினால் பெறும்
பயனை அளவிட்டுப் பார்த்து
நட்பு கொள்பவரும்,
பிறர் கொடுக்கும்
பொருளையே மதித்துப் பெறும்
பொதுமகளிரும்,
பிறர் பொருளைக் களவாடும்
கள்வரும்
தம்முள் ஒப்பாவரே…!
குறும்பாவில்…
பயன்கருதிப் பார்த்து நட்பாவோர்,
பணத்தை மதித்துப்பெறும் கணிகையர், கள்வர்,
குணத்திலிவர் தம்முள் ஒன்றே…!
மரபுக் கவிதையில்…
பயனதை யளந்து பார்த்தேதான்
பழகி நட்பைக் கொள்வோர்க்கு,
அயலார் தம்முடன் உறவாடி
அவர்தம் பொருளதைப் பெற்றிடவே
தயவாய் நடித்தே ஏமாற்றும்
தன்மை கொண்ட பொதுமகளிரும்,
அயர்ந்தால் அடுத்தவர் பொருள்திருடும்
அறமிலாக் கள்வரும் ஒப்பாமே…!
லிமரைக்கூ..
நட்பின் பயனதென்ன வென்றே
ஆய்ந்துவரும் நண்பர், கணிகை, கள்வர்
ஆகியோர் தம்முள் ஒன்றே…!
கிராமிய பாணியில்…
நட்புவேண்டாம் நட்புவேண்டாம்
நல்லகொணம் இல்லாத
பொல்லாதவங்கூட நட்புவேண்டாம்..
பயனா என்ன கெடைக்குமுண்ணு
பாத்து ஆராஞ்சி
நட்புகொள்ள வரும் பொல்லாதவனும்,
ஆசகாட்டி அயலாருகிட்ட
பணம்புடுங்கிற பொதுப்பொம்புளயும்,
அடுத்தவன் பொருளத் திருடுற
திருட்டுப் பயலும்,
இவுங்க எல்லாரும்
கொணத்தில ஒண்ணுதான்..
அதால
நட்புவேண்டாம் நட்புவேண்டாம்
நல்லகொணம் இல்லாத
பொல்லாதவங்கூட நட்புவேண்டாம்…!