படக்கவிதைப் போட்டி 225-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

திரு. பிரேம்குமாரின் இந்நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டி 225க்கு உரியதாக வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள்!

கறையான்களால் தின்னப்படுகின்ற முதிய ஆலமரத்தை அதன் விழுதுகள் வீழாமல் ஊன்றிக் காப்பதுபோல், முதுமைவந்து இரண்டாம் குழந்தைப்பருவத்தை (second childishness) அடைந்துவிட்ட தந்தையைத் தனயன் தாங்கிப்பிடித்தால் அவர் வீழமாட்டார்! தலை தாழமாட்டார்!

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய்
 மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை
 தந்தைகண் தோன்றின்தான் பெற்ற
புதல்வன்
 மறைப்பக் கெடும். (நாலடி: 197) 

இப்படமும் இதன் பின்னாலிருக்கும் அருளப்பரின் அருள்மொழிகளும் எத்தகைய சிந்தனைகளை நம் கவிஞர்களுக்கு அளித்திருக்கின்றது என்று அறிந்துவருவோம்!

*****

முதியவர் தம்முடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதையும், முடிவாகத் தம் பிள்ளைகள் இருக்குமிடமே தமக்கு பிருந்தாவனம் என்று அவர்களை நாடிச் செல்வதையும் இக்கவிதையில் அழகாய்ச் சொல்லியிருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

வாழ்க்கை

ஆருயிர் தந்தாய் நீ
அடையாளமாய் அம்மை அப்பன்
அன்பை மட்டும் பொழிந்து ஆளாக்கிட
வளர்ந்து நின்றேன் நான்!

அன்பாய்ப் பேசிச் சிரித்து
இதயத்தை வென்றாள் அவள்
அத்தனையும் மறந்து மயக்கத்தில்
அவள் கரம் பிடித்தேன் நான்!

இதயங்கள் இணைந்தது இல்லறத்தில்
இன்பத்தில் திளைத்திடும் மனம்
பொய்யாய்ப் போகும் மெய்கள் இணைந்திட
நாம் என்று ஆகினோம் அவளும் நானும்!

உறவுக்கு சாட்சியாய் ஒன்றுக்கு இரண்டாய்
பிறந்தது ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய்
மகனாய் மருமகளாய் இருந்த எம்மை
தந்தை தாய் என்று உயர்த்தினாய்!

எங்கள் இளமை மெல்ல மறைய
இடம் பெயர்ந்து சென்றனர் இவர்கள்
மகள் புகுந்த வீட்டிற்கும்
மகன் தனி குடித்தனத்திற்கும்!

ஒருவருக்கு ஒருவர் துணையாய்த்
தனிமையில் இருக்கையில்
பிள்ளைகளுக்குப் பிள்ளைகள் பிறந்தது
எங்களைத் தாத்தா பாட்டி என்று உயர்த்தியது!

துணை வேண்டி இருவரும்
துணையாய் இருந்தவளைப் பிரித்து
அவளுடன் அவளும் இவனுடன் நானும்
தனித்தனியாய் வேதனையுடன் அவளும் நானும்!

உள்ளுக்குள் வேதனையை வைத்து
புன்னகை பூட்டி ஓடி ஓடி உழைத்தவள்
இதயம் இயங்காமல் நின்று போனது
தனியாய் எனைத் தவிக்கவிட்டுச் சென்றது!

முதுமை எனை முத்தமிட்டதும்
முத்தமிட்டவள் விட்டுப்போனாள்
கரம் பிடித்தவன் கையால்
கொள்ளிதனை வாங்கிச் சென்றாள்!

நிமிர்ந்து நிற்க இயலாமல் முதுமையில்
இனி வரும் காலம்தன்னைத் தனிமையில்
தள்ளுவதை நினைக்கையில்
எதிரே கண்டேன் இந்த வாசகம்
நான் உங்களுக்கு அன்பு செய்தது போல்
நீங்களும் ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்யுங்கள்!

போகும் திசை அறியாமல் தவிக்கையில்
விட்டுச் சென்றவள் காட்டிய வழியாய் இந்த வாசகம்
கண்களில் நீர் மல்கக் கால்கள் தானாய் நகர்ந்தது
பிள்ளைகள் இருக்கும் பிருந்தாவனம் நோக்கி!

*****

வியப்புக்குறியாய்  நிமிர்ந்துநிற்கும் கம்பீர மானுடனும் முதுமை வந்தால் வினாக்குறியாய் வளைந்துதான் போய்விடுகின்றான். மூப்புக்கு ஆட்படுவதை யாராலும் தவிர்க்க இயலாது. எனவே, இளைஞர்கள் முதியோரை ஏளனம் செய்யாது அரவணைத்தால் அவர்களின் அன்பும், கூடவே வாழ்க்கைக்கான அனுபவமும் கிட்டும் என்றுரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

உன்னைத்தான் தம்பி…!

முடக்கிவிடுகிறது மனிதனை
முதுமை,
உடலிலும் மனதிலும்
கைவைத்துவிடுகிறது காலம்..

வியப்புக் குறியாய்
நிமிர்ந்திருந்த முதுகு
வளைந்து
வினாக் குறியாகித்
தடி எடுத்தவனைத்
தடுமாறித்
தடி பிடிக்க வைத்துவிடுகிறது..

ஊனமில்லா உள்ளத்தையும்
முதுமை
ஊனமாக்கிவிடுகிறது
தனிமையில் தள்ளி..

உறவுகளின்
உண்மை நிலைகாட்டிப்
பிறக்கவைக்கிறது ஞானம்..

தம்பி
துடிக்கும் இளைஞனே,
தடுக்கமுடியாது உனக்கும்
முதுமை வருவதை..

அதனால்
தவிக்க விட்டுவிடாதே
முதியவர்களை,
தவிக்கவிடப்பட்டவர்களுக்கு
உதவி செய்து
பரிசாய்ப் பெற்றுக்கொள்-
அனுபவத்தை…!

சிந்தனைக்குரிய நல்ல கவிதைகளைப் படைத்துத் தந்திருக்கும் கவிஞர்கள் இருவருக்கும் என் பாராட்டுக்கள் உரித்தாகுக!

*****

இனி வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

கூடிவாழ்ந்த உறவுகளின்
கூட்டுத் தொகை சில கோடி
கூன்முதுகு குனிந்து சுமந்த சுமைகளின்
கூட்டுநிறை பல கோடி – ஆயினும்

கூர் மழுங்கிய ஏர்க் கொழுமுனை இது
கூர்மை மங்கிய விழிகளின் பார்வையோடு
கூடிழந்த பறவையாக இன்று குடியிருக்கக்
கூடு தேடும் இடமோ தெருக்கோடி!

ஆலமரம் விழுதிறங்கித் தோப்பாச்சு
ஆன அடிமரம் தான் ஆதரவு இன்றித் தனியாச்சு!
ஆயிரம் உறவுகள் தாங்கிய தோள்களும் கால்களும்
ஆதரவு தேடி ஏதிலியாக எங்கோ போகிறது!

ஆண்டவன் கூட அறிவிப்பே செய்கின்றான்
அவனைப் போலவே அன்பு செய்யச் சொல்லி
ஆனலும் அன்பான ஆளைத்தான் காணவில்லை –எல்லா
அம்மா அப்பாவுக்கும் இதுதான் கடைசியா?

அன்னைக்கும் தந்தைக்கும் ஆதரவளிப்போமா- நமது
ஆருயிர் தானே அவர்கள் அதை நாம் அறிவோமா?
அமுதூட்டி அகிலம் காட்டிய அவர்களுக்குக் கொஞ்சம்
அன்பு செய்வோமா அதை அன்புடன் செய்வோமா?

இளமை மட்டுமே நிலையல்ல
இனி முதுமை என்பது முடிவல்ல
இதயம் அன்பால் நிறைந்தால்
இன்பம் தானே விரியும் எங்கும்!

’அன்பின் வழியது உயிர்நிலை’ என்றான் வள்ளுவன். ’நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்’ என்றான் ஆண்டவன். ஆதலால் மூப்பினால் தளர்வுற்றிருக்கும் முதிய பெற்றோரை மதித்துக் காத்தல் பிள்ளைகள் கடனென அறிந்து அன்புகாட்டினால் இன்பம் எங்கும் விரியும் என்று நயமாய் நவின்றிருக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. யாழ். நிலா. பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

About மேகலா இராமமூர்த்தி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க