சரியா? தப்பா?

3d rendering of man pointing to symbol sign of yes and no. 3d white person people man
-நிர்மலா ராகவன்
நலம்… நலமறிய ஆவல் (168)
`முன்பெல்லாம் நாடு இவ்வளவு மோசமாகவா இருந்தது!’ என்று பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள் இன்று.
ஆனால், இவர்களில் யாரும் அதை எப்படித் தடுப்பது என்று யோசிப்பதில்லை. முட்டாள்தனத்தாலும், பேராசையாலும் சிலர் நடப்பதால் இந்நிலை ஏற்பட்டுவிட்டது என்று புரிந்தாலும், அதை எப்படி நம்மால் தடுப்பது என்ற பயம்!
தீங்கு இழைக்கிறார்கள் என்று புரிந்தும், அவர்கள் பலத்தைக் குறைக்க எந்த முயற்சியும் செய்யாது இருப்பவர்களே நிறைந்த உலகில் தீமை தழைப்பதில் என்ன அதிசயம்?
தவறு செய்யலாம், ஆனால் அதைப் பிறர் அறியாவண்ணம் செய்தால் தவறில்லை என்பதுபோல் நடக்கும் சிலரைப் பின்தொடர்கிறார்கள் தன்னலம் மட்டுமே கருதுபவர்கள்.
`நான் தவறே செய்யமாட்டேன்!’ என்று பெருமை பேசுகிறவர்கள் மட்டும் தெய்வப்பிறவிகளா, என்ன! இப்படிப்பட்டவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள். புதிதாக எதிலும் ஈடுபடும் துணிச்சல் கிடையாது. அதனால்தான் தம்மைப்போல் இல்லாதவர்களை கவிழ்க்கப் பார்க்கிறார்கள்.
இது புரிந்தால், இவர்கள் சொல்வதையும் செய்வதையும் அலட்சியம் செய்யலாம்.
கதை
நான் பட்டப்படிப்பு படிக்கப்போகிறேன் என்று தெரிந்ததும், என் உறவினர்களில் மூவர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
“எப்படியும், கல்யாணமாகிப் போகப்போகிறவள்! எதுக்கு இன்னும் படிப்பு?” என்று என் தாய்க்குத் தூபம் போட்டார் ஒருவர்.
“அதிகமாகப் படித்துவிட்டால், மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டம்,” என்று, கூடுதலான வரதட்சணை கொடுக்க வேண்டிவரும் சிரமத்தை இன்னொருவர் உணர்த்தினார்.
`பெண்களை அதிகம் படிக்கவைத்தால், பிறரை மதிக்கமாட்டார்கள். கட்டுப்படுத்துவது கஷ்டம்,’ என்று ஏதேதோ சொன்னார்கள்.
எனக்கென்னவோ, என் நலனைக் கருதிதான் அந்த ஆண்கள் அப்படிச் சொன்னார்கள் என்று நம்ப முடியவில்லை.
பதின்மூன்று வயதில் வகுப்பில் முதலாவதாக வந்ததற்காக, அதற்கடுத்த வருடம் மைசூர் மகாராஜாவின் கையால் பரிசு பெற்றிருந்தேன். பள்ளி இறுதி ஆண்டில் மாநிலத்தில் குறிப்பிட்ட இடம் பெற்றதற்காக என் பெயரும், பள்ளியின் பெயரும் தினசரிகளில் வந்தன. பேச்சுப்போட்டிகளில் பள்ளியைப் பிரதிநிதித்திருந்தேன். (பிறகு, கல்லூரியிலும்).
“நான் நன்னாப் படிக்கிறேனேம்மா! மேலே படிக்கத்தான் போறேன்!” என்றேன் உறுதியாக.
அம்மாவின் விருப்பமும் அதுதான். “இவள் ஒரு முடிவு எடுத்தால், அப்புறம் யார் எது சொன்னாலும் கேட்க மாட்டாள்!” என்று அந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கட்டினாள்.
அடுத்து வந்த ஆண்டுகளில், நான் படிக்கக்கூடாது என்று நாங்கள் கேளாமலேயே `அறிவுரை’ கூறியவர்கள் தம் பெண்களைக் கல்லூரியில் சேர்த்தார்கள்!
இப்படி — தெரிந்தே பிறரைக் கவிழ்க்க நினைப்பவர்களை — தருணம் வாய்க்கும்போது பழி தீர்த்துக்கொள்ள எண்ணினால் நாமும் அவர்களைப்போல் பலகீனமாக ஆகிவிடுகிறோம். `போகிறார்கள்! அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று விட்டுவிட வேண்டியதுதான்.
பெண்கள் அதிகம் படித்துவிட்டால் அச்சமோ பொறாமையோ கொள்ளும் உலகம் கல்வியில் நாட்டமில்லாது இருப்பவரை `முட்டாள்’ என்று பழிக்கிறது.
படிப்பில்லாவிட்டால் என்ன? ஒருவருக்கு வேறு திறமை இருக்கலாமே!
கதை
கீர்த்தி தன் பதின்ம வயதில் காரோட்டக் கற்றாள். உரிமம் கிடைத்தும், தனியாக காரோட்ட துணிச்சல் இல்லை.
“அண்ணா எவ்வளவு நன்றாக ஓட்டுகிறான், பார்!” என்று யாரோ அவள் மதிப்பைக் குறைத்து ஒப்பிட, நொந்துபோனாள்.
அப்பெண் தற்காப்பு கலையில் தேசிய ரீதியில் பரிசுகள் பெற்றவள். பாட்டு, நடனம், சித்திரம் வரைதல், தானே புதிய சமையல்வகைகளைக் கண்டுபிடித்துச் செய்வது என்று அவளுக்கு இருந்த வேறு பல திறமைகளை நினைவுறுத்தியபின் அவள் தெளிந்தாள்.
பெண்களுக்குப் பேச்சுத்திறமை அளித்த ஆண்டவன், இயந்திரத்திறன்களை ஆண்களுக்குக் கொடுத்துவிட்டார். ஒன்றரை வயதிலேயே பெண் குழந்தைகள் கதை சொல்லும். ஆண் பிள்ளை சிறு காரை வைத்துக்கொண்டு விளையாட, பெண் குழந்தை தனக்கென வாங்கிக் கொடுத்த பொம்மையை மார்புடன் அணைத்துப் பால் கொடுக்கும்.
சமுதாயக் கோட்பாடு பெண்கள் மென்மையானவர்களாக இருப்பது அவசியம் என்று இப்படிப் பழக்கிவிட்டது. இது புரிந்தால், பெண்கள் தம்மால் இயலாதவற்றுக்காக கவலைப்படத் தேவையில்லை.
பிற மனிதர்களோ, சம்பவங்களோ நம் சுயமதிப்பைக் குறைக்கவிடக் கூடாது.
முடியாத ஒன்றை நினைத்து கவலைப்படுவானேன்! `இப்படி ஆகிவிட்டதே!’ என்று நொந்து, அதைப்பற்றியே பேசினால் என்ன ஆகிவிடப்போகிறது!
பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது விஞ்ஞானிகளுக்கு மட்டுமே அவசியமான குணமில்லை. அவ்வப்போது, `ஏன் இப்படி?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டால், எழும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம்.
கதை
வந்தனாவின் தாய்மொழி தமிழ் அல்ல. தமிழில் பேச மட்டும் கற்றிருந்தாள். அவள் மணந்தவனது குடும்பமோ தமிழிசை, நாடகத்துறையில் சிறந்து விளங்கியது.
ஒரு பொது நிகழ்ச்சியில் அவள் உரையாற்ற வேண்டியிருந்தது. என்னைக் கேட்டு, ஒவ்வொரு வார்த்தையாக ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டாள்.
“அந்தமாதிரி குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டுட்டு, தமிழிலே எழுதப் படிக்கத் தெரியாதா? சும்மா சொல்றா!” என்றார் ஒருவர், ஏளனமாக.
தனக்குத் தெரியாததைப்பற்றி, சம்பந்தமே இல்லாததைப்பற்றி, கேலியாகப் பேசுபவன் அறிவிலி என்று அலட்சியப்படுத்துவோமே!
ஒரு துணுக்கு (எந்தக் காலத்திலோ படித்தது)
வயது முதிர்ந்த தாயிடம் மகள் கேட்கிறாள்: நீ ஏன் உன் வயதுக்கேற்றபடி நடக்காமல், இப்படி குழந்தைபோல் நடக்கிறாய்?
தாய்: எல்லாரும், `நமக்கு வயதாகிவிட்டதே, இப்படித்தான் இருக்கணும்!’ என்று நடப்பதால்தான் உலகம் இந்த லட்சணமாக இருக்கிறது!
அவள் கூறாமல் விட்டது: குழந்தைத்தனமான ஆர்வம் பிறவியிலேயே நம்முள் இருக்கும். இது மறையாது பாதுகாத்துக்கொள்ள இயற்கையை ரசிக்கத் தெரிந்தால் போதும்.
`யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்களோ!’ என்று அஞ்சி, அந்த ஆர்வத்தை அடக்கிவிடுகிறோம். வயதுக்குரிய வியாதிகளும் வருகின்றன.
குதூகலமும் விளையாட்டுப்புத்தியும் மாறாமல் இருப்பவர்களைக் கண்டால் அவர்களுடைய கலகலப்பு நம்மையும் தொற்றிக்கொள்ளாதா!
மாறாக, `வயதாகிவிட்டது! இனி என்ன இருக்கிறது வாழ்வில்!’ என அலுப்பால் நம்மையே நாசம் செய்துகொள்ள முயற்சிக்கிறோம்.
தனக்கே குழி பறிப்பவர்கள்
ஒரு சிறிய அமைப்பின் தலைவரை அப்பதவி அளித்த அதிகாரபோதை ஆட்டுவித்தது. தனக்குக் கீழே இருப்பவர்களை மரியாதையின்றி நடத்தினார்.
சீக்கிரமே பலரும் அவரைவிட்டு விலக, குழப்பம் ஏற்பட்டது. தான் எங்கே தவறிழைத்தோம் என்று அவருக்குப் புரியவில்லை.
பள்ளிக்கூடங்களில் சில ஆசிரியர்கள் மாணவர்களைக் கேவலமாக நடத்துவார்கள், ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் மரியாதைக்குறைவாக நடத்துவார்.
எங்கள் தலைமை ஆசிரியர் எல்லா ஆசிரியர்களையும் அடிமைகள்போல் நடத்தினார். பொறுக்கமுடியாது போக, எல்லாருமாகச் சேர்ந்து அவருக்கு எதிராகப் புகார்க்கடிதம் ஒன்றை எழுதி, மேலிடத்திற்கு அனுப்ப, அவர் தொலைந்தார்.
தலைவர் ஒருவர் தன் கீழ் இருப்பவர்கள் எல்லாரும் அடிமைகள் என்றெண்ணி நடக்கலாம். ஆனால், எல்லோரும், எப்போதும், முட்டாள்களாக இருப்பதில்லை.
பதவி இருக்கும்வரைதான் தன் அதிகாரம் செல்லும் என்று புரியாதவர்தான் முட்டாள்.