-மீனாட்சி பாலகணேஷ்

(சிறுபறைப்பருவம்- ஆண்பால்)

ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள் பெரும்பாலும் முருகப்பெருமான் மீதானவையே. அவனுடைய வேல், மயில், அரக்கர்களையழித்த வீரச்செயல்கள், தேவர்களைக் காத்த வரலாறுகள் எனப் பற்பல கருத்துக்களைக் கொண்டமைந்த பாடல்கள் எண்ணற்றவை. அருணகிரிநாதரின் திருப்புகழ், கச்சியப்பச் சிவாச்சாரியாரின் கந்தபுராணம் ஆகியவற்றில் காணும் நிகழ்ச்சிகள், மக்களிடையே வழக்கிலிருந்து வரும் சிறு புனைகதைகள் ஆகியன பிள்ளைத்தமிழ் நூல்களின் புலவர்களால் பொருத்தமான பருவங்களில் இப்பிள்ளைத்தமிழ் நூல்களில் அழகுற எடுத்தாளப்பட்டுள்ளன.

ஆண்பால் பிள்ளைத்தமிழின் ஒன்பதாம் பருவமாக சிறுபறைப் பருவம் அமையும். சற்று முன்பின்னாகவும் சில நூல்களில் அமைந்துள்ளதனைக் காணலாம். சப்பாணிப்பருவத்தைப் போலவே, இப்பருவத்திலும் சிறுபறை முழக்கும் பாட்டுடைத்தலைவனின் சின்னஞ்சிறு கைகளே பாடுபொருளாக அமைகின்றன. ஆண்மகவு பத்தொன்பதாம் திங்களில் அல்லது மூன்று முதல் நான்காண்டுகளில் சிறுபறை முழக்குவதாகப் பாடுவது வழக்கம்.

‘பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ணகத் தெழுதிய குரீஇ ப்போலக்
கோல்கொண் டலைப்பப் படீஇயர் மாதோ1,’

எனும் பாடலொன்றால் பெருஞ்செல்வர்களின் இல்லத்துச் சிறுவர்கள் தம்தோளில் சிறுபறையை மாட்டிக்கொண்டு முழக்குவர் எனவும், அப்பறையின் கண்ணகத்து குருவியின் படம் வரையப்பட்டிருக்கும் என்ற செய்தியையும் அறிகிறோம்.

இன்று நாம் காணப்போவது முருகப்பிரானின் சிறுபறை முழக்கும் கைகளின் செயல்களைத்தான்!

‘வாங்கும் எனக்கு இருகை- ஆனால் அருளை
வழங்கும் உனக்குப் பன்னிருகை2,’

என ஒரு அடியார் முருகனைப் போற்றியுள்ளார். எண்ணிக்கை கைகளுக்கானதல்ல! அத்திருக்கைகள் வாரிவாரி வழங்கும் அருட்செயல்களுக்காகத்தான் பலவாக உள்ளன எனக்கொள்ள வேண்டும்! முதலாவதாக, குழந்தையைச் சிறுபறை முழக்குமாறு தாயும் மற்றவர்களும் ஏன் வேண்டுகின்றனர் எனக் காண்போமா? வளர்ந்துவரும் குழந்தை கைகளால் செய்யவேண்டிய செயல்களைக் கற்க வேண்டும். அதற்கு கைகள் உறுதியாக வளர வேண்டும். எவ்வாறு அம்மானையாடும் பெண்குழந்தை (சிறுமி) கைகள், கருத்து, சிந்தனை அனைத்தையும் ஒருமுகப்படுத்தக் கற்றுக் கொள்கின்றதோ அவ்வாறே சிறுபறை முழக்கும் ஆண்மகவும் அதனைத் தாளலயத்துடன் ஒலிக்கக் கற்றுக்கொண்டால், கைகளும் கருத்தும் இணைந்து செயலாற்றும் திறமை படைத்தவனாக இருப்பான் என விழைகிறது தாயுள்ளம்.

சிறந்த மிருதங்க வித்துவான்கள் அனைவருமே சிறுவயதிலிருந்தே தாளலயத்துடன் இணைந்து வளர்ந்தனர் எனக் கூறவும் வேண்டுமோ?

பல சுவைமிகுந்த கருத்துக்களைப் புலவர் நடேச கவுண்டர் தாமியற்றிய எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் முருகனின் பன்னிருகைகளின் கைவண்ணமாகக் கூறிச் சிறப்பிக்கிறார். அவற்றைக் காணலாமா?

இவர் போற்றுவது பன்னிரு கரங்களையுடைய குழந்தை முருகன்; எல்லாமறிந்த எல்லாம்வல்ல இறைவனே சிறுகுழந்தையான முருகப்பெருமான் எனத்தெளிந்த அடியார் சிறுபறை முழக்கும் அவனுடைய சிறு கரங்களைப் பலவிதமாகப் போற்றுகிறார்.

மிகுந்த துயரளிக்கும் பிறவிப்பெருங்கடலிலிருந்து எடுத்து எம்மைத் தாங்கி ஆறுதல் அளிப்பதொருகை;

இருவினைகளையும் செய்து இந்த உலகில் உழலும்போது ‘அஞ்சாதே!’ என அபயம் அளிப்பது மற்றொரு கை.

அருணகிரிநாதருக்கு அருள் செய்யும் விதத்தில் செபமாலையை அவருக்கு அளித்ததொரு சிவந்த கொடைக்கை.

மிகுந்த செருக்குடன் திரிந்த தாமரையோனாகிய பிரமனுடைய தலை குலுங்குமாறு குட்டுவது ஒரு கை!

தேவர்களின் அரசனான இந்திரனுக்கு, அவனுடைய பறிபோன அரசபதவியைத் திரும்பப் பெற்றளித்து அவன் தலையில் மகுடம் சூட்டும் வரதக்கை இன்னொன்று!

இனிய தெளிந்த அமுதம் போன்றவளான வள்ளியம்மைக்கு மணமாலையைச் சூட்டும்கை மற்றொன்று!

இவ்வுலகத்திலுள்ளோர், வானுலகிலுள்ளோர் என அனைவரும் வேண்டுகின்றன அனைத்தினையும் கொடுத்தருளுவது ஒருகை!

அருணகிரிநாதர் கோபுர உச்சியிலிருந்து கீழே விழுந்தபோது அவர்தமைத் தாங்கியெடுத்து ஏந்திக்கொண்டது மற்றொருகை!

சித்தர் பெருமக்களுக்கு ஞானநெறியைத் தெரிவிக்கும்வகையில் சின்முத்திரை காட்டும்கை ஒன்றாகும்.

சீர்காழி எனும் திருத்தலத்தில் ஞானசம்பந்தராக அவதரித்து அந்தணராகிய தமது தகப்பனாருக்கு சிவபெருமானை, ‘தோடுடைய செவியன்’ எனச் சுட்டிக்காட்டிய திருக்கை மற்றொன்றாகும். (குழந்தையான சம்பந்தர் குளக்கரையில் தனியே இருந்து அழுதபோது, உமையம்மையும், சிவபிரானும் விடையேறி வந்து அவருக்கு ஞானப்பாலைப் புகட்டிச் சென்றனர். பின் கரையேறி வந்த அந்தணராகிய தந்தை யார் வந்தனர் எனக்கேட்க, “தோடுடைய செவியன் விடையேறித் தூயவெண்மதி சூடி வந்தனன்,” எனச் சுட்டியது குழந்தை. அதனையே இங்கு குறிப்பிடுகிறார்.)

மாலையணிந்த பாண்டியமன்னனின் (வேம்பன்) சுரத்தை நீக்கி, அவன் உடல் குளிருமாறு திருநீறு பூசிய கையொன்று! (சமணோரோடான மதவாதத்தில், திருநீற்றைப்பூசி, நின்றசீர் நெடுமாறப் பாண்டியனின் சுரநோயைத் தீர்த்தருளினார் திருஞானசம்பந்தர். அதனை இங்கு நயம்படக் கூறினார் புலவர்.)

கோலக்கா எனும் ஊரில் பொற்றாளம் கிடைக்கப்பெற்றது ஒருகை. (சிவபிரான் குழந்தை ஞானசம்பந்தருக்கு பொற்றாளங்களை அளித்தது திருக்கோலக்கா எனும் ஊரிலாகும்; அதுவே கூறப்பட்டுள்ளது)

இக்கைகளால் எல்லாம் எட்டிக்குடிவாழ் முருகா நீ சிறுபறை முழக்கியருளுக! எனப்புலவர் கற்பனை வளம் பெருக வேண்டிப்பாடும் இருபாடல்கள் மிக்க அழகானவையாகும்.

‘வருந்தும் பிறவிக் கடனின்று வாங்கி யெம்மைத் தாங்குங்கை
மண்மேல் வினையி லுழலுங்கால் மயங்கா தஞ்ச லருளுங்கை
……………………………………………………………………………………………………
முருந்து நகையெட் டிக்குடியாய் முழக்கி யருள்க சிறுபறையே
முழுமா ணிக்கத் திரளொளியே முழக்கி யருள்க சிறுபறையே,’

‘இத்தா ரணியார் வானோர்வேண் டியவெல்லாமு மீயுங்கை
எம்மானருண கிரிசிகரி யிருந்து விழுங்கா லேந்துங்கை
……………………………………………………………………………………………………
கொத்தார் வேம்பன் சுரநீங்கிக் குளிர நீறு பூசுங்கை
கோலக்காவிற் பொற்றாளங் கொண்ட கையா லுமையளித்த
…………………………………………………………………………………………………….
முழுமா ணிக்கத் திரளொளியே முழக்கி யருள்க சிறுபறையே3,’

என அழகிய இரு பாடல்களில் ஈராறு கரங்களின் பெருமையை எல்லாம் அழகுறப் பேசுகிறார்.
இப்பாடல்களின் சிறப்பே குழந்தை எனக் கொண்டாடப்பட்டுப் போற்றப்படும் தெய்வத்தை, அதன் குழந்தைமைச் செயல்களுக்காகப் போற்றிவரும் பாடல், ஒரு கட்டத்தில் அக்குழந்தையின் தெய்வத்தன்மையைப் புலவர் உணர்ந்து புகழ்ந்து பாடுவதாக அமைந்துவிடும் அழகுதான்!

எப்போதும் மோனத்திலிருக்கும் எம்பிரான் சிவபெருமான் அம்மோனநிலை கலைந்து சற்றே அமைதியாக அமர்ந்து கொண்டிருக்கிறார். தகப்பனார் சிறிது இவ்வாறு அமர்ந்திருந்தாலும் சிறிய குழந்தைகள் உடனே உரிமையுடன் அவர் தோள்மீதும் மடிமீதும் ஏறி விளையாடுவார்களல்லவா? குழந்தை விநாயகனும் இதற்கு விலக்கல்லவே! ‘குறுகுறு’வென நடந்துவந்து சிவபிரான் மடிமீதேறித் தோள்களை அடைய எத்தனிக்கிறான். குழந்தையின் பூப்போன்ற மேனிஸ்பரிசம் பட்டதும் ஐயனின் திருமேனி அன்பில் குழைந்து இளகுகின்றதாம்! அழகான, நுணுக்கமான, உணர்வுபூர்வமான கற்பனை!

ஐயனின் தோள்மீதேறி இருகால்களையும் வாகாக இருபுறமும் போட்டுக்கொண்டு குறும்புகள்செய்ய வசதியாக அவருடைய தலையைப் பிடித்தபடி அமர்ந்துகொள்கிறான் விநாயகன். அவனைப் பொறுத்தவரை தன் தந்தையை அழகுசெய்வதாகக் கருதுகிறான். அவருடைய சடைமுடியும், அதிலுள்ள அணிகலன்களும், உடலின் சாம்பல்பூச்சும் அவனுக்குப் பிடித்தமானவையாக இல்லை. தன்விருப்பப்படி அவரை அலங்கரிக்கத் திட்டமிடுகிறான் குழந்தை! அவர் சடாமுடியிலணிந்துள்ள கொன்றைமலர்வேணியினைப் பிடித்திழுத்து உதறி வீசியெறிகிறான். ‘சுடலைப்பொடி பூசிய’ பெருமானின் உடலைக் கழுவ எத்தனிக்கிறான். அதற்கு வாகாக அவருடைய சடையினின்று இழிதரும் கங்கைப்புனலைத் தனது தும்பிக்கையால் பிடித்து உறிஞ்சியெடுக்கிறான். (இக்காலத்தில் வாகனங்களைக்கழுவ ரப்பர்குழாய்களால் நீர் பீய்ச்சுவதைப்போல) அவ்வாறு உறிஞ்சிய நீரை அவர்மீது பீய்ச்சியடித்து சாம்பல்பொடிபடர்ந்த அவரது திருமேனியைக் கழுவுகின்றானாம்!

புள்ளிகள் நிரம்பிய அரவங்கள், தலையிலணிந்த மாலை, வெண்மையான எலும்புகளாலாகிய மாலை, கையில் அவர் வைத்திருக்கும் மான், இடையிலுள்ள புலித்தோல் ஆகிய எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக ‘வெடுக்,வெடுக்’கென எடுத்தெடுத்து அவருடைய கரத்திலுள்ள தீயினில் இட்டுப்பொசுக்குகிறான். பின் தலையிலணிந்த பிறையினை நோக்கி, ‘இது முழுமையான வட்டநிலவாக இல்லையே என்ன செய்யலாம்,’ என ஒருகணம் சிந்திக்கிறான். பிரான் அணிந்திருக்கும் வலிய, வளைந்த ஒரு பன்றிக்கொம்பினை எடுத்து அந்தப்பிறைநிலாவுடன் பொருத்திப்பார்க்கிறான். அட! அது அழகாகப் பொருந்தி வட்டவடிவாகக் காண்கின்றது; குழந்தையின் உள்ளம் மகிழ்கின்றது. இடையில் இந்த மானையும் வைத்தால் முழுநிலவாகுமே எனக்கருதி, மானையும் அதன் நடுவே வைத்துப் பொருத்துகிறான். பின் அந்த முழுநிலவை ஆகாயத்தில் உலவவிடுக்கின்றான்! வான்தரு எனும் தெய்வீகக் கற்பகத்தருவின் மலர்களாலும் இலைகளாலும் அதற்கு மேலும் அழகு செய்கின்றான்.

இப்போது அவனுக்கு மகிழ்ச்சி பொங்குகிறது. “எல்லாம் பொருத்தமாக அமைந்துவிட்டது! ஒரு குறையும் இல்லை,” எனக்கைகளை அசைத்துக்கூறியபடி பெருமகிழ்ச்சிகொள்கிறான் விநாயகன் எனும் குறும்புக்குழந்தை.

“இவ்வாறு எல்லாம் செய்து அசைத்து மகிழும் கரங்களால் சிறுபறை முழக்குவாயாக! தென்கோ இருந்தநகரின் செங்கழுநீர் (உற்பலம்) விநாயகனே! நீ சிறுபறை முழக்கி விளையாடி அருளுக,” எனத் தாயாரும் மற்றோரும் வேண்டுவதாக அமைந்த இந்த சிறுபறைப்பருவப்பாடல் தனியழகு கொண்டு விளங்குகிறது. வேறெந்த பிள்ளைத்தமிழிலும் காணாத கருத்தாக, குழந்தை கணேசன் தன் தகப்பனை அலங்கரிக்கும் அழகு, கவிநயமும், சொன்னயமும் மிகுந்து விளங்கும் பாடலினால் பேரழகுடன் விளங்கி நம்மைக் களிப்பிலாழ்த்துகிறது.

சப்பாணி கொட்டும் கைகள், சிறுபறை முழக்கும் கைகள், இப்போது தந்தையான சிவபிரானையும் அலங்கரித்து மகிழ்கின்றன!

குறுகுறுந டந்தெய்தி எம்பிரான் திருமேனி
குழையமே லேறி வேணிக்
கொத்தினைக் கோட்டினிற் கோத்தலைத் துதறிவான்
குளிர்புனல் புழைக்கை எற்றிப்
பொறியரவு தலைமாலை வெள்ளென்பு கைம்மாப்
புலிச்சரும முதல ணியெலாம்
பொள்ளென எடுத்தெடுத்து அங்கை அனலிற்பெய்து
போக்கிஇள மதியை வன்றி
எறுழுலவை ஒன்றப் பொருத்தித் திருக்கைமான்
இடைவைத்து முற்று மதிசெய்
திருவிசும்பு உய்த்துவான் தருத்தரும் பேரணிகொடு
எங்கணும் அலங்க ரித்து
சிறுமைஇலை இனியென அசைக்கும் கரம்கொண்டு
சிறுபறை முழக்கி அருளே
தென்கோ விருந்தநக ருற்பலவி நாயகன்
சிறுபறை முழக்கி அருளே4

இந்த விநாயகக் குட்டனை வாரியணைத்து உச்சிமுகர நமக்குமே உள்ளம் ஆவலில் துடிக்கின்றதல்லவா? பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் அழகியல் பார்வையில் பல தொன்மங்களையும், புராணக் கதைகளையும், கற்பனைக் கதைகளையும் கொண்டு திகழ்ந்தாலும் பல பாடல்கள் அவற்றினை இயற்றிய புலவோரின் திறமையில் அணிநயம், சந்தநயம் கொண்டு மிளிர்வது அவற்றினைப் பயில்வோருக்கு மிக்க இன்பம் பயப்பதாகும். அவ்விதத்தில் இன்று நாம் காணப்போவது புதுக்கோட்டை சமஸ்தானம் திருப்புல்வயலில் எழுந்தருளி இருக்கும் குமரக்கடவுள் மீது வீரபத்திரக்கவிராயர் அவர்கள் இயற்றியுள்ள குமரமலைப் பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடல். இது சிறுபறைப் பருவத்திற்கானதாகும்.

முற்றும் கற்றுணர்ந்தவர், சந்தநயம் தோன்றி விளங்கப் பாடுவதில் அருணகிரியாரை விஞ்சியவர் கிடையாதென்பர். அதுபோன்றே இப்பாடல் ‘முத்தைத்தரு,’ என்ற திருப்புகழ்ப் பாடலை மிகவும் நினைவுபடுத்துகின்றது. சந்தநயம் மட்டுமின்றி அருணகிரியாரின் பாடல் போன்றே அதே தொன்மத்தைப் பொதிந்து அமைந்தமையும் மிக்க வியப்பைத் தருகின்றது. அருணகிரிநாதரின் திருப்புகழின் சந்தத் தாக்கத்தினை இப்பாடல்களில் உணரலாம். முதற்கண் பாடலை அதே சந்தநயத்திலேயே பாடிப்பார்த்துக் கொள்ளலாமே!

‘முச்சுடர் முக்கண் முதற்கட வுட்கொர்
முதற்படு பிரணவ மா
முற்பொரு ளைத்தெரி வித்தகு ருக்கண்
முகத்தருள் விழியுடை யாய்
இச்சக மற்றுள வெச்சக முற்றினு
மிச்சக மொடுபுகழ் வோய்
இக்குவி லிக்குயர் மைத்துன செச்சை
யியக்குறு மழகளி றே
கச்சப மொத்த புறத்தடி மைக்குழல்
கட்கய லகலிகை யாய்க்
கற்சிலை யைச்செய் பதத்தர் மகிழ்ச்சி
கருத்தெழ வருசுதை யாங்
கொச்சை மொழிக்குயி லைப்புண ருத்தம
கொட்டுக சிறுபறை யே
கொற்றவ யிற்கும ரச்சிலை யுற்றவ
கொட்டுக சிறுபறை யே5,’ என்பன பாடல்வரிகள்.

அருமையான சந்தநயம்! கருத்துச்செறிவு! பொருள்நயத்தையும் காணலாமா?
சூரியன், சந்திரன், நெருப்பு ஆகிய மூன்று சுடர்களும் மூன்று கண்களாக விளங்கும் முதற்கடவுள் சிவபிரான்! அவனுக்கு, அந்த முழுமுதற்பொருளுக்கு, பிரணவ மாமந்திரத்தின் பொருளை உணர்த்தியருளிய குருநாதன் குமரப்பெருமான்! இதனைத்தான் அருணகிரிநாதரும், ‘முக்கட்பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து6,’ எனப்பாடினார்.

தனது ஆறுமுகங்களிலும் இலங்கும் அருள்பொழியும் விழிகளை உடையவன் அக்குமரன். இந்த உலகம் (இச்சகம்) மற்றும் இருக்கின்ற எல்லா உலகங்களிலும் (எச்சகம்) கண்டாலும் இவனை அனைவரும் ஆசையுடன் (இச்சகம், இச்சை) புகழ்ந்து போற்றுகின்றனர். இடுக்கண் (இக்கு) வருங்காலத்து உடன்வந்து காப்பவன் அவனே! ‘மைத்துன!’ என்பது விளியாகக் கொள்ளலாம்.
செச்சை எனப்படும் சந்தனக்குழம்பினைப் பூசிய இளமையான யானைக்கன்று போல்பவன் இக்குமரன் எனப் பொருள் கொள்ளலாம்.

ஒரு கற்சிலையை -கருங்கல்லை- தனது திருவடி பட்டதனால் அகலிகையாய் உருக்கொள்ளச்செய்த ‘பதத்தவர்’ எனத் திருமாலை, இராமனைப் போற்றுகிறார். அகலிகையை, ‘ஆமைபோலும் (கச்சபம் ஒத்த) புறங்கால்களைக் கொண்டவள், மைபோலும் கருங்குழலினள், கயல்விழியாள்,’ எனவெல்லாம் வருணிக்கிறார். இராமன் திருவடிபட்டுத் தன் சுய உருவான அகலிகையாய் மாறி அவனுடைய திருவருளுக்கும் உரிமையானவள்; ஆகவே இந்த வருணனைக்கும் அருகதை உடையவள் எனத் தெரிவிக்கிறார்!

அவ்வாறு செய்த திருமாலின் மனம் மகிழுமாறு வள்ளிக்குறமகளை மணந்துகொண்டவன் இக்குமரன். அக்குறவள்ளியோ மழலைமொழி பேசும் குயில் போன்றவள். ‘இத்தகு செயல்களைச் செய்த உத்தமனாகிய குமரனே, உனது சிறியபறையை முழக்குவாயாக! கொற்றவனே! வில்லேந்திய குமரனே! சிறுபறையை முழக்குவாயாக!’ எனப்புலவர் வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. சிலை என்பதற்கு மலை எனவும் அகராதியில் ஒரு பொருள் உண்டு. ஆகவே, கிரௌஞ்ச மலையைப்பொடி செய்த முருகனே எனவும் பொருள் கொள்ளலாம். முருகனை நாம் வேலேந்திய வடிவத்திலேயே அறிந்தவர்களாதலின் வில்லேந்திய வடிவம் சிறிது ஆச்சரியத்தினை விளைவிக்கும்!

(திருவையாற்றில் ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி திருக்கோவிலில், முருகனின் ஒரு சிலைவடிவம் வில்லேந்திய நிலையில் காணப்படுகிறது.)

(வளரும்)

—————————-&———————–
பார்வை நூல்கள்:

1. நற்றிணை- பா 58. வரி-1-4
2. ஊத்துக்காடு வேங்கட கவி பாடல்
3. நடேச கவுண்டர்- எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
4. சிவஞான முனிவர்- கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்
5. வீரபத்திரக் கவிராயர்- குமரமலைப் பிள்ளைத்தமிழ்
6. அருணகிரிநாதர்- திருப்புகழ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.