அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

Yesmk எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (01.12.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 234

  1. முதலிடம் பிடித்திடுவாய்…

    சின்னவனே சின்னவனே சேதி கேளு
    சிறந்துவாழ வழியெல்லாம் உன்னிடம் தானே,
    முன்னோர்கள் சொன்னதெல்லாம் பொய்யே யல்ல
    முறைப்படியே தெரிந்தவற்றைச் செயலில் காட்டு,
    அன்னைதந்தை பெரியோரை மதித்து வாழ்வாய்
    அடுத்தவர்க்கும் உதவும்கலை அறிந்து கொள்வாய்,
    முன்னேறு பலகலையும் கற்றுத் தேர்ந்தே
    முதல்நிலையில் ஆசனத்தில் அமர்வாய் நீயே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. அறி-ஆசனம்

    நெகிழியின் இருக்கையில்
    வீற்றிய சுடரே,
    மகுடம் சூடா மழலை வேந்தே,
    பரணி ஆளும் தகுதி
    உன்வசம் பிறக்க,
    ஈன்றோரை மதித்து
    சான்றோர் அறிவுச்சாலையில்
    நீ ஒளிர வேண்டும்.
    அறத்தின் வழியை
    நீ அறிந்திட வேண்டும்.
    இகழ்ச்சியின் இருளை
    நீ கடந்திட வேண்டும்.
    தூற்றும் சமூகத்தை
    துறந்திட வேண்டும்.
    சுற்றமும் சூழலும்
    நட்புடன் பழக
    கள்வனையும் ,கயவனையும்,
    களைந்திட வேண்டும்.
    நேர்மையின் பிடியில்,
    முறுக்கேறிய திமிரில்,
    பொய்மை பொசுங்கிட வேண்டும்.
    எண்ணிய எண்ணம்
    உள்ளத்தில் உயர்ந்திட,
    நெஞ்சுரம் நிமிர்ந்திட வேண்டும்.
    தோல்விகளை விதைத்து
    வெற்றிக்கனியை பறித்திட
    எந்நாளும் உழைத்திட வேண்டும்….

    இவன்
    ராவணா சுந்தர்

  3. நாற்காலி ஆட்டம்

    வெற்று கோஷத்திலே,
    வீண் வாதத்திலே,
    மதமாச்சரியத்திலே,
    சாதி அபிமானத்திலே,
    சுயநலத் தாக்கத்திலே
    சூழ்நிலைக் கைதியாகி
    தகுதியற்றோரைத் தேர்ந்தெடுத்தோம்
    தலைவர்களை வீழ்த்திவிட்டோம்…

    மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழியே…
    குடியாட்சியிலோ மக்களே மன்னர் – எனவே
    மக்கள் எவ்வழியோ மந்திரியும் அவ்வழியே…

    தேர்ந்தெடுத்த மக்களையே
    ஒரு பொழுது மேலேற்றி பின் கீழ்தள்ளி
    மகாராட்டினத்தில் ஆட்டிவைக்கும
    குறுமதிகொள் சிற்றோரை
    அரியாசனம் ஏற்றிவைத்து
    அறிவிழந்து வாழ்கின்றோம்…

    கொள்கைக் கோலம் கலைந்து
    பின்புலமும் களையிழந்து
    எடுப்பார் கைப்பிள்ளையாய்
    ஏமாற்றம் அறியாமல்
    குரங்காட்டம் கண்டு
    குதூகளித்து அமர்ந்துள்ளோம்

  4. மந்திரப்புன்னகை

    வீதியெங்கும் வாசல் முன்னே
    வண்ணக்கோலங்கள்
    ஊரெங்கும் விழாக்கோலமாய்
    பழையன களைந்து புதிய முகம் பூண்டதே!

    விளையும் பயிர் முளையிலே தெரியும்
    இவன் சிரிப்பில்
    விவசாயின் வெற்றி தெரியும்
    தை பிறந்து நல் வழி பிறந்ததின் அடையாளமாய்!

    புத்தாடை போட்டு பூமியின் அச்சாணியாய்
    புன்னகை பூட்டி அரியாசனம் ஏறி அமர்ந்தானே
    அழியும் உலகுக்கு அன்னம் தந்த
    அத்தனைக்கும் நன்றி சொல்லியே!

    பிழைப்பு தேடி ஓடி வந்தவன் பிள்ளை வந்ததும்
    கூடி வாழ்ந்தால் பெரும் நன்மையை உணர்ந்திட
    ஊரை நோக்கி ஓடி வந்தான்
    குடும்பத்தோடு ஒன்றாய் சேர்ந்திட!

    காணும் பொங்கலில்
    உற்றார் உறவினர்களை
    கண்டு மகிழ்ந்திட
    இத்தனை நாளாய்
    இவன் கைகளில்
    சிறைபிடித்த கைபேசியில்
    பட்டு வண்ண வேட்டி கட்டி
    கால்மேல் கால் போட்டு
    இவன் முகத்தில் மலர்ந்த
    மந்திரப்புன்னகையை படம் பிடித்தேன்
    கள்ளம் கபடமில்லா இவன் சிரிப்பில்
    களவு போன
    குழந்தை பருவம் கண்டேன்
    மறந்து போன
    மந்திரப்புன்னகைகள்
    மெல்ல விரிந்ததே நினைவுகளாய்
    மலரும் நினைவுகளாய்……………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.