-மேகலா இராமமூர்த்தி

பூட்டிய சன்னிதிக் கதவுக்குள் தலைநுழைத்துத் தலைவனைத் தேடிடும் குழந்தைகளைத் தம் புகைப்படப் பெட்டிக்குள் பத்திரப்படுத்தி வந்திருப்பவர் திருமிகு ராமலக்ஷ்மி. கவிதைப் போட்டிக்கு ஏற்றதொரு படமென்று இதனை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் திருமிகு சாந்தி மாரியப்பன்.

வாசுவென்ன ஏசுவென்ன அல்லாவென்ன எல்லாம் ஒன்றுதான் பிள்ளைகளுக்கு! பிற மதத்தை ஏசுவதும் பேசுவதுமாய்ப் பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைப்பது பெரியோர் செய்யும் சிறிய செயலே அல்லவா?

இதோ… ஆர்வத்தோடு இப்பிள்ளைகள் பார்க்கத் துடிப்பது எதனை என்று தம் கவிதைகளில் வடித்துக் காட்டக் காத்திருக்கின்றார்கள் நம் கவிஞர்கள். அவர்களை வரவேற்கிறேன் அன்போடு!

*****

“பூட்டிய கதவுக்குள் இருப்பதென்ன என்று தேடியது போதும்! வேட்டையாடும் உலகமிது; விரைந்தேகுங்கள் வீட்டை நோக்கி!” என்று சிறார்களுக்கு அறிவுரை வழங்குகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

பாதுகாப்பு…

பூட்டி யிருக்கும் கோவிலுள்ளே
பார்த்தது போதும் பிள்ளைகளே,
வீட்டி லுள்ளோர் தேடிடுவர்
விவரம் ஏதென அஞ்சிடுவர்,
நாட்டி லுள்ள நடப்பறிய
நம்பி வருவீர் பெற்றோருடன்,
வேட்டை யாடும் உலகமிது
வெளியே யில்லை பாதுகாப்பே…!

*****

‘கண்டவர் விண்டிலர்’ என்பதால் தானே கண்டுணரத் துடிக்கின்றது உலகு! உள்ளுறை பரம்பொருளை  வெளியில் தேடுவதில் பயனென்ன? என்று ஆழ்ந்த தத்துவ முத்துக்களைத் தம் கவிதையில் உதிர்த்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

தாழ் திறவாய்!

வானுயர் கோவிலில் தொழுதுநிற்போம்
பள்ளிவாசல்கள் தோறும் ஓதிநிற்போம்
தேவ ஆலயம் தேடி ஓடிடுவோம்
ஆதிமூலத்தைக் காண ஏங்கிடுவோம்!

காட்டினில் இறையைத் தேடிடுவோம் – மந்திரப்
பாட்டினில் அவன்தாள் நாடிடுவோம் – வெற்று

ஏட்டினில் சொல்லிய வழியெல்லாம்
போட்டி போட்டுச் செய்திடுவோம்!

ஆண்டுகள் பல தவஞ்செய்து நின்று
கண்டிடும் வழியெண்ணிக் காத்துநிற்போம்
கண்டவர் விண்டிலர் என்று சொல்லிக்
கண்டிட தினந்தினம் ஏங்கிடுவோம்!

நல்லுரை சொல்லிடும் வேதமெல்லாம் – பிறர்
வெந்துயர் தீர்த்திடும் அன்பர்தனை
முந்திய தெய்வமாய் வைத்தேயுணர்ந்து – நம்
உள்ளுறை பரம்பொருள் மீட்டிடுவோம்!

ஈட்டிடும் பொருள் பிறர்க்கீந்திடுவோம்!
வாட்டிடும் பிறர்பிணித் தீர்த்திடுவோம்!
நாட்டினில் வறியவர் வாழ்ந்திடவே
பூட்டிய மனத்தாழ் திறந்திடுவோம்!

*****

சிந்தனைக்கும் வந்தனைக்குமுரிய நல்ல கருத்துக்களைத் தம் கவிதைகளில் பொதிந்து தந்திருக்கும் கவிஞர்களை உளமாரப் பாராட்டுகின்றேன்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

தொடரும் தேடல்!

விடை தெரியா வினாக்களால்
நிறைந்ததே வாழ்க்கை!
விடை தேடியே வயதும் கடந்திடும்
வாழ்க்கை முடியும் வரை
கேள்விக்குறியாய் இருக்கும்
பலர் வாழ்க்கைக்கு விடையாய்
மலர்ந்திடும் மழலைச்செல்வம்!
அத்தனையும் அறிந்துகொள்ளும் ஆசையில்
வினாத் தொடுத்தே வளர்ந்திடும்
குழந்தைப் பருவம்!
இனம் புரியாமல் செய்வதறியாமல்
குழம்பியே கேள்விகளைத் தொடுத்திடும்

இளமைப் பருவம்!
சந்திக்கும் அனைத்திலும்
சந்தேகமாய் வினா எழுப்பியே
வீணாய் நகரும் வாலிபப்பருவம்!
எடுக்கும் முயற்சியே கேள்வியாய் முன்னே இருக்கும்
வினாவாய்ப் போய்ச்சேரும் காலம் தன்னை
விடையாய் எதிர்பார்த்துக் காத்திருக்கும்
முதுமைப் பருவம்!
கேள்விகளாய் நிறைந்த வாழ்க்கையில்
கடவுள் பற்றிக் கேள்வி எழாமல் எப்படி இருக்கும்?
உருவமில்லாச் சக்திக்கு உருவம் தந்தோம்!
கல்லில் அதை வடித்துக்
கடவுள் என்று பெயர் சூட்டியே உயிர் தந்தோம்!
கல்லாய், கடவுளாய்க் கண்டவனை
நாத்திகன் என்றும் ஆத்திகன் என்றும்
பிரித்து வைத்தோம்!
எங்கும் எதிலும் அவனே
அருளாய் நிறைந்து இருந்தும்
மனிதநேயம் கொண்டு

சக மனிதனைப் பார்க்க மறந்துவிட்டோம்
குழந்தையும் தெய்வமும் ஒன்றென்றும்
ஜாதி மத பேதம் இல்லையென்றும் கற்றுத்தந்து
கடவுளை வைத்தே
பிரிவினையை மழலையில் கலந்துவிட்டோம்!
எங்கும் நிறைந்தவனைக்
கல்லுக்குள் பூட்டி வைத்தோம்
கடவுள் என்று சொல்லி
கோயிலையும் பூட்டி வைத்தோம்
விடை தெரியா வினாவாய் இறைவன் இங்கே!
விளையாட்டையும் விட்டுவிட்டு
விடை அறிய
பூட்டிய கோயிலுக்குள்
இருளில் இறைவனைத் தேடும் இவர்கள்
தேடல்கள் என்றும் தொடரும்!

வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் மாறிவரும் மனித இயல்புகளைப் பட்டியலிடும் இக்கவிதை, கடவுளை வைத்தே பிரிவினையை வளர்த்து மனிதநேயத்தை மறந்த மனிதர்களாகிய நாம், எங்கும் எதிலும் அருளாய் நிறைந்திருக்கும் இறைவனை இருட்டறைக்குள் தேடி அலைகின்றோம்! என்ற வாழ்வியல் உண்மையைப் பேசுவது சிறப்பு. ஆதலால், இக்கவிதையின் ஆசிரியர் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *