எல்லோருக்கும் பெய்யும் மழை

வை.கோபாலகிருஷ்ணன்

அந்த வங்கியின் காசாளரான வஸந்திக்குப் பல விதமான மன உளைச்சல்கள். பூவும் பொட்டுமாக புது மணப்பெண்ணாகத் துள்ளித் திரிந்து ஜொலிக்க வேண்டிய அவள், திருமணம் ஆன ஆறே மாதத்தில், சாலை விபத்தொன்றில் கணவனைப் பறி கொடுத்து விட்டு, அவன் பார்த்து வந்த வங்கி வேலையை, கருணை அடிப்படையில் பெற்றுக் கொண்டு, சின்னஞ்சிறு வயதில் பிழைப்புக்காக உழைக்க வந்து, ஓராண்டு தான் ஆகிறது.

கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கைக்குச் சாட்சியாக ஒரு வயதில், கைகள் இரண்டிலும் மிகச்சிறிய ஆறாவது விரலுடன் கூடிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவள் காலடி எடுத்து வைத்த வேளை தான் இப்படி ஆகி விட்டது என்று தங்களின் ஒரே பிள்ளையைப் பறி கொடுத்த வேதனையில், புலம்பி வந்த மாமனார் மாமியாருடன் கொஞ்ச காலம் படாத பாடு பட்டு விட்டு, பிரசவத்திற்குப் பிறந்த வீடு வந்தவள் தான்.

ஆறாவது விரல் அதிர்ஷ்டம் என்பார்கள். அந்த அதிர்ஷ்டம் தானோ என்னவோ, பிரசவத்திற்குப் பிறகு, அவள் கணவனின் பெற்றோர்கள் குழந்தையையும் இவளையும் பார்க்க வரவே இல்லை. புகுந்த வீட்டுக்குக் குழந்தையுடன் வரச் சொல்லி அழைக்கவும் இல்லை. நல்லவேளையாக இவளின் அந்தக் குழந்தையைக் கூடமாட பார்த்துக் கொள்ள ஒண்டிக்கட்டையான இவளது தாயாராவது இருப்பதில் சற்றே ஒரு ஆறுதல்.

வீட்டில் இருந்தால் வேதனை தான் அதிகரிக்கும் என்று ஆபீஸுக்கு வந்தால் இங்கும் பிரச்சனை தான். காசாளர் [Cashier] வேலை என்ன லேசான வேலையா? கொடுக்கல் வாங்கலில் முழுக்கவனமும் இருக்க வேண்டும். அனுபவசாலிகளையே கூடச் சமயத்தில் காலை வாரி விட்டு விடும். எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் வஸந்திக்கு சமயத்தில் பணம் கையை விட்டுப் போய் நஷ்டமாகி விடுகிறது. மாதக் கடைசி வேறு. இந்தக் காலம் போல் பணம் எண்ணும் மெஷின்கள் எல்லாம் கிடையாது. ஒவ்வொரு நோட்டாகத் தண்ணீர் தொட்டு விரல்களாலேயே எண்ண வேண்டும்.

நேற்று மாலை சுளையாக நானூறு ரூபாய் கணக்கில் உதைத்தது. கை நஷ்டப்படுவதுடன் சீஃப் கேஷியரிடமும் மேனேஜரிடம் பாட்டு வேறு வாங்க வேண்டியுள்ளது. உடனே பணம் கட்ட முடியாத சூழ்நிலைகளில், சம்பந்தப்பட்டக் காசாளருக்கு சம்பள முன்பணம் (Salary Advance) கொடுத்தது போலக் கணக்கு எழுதி, அன்றைய அலுவலகக் கணக்கை சரி செய்து விட்டு, பிறகு சம்பளத்தில் அந்தத் தொகையைப் பிடித்துக் கொள்வார்கள். உண்மையிலேயே பணம் கொடுக்கல் வாங்கலில் தவற விடப்பட்டதா அல்லது மாதக் கடைசியில், குடும்பச் செலவு செய்ய பணப்பற்றாக்குறையை ஈடுகட்ட, நாடகம் ஏதாவது நடத்தப்படுகிறதா என்று அவர்கள் சந்தேகப்படுவதும் இயற்கையே.

தன்னைச் சுற்றிச் சுற்றி வந்து 10, 20, 50 என்று அடிக்கடி கைமாத்து வாங்கிச் செல்லும், அந்த வங்கியின் அடிமட்ட தற்காலிக ஊழியரான பெண் அட்டெண்டர் அஞ்சலை நேற்று காலை தன்னிடம் வந்து அவசரமாக இருநூறு ரூபாய் கேட்டதையும், தான் தர மறுத்து விட்டதையும் நினைத்துப் பார்த்தாள் வஸந்தி.

பழகிய வரை அஞ்சலையும் நல்லவள் தான். அவள் கணவன் தான், சதா சர்வகாலமும் குடித்து விட்டு, மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தும் வேலை வெட்டி இல்லாதவன்.

பாவம் அஞ்சலை. முப்பது வயது முடிவதற்குள் அடுத்தடுத்து நான்கு குழந்தைகள். இவள் ஒருத்தியின் மிகக் குறைந்த சம்பளத்தில் ஆறு உயிர்கள் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு. பண நெருக்கடியால் ஒரு வேளை அஞ்சலை நம் கவனத்தைத் திசை திருப்பி, ஏமாற்றி பணம் ரூபாய் நானூறை தன் மேஜையிலிருந்து எடுத்துப் போய் இருப்பாளோ?

ஆனால் தானும் கூடமாட தொலைந்த பணத்தைத் தேடுவது போல நேற்று மாலை வெகு நேரம் என்னுடனேயே இருந்து, என்னருகே கேபினுக்குள் இருந்த குப்பைத் தொட்டியைக் கிளறி, ரூபாய் நோட்டுக்கள் ஏதாவது பறந்து அதில் போய் விழுந்துள்ளதா என குனிந்து நிமிர்ந்து ஆராய்ந்து, என் வருத்தத்தில் பங்கேற்றுக் கொண்டாளே, அஞ்சலை!

எதற்கும் இனி அவள் விஷயத்தில் சற்று உஷாராகவே இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள், வஸந்தி.

மறுநாள் விடியற்காலம் அஞ்சலை வஸந்தி வீட்டுக்கே சென்று ரூபாய் நானூறு பணத்தை நீட்டி, “அம்மா, நான் இதுவரை உங்களிடம் சிறுகச்சிறுக நான் வாங்கிய பணம் ரூபாய் நானூறு வரை இருக்கும். இந்தாங்க அம்மா அந்தப் பணம். உங்களைப்போன்ற ஒரு நல்லவங்களுக்கு ஒரு எதிர்பாராத சோதனையும், நஷ்டமும் ஏற்பட்டதில் எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது” என்றாள்.

“முந்தாநாள் தான் என்னிடம் வந்து இருநூறு ரூபாய் கடன் கேட்டாயே, அஞ்சலை! இந்தப்பணம் நானூறு ரூபாய் உனக்கு எப்படிக் கிடைத்தது?” வஸந்தி தன் மனதில் உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தை மிகவும் இயல்பாக ஒரு கேள்வியாகக் கேட்டே விட்டாள்.

”நானும் உங்களைப் போலவே பல பேர்களிடம் அன்று கைமாத்தாகத் தருமாறு பணம் கடன் கேட்டுப் பார்த்து விட்டேன். ஆனால் யாருமே தந்து உதவவே இல்லை அம்மா.

விற்கும் விலைவாசியில் ஒரு நாள் போவது ஒரு யுகமாக உள்ளதே அம்மா. கட்டினவனும் எதைப் பற்றியுமே கவலைப்படாமல் சாராயக்கடையே கதி என்று இருக்கிறான். நான் என்ன செய்ய? எனக்கு வேறு வழியே தெரியலையம்மா.

என் கழுத்தில் இருந்த அரைப்பவுன் தாலி மட்டுமே மிச்சம் இருந்தது. அதையும் என்றைக்காவது குடி போதையில், மேலும் ஊற்றிக் குடிக்க கழட்டிக் கொண்டு போய் விடுவான் அந்தப்பாவி மனுஷன். அவனே சரியில்லாத போது அவன் கட்டிய அந்தத் தங்கத் தாலி எனக்கு முக்கியமாகப் படவில்லை. மேலும் எங்கம்மா கஷ்டப்பட்டு, தன் காசு போட்டுக் கடையில் வாங்கிய தாலிதான் அது.

அவிழ்த்துப் போய் அடகு வைத்து ரூபாய் ரெண்டாயிரம் வாங்கியாந்துட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு நேற்று தான் எங்கள் வீட்டில் வாய்க்கு ருசியாச் சமைத்து, வயிறு முட்டக் குழந்தைகளுக்குப் போட முடிந்தது” என்றாள் கண்ணில் நீர் மல்க.

அவள் பேச்சை நம்பவும் முடியாமல் நம்பாமலும் இருக்க முடியாமல் வஸந்திக்கு மனதில் தடுமாற்றம் ஏற்பட்டது.  எது எப்படியோ அஞ்சலைக்கு அவ்வப்போது சிறுகச் சிறுக சில்லறையாகக் கொடுத்த தொகை, திரும்ப வரவே வராது என்று முடிவு கட்டியிருந்த தொகை, மொத்தமாக இப்போது திரும்பி வந்ததில், வஸந்திக்கு மகிழ்ச்சியே.

”தாலியை அடமானம் வைத்துவிட்டு, கழுத்தில் வெறும் மஞ்சள் கயிற்றுடன் உன்னைப் பார்த்தால், உன் புருஷன் திட்டி, அடிக்க வரமாட்டானா?” என்று கேட்டாள் வஸந்தி.

”இனிமேல் ஒரு அடி என்னை அந்த ஆளு அடித்தாலும் போதும்; நேராகப் போய் போலீஸில் புகார் கொடுத்து ஒரு வருஷம் உள்ளே தள்ளிப்புடுவேன். பெண்கள் மீதான வன்கொடுமை சட்டம் புதுசா போட்டிருக்காங்கன்னு, தினமும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து, போதை ஏறும் வரை ஓசிப்பேப்பர் படிக்கும் அதுக்கும் தெரியுமில்லே! உள்ளே தள்ளிவிட்டா என்னிடம் காசும் பறிக்க முடியாது; தண்ணியும் அடிக்க முடியாது; அதனால் அது இனி என் வம்புக்கே வராதும்மா” என்றாள் அஞ்சலை.

இவள் தைர்யமாக அது போலச் செய்தாலும் செய்வாள் என்று நினைத்துக் கொண்டாள், வஸந்தி. அஞ்சலை விடைபெற்றுச் சென்றதும், ஆபீஸுக்குப் புறப்படத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள், வஸந்தி.

அன்று கடவுளை வேண்டிக் கொண்டு மீண்டும் கேஷ் கவுண்டரில் அமர்ந்தாள் வஸந்தி. சட்டை ஏதும் அணியாமல் தோளில் துண்டு மட்டும் போட்டவாறு, அக்குளில் மிகப் பெரிய குடை ஒன்றை மடக்கிய நிலையில் இடுக்கியவாறு, அந்தப் பக்கத்து கிராமப் பெரியவர் ஒருவர் வஸந்தியிடம் வந்தார்.

”அம்மாடி, நேற்று காலை உன்னிடம் இருபத்து ஐயாயிரம் ரூபாய் நான் வாங்கிப் போனதில் ரூபாய் நானூறு கூடுதலாய்க் கொடுத்து விட்டாய் போலிருக்கு! இன்று காலையில் தான் கறவை மாடுகள் வாங்கவும், உரம், பூச்சி மருந்து போன்றவைகள் வாங்கவும், அந்தப்பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தேன். 500 ரூபாய்த் தாளில் 41 இருந்தது. 100 ரூபாய்த் தாளில் 49 தான் இருந்தது. ஒரு நூறு ரூபாய்க்கு பதில் ஒரு ஐநூறு ரூபாயைக் கொடுத்து விட்டாய் போலிருக்கு. இந்தாம்மா அந்தப் பணம்” என்றார் அந்தப்பெரியவர்.

பெரியவரை அமரச் செய்து, தேநீர் வரவழைத்துக் கொடுத்து “மிகவும் நன்றி, ஐயா” என்றாள் வஸந்தி.

”இதற்குப்போய் என்னம்மா நன்றியெல்லாம் சொல்றீங்க! தப்பு என் மேலேயும் உள்ளதும்மா; நானும் பணத்தை இங்கேயே எண்ணி சரி பார்த்து விட்டுத்தான் போயிருக்கணும். நம்ம பேங்கிலே நேற்றைக்கு கும்பல் ரொம்ப அதிகமாக இருந்திச்சு. நான் வங்கியிலிருந்து எடுத்த தொகையோ அதிகம். திருட்டுப் போய் விடுமோ என்ற பயம் வேறு. நீ கொடுத்த பணத்தை அப்படியே இடுப்பு வேட்டியிலே பத்திரமா இறுக்கி முடிந்து கொண்டு நகர்ந்து போய் விட்டேன். மேலும் நீ கொடுத்தால் அது வழக்கமா சரியாகத்தான் இருக்கும்னு ஒரு நம்பிக்கையும் தான் காரணம்” என்றார்.

அந்தப்பெரியவர் விடைபெறும் முன், “எங்க கிராமத்துப் பொண்ணு அஞ்சலை இங்கே தானே வேலை பார்க்குது! அது ரொம்ப ரொம்ப நல்ல தங்கமான பொண்ணும்மா. சின்னக் குழந்தையாய் இருந்த போது தன் பிறந்த வீட்டிலேயும் கஷ்டப்பட்டுச்சு; புருஷன் சரியில்லாம, இப்போதும், குழந்தை குட்டிகளோட கஷ்டப்படுவதாக அன்னிக்கு என்னை தெருவில் பார்த்தபோது சொல்லிச்சு.

நான் இங்கே வந்துட்டுப் போனதாகவும், அவளை நான் மிகவும் விசாரித்ததாகவும் சொல்லும்மா”  என்றார் பெரியவர்.

அஞ்சலையையா நீ சந்தேகப் பட்டாய்’ என்று அந்தப் பெரியவர் சாட்டையைச் சுழட்டி அடித்தது போல இருந்தது வஸந்திக்கு.

”வானம் இருட்டாகி விட்டது. பலத்த மழை வரும் போலத் தோன்றுகிறது” என்று வங்கியில் பணம் கட்ட வந்த இருவர் பேசிக் கொண்டது வஸந்தியில் காதில் விழுந்தது.

இந்தப் பெரியவர் போலவும், நம் அஞ்சலை போலவும் ஆங்காங்கே சில நல்லவர்கள் இருப்பதாலேயே, நாட்டில் அனைவருக்கும் மழை பெய்து வருகிறது என்று நினைத்துக் கொண்டாள் வஸந்தி.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “எல்லோருக்கும் பெய்யும் மழை

  1. நான் ஒரு உண்மைக்கதை சொல்கிறேன். குடிகாரக்கணவர்களை மட்டும் பற்றி. சமூக சேவை சம்பந்தமாக, ராணிப்பேட்டை அருகில் பிரமாதமாக சமூக சேவை செய்யும் செல்வப்பெண்மணி ஒருவர் ஒரு குக்கிராமத்துக்கு அழைத்துச்சென்றார். அல்லி ராஜ்யம். எனக்காக பாட்டுக்கள் பாடினார்கள். கிராமத்தில் கள்ளுக்கடையில்லை. ஏலமெடுக்க ஆளில்லை. ஐந்து மைல் நடந்து போகவேண்டும். ஆனால், போகமாட்டார்கள் என்றார், அந்த பெண்ணியத்தலைவி. எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள் என்றவுடன், சிரித்துக்கொண்டே, ஒரு யவதி கூறினாள்: கிட்ட வரவிடமாட்டோம்லெ. 

    கதையும் நன்றாக இருக்கிறது. படிப்பினையும் கன ஜோர்.

  2. //இன்னம்பூரான் wrote on 25 October, 2011, 21:43நான் ஒரு உண்மைக்கதை சொல்கிறேன். குடிகாரக்கணவர்களை மட்டும் பற்றி. சமூக சேவை சம்பந்தமாக, ராணிப்பேட்டை அருகில் பிரமாதமாக சமூக சேவை செய்யும் செல்வப்பெண்மணி ஒருவர் ஒரு குக்கிராமத்துக்கு அழைத்துச்சென்றார். அல்லி ராஜ்யம். எனக்காக பாட்டுக்கள் பாடினார்கள். கிராமத்தில் கள்ளுக்கடையில்லை. ஏலமெடுக்க ஆளில்லை. ஐந்து மைல் நடந்து போகவேண்டும். ஆனால், போகமாட்டார்கள் என்றார், அந்த பெண்ணியத்தலைவி. எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள் என்றவுடன், சிரித்துக்கொண்டே, ஒரு யவதி கூறினாள்: கிட்ட வரவிடமாட்டோம்லெ. 
    கதையும் நன்றாக இருக்கிறது. படிப்பினையும் கன ஜோர்.//

    ஊன்றிப்படித்து அழகாகக் கருத்துக்கூறி பாராட்டியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள், ஐயா. அன்புடன் vgk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *