நாகேஸ்வரி அண்ணாமலை

சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற அகில உலக தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள என் கணவருக்கு அழைப்பு வந்ததை அடுத்து சிங்கப்பூர் போகும் வழியில் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரையும் பார்த்து விடலாமே என்ற எண்ணம் எங்கள் இருவருக்கும் ஏற்பட்டது.  அது நல்ல யோசனையாகத் தோன்றவே கோலாலம்பூரில் முதலில் மூன்று நாட்கள் தங்கி விட்டுப் பின் சிங்கப்பூர் செல்வதென்று முடிவு செய்தோம்.

என்னுடன் ஏழாவது வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்பு வரை ஒரு முஸ்லீம் பெண் படித்து வந்தாள்.  அவளுடைய தந்தை அப்போது மலேயா என்று அழைக்கப்பட்ட இப்போதைய மலேசியாவிலேயே தங்கி விட்டார்.  அவர் வசித்தது பினாங்கு என்ற இடத்தில்.  இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவிற்கு வருவார்.  வரும் போதெல்லாம் இந்தியாவில் அப்போது கிடைக்காத நூதனமான பென்சில்கள், பேனாக்கள், உடைகள், உடைகள் தைத்துக் கொள்ள வித விதமான துணிகள் கொண்டு வருவார்.

அந்தத் துணிகளில் அந்தப் பெண் பாவாடை, சட்டைகள் தைத்துக் கொண்டு பள்ளிக்குப் போட்டுக் கொண்டு வருவாள்.  மற்றப் பெண்கள் எல்லோரும் அவளைப் பார்த்து ரசித்ததோடு பொறாமையும் கொள்வோம்.  மலேயா பேனாக்களை வைத்து அவள் விஞ்ஞான வகுப்புகளில் படங்கள் வரைவதைப் பார்த்து வியப்பதுண்டு.  பல வருடங்களுக்குப் பிறகு வெகுவாக முன்னேறி விட்ட மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு நான் பயணம் செய்வேன் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஐரோப்பிய நாடுகள் ஆசியாவில் பல நாடுகளைத் தங்கள் காலனிகளாக ஆக்கிக் கொண்டபோது மலாய்த் தீவுகளையும் மலாய் தீபகற்பத்தையும் விட்டு வைக்கவில்லை.  போர்ச்சுகல், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குள் நாடுகளைப் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டைகளின் பிறகு பிரிட்டன் இப்போதுள்ள மலேசியாவை தன் வசம் ஆக்கிக் கொண்டது.  டச்சுக்களின் கீழ் இருந்த தீவுகள் இப்போதைய இந்தோனேஷியா ஆயிற்று.  இந்த இரண்டு நாடுகளிலும் அவை காலனிகளாக மாறுமுன் பல பழங்குடிமக்கள் வாழ்ந்து வந்தனர்.  இவை காலனிய ஆதிக்கத்தின் கீழ்வந்த பிறகு வெளியிலிருந்து பலர் இங்கு குடியேறினர்.  இங்கு பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தாலும் இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.  உலகின் பிற இடங்களில் காலனிய அரசுகள் தாங்கள் ஆண்ட நாடுகளின் எல்லைகளை வரையறுத்தது போல் இந்த இரண்டு நாடுகளின் எல்லைகளையும் பிரிட்டனும் நெதர்லாந்தும்தான் தீர்மானித்தன.

மலாய் தீபகற்பமும் மற்ற மலாய்த் தீவுகளும் பிரிட்டனின் காலனீய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு ஃபெடெரேஷன் ஆஃப் மலேயா என்ற பெயரில் சுதந்திர நாடாக உருவாகியது.  அப்போது சிங்கப்பூரும் அதன் ஒரு பகுதியாக விளங்கியது.  1963-இல் சிங்கப்பூர் மலேசியா நாட்டை விட்டுப் பிரிந்து போன பிறகு மலேசியாவில் பதின்மூன்று மாநிலங்களே இருக்கின்றன.  ஆயினும் மலேசியக் கொடியில் சிங்கப்பூர் பிரிந்து போவதற்குன் முன் இருந்த, மாநிலங்களைக் குறிக்க பிறைக்குப் பக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட சக்கரத்தில் இன்னும் பதினான்கு கோடுகள் இருக்கின்றன.  இப்போது மலேசியாவில் பாதிக்கு மேற்பட்டவர்கள் மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள்.  அடுத்த பெரும்பான்மையினர் சீனர்கள்.  7.5 சதவிகிதத்தினரே இந்தியர்கள்.  இதில் பெரும்பாலோர் தமிழர்கள்.

மலேசியா ஒரு ஜனநாயக நாடு என்றாலும் இங்கு சுல்தான் ஒருவர் அதிகாரமில்லாத தலைமைப் பதவியில் இருக்கிறார்.  மலேசியாவின் பதினான்கு மாநிலங்களில் ஒன்பதில் பிரிட்டனின் ஆதிக்கத்திற்குள் வருவதற்கு முன் சுல்தான்கள் எனப்படும் முஸ்லிம் அரசர்கள் ஆண்டு வந்தனர்.  பிரிட்டன் ஆதிக்கம் செலுத்திய போதும் இவர்கள் தொடர்ந்து அதிகாரமில்லாத தலைமைப் பதவியில் இருந்து வந்தனர்.  மலேசியா உருவான பிறகு இந்த ஒன்பது பேரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருவராக மலேசியாவின் சுல்தான் பதவியை வகித்து வருகிறார்கள்.  ஒரு மாநிலத்தின் சுல்தான் ஐந்து ஆண்டுகள் மலேசியாவின் சுல்தான் பதவியை வகித்து விட்டால் இன்னும் நாற்பத்தைந்து ஆண்டுகள் அவர் தன்னுடைய பதவிக்காகக் காத்திருக்க வேண்டும்!

மலேசியா இப்போது வெகுவாக மேற்கத்திய நாகரிகத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. கோலாலம்பூர் முழுவதும் பெரிய பெரிய பல மாடிக் கட்டடங்கள். நிறையத் தொழிற்சாலைகள்.  மஹாத்தீர் பிரதம மந்திரியாக இருந்த போது நாட்டை நவீனப்படுத்த முயன்றார்.  கோலாலம்பூரில் இருக்கும் விமான நிலையமே இதற்கு சாட்சி.  நவீன மயமாக்கப்பட்ட சாலைகள் கோலாலம்பூரை அலங்கரிக்கின்றன.  .

மேற்கத்திய நாகரிகத்தின் தாக்குதல் வெகுவாக இருந்தாலும் பழைய இஸ்லாமிய கலாச்சாரமும் இருக்கிறது.  பெண்கள் வெளியில் வேலைக்குச் சென்றாலும் தலைக்கு முக்காடு இட்டுக் கொள்கிறார்கள்.  இங்கு பெரிய தேசிய மசூதி ஒன்று இருக்கிறது.  இங்கு இஸ்லாம்தான் தேசிய மதம் என்பதால் இந்த மசூதிக்கு தேசிய மசூதி என்று பெயரிட்டிருக்கிறார்கள்.  இங்கு முஸ்லீம் அல்லாதவர்களுக்கும்  உள்ளே போக அனுமதி இருந்தாலும் ஆண்கள் முஸ்லீம்கள் போல் தலையைத் துண்டால் மூடிக் கொண்டுதான் உள்ளே செல்ல வேண்டும்; பெண்கள் உடம்பு முழுவதையும் மறைக்க வேண்டும்.

மலேசியாவில் மலாய் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்குத்தான் அதிக சலுகைகள்.  இவர்கள் வியாபாரம் செய்தால் விற்பனை வரி கட்டத் தேவையில்லை.  சில மலாய் ஓட்டல் நிர்வாகிகள் தங்கள் பெயரில் ஓட்டல் நடத்தினாலும் அரசிடம் வரிச்சலுகை பெற்றுக் கொண்டு மலாய் அல்லாதவர்களை வைத்து ஓட்டல்களை நடத்துகிறார்கள்.  எப்போதாவது ஓட்டலுக்கு வந்து தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைப் பெற்றுக் கொண்டு போவதோடு சரியாம்.

இந்துக்களும் தங்கள் சமய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள பல இடங்களில் கோவில்கள் கட்டியுள்ளார்கள்.  முன்னால் இந்துக் கோயில்களை இடித்தவர்களே இப்போது கோயில்கள் கட்டுவதற்குப் பணம் கொடுப்பதாக ஒரு தமிழ் இந்து நண்பர் கூறினார்.  அது எவ்வளவு சரி என்று தெரியவில்லை. முருகன் கோவில் ஒன்று கோலம்பூரில் குகையின் உள்ளே இருக்கிறது.  உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை ஒன்றைக் கோவிலின் முகப்பில் மலையின் அடிவாரத்தில் அமைத்திருக்கிறார்கள்.  அடிவாரத்திலிருந்து சுமார் 300 படிகள் ஏறிச்சென்று முருகனைத் தரிசிக்க வேண்டும்.  இந்த முருகனுக்கு மிகச் சிறப்பான அலங்காரம் செய்கிறார்கள்.  இந்துக்கள் அல்லாதவர்களும் இந்தக் கோயிலின் அழகைத் தரிசிக்கவும் படிகளில் ஏறி உடற்பயிற்சி செய்வதற்கும் வருகிறார்கள். மற்ற இடங்களில் பார்க்காத தெரு நாய்களை இங்கு பார்த்தேன்.

கோலாலம்பூரில் ‘குட்டி இந்தியா’  (little India)   என்று ஒரு பகுதி இருக்கிறது.  இங்கு இந்தியத் துணிகள் விற்கும் துணிக்கடைகள், இந்திய மசாலாச் சாமான்கள் விற்கும் கடைகள் ஆகியவற்றோடு இந்தியப் பலகாரங்கள் விற்பதற்கு நடைபாதைக் கடைகளும் உண்டு.  இங்கு வேலை பார்ப்பவர்களில் பலர் இந்தியாவிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்கு இங்கு தங்குவதற்கு அரசின் அனுமதிபெற்று இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள்.

மலேசியாவின் ஆட்சி மொழியும் இந்தோனேஷியாவின் ஆட்சி மொழியும் ஒன்று.  மலேசியாவில் அதன் பெயர் பாஷா மலேசியா;  இந்தோனேஷியாவில் இதன் பெயர் பாஷா இந்தோனேஷியா.  இரண்டிற்கும் அடிப்படை மலாய் மொழி.  கடல் வணிகர்களிடையே செய்திப் பரிமாற்ற மொழியாக இது வேறு மொழிகளின் கலப்போடு வளர்ந்தது.  மொழியின் பெயரிலேயே ‘பாஷா’ என்ற சமஸ்கிருத சொல் இருப்பதைக் காணலாம்.  இம்மொழியில் தமிழ்ச் சொற்களும் உண்டு. சுதந்திரத்திற்குப் பிறகு இதுவே ஆட்சி மொழியானது.  மற்ற இஸ்லாமிய நாடுகளில் போல் அரேபிய வரி வடிவத்தைப் பயன்படுத்தாமல் ரோமன் வரி வடிவத்தைப் பயன்படுத்துகிறது.  இந்த மொழி ஆங்கிலத்திலிருந்து சொற்களை தாராளமாக கடன் வாங்குகிறது.  ஆங்கிலச் சொற்களை ஆங்கில முறைப்படி எழுத்துக் கூட்டாமல் உச்சரிப்பின்படி எழுதுவார்கள்.  எடுத்துக்காட்டாக ‘bus’  என்ற ஆங்கிலச் சொல்லை ‘bas’  என்று எழுதுவார்கள்.

எங்கள் கவனத்தைக் கவர்ந்த முக்கியமான ஒன்று சாலைகளிலும் கட்டடங்களிலும் பத்தடிக்கு ஒன்றாகத் தேசியக் கொடியை பறக்க விட்டிருந்தது.  நாங்கள் சென்றதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் (ஆகஸ்ட் 31) மலேசியா தன் சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருந்தது.  எங்கு பார்த்தாலும் தேசியக் கொடி கண்களில் தென்பட்டது.  சுதந்திர உணர்ச்சியை மக்களிடம் பரப்புவதற்காக இந்த ஏற்பாடு போலும்!

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மலேசியப் பயணம்

  1. 2010 நவம்பர் – டிசம்பரில் நான் மலேசியா சென்று வந்தேன். தங்கள் விவரணை, மீண்டும் மலேசியாவைக் கண்முன் கொணர்ந்தது. புகழ்மிக்க அந்த முருகன் கோவில், பத்து மலை முருகன் கோவில் என அழைக்கப்பெறுகிறது. தமிழர்கள், அங்கே தங்கள் அரசியல் செல்வாக்கையும் வளர்த்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.