அயராத உழைப்பின் சாதனை! – தினம் தினம் தீபாவளி!

3

பவள சங்கரி

வாழ்க்கையின் கீழ் மட்டத்திலிருந்து போராடி உயர் மட்டத்தை அடைந்துள்ள ஒரு உழைப்பாளியின் உண்மைக் கதை!


ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

வள்ளலார் பெருமான் வாழ்ந்த கடலூர் மாவட்டத்தில் பிறந்து, அவர் காட்டிய வழியாம், நேர்மையும், துணிவும், தன்னம்பிக்கையும், பொறுமையும் அயராத உழைப்பும் மட்டும் துணை கொண்டு, வெறும் ஆறு ரூபாய் தொகையுடன், பிழைப்பைத் தேடி சென்னை மாநகரம் வந்து சேர்ந்தவர் திரு தில்லை நடராசன்! சேசாயி தொழிற்சாலையின் தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் துவங்கியவர். வறுமையின் பிடியில் சிக்குண்டிருந்த காலங்களிலும், வாழ்க்கையின் மிக உன்னத நிலைக்கு வர வேண்டும் என்ற தீராத வேட்கையும் வழி நடத்திச் செல்ல, புத்தி கூர்மையுடன் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் நோக்கி வந்து சேர்ந்தவர், முதன் முதலில் சென்னை மௌண்ட் ரோடில் (இன்றைய அண்ணாசாலை) லேத் ஒர்க்‌ஷாப்பில் தன் தொழிலைத் துவங்கி வெகு விரைவிலேயே, இரண்டு பேரை உதவிக்கு வைத்துக் கொண்டு,லேத் ஒர்க்‌ஷாப்பை தனியே நடத்தி, அடுத்த படி எடுத்து வைத்துள்ளார்.

உழைப்பு… உழைப்பு …. உழைப்பு என்பது மட்டுமே தாரக மந்திரமாகக் கொண்டு, விடா முயற்சியும், கூர்ந்த அறிவும் துணை கொண்டு, 1983 ஆம் ஆண்டு, சென்னை பட்டரைவாக்கம் அம்பத்தூர் தொழிற்பேட்டை வளாகத்தில் (இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்)  25 பேருடன் ஒரு சிறிய தொழிற்சாலையாக,எஞ்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற போர்ஜிங்ஸ் தொழிற்சாலைப் பிரிவைத் துவக்கியுள்ளார். அங்கு தொழிலாளிகளுடன், தானும் ஒரு தொழிலாளியாகவே, அன்றாடம் 8 முதல் 10 மணி நேரம் கடுமையாக உழைக்கத் தொடங்கியிருக்கிறார் இன்றைய முதலாளி, திரு.தில்லை நடராசன் அவர்கள். தரம் நிரந்தரம் ஆனவுடன், உற்பத்திக்கான தேவைகளும் அதிகரிக்க, தொழிலாளர் பற்றாக்குறையும் ஏற்பட்ட காலகட்டத்தில், சற்றும் மனம் தளராமல், தன் உழைப்பை 8 மணி நேரத்திலிருந்து, 16 மணி நேரமாக அதிகரிக்கச் சற்றும் தயங்கவில்லை இந்த உறுதியான இரும்பு மனம் படைத்த மனிதர். அதற்கான பலனையும் விரைவில் அனுபவிக்க ஆரம்பித்துள்ளார் உற்சாகமாக.

இன்று அதன் பலனாக, கற்பகவிருட்சமாக இவர் உழைப்பின் பலன் படர்ந்து பரவி, சத்யா போர்ஜிங் மற்றும் ஏஜென்சிஸ், அம்பத்தூர், வெற்றிவேல் ஆட்டோ காம்பௌனண்ட்ஸ், அயனம்பாக்கம் தொழிற்பிரிவு, ஆகிய நான்கு நிறுவனங்களை உருவாக்கி, இன்று 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

ஒரு தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் துவங்கியதன் பலனாக இன்று தன் தொழிற்சாலையில் பணிபுரியும் அத்தொழிலாளர்களின் நலனில் முழுமையான அக்கறை கொண்டவராக, அவர்களுக்கான தனிநபர் காப்பீடு திட்டத்தின் மூலம் தலா ரூ. 1 இலட்சத்திற்கு நிறுவனச் செலவில் காப்பீடு செய்து கொடுத்துள்ளதோடு, பாதுகாப்பான பணிக்கு உத்திரவாதம் அளித்து, இன்றும் அதே சுறுசுறுப்புடனும், எளிமையுடனும், தன் தொழிற்சாலையில் பம்பரமாகச் சுற்றி பணியாளர்களுக்கும் தன்னம்பிக்கையும், ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் இந்த 72 வயது இளைஞர்.

தம்மை வாழ வைத்த தெய்வம் வள்ளலாரை அனுதினம் தியானம் செய்யும் வழமை கொண்ட இம்மாமனிதர், வடலூர் வல்லளார் நினைவிடத்திலும், அம்பத்தூர் பாலகுருகுலம் அனாதை குழந்தைகளுக்கும் அன்னதானம் வழங்குவதையும் பல ஆண்டுகளாக தவறாது செய்து கொண்டு வருகின்றார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கத்தினரான திரு தில்லை நடராசன் அவர்களின் தொழில் நிறுவனங்களின் மாதாந்திர உற்பத்தி 500 டன்களையும் தாண்டும் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. தில்லை குரூப்ஸ் நிறுவனங்களின் இன்றைய ஆண்டு வருமானம் சுமாராக 45 கோடி. இவர்களின் இலக்கு 50 கோடியையும் தாண்டுகிறது வரும் ஆண்டுகளில். வெகு இலகுவாக இவர்களின் வெற்றிப்பயணம் தொடர்ந்தும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெல், வீல்ஸ் இந்தியா, ஆக்ஸிஸ் இந்தியா, டாஃபே போன்ற ஏராளமான நிறுவனங்களின் ஆதரவுடன், தமிழ்நாடு மட்டுமன்றி, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தங்கள் தொழிலை ஆல விருட்சமாக பரவச் செய்து கொண்டிருக்கிறது இந்நிறுவனம்.

ஐ.எஸ்.ஓ, / டி.எஸ் 16949 தரச்சான்று பெற்றுள்ள தில்லை எஞ்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கு பெல் மற்றும் டாஃபே நிறுவனங்களின் BEST SUPPLIER AWARD வழங்கி கௌரவித்துள்ளது. மேலும்,CENTRAL BOILERS BOARD நிறுவனம், WELL KNOWN FORGE சான்று வழங்கி பெருமைபடுத்தியுள்ளது.

மிக எளிமையான உடையும், நடையும் கொண்ட இம்மனிதரைக் கண்டு வியந்து அவர்தம் வெற்றியின் இரகசியம் குறித்து வினவியபோது, மிக யதர்த்தமாக, “ இதெல்லாம் என்னம்மா வெற்றி, இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. கடந்து வந்த பாதையை என்றும் மறக்கக் கூடாது, உண்மையாக உழைக்கும் தொழிலாளர்களின் பின்புலம் மற்றும் வள்ளலாரின் கொள்கைகளுமே எங்களை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது” , என்று சர்வ சாதாரணமாக விடையளிக்கும் இம்மாமனிதருக்கு , இண்டஸ்ட்ரீஸ் எஸ்டேட் நியூஸ் இதழின் சார்பாக , DRAGON OF THE STEEL FORGING AWARD ம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு இணையாகத் தோள் கொடுக்கும், திரு. சத்திய நாராயணன் மற்றும் திரு.சுரேஷ் என்ற இரு மகன்களும் அவர்தம் பணியைச் செவ்வனே பகிர்ந்து கொண்டு தொழிலை மென்மேலும், நவீனமயமாக்குவதிலும் முனைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்!

ஆக, நேர்மையும், அயராத உழைப்பும், விடா முயற்சியும், தொழிலாளர்கள் நலன்மீது முழுமையான அக்கறையும், கொண்டு பணிபுரியும் போது வெற்றி நிச்சயம், அது தேவ சத்தியம் என்பதற்கு தொழிலதிபர் திரு தில்லை நடராசன் அவர்கள் இன்று ஒரு காட்டாக நம் முன் நின்றிருப்பதே நிதர்சனம்!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அயராத உழைப்பின் சாதனை! – தினம் தினம் தீபாவளி!

  1. திரு தில்லை நடராஜன் அவர்களின் அயராத உழைப்பையும் தொழிலில் அவர்

    காட்டும் நேர்மையையும் கடவுளிடம் அவர் கொண்டிருக்கும் தீராத பக்தியையும்

    ஒவ்வொருவரும் பின்பற்றினால் நாமும் அவரைப் போல் வாழ்க்கையில்

    உயரலாம்.வாழ்க வளமுடன்.

  2. இது ஒரு பாமரனின் வரலாறாக படிந்துள்ள கட்டுரை. படிப்பினைகள் பல இருப்பதாகத் தோன்றுகிறது. வள்ளலாரே திரு.தில்லை நடராஜனை வழி நடத்துகிறார் என்றும் தோன்றுகிறது. அமெரிக்காவில் பெரிய தொழிலதிபர்கள் இவ்வாறு தான் வாகை சூடினர். மகன்கள் உறுதுணையாக இருப்பது குட் இயர் என்ற கார் டயர் உற்பத்தியாளரை நினைவூட்டுகிறது. அது கடந்த தலைமுறை. தந்தையின் சிலை பெரிய தொழிற்சாலை முன்னால். ஐந்து சகோதர்கள் அதன் முன் நிற்கும் ஃபோட்டோ. ஒருவர் நிதி, ஒருவர் நிர்வாகம், ஒருவர் வணிகம், ஒருவர் பொதுநல தொடர்பு. ஒருவர் விளம்பரம், வருங்கால திட்டம். ஏன் கொழிக்கமாட்டார்கள்? நம் டி.வி.எஸ். அப்படித்தானே.

  3. தில்லை நடராஜன் அவர்களின் வாழ்க்கை நம் நாட்டு
    இளைஞர்களுக்கு நல்ல பாடம். தில்லை நடராஜருக்கு
    மேல் சிதம்பர ரகசியம் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.
    பொறுமை,விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகிய
    ரகசியங்களை தன்னகத்தே கொண்டுள்ளார் இந்த
    தில்லை நடராஜன்.
    “இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்.”
    என்ற குறளுக்கு ஏற்ப அவர் தன் ஊழியர் நலனிலும்
    அக்கறை காட்டி செயல் படுவது பாராட்டுக்குரியது.
    இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.