இனிக்கும் தலை தீபாவளி – ஒரு நேர் காணல்

3

சாந்தி மாரியப்பன்

ஆயிரம் பண்டிகைகளைக் கொண்டாடியிருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு முதன் முதலாக தம்பதியர் இருவரும் சேர்ந்து கொண்டாடும் பண்டிகைகளின் இனிமையே தனி. அதுவும் திருமணமான முதல் வருஷத்தில் கொண்டாடப்படும் தலைப்பண்டிகைகள் அனைத்தும் அனேகமாக பெண்ணின் பிறந்த வீட்டிற்கு தம்பதியரை அழைத்துத்தான் கொண்டாடப்படும். திருமணமாகி பெற்றோரை விட்டுப் பிரிந்து, பெண் கணவன் வீட்டிற்குச் சென்று விட்டாலும் அவ்வப்போது ஒருவரையொருவர் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுவது இயல்பே. அந்த விருப்பத்தைப் பண்டிகைகளைச் சாக்கிட்டு நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு ஏற்பாட்டைச் செய்த நம் முன்னோரின் திறனை என்னென்பது!!..

இப்படியான பண்டிகைக் காலங்களில் கிண்டலுக்கும் கேலிக்கும் பஞ்சமிருக்காது. சில இடங்களில் புது மாப்பிள்ளைகள் கிண்டலுக்குப் பயந்து ஒளிந்து கொள்வதும், சில இடங்களில் மாப்பிள்ளை முறுக்குக் காட்டுவதுமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் இருக்கும். தலைதீபாவளி என்பது சிலருக்கு மத்தாப்பூவாகவும் சிலருக்கு அணுகுண்டாகவும் என, அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் வாழ்நாள் முழுக்க நெஞ்சில் இனித்துக் கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சில மறக்க முடியாத அனுபவங்கள் நம்முடன் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அவர்களின் ‘ஒப்புதல் வாக்குமூலங்களை’க் கேட்போம்.

லஷ்மி சீனிவாசன்: “எங்க தலைதீபாவளியை, கல்லிடைக் குறிச்சியில்தான் கொண்டாடினோம். கல்யாணம் ஆகி 6-வது மாசமே தீபாவளி வந்தது. பூனாவிலிருந்து நான், கணவர், மாமியார், மாமனார், மாமியாரின் அப்பா என ஐவரும் கிளம்பி கல்லிடைக்குப் போனோம். எங்க தாத்தா அஞ்சு பேருக்கும் முதல் வகுப்பில் பயணச்சீட்டு எடுத்துத் தந்தாங்க..

எல்லோருக்கும் பட்டுத் துணிமணிகள் எடுக்கப் பட்டிருந்தன. கொல்லைப்புறம் ஒரு அறை கட்டி நகை பண்ணற ஆசாரியையும் வீட்டுக்கே வர வச்சு வைர மோதிரம் அட்டிகைன்னு பண்ணினாங்க. என் வீட்டுக்காரர் எனக்கு ஒரு காஞ்சீபுரம் பட்டுப்புடவையும் தங்கத்தில் காசுமாலையும் தீபாவளிப் பரிசாகக் கொடுத்தார்.

எங்கள் தலைதீபாவளி அன்று நடந்த வேடிக்கையான ஒரு விஷயத்தை இன்றைக்கும் மறக்க முடியாது. எங்கள் ஊரிலிருந்து மூன்று கி.மீ தள்ளி அம்பாசமுத்ரம்னு ஒரு ஊரில் ஒரே ஒரு தியேட்டர் உண்டு (கிருஷ்ணா டாக்கீஸ்.) தீபாவளிக்கு புதுப்படம் வெளியிடுவாங்க. தாத்தா எங்க ரெண்டு பேரையும் “சினிமாக்குப் போயிட்டு வாங்க, வண்டி கட்ட சொல்றேன்”னார். சரின்னு வண்டில ஏறப் போனா அங்கே என் தம்பி, தங்கைகள், சொந்தக்காரக் குழந்தைங்கன்னு பதினைந்து வாண்டுகள் ஏற்கனவே ஏறி உட்கார்ந்திருந்தாங்க. இவர் என்னைப் பார்த்து முறைக்கிறார். “என்னடி இது தனியா நீயும் நானும் மட்டும் ஜாலியா சினிமாக்கு போலாம்னு பாத்தா இவ்வளவு பேர் கூடவா போகணும்” என்கிறார். எனக்கா சிரிப்பா வருது. வேற வழி இல்லாம போனோம். அங்கே குழந்தைங்க செய்த லூட்டியில் இவர் பயந்தே போனார்.. எங்கே படம் பாக்க விட்டாங்க? அன்றைக்கே “இனிமேல உங்க ஊருல படம் பாக்கவே கிளம்ப மாட்டேன்மா”ன்னுட்டார் என் கணவர். “

மஞ்சு ராஜீவ்: “எங்கள் வழக்கப்படி தீபாவளியன்று லஷ்மி பூஜையை மாமியார் வீட்டிலும், அடுத்து வரும் பாட்வா எனப்படும் பண்டிகையை தாய்வீட்டிலும் கொண்டாடுவோம். அந்தத் தலைதீபாவளி எனக்கு என்றைக்கும் மறக்கமுடியாத ஒன்று. பண்டிகையின் மகிழ்ச்சியுடன், என் முதல் குழந்தையை சுமந்திருந்த மகிழ்ச்சியும் சேர்ந்து கொண்டது. தலைதீபாவளியானதால் எல்லாப் பலகாரங்களையும் கண்டிப்பாக செய்தாக வேண்டுமென்று மாமியார் உத்தரவு போட்டு விட்டார். வாந்தி, மசக்கை படுத்தினாலும், அடுப்படியைக் கவனித்துக் கொண்டே இன்னொரு பக்கம் குளியலறைக்கு ஓடியோடிக் கொண்டிருந்தேன். எண்ணெய்ப் புகை, வாந்தியை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துக் கொண்டிருந்தது.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த கணவர் “அம்மா,.. அவளுக்குத்தான் முடியலியே.. இதெல்லாம் செய்யாட்டித்தான் என்ன?” என்று கேட்டு விட்டார். அவ்வளவுதான். மாமியார் வெண்கலப் பானை போல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு விட்டார். “இவ்வளவு நாள் நான் கஷ்டப்பட்ட போதெல்லாம் கவனித்திருப்பாயா?.. இன்றைக்குப் பெண்டாட்டிக்கு என்றவுடன் பல்லக்குத் தூக்குகிறாய்?..” என்றதும் கணவருக்கும் ரோஷம் வந்து விட்டது. எங்கள் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு விட்டார். எங்கள் யாரிடமும் பேசவில்லை. அவரை சமாதானப் படுத்துவதற்குள் எனக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. வழக்கமாக மாமியார் வீட்டில்தான் மாப்பிள்ளை முறுக்கைக் காட்டுவார்கள். என் கணவரும் மாமியார் வீட்டில்தான் முறுக்கிக் கொண்டார், ஆனால் அது என்னுடைய மாமியார் வீடாக அமைந்ததுதான் விசித்திரம். இதை இப்போதும் நினைத்து சிரித்துக் கொள்வதுண்டு.”

ஆர்த்தி: “எங்கள் தலைதீபாவளிக்காக மங்களூர் சென்றிருந்தோம். வழக்கம்போல் எண்ணெய்க்குளியல், புத்தாடை என்று அமர்க்களமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். என் கணவர் பட்டாசுகளை அள்ளி வைத்துக் கொண்டு வெடிக்கச் செய்து கொண்டிருந்தார். அவ்வப்போது சொதப்பி விடவே, அங்கிருந்தவர்களெல்லாம் கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

“இப்ப பாருங்க..” என்றபடி என்னவர் ராக்கெட்டைக் கையில் எடுத்தார். திரியைக் கிள்ளினார். மத்தாப்பூவால் பற்ற வைத்தார். நாங்களெல்லாம் ‘ஆ’வென்று வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். இதோ வெடிக்கப் போகிறது,.. வர்ணஜால மழை கொட்டப் போகிறது என்று ஆவலுடன் காத்திருந்தோம். “டொம்’மென்று ஒரு சத்தம், ஆனால், வானத்தில் ஒன்றையும் காணவில்லை.. எங்கேயாவது தள்ளிப் போய் வெடிக்குமாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தோம். ம்ஹூம்.. ஒன்றையும் காணவில்லை.

ராக்கெட் காணாமற் போன மர்மம், கணவரின் சிவந்திருந்த கைகளைப் பார்த்தபோது வெளிப்பட்டது. சிவப்பென்றால் சிவப்பு.. அப்படியொரு ‘ரத்த’ச்சிவப்பு. மருதாணியிட்டது போலச் சிவந்திருந்தது. புது மனைவியின் முன் தன் வீரதீரத்தைக் காட்ட முயன்று விழுப்புண் பெற்று நின்ற அவரைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முயன்று தோற்றோம்.”

ஆஸ்திரேலியாவில் தங்கள் தலைதீபாவளியை இனிமையாகக் கொண்டாடும் பிரகாஷ்குமார் லட்சுமிதேவி தம்பதியர், தீபாவளியன்று ஆஸ்திரேலியா செல்வ விநாயகர் ஆலயத்தில் நடை பெறும் சிறப்புப் பூஜையில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருக்கின்றனர். இவர்களிடம் ஒரு சிறப்புப் பேட்டி எடுத்து அனுப்பியிருக்கிறார் நமது இராஜராஜேஸ்வரி.

தங்கள் வாழ்க்கைத்துணையிடம் நீங்கள் காணும் உன்னதமான பண்புகள்?

அன்பான, அடக்கமான, குடும்பத்துக்கு ஏத்த மாதிரி பொண்ணு, முக்கியமா மனசுக்கு ஏத்த மாதிரி, குறிப்பறிந்து நடந்து கொள்வது.

உங்களுக்குப் பொருத்தமான துணைதான் என்று உணருகிறீர்களா? எதனால்?

மனசுக்கு ஏத்த மாதிரி இருந்ததால். எல்லாம் பெரியவர்களின் ஆசீர்வாதம்.

உங்கள் மணவாழ்க்கையின் இனிமையான பகுதியாக உணர்வது என்ன? ஏன்?

குறிப்பறிந்து நடந்து கொள்வது. மற்றும் நான் பேச நினைப்பதெல்லாம், அவள் பேசுவதால்.

திருமணத்தின் சிறப்பாக நீங்கள் உணர்வது என்ன?

திருமணம் என்பது ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தின் , நாகரீகத்தின் கலாச்சாரத்தின் வெளிப்பாடு.

தங்கள் கண்ணோட்டத்தில் தற்கால திருமணங்களுக்கும், முற்காலத் திருமணங்களுக்கும் வித்தியாசம் உணர்கிறீகளா?

அந்தக் காலத் திருமணங்களைப் போல, தற்காலத் திருமணங்கள் பழம் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை.

வெற்றிகரமான திருமண வாழ்விற்கு அடிப்படை என்னவென்று கருதுகிறீர்கள்?

விட்டுக் கொடுத்துப் போதல். ஆணுக்குப் பெண் சமம் என்ற உண்மையை உணர்ந்து சம உரிமை மற்றும் மரியாதை கொடுத்தல்.

 

தலைதீபாவளியைக் கொண்டாடிய, கொண்டாடும், கொண்டாடப்போகும் ஜோடிகளுக்கு இனிய

தீபாவளி நல்வாழ்த்துகள்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இனிக்கும் தலை தீபாவளி – ஒரு நேர் காணல்

  1.  அது சரி!!… என் உடன்பிறப்பாயிற்றே. அப்படியொரு பராக்கிரமம் இல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம்.//

    தீபாவளி நல்வாழ்த்துகள்.

  2. தலைதீபாவளியைக் கொண்டாடிய, கொண்டாடும், கொண்டாடப்போகும் ஜோடிகளுக்கு இனிய
    தீபாவளி நல்வாழ்த்துகள்.

  3. ‘தலை தீபாவளி ‘கான்செப்ட் நன்றாக இருந்தது ,நீங்கள் நேரில் கண்டு எடுத்த செய்தி,உங்களுடன் நனகளும் நேரில் உங்கள் பக்கத்தில் அமர்ந்து இருந்தது

    போல் ஒரு உணர்வை ஏற்படுத்தியதற்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள் …தேவா”’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *