அன்பின் வெளிச்சம்

சக்தி சக்திதாசன், லண்டன்


அன்பினுமினிய வல்லமை வாசகர்களுக்கு

அன்பான வணக்கங்கள்.

புனிதரான இயேசுபிரான் உதித்த திருநாளில் அவர் போதித்த அன்பினை இதயத்தில் ஏந்தி அன்பினுமினிய என் கிறீஸ்தவ அன்பர்களுக்கு இதயங்கனிந்த நத்தார் தின வாழ்த்துக்களைப் பொழிகின்றேன்.

இருண்டதோர் உலகினில்
வெளிச்சமென மிளிர்ந்தவன்
மடமையெனும் இருளை
அன்பு கொண்டு விரட்டியவன்

அன்னை மேரியின் கருவறையில்
அன்பே வடிவாய் முகிழ்த்தவன்
வெறுமையெனும் பொட்டலில்
மறுமலர்ச்சி விதையாய் விழுந்தவன்

இடறி விழுந்திடும் மனித சமுதாயத்தை
இரக்கமெனும் கம்பு கொண்டு தாங்கியவன்
நோக்கமில்லா வாழ்வுதனில் மூழ்கியோரை
அன்பெனும் இலக்கு நோக்கி நகர்த்தியவன்

கெட்ட போரிடும் உலகினை மாற்ற
தன்னுயிரை ஈந்து கருணை புரிந்தவன்
பேராசையில் உழன்றிடும் மாந்தரை
பேரருளின் மகிமை காட்டிக் காத்தவன்

மாட்டுத்தொழுவமதில் அன்றுதித்து
மானிட மேன்மைக்காய் தனையீந்த
கர்த்தரின் திருநாளில் அன்புதனை
முதன்மையாக்கி மனிதநேயம் காத்திடுவோம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க