மாண்புள்ள மு.வ. போற்றிய நல்லாசான் முருகைய முதலியார்
டாக்டர் வே. விக்னேசு,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் – 14.
9597203214.
vigneshrathinam432@gmail.com
*********
“பறந்துபோய் மலையுச்சியை அடைவோம் என்று சொல்கின்றவர்களைப் பார்த்து ஏங்கி நிற்பது வீண். படிப்படியாக நடந்து ஏறி மலையுச்சியை அடைகின்றவர்களைப் பார்த்து பின்பற்றுவதே கடமை.” – (காந்தி அண்ணல் – மு.வ. – ப. 8)
தோற்றுவாய் :
எளிய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்து சிந்தனைச் சிறப்பாலும் தொண்டாலும் உலகத்தோர் நெஞ்சில் நிறைந்து வாழும் சான்றோர் உயர்திரு. டாக்டர் மு.வரதராசனார் அவர்களாவார். தம் வாழ்வைப் பிறர்கற்றுப் பயன்பெறுமாறு எடுத்துக்காட்டான வாழ்வினராய் வாழ்வாங்கு வாழ்ந்த மு.வ. அவர்களின் உயரிய வாழ்வில் இருபெருஞ் சான்றோருக்குச் சீரிய இடமுண்டு. ஒருவர் தமிழ்முனிவர் திரு.வி.க. அவர்கள். மற்றுமொருவர் மு.வ. அவர்களைத் தமிழ் படிக்கத்தூண்டி மாலை வேளைகளில் முருகன் கோயில் முன்றிலில் சில நூல்களைக் கற்பித்து, அவரை நன்கு உருவாக்கிய சான்றோரான முருகைய முதலியார் அவர்களாவார். இச்சான்றோர் பெருந்தகையால் ஊன்றப்பெற்ற தமிழ்வித்தே மு.வ. அவர்களைத் தாமே தமிழ்பயிலச் செய்து தமிழ்ச்சான்றோராக்கியது எனல் தகும்.
மு.வ.வின் ஆசிரியப்பெருமக்கள் :
தமிழகத்தின் வடபகுதியிலமைந்த வடார்க்காடு மாவட்டத்திலமைந்த வாலாஜாப்பேட்டை நகர இரயில் நிலையத்திற்கு அருகிலமைந்துள்ள வேலம் என்னும் அழகிய சிற்றூரே மு.வ. அவர்களின் சொந்த ஊராம். திருப்பத்தூரே மு.வ.அவர்களின் பிறந்த ஊராம். மு.வ. அவர்கள் தொடக்கப்பள்ளிக் கல்வியை வேலத்திலும் உயர்நிலைப்பள்ளிக் கல்வியைத் திருப்பத்தூரிலும் பெற்றார்கள். ஆசிரியர் போற்றும் நன்மாணாக்கராகத் திகழ்ந்து ஆசிரியரின் அன்பிற்கும் பாராட்டிற்கும் உரியவராக விளங்கிய மு.வ. அவர்கள் பெரிதும் மதித்துப்போற்றிய ஆசிரியப்பெருமக்கள் மூவர். அவருள் தொடக்கப்பள்ளியில் மு.வ.வின் ஆசிரியராக விளங்கியவர் அமைதியே உருவான பாலப்பிள்ளை அவர்கள். மு.வ.வைச் சிறந்த மாணாக்கனாக உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.
மு.வ.வின் ஆசிரியர்களுள் மற்றுமொருவர் திருவேங்கடத்தையங்கார் என்பார். மு.வ.வின் மீது மிகுந்த அன்பு கொண்ட இவர் கணித ஆசிரியராவார். கற்பித்தப் பாடம் தமிழிலக்கணம். தம் ஆசிரியப்பற்றி அவரின் மாணவரான மு.வ. கூறுகின்றார்:-
“யான் ஆறாம் வகுப்பில் கற்றபோது எனக்குத் தமிழ் இலக்கணம் கற்பித்தவர் கணக்கு ஆசிரியர். அவர் தமிழ் கற்றுத் தேர்ந்தவர் அல்லர்; வடமொழியைப் பாடமாகக்கொண்டு தேர்ந்து கணக்கு ஆசிரியராக வந்தவர். ஆயினும், தமிழ் வகுப்பு அவரைத் தமிழ் கற்கத் தூண்டியது. அவர் நடத்திய வகுப்பில் இலக்கணப் பகுதி வரும்போதெல்லாம் மாணவர்க்குப் பேரச்சம் ஏற்படும். ‘இலக்கணக் கேள்விகளுக்கு நன்றாக விடை எழுதுவோர்க்கு நல்ல மார்க்குத் தருவேன். அப்படித்தான் இவன் என்னிடம் 60,65 என மார்க்கு வாங்குகிறான்’ என்று மற்ற மாணவரிடம் கூறுவார். ஆனால் யான் தவறு செய்யும் போதெல்லாம் தண்டனையும் இரட்டிப்பாகத் தருவது அவர் வழக்கம்… அவர் 60,65 என உயர்ந்த எண்களும், தவறியபோது இரட்டிப்புத் தண்டனையும் கொடுத்த கொடையே என்னை இன்று தமிழ்க்கடலுள் திளைக்கச் செய்துள்ளது என நினைந்து நன்றியுடையேனாகும் போது என் உள்ளம் குளிர்கின்றது” (மொழியியற் கட்டுரைகள் – மு.வ.-பக். 35,36) மு.வ.வைத் தமிழ்ச்சான்றோராக மாற்றுவதற்கு உரமிட்டத் திருவேங்கடத்தையங்காருக்கு நாமும் நன்றிபாராட்டுங் கடப்பாடுடையோம்.
மு.வ. தமிழ்ப்பேராசிரியராகக் காரணமாக அமைந்தவர் அவருக்கு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக அமைந்த முருகைய முதலியார் என்பார். மு.வ.வின் மீது மிகுந்த அன்பு கொண்ட இவரின்பால் மு.வ.விற்கு அளப்பரிய அன்புண்டு. தம் தமிழாசிரியப்பெருமானின் அருங்குணங்களை உன்ன உன்ன உள்ளம் உருகும் மு.வ., தம் ஆசிரியரைப்பற்றி உவகைபெருகக் கூறுகின்றார். அவர் கூறுமாறு:-
“ஆறு மாதத் தேர்வு முடிவு வந்தது; விடுமுறையும் கழிந்தது; பள்ளிக்கூடம் திறந்த நாள் அது. மாணவர்கள் மகிழ்ச்சியோடு ஒருவரை ஒருவர் கண்டு அளவளாவினார்கள். மணி அடித்தது. எட்டாம் வகுப்பில் நானும் மற்றவர்களும் விரைந்து போய் ‘இடம்பிடித்து’ இருந்தோம். தமிழ்ஆசிரியர் வந்தார். உயர்ந்த பண்புகளுக்கெல்லாம் உறைவிடமான அவரைக் கண்டதும் எங்கள் மகிழ்ச்சி தெய்வத்தன்மை பெற்றுவிட்டது. வழக்கம்போல் முன்னுரையாக இன்மொழி பேசித் தமிழமுது ஊட்டினார்” (மொழியியற் கட்டுரைகள் -மு.வ.-ப. 118) இவ்வகையில், இம்மூன்று ஆசிரியப் பெருந்தகைகளே மு.வ.வை நன்கு உருவாக்கியதில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
முருகைய முதலியார்:
மேற்குறித்த மூன்று ஆசிரியர்களுள் மு.வ. அவர்கள் பேரன்பு கொண்டு மதித்துப் போற்றிய நல்லாசான் மு.வ.வின் தமிழாசிரியரான முருகைய முதலியார் ஆவார். இவர் தாமே தமிழ்பயின்று 1912-விரோதிகிருது தைமாதம் 9,10,11ஆகிய நாள்களில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் நடத்திய தனித்தமிழ் தேர்வில் சிறப்புறத் தேர்ந்தவர். திருப்பத்தூர் நகராண்மைக்கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். எவ்வித ஊதியமும் எதிர்பாராமல் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வகுப்பிலே மட்டுமின்றி, இல்லத்திலும் வெளிப்புறங்களிலும் கல்விச்செல்வத்தை வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தவர். இப்பெருந்தகையிடமிருந்து மு.வ. சமயநூல்களையும் நால்வர் நான்மணிமாலை முதலான சில நூல்களையும் பாடங்கேட்டார். பள்ளியிறுதித் தேர்வில் சிறப்புறத் தேர்ந்த மு.வ., திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியை ஏற்றார். மிக்க பணிச் சுமையாலும் ஈளைநோயாலும் அவதிப்பட்டு, வேலையைவிட்டு ஓய்வாக வேலத்திலிருந்த காலத்தில் மு.வ.வை அழைத்து ‘தம்பி நீ தமிழ் வித்துவான் கல்வி பயிலலாமே? நான் சொல்லித்தருகின்றேன்’ என்று அன்போடு இச்சான்றோர் பெருந்தகை கற்பித்தக் கல்வியே மு.வ.வை வித்துவான் தேர்வில் முதல்வகுப்பில் முதலாவதாகத் தேறி, திருப்பனந்தாள் காசிமடத்தினர் தமிழ் முதன்மைக்கு வழங்கிய 1000 ரூபா பரிசு பெறச்செய்தது எனல் மிகையன்றாம்.
பள்ளியாசிரியர் மு.வ. :
தாமே கற்றுத் தனிமுதன்மை பெற்ற மு.வ.விற்குத் தமிழாசிரியப்பணியும் தேடி வந்தது. ஆம்! தம் உள்ளங்கவர்ந்த தமிழய்யா முருகைய முதலியாரவர்கள் தாம் ஓய்வு பெற்றபோது அப்பணிக்கு மு.வ.வை அழைத்து அவரைத் தமிழாசிரியராக்கினார். எந்தப் பள்ளியில் முருகைய முதலியாரிடம் உருகி உருகிப் பாடங் கேட்டாரோ அதே திருப்பத்தூர் நகராண்மை உயர்நிலைப் பள்ளியில் தாம் பெரிதும் மதித்துப் போற்றிய தம்முடைய தமிழாசிரியர் வகித்த அப்பணியினை ஏற்ற மு.வ. அவர்களின் உள்ளம் எத்துணைப் பூரிப்படைந்திருக்கும் என்று இயம்பவும் வேண்டுமோ!
அழியா வாழ்வு :
பொழுதுபோக்கிற்காக நாவல்களைப் படித்து வந்த நிலைமையை மாற்றி, சிந்தனையும் கற்பனையும் வளரும் வகையில், அறம் புகட்டும் வகையிலான நாவல்களைப் படைத்த குறிக்கோளுடைய நாவலாசிரியராக மிளிர்ந்தவர் மு.வ. ஆவார். வாழ்வைப் பற்றிய அவருடைய பார்வை, தத்துவம் என்றின்னவை இளைஞர்களாலும் பொதுமக்களாலும் பெரிதும் போற்றப்பட்டன; பின்பற்றப்பட்டன. இவரின் நாவல்கள் யாவும் குறிக்கோளுடைய கருத்தமைவு நாவல்களாகும். அன்றியும் கருத்தமைவு நாவல்களில் பாத்திரப் பண்பிற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அவ்வகையில் மு.வ.வின் நாவல்களில் இடம்பெறும் பாத்திரங்களுள் பெரும்பான்மையான அவர்தம் கண்ணுக்குமுன் நடமாடியவர்களிடமிருந்து பிறந்துள்ளனவாம். தவிர, இவரின் நாவல்களில் முருகையா, சான்றோர் மெய்கண்டார், பேராசிரியர் நரேந்திரர், கமலக்கண்ணர் போன்ற அறச்சிந்தனையாளர்கள் சிலர், மனிதசிந்தனையின் பிரதிநிதிகளாகத் திகழ்கின்றனர். இவர்கள் யாவரும் மு.வ. தாம் பெரிதும் மதித்துப் போற்றிய தாம் நேரிற் கண்டு பழகிய சான்றோர்களாவர். இவ்வகையில், தமக்குத் தமிழ்ச் செல்வத்தை வாரி வழங்கிய வள்ளலாகவும் தமக்கெனவாழாப் பிறர்க்குரியாளராய்ப் பிறர்க்கு எடுத்துக்காட்டான வாழ்வினராய்த் தமக்குக் காட்சி வழங்கிய ஆசிரியர் முருகைய முதலியாரவர்களைத் தாம்படைத்த கள்ளோ? காவியமோ? வாடாமலர் என்னும் இரு நாவல்களில் ‘முருகையா’ என்னும் பெருமகனாராகப் படைத்து அச்சான்றோர் பெருந்தகைக்கு அழியா வாழ்வு கொடுத்து உள்ளம் நிறைவு கொண்டார் மு.வ.
முருகையா–முருகய்யா:
தம் நெஞ்சை கவர்ந்த தம்முடைய ஆசிரியரான முருகைய முதலியாரின் நிழலுருவப் பாத்திரமாக மு.வ.வினால் படைக்கப்பட்ட முருகையா எனும் ஆசிரியர், கள்ளோ? காவியமோ?-வில் ‘முருகையா’ என்றும் வாடாமலரில் ‘முருகய்யா’ என்றும் பெயர் மாற்றத்தோடு குறிப்பிடப்படுகின்றார். அன்றியும், முருகையா உயர்நிலைப் பள்ளியாசிரியர்; வயது முதிர்ந்தவர். முருகய்யா இளம் பருவத்தினர்; பள்ளிக்கூட ஆசிரியர்.
முருகையா:
கள்ளோ? காவியமோ? நாவலில் இடம்பெறும் ஆசிரியர் முருகையாகாலமறிந்து தம் கடமைகளைச் செய்யும் வழக்கம் கொண்டவர். மங்கை – அருளப்பன் ஆகியோர் திருமணத்தை எளிய, பொருத்தமான முறையில் நடத்தி வைக்கும் இவர், அவ் இணையரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிணக்குத் தொடர்பாக அவர் கூறும் கருத்துக்கள் யாவரும் போற்றிப் பின்பற்றத்தக்கதாம். அவர் கூறுகின்றார்:-
“காதல் வாழ்க்கையில் ஒருவகைக் கண்மூடி வாழ்வு வேண்டும். குழந்தை போல் வாழ வேண்டும். தொடக்கத்தில்தான் ஆராய்ச்சி வேண்டும். பிறகு ஆயுள்வரைக்கும் ஆராய்ச்சியும் கூடாது; அறிவு மிகுதியாகக் கூடாது. ஒருவர் குற்றம் ஒருவருக்கு தெரியாத அன்பு வாழ்வு – கண்மூடி வாழ்வு – வேண்டும்.” (கள்ளோ? காவியமோ?-மு.வ.-ப.100) என்றுரைக்கும் அவர்,
“நீ இப்போது அறிவை நம்புவதுதான் தப்பு. எல்லாம் படித்தும்,
எல்லாம்தெரிந்தும் சிறுபிள்ளைபோல் நடக்கிறாய். இப்படித்தான்|வாழ்க்கை. ஒவ்வொரு வேளைஅன்புக்குச் சோதனைக்காலம் நடக்கும்.அப்போது அறிவைத் தொலைவில் வைத்துவிட வேண்டும். கூர்ந்த அறிவெல்லாம் கொள்ளை கொடுக்க வேண்டும் என்று தாயுமானவர் சொன்னது கடவுளன்பரின் வாழ்க்கைக்கு மட்டும் அல்ல. காதலர் வாழ்க்கைக்கும் முழுவதும் பொருந்தும்” (கள்ளோ? காவியமோ? – மு.வ.- ப.103) என்பதனான், இல்வாழ்க்கையில் அன்பு இருக்க வேண்டுமேயன்றி, அறிவு இடம்பெறுதற் கூடாது. அறிவு பயனற்றது; அன்பு ஒன்றே பிணைக்க வல்லது என்னும் இவரின் அரிய கருத்துக்கள் இல்வாழ்க்கையில் பிணக்கு ஏற்படாமல் காக்கவல்லனவாம். இவ்வகையில், ஆசிரியர் முருகையாவின் அரும்பண்பு நலம் வெளிப்படுகின்றனதாம்.
முருகய்யா :
வாடாமலர் நாவலில் இடம்பெறும் ஆசிரியர் முருகய்யா இந்நாவலின் முதன்மைப் பாத்திரமான தானப்பனின் தங்கையான சுடர்விழியின் கணவர். மிக நல்லவர். தேவைகளை எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு வாழ்க்கையில் சிக்கல் குறையும்; துன்பம் குறையும் என்னும் உயரிய கொள்கையினர். தேவைகளைக் குறைத்துக் கொண்டு நாட்டிலேயே வாழும் இந்தக் காலத்துத் தவ வாழ்வினர். செடியிலிருந்து பூப்பறிப்பதும் ஒரு குற்றம் என்று எண்ணுவது முருகய்யாவின் மனம். நன்மையே விளைவதானாலும் தப்பான வழி வேண்டாம். காலப்போக்கில் உண்மை வழியே காப்பாற்றும் என்னும் உயர் நெறியினர்.
தானப்பனின் திருமணத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர் முருகய்யா, தம் வாழ்க்கையைப் பற்றிய சில செய்திகளைக் குழந்தைவேலுவிடம் வெளிப்படுத்துகின்றார். எளிமையைப் போற்றி, எளிய ஆடைகளை விரும்பி, உடுத்தியபோது தம்மைப் பைத்தியக்காரர் என்று ஊரார் எள்ளி நகையாடிதையும் நாள் செல்லச் செல்லப் பலரும் தம்மை ஒப்பித் தம்மை அணுகி அறிவுரை கேட்பதாகவும் அவர் கூறுகின்றார். அன்றியும், எளிமை என்றால் உடலை மட்டுமல்லாமல் பதவி முதலிய எதற்கும் ஆசைப்படாமல் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ்ந்தால் சுற்றுப்புறம் நம்புகிறது என்றும் மற்றவர்களைவிட ஒரு சிறப்பும் வேண்டாம், வாழ்க்கைக்குத் தேவையான எளிய உடை, எளிய உணவு, எளிய வீடு என்பவற்றைமட்டும் தேடிக்கொண்டு வாழ்ந்தால், சுற்றுப்புறம் நாளடைவில் நம்பி போற்ற முன்வருகிறது. நல்ல துறவிகளை நம்புவது போல் எளிய வாழ்க்கை வாழ்வோரையும் சமுதாயம் நம்புகிறது என்றும் தாமாக நன்மை தீமையை எண்ணிப்பார்த்து வாழ்கிறவர்கள் மிகச் சிலரே. அதனால் பலரைத் திருத்த முடியாமற் போகிறது. ஆனால், அதற்காகச் சோர்வு அடையக்கூடாது. நம் கடமையைச் செய்து விட்டுப் போக வேண்டும் என்றும் அவர் கூறுவதனின்றும் ஆசிரியர் முருகய்யாவின் உயரிய உள்ளமும் ஒரு நெறியான எளிய, தூய வாழ்வும் நன்கு புலனாகின்றதாம்.
இறுவாய் :
இன்னவகையான் கண்ணற்றுநோக்கில், எளிமையை ஓர் அறமாகப் போற்றியவரும் பலருக்கும் பயன்பட்ட தூய வாழ்வினரும், எளிமையைப் பின்பற்றுவதால் இன்று பயன் குறைவாகவே இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் கடமையைச் செய்து வருவோம்; செய்ய முடியாவிட்டால் சொல்லி வருவோம்; காலம் வரும்போது பயன்படும் என்றாங்குப் பயன் கருதாது பணிசெய்த முருகைய முதலியாரவர்களின் தூய வாழ்வும் அரும்பண்புகளுமே மாண்புள்ள மு.வ. படைத்த இரு நாவல்களில் ஆசிரியர் முருகையாவாக அழியா வாழ்வு பெற்றுள்ளது என்பது இனிதின் விளங்குகின்றதாம்.
முதன்மைச் சான்று முலம் :
1. வரதராசனார். டாக்டர் மு. – கள்ளோ? காவியமோ? – பாரி நிலையம்,சென்னை-8 (2008).
2. வரதராசனார். டாக்டர் மு. – வாடாமலர், பாரி நிலையம், சென்னை-8 (2008).
மு.வ. போற்றிய நல்லாசான் முருகய்யா முதலியார் என்னும் கட்டுரை சான்றோர்களையும் ஆசிரியப் பெருமக்களையும் மதிக்கும் அறிஞர் ;மு.வ. அவர்களின பண்புநலன்களைச் செறிவாகக் குறிப்பிடுகிறது. வாடாமல் கள்ளோ காவியமோ என்னும் இரண்டு நாவல்களின் அப்பெருமக்களை மு.வ. மதித்திருக்கும் பாங்கு சிறப்பாகச் சுட்டப் பெற்றுள்ளது. இத்தயை அறிஞர்கள் போற்றிய ஆசிரியர்கள் பற்றிய கட்டுரைகள் இன்னும் வெளிவந்தால் தற்கால ஆசிரியப் பணியிடங்களின் வெறுமை புலப்படக்கூடும்.